வேலையும் இலக்கியமும்

அன்புள்ள ஜெயமோகன்

 

நான் பல நாவல்களை படித்திருக்கிறேன். உங்கள் நாவல்களை சமீபமாகத்தான் வாசிக்க ஆரம்பித்தேன். பின் தொடரும் நிழலின் குரல் நாவலை பாதிவரை வாசித்திருக்கிறேன். மிகச்சிறந்த நூல். நான் அதில் முழுமையாகவே ஈடுபட்டு வாசித்து வருகிறேன். ஆனால் அது என் தன்னம்பிக்கை அளவை பெரிதும் குறைக்கிறது. நான் இப்போது மிகக் கஷ்டமான ஒரு இலக்கை வெல்லும்பொருட்டு முயன்றுகொண்டிருக்கிறேன். நான் இதைவாசிப்பதை தொடரலாமா?

 

வசந்தா அர்ஜுன்

 

அன்புள்ள வசந்தா அர்ஜுன்

 

பெரிய நாவல்கள் ஒருவகை மனச்சோர்வை அளிக்கும் என்பது உண்மையே. ஏன் என்றால் அவை ஒட்டுமொத்தமாக வாழ்க்கையைக் காட்டுகின்ரன. அந்த ஒட்டுமொத்த தளத்தில் எல்லாமே சிறிதாகி பொருளிழந்து போகின்றன. அவை நம் சிந்தனையின், தத்துவப்புரிதலின்  கட்டுமானங்களை மாற்றியமைக்கின்றன. நாம் உருவாக்கியவற்றை அவை உடைக்கின்ரன. மீண்டும் மேலும் தெளிவான ஒன்றை நாம் கட்டிக்கொள்ளும்வரை நாம் ஒருவகை வெறுமையில்தான் இருப்போம்.

 

ஆகவே முக்கியமான உலகியல் சார்ந்த முயற்சிகளை முழுமூச்சாகச் செய்யும்போது பெரிய நாவல்களை — குறிப்பாக விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின்குரல், கொற்றவை- வாசிக்காமல் இருப்பதே நல்லது.

 

அன்றாட வாழ்க்கையில் நாம் தேங்கிப்போகும்போது, மீள மீள ஒன்றையே செய்வதன் சோர்வில் நாம் சிக்கியிருக்கும்போது நாம் அவற்றை வாசிக்கலாம். சிந்தனையில் இறுகிப்போய் இருக்கும் நிலையில் கண்டிப்பாக நாம் வாசிக்க வேண்டும்

 ஜெ

 

 

அன்புள்ள ஜெயமோகன்,

நீல பத்மநாபன் என நினைக்கிறேன் (அவர்தானே துணைப்பொறியாளராக பணியாற்றியவர்?), அவரது ஒரு கதையின் கதாநாயகன் அவரைப் போலவே அரசு வாரியத்தில் ஏ.இ. ஆக பணிபுரிந்து கொண்டே, பல புத்தகங்கள் எழுதி அவார்டும் வாங்குகிறார். இது அவரது சக இஞ்சினியர்களை மனம் புழுங்க வைக்கிறது. இவருக்கு இம்மாதிரி எல்லாம் அனுமதி/சலுகைகள் எல்லாம் தந்தால் தாங்கள் எல்லோருமே எழுதத் தொடங்கி ஆஃபீசை சங்கடத்தில் ஆழ்த்துவோம் என அவர்களில் ஒருவர் வெளிப்படையாகப் பொருமும் அளவுக்கு நிலைமை சீர்கெடுகிறது.

ஒரு அலுவலக மீட்டிங்கில் அவரது மேலதிகாரி, “சார் இந்த மீட்டிங்கையே தனது ஏதேனும் ஒரு கதையில் புகுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லைஎன வேடிக்கையாகக் கூற, அவரது சக அதிகாரி அதை சீரியசாக எடுத்து கொண்டு, அவ்வாறெல்லாம் இவர் செஞ்சா செருப்பாலே அடிக்கப்போவது என்று கூறுவது உறுதி போன்ற எதிர்வினை தருமளவுக்கு நிலைமை போகிறது.

உங்கள் அலுவலகத்தில் நீங்கள் உங்கள் சக ஊழியர்கள் தரப்பிலிருந்து பொறாமையால் விளைந்த தாக்குதல்களை எதிர் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் எழுதியதிலிருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால், நீங்களுண்டு உங்கள் வேலையுண்டு என இருந்து, தவறிப் போய்கூட பதவி உயர்வு ஏதேனும் அதிகாரியாக வந்து விடாமல் பார்த்து கொள்கிறீர்கள் எனத் தோன்றுகிறது.

