காந்தி இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்
காந்தியின் கண்கள் படித்த பிறகு சத்திய சோதனை மீண்டும் படிக்கத் தொடங்கினேன். நீங்கள் சொல்வது மிகவும் சரி. இதை முன்பொரு முறை படித்ததாக நினைவு கூட இல்லை.

காந்தி ஒவ்வொரு இடமாக சுற்றி அலைகிறார். வெளி உலகம் மற்றும் அவர் உள்ளுலகம் மெல்ல அவருக்குப் புரிபடுகிறது. ஒரு ஒழுக்க நெறி நோக்கிக் குவிகிற காந்தி
பின்பு எப்படி படிப்படியாகக் கனிகிறார் என்று பார்ப்பது அவரது பரிணாம வளர்ச்சி தெரிகிறது.

வியப்பாகவும் அதே நேரம் சாதரணமாகவும் எல்லோரும் காந்தியாக மாற முடியும் என்றும் தோன்றுகிறது. அந்ததோற்றம் மாயம்தான். பொருள்களின் மேல் இச்சையையும் மற்ற மனிதர் மேல் மற்றும் புகழ் மேல் மோகம் இவற்றைக் கடக்க வேண்டும். அதை காந்தி சாதரணமாக ஒரு நடைப்பயணத்தில் பாம்பைத் தாண்டுவது போல எளிதாகத் தாண்டுகிறார். தன் மேல் எப்பொழுதும் ஒரு பெரிய சுய மாயை இல்லாமல் இருக்கிறார.

அதாவது காடு பழகியவர்கள் ஒரு காட்டுப் பாதையைக் கடப்பதும் மற்றவர்கள் அதைக் கடப்பதிலும் பெரிய வித்தியாசம் உண்டு. பழகாதவர்கள் சின்ன அட்டைப் பார்த்தும் பயப்படுவது இருக்குமோ இல்லையோ பதட்டப்படுவார்கள். ஆனால் பழகியவர்கள் அதனைச் சாதரணமாகக் கடந்து செல்வார்கள். என் தந்தை கிராமத்தில் அப்படித்தான் சாதரணமாகக் கடந்து செல்வார், நீந்திச் செல்வார்.

காந்தி அப்படித்தான் வாழ்கையில் நேர்மை மற்றும் சுய மாயை அற்ற மனம் கொண்டு முன் திட்டம் முன் முடிவுகள் இன்றி எளிதாக செல்கிறார். நாமும் காந்தியோடு கைக்கோத்துக் கொண்டு செல்லும்போது எளிதாகவும் புரிந்தது போலவும் படுகிறது. மனதில் அந்தப் படிமம் ஆழமாகப் பதிகிறது. நாமும் அத்தகைய பயணம் செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. நான் பார்த்தது மனிதர்கள் பயணத்தின் மூலம் (ஒரு இடத்தை சும்மா சுற்றிப் பார்ப்பதல்ல) ஞானத்தைத் தொடுவதாக நினைக்கிறேன்.

உங்களின் முதல் இந்தியப் பயணம் ஆகட்டும். என் நண்பனின் பயணம் ஆகட்டும். என்னுடைய தில்லி மற்றும் ராஜஸ்தான் நாட்கள் ஆகட்டும். ஒரு கூட்டத்தில் என்னைத் தனிமையாக உணர முடியும். அவதானிக்க முடியும். என்னை நன்றாகப் பார்க்க முடியும். என்னுடன் பேச முடியும்.
உங்களுடைய காந்தியின் கால்கள் படிக்கத் தொடங்குகிறேன். அத்தகைய பயணத்தைக் குறித்து தான் பேசுகிறீர்கள் என்று புரிந்து கொண்டேன். எப்பொழுதும் போல இன்னும் அழகாக விசிராந்தியாக ஆழமாக எழுதியிருப்பீர்கள் என்று தெரியும். படிக்கிறேன்.

இப்பொழுது தான் அவர் டர்பன் கழட்டி வைக்கும் பகுதி முடிந்தது. மற்றும் அவர் தன் நண்பர்கள் தன மேல் வைத்திருக்கும் பாசமும் உத்வேகமும் எப்பொழுதும் இருக்கும் என்ற அவசியம் இல்லை என்று சொல்லும் பகுதி முடிவடைந்தது.

