ஜெ,
உங்கள் இளையராஜா கட்டுரையில் தமிழ் சினிமாவில் இசையில் மட்டுமே உயர்தரமான திறமை வெளிப்பட்டது என்று எழுதியிருக்கிறீர்கள். அதை விளக்க முடியுமா? ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?
ஜெயராமன்
ஜெயராமன்,
சினிமா நமக்கு ஒரு புதிய கலை. மானுடத்துக்கும் அது ஒரு புதிய கலைதான். அது ஒரு கூட்டுக்கலை. ஓவியம் புகைப்படம் நாடகம் இசை என பலகலைகளின் கலவை அது. உலகில் வெவ்வேறு பண்பாடுகளில் சினிமா உருவானபோது அப்பண்பாடுகளில் ஏற்கனவே இருந்த கலைகளை எடுத்துக் கலந்துகொண்டு தன் கலைவடிவத்தை, தனித்தன்மைகளை உருவாக்கிக்கொண்டது.
தமிழில் சினிமா உருவானபோது எழுத்து, அரங்க அமைப்பு, நடிப்பு ஆகிய மூன்றையும் நாம் மேடைநாடகத்தில் இருந்து பெற்றுக்கொண்டோம். நமது மேடைநாடகமே அதிகம் வளர்ச்சியடையாத ஒன்றுதான். நமக்கு நெடுங்காலமாக இருந்து வந்தது கூத்துமரபுதான். உயர்தளத்திலான கூத்துக்கலை பதின்மூன்றாம் நூற்றாண்டில் தமிழக மன்னர்களின் அழிவுடன் தேக்கமடைந்து படிப்படியாக அழிந்திருக்கலாம். அவற்றின் நாட்டார் வடிவங்கள் மட்டுமே நம்மிடம் மிஞ்சியிருந்தன – தெருக்கூத்து போல.
நீண்ட காலம் கழித்து பதினெட்டாம் நூற்றாண்டில் பார்ஸிநாடகக் குழுக்கள் தென்னிந்தியாவில் பயணம் செய்து ஊர் ஊராக நாடகம் நடத்தியபோதுதான் நமக்கு நாடகம் என்ற கலை அறிமுகமாயிற்று. அவற்றை முன்மாதிரியாகக் கொண்டு நாம் நம்முடைய மேடைநாடகங்களை உருவாக்கிக் கொண்டோம். தொழில்முறை நாடகக் குழுக்கள் உருவாயின. சென்னையில் பயில்முறை நாடகக்குழுக்கள் பிறந்தன. பாய்ஸ் கம்பெனிகள் என்ற பேரில் அறியப்பட்ட இரண்டும் கலந்த குழுக்களும் வந்தன. இவையே நம்முடைய நாடகத்தை கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கின.. ஆனால் அவை உருவாகி ஓரளவேனும் முழுமைபெறுவதற்குள்ளாகவே இங்கே சினிமா வந்துவிட்டது. நம்முடைய மேடைநாடகம் என்ற வணிகக்கலைவடிவத்தின் தோற்றத்துக்கும் முடிவுக்குமான கால இடைவெளி ஒரு தலைமுறைக்காலம் மட்டும்தான்.
இந்தச் சிறிய கால அளவில் நாம் நம்முடைய நாடக ஆக்கத்தையும் நாடக ரசனையையும் பெரிதாக வளர்த்தெடுக்கவில்லை. நம் மேடைநாடகம் வணிகநோக்கம் கொண்டதாகையால் மக்களின் ரசனையுடன் சமரசம் செய்துகொள்வதில் கவனமாக இருந்தது. மக்களின் ரசனையோ தெருக்கூத்துக்குப் பழகியதாக இருந்தது. ஆகவே நம் நாடகங்கள் தெருக்கூத்துக்கும் நாடகத்துக்கும் நடுவே இருந்த வடிவங்களாக இருந்தன. சமீபத்தில் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களை வாசித்துப் பார்க்கையில் அவற்றில் தெருக்கூத்தின் அம்சங்களே அதிகம் என்ற எண்ணம் ஏற்பட்டது. இன்றுகூட தென்தமிழகத்தில் அவற்றை கூத்து என்றே சொல்கிறார்கள். ஸ்ரீவள்ளி கூத்து, அல்லிஅர்ஜுனா கூத்து என்றெல்லாம்.
ஐரோப்பாவின் நாடகமேடை இருநூறாண்டுக்கால வளர்ச்சி உடையது. பல்வேறு இயக்கமுறைகள் நடிப்புமுறைகள் அரங்க அமைப்புமுறைகள் அவற்றில் சோதித்துப் பார்க்கப்பட்டிருந்தன. பல்வேறு கலைப்பாணிகள் இருந்தன. இங்கே நாடகத்தில் நாற்பது பாடல்களை கத்திப்பாடுவதும் வசனங்களை ஒரு குறிப்பிட்ட வகையில் கூவுவதும் மட்டுமே நடிப்பு என கருதப்பட்ட 1920-களில் ஸ்டனிஸ்லாவ்ஸ்கியின் [Constantin Stanislavski] யதார்த்தபாணி நடிப்புமுறையும் இயக்கமுறையும் ஐரோப்பாவில் வேரூன்றிவிட்டன என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அந்த முழுவளர்ச்சியடைந்த மேடைநாடக மரபிலிருந்து ஐரோப்பிய சினிமா உதயமானது.
