அன்புள்ள ஜெயமோஹன்,
“மீசை”யில் தியோடோர் பாஸ்கரன் பற்றியும் அவரது மீசை பற்றிய தங்கள் பதிவஇனைப் படிக்கும்போது நினைவுத் தோரணங்கள் என் முன்னர் நிழலாடின.
பாஸ்கரன் அவர்கள் என்னுடைய “பாஸ்”. இயற்கையை முழுமையாக அனுபவிக்கக் கற்றுக்கொடுத்தவர். பன்முக ஆற்றலும் அவற்றைப் பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுத்தக்கூடிய திறமையும் பெற்றவர். எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாதவர். கீதையில் கண்ணன் வர்ணிக்கும் சமநிலை கொண்டவர். பிறருக்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைபவர். மிகப் பெரிய அரசுப் பதவியை வகித்தபோதும் எளிமையின் சின்னமாக இருந்தவர். நீங்கள் சொல்லுவது போல அவரது அக அழகுக்கு மீசை மேலும் அழகூட்டுகிறது. வான்கோழிகள் தமிழ்நாட்டில் மயில்போலத்தங்களைச் சித்தரித்துக்கொண்டு ஆடும்போது, இந்த உண்மையான மயிலைத் தாங்கள் அடையாளம் காட்டி இருக்கிறீர்கள். நன்றி.
கிருஷ்ணமூர்த்தி
அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி,
சு.தியடோர்பாஸ்கரன் அவர்களை நீங்கள் அறிவீர்கள் என்று அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். அசாதாரணமான ஆளுமை. அவரது எல்லா சொற்களிலும் உள்ள தன்னம்பிக்கை எப்போதுமே எனக்கு பிடித்தமான ஒன்று. சு.தியடோர்பாஸ்கரன் ஆங்கிலத்தில் சூழியல் குறித்து நிறைய எழுதியிருக்கிறார். ஆனால் அவர் தமிழில் எழுத ஆரம்பித்த பின்னர்தான் அவரது பங்களிப்பே ஆரம்பமாகியது. தமிழில் சூழியல் சார்ந்த சொல்லாடலை தொடங்கிவைத்தவர் என்றே அவரைச் சொல்வேன். அதன் முன் பலர் பல குழுக்கள் எழுதியிருக்கின்றன, பேசியிருக்கின்றன. ஆனால் அவர்களுக்கு மொழியாளுமை இருக்கவில்லை. நினைத்ததை சொல்லி பெருவாரியான வாசகர்களிடம் சென்று சேர முடியவில்லை. ஒரு பறவையை வர்ணிக்க முடியவில்லை என்றால் அப்பறவையைக் காப்பாற்றுவது பற்றிய குரல் வலிமையாக பதிவாகாது என்பதே உண்மை. சு.தியடோர்பாஸ்கரன் சீராக தொடர்ச்சியாக எழுதுகிறார்.ஏராளமான மூலச்சொற்களை உருவாக்குகிறார். மிகுந்த வாசிப்புத்தன்மையுடன் எழுதி விரிவான வாசகர்களை உருவாக்குகிறார். அதன் மூலம் தமிழகத்தின் அறிவுத்தளத்தில் அவர் உருவாக்கும் பாதிப்பு மிகமிக அதிகமானது. ஒரு தனிமனித அறிவியக்கம் போன்றது அது
ஜெ
அன்புள்ள ஜெ
மீசை கட்டுரையில் நீங்கள் தியோடர் பாஸ்கரன் அவர்களைப்பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். நான் அவரது அதி தீவிர வாசகன். அறிவியல் விசயத்தை எழுதும் ஒருவரது நடை இந்த மாதிரி அழகாக இருப்பது எனக்கு எப்போதுமே பரவசமான அனுபவம். எப்பவுமே அவர் வளர்த்துவதில்லை. கச்சிதமாகச் சொல்கிறார். அதேமாதிரி அவரது வர்ணனைகளும் மிக மிக அழகாக இருக்கும். ஒரு குளத்தைப்பார்த்துவிட்டு அதில் பறவைகள் அமர்ந்திருந்த காட்சியை வருணித்திருப்பார். அந்த மாலைநேரம். ஒரு பெரிய நாவல் எழுத்தாளர் எழுதியது மாதிரி இருக்கும். நான் அவரை வாசித்த அளவுக்கு தமிழில் எவரையுமே வாசித்தது இல்லை. நம்முடைய கதை எழுத்தாளர்கள் இலக்கியவாதிகள் அவர் எழுதுவதில் கால்பங்கை எழுதினால் அவர்கள் எங்கேயோ போய்விடுவார்கள்.
அவரை உங்களுக்கு தெரியும் என்பது எனக்கு மிகவும் உற்சாகம் அளிக்கிறது. அவரை நீங்கள் சந்தித்து பேசியது மிகச்சிறந்த விஷயம். உங்கள் எழுத்துக்களுக்கும் அவர் எழுதும் விசயங்களுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. வாழ்த்துக்கள்
கோமதிநாயகம்
வள்ளியூர்
அன்புள்ள கோமதிநாயகம்
தியோடர் பாஸ்கரனை நான் முதலில் சந்தித்தது 1991ல் 18 வருடங்கள் தாண்டிவிட்டன. அவர் என்னுடைய ரப்பர் நாவலை வாசித்துவிட்டு அதில் காடு குறித்து வந்த பகுதிகளைப் பாராட்டி எழுதியிருந்தார். அவர் அப்போதே ஆங்கிலத்தில் இயற்கை பற்றி நிறைய எழுதிக்கொண்டிருந்தார். இந்து நடுப்பக்கத்தில் அவை வெளிவந்துகொண்டிருந்தன. அவை என்னை பெரிதும் கவந்திருந்தன. நான் அவரைச் சென்று பார்த்தேன்.பின்னர் தொடர்பு நீடித்தது. தியடோர் பாஸ்கரனின் அதி தீவிர வாசகர்கள் பலரை நான் அறிவேன். என் மகன் உட்பட. அவருக்கு என்னுடைய காடு நாவலை நான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன்
ஜெ
அன்பு ஜெ
உங்கள் இணையதளத்தில் என் அபிமான எழுத்தாளர் தியடோர்பாஸ்கரன் அவர்களின் படத்தைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். உண்மைதான் மீசைதான் அவரது தோற்றத்துக்கே எடுப்பைச் சேர்க்கிறது. அவரது முகத்தைப் பார்க்கும்போது எத்தனை காடுகளை பார்த்த கண்கள் என்று எண்ணிக்கொண்டேன். நான் கானியல் படிக்கவேண்டும் என்று ஆசைப்படும் கல்லூரி மாணவன். அவரது புத்தகங்கள்தான் இப்போது என் வழிகாட்டி
செந்தில் அழகுமுத்து [தமிழாக்கம்]
சு.தியடோர் பாஸ்கரன் நூல்கள்
http://www.uyirmmai.com/Publications/AuthorDetails.aspx?aid=108