காந்தி சர்வ சாதாரணமாக அதைச் சொல்லிச் செல்கிறார். எந்த ஒரு அலட்டலும் இல்லை. எளிமையாகவே சொல்லுகிறார். அந்த எளிமைப் படுத்தல் விஷயத்தின் தீவிரத்தைக் குறைப்பதில்லை மாறாகத் தீவிரம் குவிகிறது.

மீண்டும் நினைவு படுத்தியமைக்கு நன்றிகள்

நன்றியுடன்
ஸ்ரீதர்

அன்புள்ள ஜெயமோகன்

“இந்திய ஞானமரபில் ஊர்சுற்றி என்ற ஆளுமையை இருசொற்கள் வழியாகச் சுட்டுகிறார்கள். பவிராஜகன், அவதூதன். பவிராஜகன் தன் நாட்டைத்துறந்து ஊர் ஊராக அலைபவன். அனுபவங்கள் முன் தன்னைத் திறந்து போடுபவன். அவ்வனுபவங்கள் வழியாக அவன் முதிர்ந்து கனிந்து ஞானியாக ஆகும்போது அவதூதனாகிறான். அப்போதும் அவன் ஊர்சுற்றிதான். காந்தி முதல் நிலையில் இருந்து கடைசி நிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஊர்சுற்றி.”

ஒவ்வொரு சொல்லும் தீவிரமாக உள்ளது. அருமையான பதிவு.

காந்தியின் சத்திய சோதனை முதல் பகுதி படிக்கும் போது எனக்கொரு விஷயம் தெரிந்தது. நீங்கள் யூத்து என்ற பகுதியில் எழுதியதும் நினைவுக்கு வந்தது.

இது காந்தியின் சிறு வயது குஜராத் பதிவுகள் மூலமே நான் புரிந்து கொண்டது.

அதாவது விசிராந்தி. அந்த காலத்தில் பயணம் என்பது ஒரு மூன்று நாட்கள் ஆகிறதென்று காந்தி குறிப்பிடுகிறார். இன்று இளைஞர்கள் நடப்பதன்றிக் காடுகளை அடைவதன்றி அந்த அனுபவத்தை அடைவதில்லை. எப்படிச் சொல்லவேண்டும் என்றால் ஒரு நிதானம் இருப்பதில்லை. எல்லா விஷயத்தைப் போலவே இதிலும் ஒரு நடு நிலை தான் மேல். அதாவது தூங்கவைக்கும் நிதானமோ அல்லது ஓடுகின்ற தீவிரமோ அல்லாமல் நடு நிலை காண்பதென்று நினைக்கிறேன்.

இன்றைய இளைஞர்கள் – குறிப்பாக இந்தியர்கள் அதிலும் தமிழர்கள் அந்த விசிராந்தியாக இருப்பதை அறியாதவர்கள் ஆக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதாவது தனியாக இருப்பதோ அல்லது சும்மா இருத்தலோ சோம்பித்திரிதல் என்று நினைக்கிறார்கள். ஏதாவது செய்தாக வேண்டும்….போர் அடிக்கிறது….என்று சொல்கிறார்கள். சினிமா கணிசமாக மூளையில் மொழியில் வாழ்வின் இண்டு இடுக்குகளில் புகுந்து அந்த நிறைவைத் தருகிறது. பார்க்கும் படங்களும் பெரும்பாலும் ஒரு ஓட்டமும் ஆட்டமும் பரபரப்பும் கொண்டதாகவே பெரும்பாலும் உள்ளது. அப்படி இல்லாமல் நிதானமாக இருக்கும் இளைஞர்களை மற்றவர்கள் எதோ உளச்சிக்கல் உள்ளவர் போலவே நடத்துவார்களோ என்றும் பயமாகவே உள்ளது.

என்னையே எடுத்துக்கொண்டால் எழுதுவதில் ஒரு விசிராந்தி இருப்பதில்லை. பொறுமை இருப்பதில்லை. அதை வளர்த்துக் கொள்ளவேண்டும். அதற்க்கு பொருள் மோகம் மற்றும் சுய மோகம் புகழ் மோகம் குறைய வேண்டும். யாரையும் நாம் மகிழ (impress) வைக்க வேண்டிய அவசியம் இல்லாத நிலை தெரிய வேண்டும்.

இது எல்லோரும் சொல்லும் விஷயம் தான். எனக்கே சொல்லிக் கொள்கிறேன் அவ்வளவு தான்.

அன்புடன்
ஸ்ரீதர்

முந்தைய கட்டுரைவசைபட வாழ்தல்
அடுத்த கட்டுரைகோரா- ஒரு கடிதம்