நேர்மாறாக நம்முடைய சினிமா நம்முடைய வளராத நாடகத்தில் இருந்து உருவானதாக இருந்தது. அந்த நாடகமேடை தெருக்கூத்துக்கு பக்கமாக இருந்தமையால் நம்முடைய சினிமாவும் தெருக்கூத்துக்கு நெருக்கமானதாகவே இருந்தது. சமீபத்தில் டி.ஆர்.மகாலிங்கம் நடித்த ஸ்ரீவள்ளி சினிமாவைப் பார்த்தேன். அப்படியே செல்லுலாய்டில் தெருக்கூத்து பார்ப்பது போலிருந்தது. வேலன் விருத்தன் கூத்து என்ற பேரில் ஆடப்பட்ட கூத்து சங்கரதாஸ் சுவாமிகளால் ஸ்ரீவள்ளி அல்லது வள்ளிதிருமணம் என்ற பேரில் நாடகமாக ஆக்கப்பட்டு பின்னர் சினிமாவாக மாறியிருந்தது. ஆம், இரண்டு முறை வெவ்வேறு கலைவடிவங்களுக்குள் அது புகுந்து வந்திருந்தது. ஆனால் பெரிதாக உருமாற்றம் அடையவேயில்லை.
ஆகவே நம்முடைய சினிமாவில் எல்லாமே தெருக்கூத்துக்கு நெருக்கமாக இருந்தன. திரைக்கதை அமைப்பு, காட்சிகளை அமைக்கும் முறை, நடிப்பு , ஒப்பனை எல்லாமே. சிவாஜிகணேசன் வரை நடிப்பில் தெருக்கூத்தின் பாணியையே அதிகம் நாம் காண்கிறோம். அரங்க அமைப்பு பார்சி நாடகத்தில் இருந்து வந்த படுதா வரையும்முறை. அதிலிருந்து விடுபட்டு நாம் சினிமா என்ற கலைவடிவை புரிந்துகொள்ள அரைநூற்றாண்டாகியது. ஆகவே இந்தத் தளங்களில் பெரிதான திறமைகள் ஏதும் வெளிப்படவில்லை என்றே நான் நினைக்கிறேன். ஏற்கனவே கூத்து முதல் நமக்குப் பழக்கமாகி இருந்தவற்றை மீண்டும் நிகழ்த்தும் கலைஞர்களையே நாம் காண நேர்ந்தது.
ஐரோப்பிய சினிமாவில் இருந்துதான் நாம் சினிமாக்கலையை தொடர்ந்து கற்றுவருகிறோம். திரைத்தொழில்நுட்பத்தை வேகமாக உடனுக்குடன் கொண்டுவந்தோம். அது வணிகரீதியாக பலனளிப்பது. ஆனால் மிகமிகக் குறைவாக, மிகுந்த தயக்கத்துடன் மட்டுமே நாம் அங்கிருந்து கலைநுட்பங்களைக் கொண்டுவந்திருக்கிறோம். காரணம் நம் ரசிகர்களை அதற்குப் பழக்கப்படுத்துவது கடினம். ஆகவே வணிகரீதியாக அது அபாயமான முயற்சி. எது ரசிகர்களுக்கு பழக்கமோ, எது அவர்களுக்குப் பிடிக்குமென ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டிருக்கிறதோ அதைமட்டுமே கொண்டு வந்தோம். சினிமாவின் எல்லா கலைத்துறைகளிலும் இதுவே யதார்த்தம். இசை மட்டுமே விதிவிலக்கு.
தமிழ் சினிமா ஆரம்பமான காலம் முதலே சினிமாவின் நகர்வுக்கு சம்பந்தமில்லாத வேகத்தில் இசை நவீனமாகிக் கொண்டிருப்பதைக் காணலாம். தமிழில் சினிமா வந்த சிலவருடங்களிலேயே முற்றிலும் நவீனமான ஐரோப்பியப் பின்னணி இசை வர ஆரம்பித்துவிட்டது. பாடல்கள் தென்னிந்திய மரபிசைப்பாணியில் இருக்கையில் பின்னணி இசை ஐரோப்பிய பாணியில் இருந்தது. பின்பு பாடல்களிலேயே அந்தக் கலப்பு வெற்றிகரமாகச் சாத்தியமானது.
