காந்தியின் கண்கள் – ஒரு கடிதம்

ஜெ,

தங்கள் ”காந்தியின் கண்கள்” இடுகையைப் படித்தேன். தற்பொழுது சத்திய சோதனை வாசித்துக்கொண்டிருக்கிறேன், முதல் முறையாக. பாதி நூலை முடித்திருக்கிறேன். படிக்கும்பொழுது ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு பரிசோதனை அல்லது அவதானிப்பு என்று தெரியவந்தது. சத்திய சோதனை என்ற தலைப்பே அந்நூலை வாசிப்பதற்கான ஒரு வழிகாட்டல் என்று பட்டது. ஒவ்வொரு அத்தியாயமும் எப்படி ஒரு பரிசோதனையாகிறது அல்லது அவதானிப்பாகிறது என்று கேட்டுக்கொண்டு படிப்பது நல்லது என்று நினைத்திருந்தேன். இரண்டாம் வாசிப்பில், அவ்வாறு ஒவ்வொரு அத்தியாயத்தையும் இடம்பெறச் செய்யும் நியாயத்தைக் குறிப்பாக எழுதினால் அது மொத்தமும் சேர்ந்து ஏதாவது ஒரு பெரிய திட்டம்/தோற்றம் கொள்ளுமா, அப்படிக் குறிப்பெடுப்பதில் பயனிருக்குமா என்று எண்ணிக்கொண்டிருந்தேன். உங்கள் பதிவில் அதற்கான அங்கீகாரம் உள்ளது.

சத்திய சோதனையில் நான் கண்ட எதிர்பாராத, இதுவரை நுணுக்கமாக சிந்தித்திராத ஓரிரு விஷயங்களைப் பகிர விரும்புகிறேன்.

முதலில் சமரசம் பற்றிய காந்தியின் கருத்து. சமரசத்தை முக்கியமானதாகவும் அவசியமானதாகவும் கருதுகிறார் அவர். காந்தி தென் ஆப்ரிகாவில் முதல் முதலாக டர்பனில் நீதிமன்றத்திற்கு செல்லும்பொழுது தலைப்பாகையை கழற்றமுடியாது என்று அங்கிருந்து வெளியேறுகிறார். பிறகு பார் கவுன்சிலில் வக்கீலாகப் பணிபுரிய சட்டப்படி அனுமதி கிடைத்தவுடன் நீதிபதியின் பேச்சுக்கிணங்கி, அங்குள்ள வழக்கப்படி, உடனே தன் தலைப்பாகையைக் கழற்றிவிடுகிறர். காந்தியைத் தான் நினைத்ததைக் கறாராக முன்வைப்பவராகவும் செயல்படுத்துபவராகவும்தான் பெரும்பாலும் அறிந்திருந்தேன். ஆனால் தான் சத்தியத்தை வலியுறுத்துந்தோறும் சமரசத்தின் அழகினை மேன்மேலும் உணர்கிறேன் என்கிறார் அவர்.

எதிர்த்தரப்பை முற்றாகத் தீமையினால் மட்டுமே ஆனதாக அவர் உருவகித்துக்கொள்வதில்லை. அவர்களிடமுள்ள நீதியையும் நியாயத்தையும் கவனிக்கிறார். அதனை அங்கீகரிப்பதன் மூலமே தீர்வினை எளிமையாக உடனடியாக அடைய முடியும் என்கிறார். சமரசம் என்று இதையே குறிக்கிறார் போலும்.

இரண்டாவது, காந்தி முன்னுரையில் எழுதியிருக்கும், வாழ்க்கையில் தன் நோக்கும் இலக்கும் பற்றியது. அவர் குறிப்பிடுவன: தன் வாழ்க்கை ஒரு தொடர் பரிசோதனை. தன் பரிசோதனைகளனைத்தும் ஆன்மீகத்தளத்திலுள்ளவை. அரசியல் தளத்தில் அல்ல; அங்கு கிடைக்கும் வெற்றி பெரிய பொருட்டும் அல்ல. ஆன்மீகத்தில் தன்னையறிதல் (self realization) என்பதே நோக்கம். அதன் மூலம் முழுமுதல் உண்மையை (கடவுளை) அடைவதே, அறிவதே இலக்கு; அதுவே முக்தி. அவருக்கு எளிய லௌகிக இலக்குகளோ, ஏன் பெரிய சமூக-அரசியல் இலக்குகளோ கூட இல்லை.

இதனை ஹிந்து ஸ்வராஜில் அவர் எழுதியவற்றுடன் சேர்த்து இப்படிப் புரிந்துகொள்கிறேன். முக்தியடைதலே (அவர்) வாழ்வின் இலக்கு. அதற்கு முதலில் தன்னையறிதல் தேவை. அந்த நிலையை அடைய மனிதன் தன் கடமையை / தன் அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அதற்கான வழிகாட்டியே கலாச்சாரம் என்பது. அதனை செறிவாக செய்த இந்திய கலாச்சாரத்தை பறிகொடுத்துவிட்டதனால்தான் நாம் ஆங்கிலேயர்க்கு அடிமைப்பட்டுள்ளோம். அக்கலாச்சாரத்தை மீட்டெடுப்பதே ஸ்வராஜ் திட்டத்தில் மிகமுக்கியமானதாகும்.

