இயற்கையை அறிபவனின் அறம்

 

அறம் விக்கி

ஆசிரியருக்கு ,

நாம் 3 ஆண்டுகளுக்கு முன் குன்னூரில் ஒரு வனப்பயணம் போயிருந்தோம், அப்போது காலை நடைக்குக் கிளம்பும் முன் ஒரு மலபார் அணிலைப் பார்த்தோம். நான் இயற்கை மற்றும் அத்வைதம் குறித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். நீங்கள் D.H. Lawrence ” இந்துக்கள் மகிழ்ச்சியானவர்கள், அவர்களின் மதச் சடங்குகளிலும் அன்றாட வாழ்விலும் இயற்கை இணைந்துள்ளது, உதயம் -அஸ்தமனம் -சந்த்யா வந்தனம் போல , இயற்கையை வாழ்க்கை முறையாகக் கொண்டவர்கள் மகிழ்ச்சியானவர்கள் ” எனக் கூறி உள்ளார் எனச் சொன்னீர்கள். கலேல்கரின் “ஜீவன் லீலாவிலும்” ஜோக் அருவியைப் பார்த்தபின் இதுபோன்ற ஒரு கருத்தை சொல்வதாக வருவதாக சமீபத்தில் அறிந்தேன்.

மதமும் பண்பாடும் இங்கு பிணைந்துள்ளது . இயற்கை அழகும் ஆன்மிகமும் இரண்டான ஒன்று இங்கு. ஒரு மதப் பிடிப்பான இந்துவுக்கு வாழ் நாள் கனவு கைலாய தரிசனம். இது அழகின் அடையாளம் அல்லது குறியீடு.

அன்றாட வாழ்வில் இயற்கையை ரசிப்பவர்களையும் , அல்லது காண்பதற்காகவே பயனிப்பவர்களையும் நான் அரிதாகவே காண்கிறேன் . குழந்தைகள், சிறார்கள் கூட இயற்கையை ரசிப்பதில்லை . நிலவையோ, உதயத்தையோ,காடு மலைகளையோ , அருவியையோ , மழையையோ துள்ளலுடன் ரசிக்கும் நபர்கள் நான் அறிந்து அறத்தின் பாற்பட்டவர்கள். மிகக் குறைவாகவே புகார்கள் சொல்வார்கள், வசைவார்கள் , கொந்தளிப்பற்றவர்கள் ஆகவே ஆசீர்வதிக்கப் பட்டவர்கள் .

ஆனால் பொதுவாக மனிதர்கள் விழித்திருக்கும் நேரம் முழக்க நெருக்கடியிலும் , கொந்தளிப்புடனும் இருக்கிறார்கள் , அறம் பிறழ்ந்தவர்கள் இயற்கைக் காட்சி எவ்விதத்திலும் அவர்களுக்கு பொருட்டில்லை , அறிமுகப்படுத்தினாலும் அவர்களால் இயற்கையில் ஒன்ற முடிவத்தில்லை, நிலை கொள்ள முடிவதில்லை புகார்கள் வசைகள் அதிகம் , மகிழ்ச்சியற்றவர்கள் ஆகவே சபிக்கப்பட்டவர்கள்.

ஆனால் கலா ரசனை உள்ள ஹிட்லர் மானுட அழிவை நிகழ்த்தினார் என்றும் அது தொடர்பாக 20 ஆண்டுகளுக்கு முன் ஒரு சிற்றிதழ் விவாதம் நடந்ததாகவும் , எனவே கலை அழகுணர்ச்சிக்கும் அறம் ஆன்மீகத்திற்கும் சம்பந்தமில்லை என்றும் , அதே சமயம் காந்தி கலைகளில் நாட்டம் இல்லாதவர் என்றும் வாதிக்கப் பட்டதாகக் கூறியுள்ளீர்கள். இது கலை அழகுக்கு மட்டுமே பொருந்தும் நிச்சயம் இயற்கை அழகிற்கு அல்ல . ஹிட்லர் ஒருபோதும் இயற்கையை ரசித்திருக்க மாட்டார் என ஊகிக்கிறேன்.

எனது கேள்வி ஒரு குறைத்தல் வாதம். ஒருவனால் இயற்கைக் காட்சியில் ஒன்ற முடிகிறதா, அன்றாடம் இயற்கையை ரசிப்பது அவன் இயல்பா , அவன் மகிழ்ச்சியானவன், அறத்தின் பாற்பட்டவன், ஆன்மீகமானவன் ; அல்லாதவன் சிற்றின்ப வேட்கை மட்டுமே உள்ளவன், மகிழ்வற்றவன், அறம் பிறழ்ந்தவன்.
இயற்கை அழகு -அறம்-ஆன்மிகம்-மகிழ்ச்சி மூன்றும் ஒன்றே என்று கூறலாம்,கூறலாமா ?