விளைவாக மிகவிரைவில் திரையிசை என்ற தனித்துவம் மிக்க ஒரு இசைமரபு தமிழில் ஆழமாக வேரூன்றியது. தமிழ்ப்பண்பாட்டில் இவ்வளவு வேகமாக உருவாகி நிலைபெற்ற ஒரு தனிக்கலைவடிவம் வேறு உண்டா என்றே ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ்சினிமாவில் இசையில் இருந்த தரம் படங்களின் பிற அம்சங்களில் பெரும்பாலும் இல்லாமலிருப்பதன் காரணம் இதுவே.
இதற்குக் காரணம் நடிப்பு, ஓவியம் போன்ற கலைகளைப்போல அல்லாமல் நமக்கு இசை நெடுங்காலமாகவே தொடர்பு அறுபடாமல் இருந்து வந்தது. பல்வேறு புறப்பாதிப்புகளை உள்வாங்கி தன்னை புதுப்பித்துக்கொண்டே அது நீடித்தது. கர்நாடக சங்கீதம் என்ற பேரில் பதினேழாம் நூற்றாண்டில் மறுபிறப்படைந்து கோயில்விழாக்கள் போன்ற வெகுஜன நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே ஆழமாக வேர்விட்டிருந்தது. நுட்பமான செவ்வியல் இசைக்கு இங்கே பொதுமக்களிடையே அறிமுகம் இருந்தது.
அதாவது நமக்கு தரமான நடிப்பை, தரமான நாடக இலக்கியத்தை, தரமான காட்சியமைப்பை ரசிக்கும் பயிற்சி நம் மரபில் இருந்து கிடைக்கவில்லை. ஆனால் தரமான இசையை ரசிக்கும் நுண்ணுணர்வு நம் சூழலில் இருந்து நம்மையறியாமலேயே கிடைத்தது. இசையில் மட்டுமே நமக்கு செயலூக்கம் கொண்ட ஒரு செவ்வியல்மரபு இருந்தது.
சமீபத்தில் பழைய நாடக இசை சம்பந்தமான சில இசைத்தட்டுக்களை கேட்டபோது கர்நாடக இசையானது இங்கிலீஷ் நோட்டு எனப்படும் மேலை இசையுடனும் இந்துஸ்தானி இசையுடனும் எப்படி படைப்பூக்கத்துடன் முயங்கியிருக்கிறது என்று கண்டு ஆச்சரியப்பட்டேன். அந்தப் பரிணாமப்போக்கில் இயல்பாக அது திரையிசையாக மலர்ந்தது. அதன் அடித்தளம் கர்நாடக இசையாக இருக்க மேலே பல்வேறு புறப்பாதிப்புகளை ஏற்றுக்கொண்டு தன்னை உருவாக்கிக் கொண்டது. பார்ஸி நாடகங்கள் வந்தபோது இந்துஸ்தானி இசைக்கூறுகளை உள்வாங்கி அது புதுவடிவம் பெற்றது. பின் ஆங்கில இசைக்கூறுகளை உள்வாங்கி மேலும் வளர்ந்தது.
இந்தத் தொடர்ச்சி காரணமாக திரையிசையில் தொடர்ந்து அசலான படைப்பூக்கம் வெளிப்பட்டது. அதைக் கேட்கும் ருசியும் நம் சாதாரண மக்களிடம் இருந்தது. இந்த வகையான படைப்பூக்கமும் சரி, இந்த வகையான ரசனையும் சரி, திரைப்படத்தின் பிற கலையம்சங்களில் சாத்தியமாகவில்லை.
நான் கேட்டவரை இந்தியத் திரையிசை பற்றியும் இதைத்தான் சொல்வேன். சமீபகாலமாக அதிகமாக பழைய தெலுங்கு சினிமாப்பாடல்களை அதிகம் கேட்கிறேன். அவற்றில் தெரியும் படைப்பூக்கம் பிரமிப்பூட்டுவது. உண்மையில் தெலுங்கு திரையிசை என்பது கடல் அலை. அதன் மேலேறி மிதந்தெழுந்த இரு நெற்றுகள்தான் என்.டி.ராமாராவும் நாகேஸ்வர ராவும். தெலுங்குப்பாடல்களைக் கேட்டுக்கேட்டு இவர்களை நானும் விரும்ப ஆரம்பித்துவிட்டேன்.
சினிமாவில் நாம் எடுத்தாண்ட நடிப்பு, நாடக இலக்கியம் அரங்க அமைப்பு போன்ற பிற கலைமரபுகள் வளர்ச்சியடையாமல் தேங்கி நின்றிருந்தவை. நம் ரசிகர்களும் அவற்றுக்குப் பழகி அவற்றையே எதிர்பார்த்திருந்தார்கள். ஆகவே அந்த சராசரிக்கோட்டில் இருந்து மேலெழுவது நமக்கு மிகக் கடினமானதாக நெடுங்கால வளர்ச்சி தேவைப்படக்கூடியதாக இருந்தது. இசையில் அப்படி அல்ல. நாம் செவ்வியலின் உச்சியில் இருந்து புதியவானங்களை நோக்கிப் பறக்க முடிந்தது.
ஜெ