நாஞ்சில்நாடனின் என்பிலதனை வெயில்காயும் பற்றி ஆர்வி எழுதியிருக்கிறார். அதை ஒருவகை தன்வரலாற்றுநாவல் என அவர் ஊகிக்கிறார்.
அது தன்வரலாற்றுக்கதை அல்ல. நாஞ்சில்நாடனின் நண்பனின் கதை. ஆனால் ஒரு இடத்தில் மட்டும் அவரது வரலாறு உண்டு – அந்த வில்வண்டிக்கார மாணவி கதை. அதை அவரது பலகதைகளில் பலவகைகளில் காணலாம். அவளுக்கு முன்னால் தேங்காய் திருடியமைக்காக அடிபடும் கதை ஓர் உதாரணம். அதைவைத்து ஆர்வி அப்படி நினைத்திருக்கலாம்.
இந்நாவலில் உறவுகளைக் கசந்து கதாநாயகன் வெளியேறும் முடிவுதான் இருந்தது. அதுதான் கதையே. [மும்பைக்குச் செல்கிறான்] ஆனால் அக்காலத்தில் நாவலின் கைப்பிரதியை வாசித்த நகுலன் கடைசியில் இரு அத்தியாயங்களை பிய்த்து எடுத்து ‘நாவல் இங்கே முடிந்துவிட்டது’ என்றார். நாஞ்சில் அதை ஏற்றுக்கொண்டார்.
நகுலன் செய்தது அந்த நாவலை அன்று வந்துகொண்டிருந்த நவீனத்துவ நாவல்களின் அமைப்புக்குள் கொண்டுவந்ததைத்தான். வாழ்க்கையைப்பற்றி எதுவும் சொல்லாத, எங்கும் முடியாத இருத்தலிய நாவலாக அதை அவர் ஆக்கினார். அது கதாநாயகனின் அடையாளத்தவிப்பைப் பற்றி மட்டுமே சொல்லி நின்றுவிட்டது. அது நகுலனின் தத்துவம், அவரது நாவல்கோட்பாடு. நகுலன் மேலுள்ள மரியாதையால் அதை நாஞ்சில் ஏற்றுக்கொண்டார்.
அப்படிச் செய்திருக்கக் கூடாது. அந்த முடிவின்மூலம் தேவையில்லாத ஒரு இருத்தலிய இயல்பு நாவலுக்கு வந்தது. ஆனால் நாவல் அது அல்ல.நாஞ்சிலும் அந்தத் தத்துவத்துக்குள் இல்லை. நாவலின் தலைப்பே அதைச் சொல்கிறது – என்பில்லாத உயிர்களின் பிரச்சினை அது.
என்பிலதனை வெயில்காயும் நாயகனின் பிரச்சினை சுய அடையாளம் அல்ல, சமூக அடையாளம். நம் சாதிசமூகத்துக்குள் அவனுக்கென ஓர் இடம். அது நம் கண்முன் உள்ள அப்பட்டமான பிரச்சினை. அதற்கும் எண்பதுகளில் பேசப்பட்ட ஐரோப்பிய இருத்தலியச் சிந்தனைகளுக்கும் சம்பந்தமில்லை.
நாஞ்சில் நாடனின் கதைமுடிவும் மிக யதார்த்தமானது. கதைநாயகனுக்கு இருக்கும் ஒரேவழி அந்த சாதிசார் சமூக அமைப்பை விட்டு வெளியேறுவது. நிலஉடைமை அமைப்பில் இருந்து முதலாளித்துவ அமைப்புக்குள் தப்பிச் செல்வது. கிராமத்து சாதியடையாளத்தைத் துறக்க நகரத்தின் அடையாளமின்மைக்குச் செல்வது.
அந்த முடிவுடன் இன்று ஒவ்வொரு தலித்தும் தன்னை அடையாளம் காணமுடியும். அந்த முடிவு சமூக யதார்த்தமாகையால் முடிவில்லாத வாசிப்பை அது சாத்தியப்படுத்தியிருக்கக் கூடும். அது வெட்டப்பட்டு இருத்தலியச்சாயல் கொண்டுவரப்பட்டபோது நாவலின் யதார்த்தவல்லமை மட்டுப்பட்டது. அதையே ஆர்வி போதாமையாகச் சொல்கிறார்.
இசங்கள் ஒரு இருபது வருடம் நீடிக்கும். தத்துவங்களானாலும் சரி, அரசியலானாலும் சரி, வடிவங்களானாலும் சரி. ஆனால் கலைப்படைப்புகள் நூறாண்டுகளை எளிதாகக் கடக்கும். உண்மையான அனுபவ தளம் கொண்ட நாவல்களை கோட்பாடுகளுக்கேற்ப வெட்டியமைக்கக் கூடாதென்பதற்கு இந்நாவல் உதாரணம்.