கிருஷ்ணன் .

 

*

 

கிருஷ்ணன்,

நீங்கள் கேட்கும் கேள்விக்கு ‘ஆம் அப்படித்தான்’ என ஒருவர் பதில் சொல்லியிருக்கிறார். எமர்சன். அவரது இயற்கை என்ற அற்புதமான கட்டுரையில். அதை நான் தமிழாக்கம் செய்திருக்கிறேன். இயற்கையை அறிதல் என்ற பேரில் சிறிய நூலாக வெளிவந்திருக்கிறது.

எமர்சனுக்கு அந்தப்பதிலுக்குப் பின்னால் ஒரு பெரிய மரபு உள்ளது. இயற்கைமையநோக்கு என்ற ஒன்று பதினாறாம்நூற்றாண்டு பிரிட்டனிலும் பிரான்ஸிலும் உருவாகி இருநூறாண்டுக்காலம் வலுவாக இருந்தது. இயற்கையைக் கடவுளின் பிரதிவடிவமாகக் காணும் இடம் வரை சென்றது அது. மதத்தின் இடத்தில் இயற்கைவழிபாட்டை வைக்க முயன்றது. கருணை, பாசம், நீதி, அறம் அனைத்துக்கும் இயற்கையை ஆதாரமாகக் காணமுற்பட்டது. அந்த மரபின் மிகச்சிறந்த மனங்களை நாம் பள்ளிகளில் படித்திருப்போம்- வேர்ட்ஸ்வர்த் முதலிய கவிஞர்கள், வால்ட்டேர் முதலிய சிந்தனையாளர்கள்.

இயற்கைமையவாதத்துக்குத் தத்துவார்த்தமான பின்புலமாக இருப்பது ஐரோபாவின் இயற்கைமையவாதம் [Naturalism] என்ற தத்துவமரபு. இயற்கையின் அடிப்படைவிதிகளன்றி பிரபஞ்சத்தை இயக்கும் விசைகளென ஏதுமில்லை என்பது அதன் அடிப்படைத்தரிசனம். முழுமுதல் என ஏதேனும் ஒன்று உண்டு என்றால் இயற்கை மட்டுமே என்று அது வாதிடுகிறது.

பத்தொன்பதாம்நூற்றாண்டு வரை கவிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்களால் ஒரு இலட்சியக்கனவு போல முன்வைக்கப்பட்ட இயற்கைமையநோக்கு பின்னர் உருவான பசுமைஇயக்கங்களின் அடிப்படை உணர்ச்சிகளை உருவாக்கியது. இன்று பேசப்படும் கயா கோட்பாடு வரை அதன் தொடர்ச்சி உண்டு. இயற்கைமையநோக்கு நவீன ஓவியத்தில், குறிப்பாக இம்ப்ரஷனிச ஓவியங்களில், மிகப்பெரிய செல்வாக்கு செலுத்தியது என்கிறார்கள்.

நாம் இன்று இயற்கையை ரசிப்பதும் அதைப்பற்றிப் பேசுவதும் எல்லாம் இந்த ஐரோப்பியச் சிந்தனைமரபின் தொடர்ச்சியாக நின்றுகொண்டே என்பதுதான் உண்மை. இயற்கையை நாம் எப்படி ரசிக்க ஆரம்பித்தோமெனப் பார்த்தாலே இது புரியும். சிறுவயதில் நமக்கு இயற்கை என ஒன்றிருப்பதே தெரியாது. அதன் பகுதியாக இருந்துகொண்டிருந்தோம். பள்ளிப்படிப்பின் ஒரு கட்டத்தில் கவிதைகள் அல்லது அதைப்பற்றிய எழுத்துக்கள் வழியாகவே நமக்கு இயற்கை அறிமுகமாகிறது.

உலகமெங்கும் கவிதை என்பது இயற்கையை மொழி பிரதிபலிப்பதன் விளைவாக உருவானதே. ஆனால் இயற்கையை இயற்கைக்காக ’ரசிக்கும்’ மனநிலை, இயற்கையை வழிபடும் பரவசநிலை என்பது ஐரோப்பியக் கவிதைகள் வழியாகவே உலகமெங்கும் சென்றது. நமக்கு பிரிட்டிஷ் கவிஞர்கள் வழியாக.அக்கவிதைகள் அல்லது அவற்றால் உந்தப்பட்டு எழுதப்பட்ட நமது மொழிக்கவிதைகளால். பலசமயம் அந்தக்கவிதையை வகுப்பில் நடத்திய சில ஆசிரியர்கள் இயற்கைரசனையை நமக்கு உருவாக்கியிருப்பார்கள்.