உண்மையின் அருகில் இருந்து எழுதும்பொழுது எல்லாமே இலக்கியத்தரம் பெற்றுவிடுகின்றன என்று எழுதியிருந்தீர்கள். அவ்வாறு காந்தியை, அவரின் எழுத்துக்களை, உண்மையின் அருகில் எடுத்துச்செல்வது எது?

காந்தி எந்த ஒரு பெரிய விஷயத்தையும் நிரூபிக்கவோ நிறுவவோ முயலவில்லை, கண்டடையவே முயல்கிறார். கருத்தியல் ரீதியான இறுக்கமான முன்முடிவுகள் கொண்டவராக இல்லை. பரிசோதனை செய்கிறேன் என்று சொல்வதன் மூலமே இது தெரியவருகிறது. எந்த ஒரு பரிசோதனையையும் நடைமுறைதளத்தில் செய்து பார்க்கிறார் அதன் மூலம் ஒரு முடிவுக்கு வந்தடைகிறார். அப்பொழுது அம்முடிவே சரியானது சத்தியமானது என்று எண்ணுகிறார். அதன் அடிப்படையில் செயல்படுகிறார். அச்செயல் எங்கு தன்னை எடுத்துச்செல்கிறதோ அங்கு செல்லத் தயாராக இருக்கிறார். தான் கண்டடைந்தது ஒரு சார்பு/பகுதி உண்மை என்றும் அது இறுதியானதோ முழுமுற்றானதோ அல்ல என்றும் அவர் அறிகிறார், அறிவிக்கிறார். தான் எவ்வளவு தூரம் உண்மையைக் கண்டடைந்துள்ளாரோ அவ்வளவு தூரம் மட்டுமே பதிவு செய்கிறார். படைத்தவனுக்கும் ஆன்மாவுக்குமான சில நுண்ணிய விஷயங்கள் அந்த ஆன்மாவுக்கு மட்டுமே தெரியவரும் என்றும் அதனை எழுதிப் புரியவைத்துவிட முடியாது என்றும் அதனை எழுதவில்லை என்றும் முன்னுரையில் கூறுகிறார். இந்த அணுகுமுறை மிக முக்கியமானது. சொல்வதைப்போலன்றிப் பின்பற்ற மிகவும் சிரமமானது. எதையும் தொடங்கும்போதே நிறுவ முயலாதவனிடம் சுமைகள் ஏதும் இருப்பதில்லை. அவனிடம் அபாரமான ஒரு நேர்மை கைகூடிவிடுகிறது. அதுவே அவனை உண்மையின் அருகில் அழைத்துச் செல்கிறது.

இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை என்றாலும் ஒரு விஷயம் தோன்றுகிறது. சத்திய சோதனையில் கருத்தியல் அலசல்கள் இல்லை. வாழ்க்கை, இந்தியா, அரசியல், ஆன்மீகம் பற்றி காந்தி தன் தேடல் மூலம் வந்தடைந்த ஒரு முழுமை நோக்கு என்று திட்டவட்டமாக எதுவும் இல்லை. ஆனால் அதைவிட முக்கியமானதும் அந்தத் தேடலுக்கும் விசாரணைக்கும் இன்றியமையாததுமான ஒரு சட்டகத்தை அளித்துள்ளார் என்ற எண்ணம் உள்ளது. ஒரு சட்டகமின்றி எந்த ஒரு விசாரணையும் அர்த்தம் பெறுவதில்லை. இதை மேலும் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

விஜயராகவன் சுந்தரவரதன்

அன்புள்ள விஜயராகவன்

மிக அபூர்வமாக வரக்கூடிய சிறந்த கடிதங்களில் ஒன்று, நன்றி. நீங்கள் தொடர்ந்து எழுதுகிறீர்களா என்று தெரியவில்லை. ஆனால் தொடர்ச்சியாக நீங்கள் எழுதவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். காந்தி இன்று போன்ற தளங்களிலும் பொதுவாகவும். நடைதெளிவாகவும் கருத்துக்கள் கச்சிதமாகவும் வெளிப்பட்டிருக்கின்றன.

காந்தியின் சுயசரிதையில் சிந்தனைகள் இல்லை என்பதை நானும் கவனித்திருக்கிறேன். காந்தி சில நிகழ்ச்சிகள் மீது சில வரிகளைத் தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறார். அவையும்கூட அதிகமும் தன்ஒழுக்கம் சார்ந்த விஷயங்கள்தான்.

ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் காந்தி சிந்திப்பது என எதையும் தனியாகச் செய்யவில்லை. சிந்தனை என்பது அவருக்குச் செயலுடன் பிணைந்துகிடந்தது. சிந்தனையை செய்துபார்ப்பதன் மூலமே விரிவாக்கம் செய்தார். அப்படிப்பார்த்தால் மொத்த சத்தியசோதனையே சிந்தனைகள்தான். சிந்தனையை செயல்மூலம் கண்டடைந்ததன் ஆவணம் அது.

ஜெ

முந்தைய கட்டுரைநெஞ்சுக்குள்ளே…
அடுத்த கட்டுரைஇந்தி,சம்ஸ்கிருதம்,தமிழ்