சட்டப்படி அனுமதி வாங்கிக் கொண்டு நீங்கள் பாட்டுக்கு உங்கள் தரப்பிலிருந்து வருமான வரி ரிடர்ன்ஸ் அளித்து வந்தால் அந்த வகையில் பிரச்சினை இருக்காதுதான். ஆனாலும் இந்த பொறாமை என்னும் விஷயம்? அது எந்தெந்த காரணங்களுக்காகவோ வருகிறதே?

இது பற்றி ஏதேனும் பதிவுபோடும் எண்ணம் உண்டா? அல்லது இந்த மின்னஞ்சலுக்காவது தனி பதில் தரவியலுமா

சங்கடமான கேள்வியாக இருந்து பதிலளி்க்க விரும்பாவிட்டால், அதையும் புரிந்து கொள்வேன்.

எனது விஷயத்தில் நான் பாட்டுக்கு என் வேலையை பார்த்து வந்தேன். இது பற்றி நான் ஒரு பதிவும் போட்டுள்ளேன், பார்க்க: 
http://dondu.blogspot.com/2005/05/7.html

ஆனால் உங்கள் விஷயத்தில் நீங்கள் பெறுகின்ற புகழ் அவ்வாறு தனி சேனலில் இயங்க விடாது என்பதும் தெரியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்


 

அன்புள்ள டோண்டு சார்,

 

வேலையில் இருந்துகொண்டே கலை இலக்கிய விஷயங்களில் ஈடுபடுவது பொதுவாக கடினமானது. ஆனால் அதில் பல வசதிகளும் இருக்கின்றன.

 

ஒன்று, வேலை நம் ஆற்றலின் பெரும்பகுதியை, நேரத்தின் நல்ல பகுதியை, உறிஞ்சி விடுகிறது. ஒரு கதை எழுத 3 மணி நேரம் போதும். ஆனால் ஒருநாளில் மூன்று மனிநேரம் மட்டும் கிடைத்தால் அதை வைத்துக்கொண்டு நல்ல கதையை எழுதிவிட முடியாது. அதற்குப்பின்னால் உள்வாங்குதல், உள்ளூர பயணம்செய்தல் என பல மனநிலைகள் இருக்கின்றன. அவற்றுக்கான நேரமும் உண்மையில் எழுத்துக்கான நேரமே. வேரு விஷயங்களில் நாளெல்லாம் மூழ்கியபின் கிடைக்கும் மூன்றுமணி நேரம் நேரமே அல்ல.

 

பெரும்பாலும் அன்றாட லௌகீக விஷயங்கள் நம் கற்பனையை படைப்புத்திறனை உறிஞ்சிக்கொள்வதையே காண்கிறோம். ஆகவே வேலைச்சுமை என்பது எழுத்துக்கு எதிரானதே. எழுத்தே வேலையாக உள்ள எழுத்தாளனுக்கு இருக்கும் வாய்ப்பில் சிறு பகுதியைக்கூட நாம் பகுதிநேர எழுத்தாளர்களிடம் காணமுடியாது. மேலைநாட்டில் எழுத்தாளன் என்பவன் முழுநேர எழுத்தாளனே

 

ஆனால் அதற்காக எழுத்தை தொழிலாகச் செய்தால் ஏற்படும் இழப்பு இன்னும் அதிகம். வருமானத்துக்காக கட்டாயமாக எழுத நேர்வதும் சரி ஏராளமாக எழுத நேர்வதும் சரி எழுத்தாளனின் கல்லறையை அவனே கட்டிக்கொள்வதுதான். அவன் தான் எழுத வேண்டிய, தன்னுடைய , இலக்கியத்தை எழுதி அதனாலேயே தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியவேண்டும்

 

அப்படி முடியாத பட்சத்தில் அரசு வேலையே சிறந்தது. அதில் உள்ள நிரந்தரத்தன்மை எழுத்தாளனின் அன்றாடப் பதற்றங்களை வெகுவாகக் குறைத்துவிடும். புறவாழ்க்கையை எளிமையாக, சவால்கள் அற்றதாக, சாதாரணமாக அமைத்துக்கொள்வதே எழுத்தாளனுக்கு வசதியானது.

 

நான் அரசுவேலையில் பதவி உயர்வுகளை மறுத்தேன். சவால்கள் இல்லாத எளிமையான வேலையிலேயே நீடித்தேன். இது எனக்கு அளித்த சுதந்திரமும் உறுதிப்பாடும் எனக்கு மிக மிக உதவியாக இருந்தன.

 

அத்துடன் நான் என் அலுவலகத்தில் எப்போதுமே அடையாளம் இல்லாதவனாக, சாதாரணமானவனாக, பிரச்சினைகள் இல்லாதவனாக இருந்தேன். அதாவது கண்ணுக்குத்தெரியாமல்நடமாடினேன். அது எனக்கு மிக உதவியாக இருந்தது

 

ஜெ

முந்தைய கட்டுரைகிளம்புதல்
அடுத்த கட்டுரைவாக்களிக்கும் பூமி – 1, நுழைவு