அந்தரசனை உருவான பின்னர் நாம் இயற்கையை வெளியே நின்று பார்க்க ஆரம்பிக்கிறோம். இந்த இடைவெளி உருவான பின்னரே நாம் ரசனை என்று சொல்லக்கூடிய ஒரு மனநிலை நம்மிடம் கூடியிருக்கும். இயற்கையை நுணுக்கமாகக் கவனிக்க ஆரம்பிப்போம். அதை மொழிப்படிமங்களாகவும் காட்சிப்படிமங்களாகவும் இசைப்படிமங்களாகவும் மாற்றிக்கொள்ள முயல்வோம். இயற்கையில் இருந்து சிந்தனைகளைக் கறந்தெடுக்கப் பயில்வோம். இயற்கையை விளக்கிக்கொள்ள முற்படுவோம்.

சுருக்கமாகச் சொல்லப்போனால் இயற்கை அதன்பின் நமக்கு ஒரு மாபெரும் படிமவெளியாக ஆகிவிடுகிறது. ஒரு குறியீடாகவே நம் முன் அது நிற்கிறது. இயற்கை என நாம் காண்பது அதன்மேல் நாம் ஏற்றும் அர்த்ததை மட்டுமே. அந்த அர்த்தவெளியைக் கிழித்து இயற்கையை அதுவாகவே காணும் சில கணங்களை அடைவதற்குத் தனிப்பயிற்சியும் தொடர்ந்த சாதகமும் தேவை. நம் பயணங்களில் நாம் எப்போதும் செய்யும் ’இயற்கைத்தியானம்’ என்ற முயற்சி அதற்காகவே.

இப்போது ஒரு கேள்வி, இந்த வகையான மனவிலக்கமும் அதன் விளைவான ரசனையும் உடையவர்கள் மட்டுமே இயற்கையை அறிகிறார்கள் என்று கொள்ளமுடியுமா? இயற்கை என்றால் என்னவென்றே அறியாமல் இயற்கையின் மடியில் வாழும் ஒரு பழங்குடியினர், ஒரு விவசாயி இவனைவிடக் கீழானவர் என்று சொல்லமுடியுமா?

இப்படிச் சொல்லிப்பார்க்கிறேன்.இயற்கை என்று நாம் ரசிக்கும் இது சென்ற இருநூறாண்டுக்காலத்தில் தத்துவத்தாலும் இலக்கியத்தாலும் கலையாலும் உருவாக்கி அளிக்கப்பட்ட ஒன்று. இந்த இருநூறு வருட பண்பாட்டுப் பயிற்சி உடையவன் மட்டுமே நுண்ணுணர்வும் அறவுணர்வும் உடையவன் என்று சொல்ல முடியுமா என்ன?

நேர்மாறான பதிலைத்தான் நீங்களும் சொல்வீர்கள். இந்தவகை இயற்கைமையநோக்கு கொண்டவர்களில் அறவுணர்ச்சியே அற்றவர்கள் உண்டு. எத்தியோப்பியாவின் பெரும்பஞ்சம் என்பது இயற்கையின் விதி, அதற்கு பணிந்து அம்மக்களைச் சாகவிடுவதே உகந்தது என வாதிடுபவர்களும் இவர்களில் உண்டு. உலகின் சூழியல் பாதுகாப்புக்காகப் பட்டினியை அனுமதிக்கலாமென வாதிடுபவர்கள் உண்டு.

காரணம், இந்தவகையான இயற்கைமையநோக்கு பலசமயம் முழுமையான அறிதலுக்கு எதிரானதாக ஆகிவிடுகிறதென்பதுதான். மதநம்பிக்கைபோல, கோட்பாட்டுப்பிடிப்பு போல இதுவும் ஒரு சிறுவட்டத்துக்குள் நின்று அனைத்தையும் பார்க்கும் பார்வையை உருவாக்கிவிடுகிறது. குறுகியமனநிலைகளை அளித்துவிடுகிறது. எந்தக் கருத்துநிலையும் எந்த நம்பிக்கையும் முழுமைநோக்கை நோக்கி விரியாமலிருந்தால், முழுமையான பிரபஞ்ச தரிசனத்தின் பகுதியாக ஆகாமலிருந்தால் அது அறியாமையாகவே ஆகும். இயற்கைமையநோக்கும் அப்படித்தான்.

சரிதான், கடைசியில் வேதாந்தத்தின் வரிக்கே வந்து சேர்ந்துவிட்டேன். பேதபுத்தியே அறியாமை என்பது.

ஆக, நான் என் குருவழியாக அறிந்ததை நான் ஒவ்வொரு கணமும் உணர்வதை , இப்படித்தான் சொல்வேன். அறிதல்களைத் தொகுத்து, சமன்செய்து, முழுமையறிதலை நோக்கிச் செல்வதே ஞானத்தின் வழி. ஏதேனும் ஒன்றில் எங்கேனும் நின்றுவிடுவது அல்ல.இயற்கையை அறிவதும் ரசிப்பதும் அந்த முழுமைநோக்கை நோக்கிக் கொண்டு செல்லுமென்றால் மட்டுமே அது அறிவையும் அறவுணர்வையும் அளிக்கின்றது.

இயற்கையை ‘ரசிக்கும்’ மனநிலையே இல்லாத விவசாயிகள் இயற்கையில் இருந்து வாழ்க்கையின் முழுமைநோக்கை மெல்லமெல்லப் பெற்றுக்கொண்டு அற்புதமான மனிதர்களாக ஆகியிருப்பதைக் கண்டிருக்கிறேன். அய்யப்பண்ணனைப்போல, குட்டப்பனைப்போல. அந்த தரிசனத்தை இயற்கையில் இருந்து பெறாமல் இயற்கையை ஒரு கறவைமாடாகவே அணுகும் விவசாயிகளையும் கண்டிருக்கிறேன். இயற்கையை நாம் அணுகும் முறைதான் முக்கியம்.

இந்தப் புரிதலுடன் பார்க்கையில் இயற்கையை அறிதல், இயற்கையில் இருத்தல் ஒரு மகத்தான ஞானசாதனம் என்பதைக் காணலாம். நாம் நமது சிந்தனையில் அறியும் மாபெரும் மாயை என்பது நம்மை மையமாக்கி எதையும் யோசிப்பது. நம் குடும்பத்தை ,நம் இனத்தை, நம் தேசத்தை, மானுடத்தை மட்டும் ஆதாரமாக்கி நம் பார்வைகளை உருவாக்கிக் கொள்வதே நம் இயல்பான வழக்கம். அந்த பேதபுத்தியே நம் அறியாமையின் அடித்தளம். இயற்கையில் இருக்கும் அனுபவம் அதை களைய உதவுகிறது. நாம் நம்மை விடுத்து இயற்கையின் பகுதியாக நம்மை உணரும் தருணங்களில் நாம் அதுவரை பார்த்த அனைத்தும் பிறிதொரு கோணத்தில் தெரிகின்றன. முழுமைநோக்கை நோக்கிச் செல்வதற்கான வழிகளில் அது முக்கியமானது.

நம்மில் இருந்துகொண்டு நமக்கு வெளியே இயற்கையை கண்டு ரசிப்பதனூடாக ஒரு இன்பநிலையை மட்டுமே அடையமுடியும். அது ஒரு உயர்தர மனமகிழ்ச்சி என்று சொல்லலாம். இயற்கையை நம்மை நாம் கரைத்தழித்துக்கொள்வதற்கான கருவியாகக் கண்டு அதற்காக முயலும்போது மட்டுமே இயற்கை நமக்கு ஞானமளிக்கும் குருநிலையாக ஆகமுடியும்.

இதையே இசை, கலைகள், இலக்கியம் என அனைத்துக்கும் சொல்லமுடியும். அது உங்கள் தன்னிலையை உறுதியாக்கி உங்கள் பேதபுத்தியை கெட்டிப்படுத்துகிறதா இல்லை உங்களைக் கரைத்து உங்கள் பார்வையை முழுமைநோக்கிக் கொண்டுசெல்கிறதா என்பதுதான் அடிப்படையான வினா. வெறுமே கலையனுபவமோ இயற்கையனுபவமோ மேலான மனிதனை உருவாக்கும், அறத்தையும் ஞானத்தையும் அளிக்கும் என்று சொல்லிவிடமுடியாது. அவை அகங்காரத்தை உறுதியாக்கி மனிதனை இன்னும்கூட இருளில் தள்ளவும்கூடும்.

நம்மைச்சுற்றி நாம் காணும் அலைபாயும் மனிதர்கள், நுகர்வு அன்றி இன்பமென்பதே அறியாதவர்கள், இயற்கையையோ கலையையோ உணரமுடியாத காரணத்தால் அப்படி இருக்கவில்லை. முழுமையாக, ஒட்டுமொத்தமாக நோக்கும் கோணம் அமையாததனால் அப்படி இருக்கிறார்கள். அந்தந்தக் கணங்களிலும் துளிகளிலும் சிக்கிக்கொண்டிருப்பதனால் அப்படி இருக்கிறார்கள். அதிலிருந்து வெளியேற விரும்புபவனுக்கு இயற்கை ஒரு வாசல். இயற்கையில் இருத்தல் ஒரு சாதனம். அவ்வளவுதான் சொல்லமுடியும்

ஜெ

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Nov 5, 2012

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–45