கருநிலம்-கடிதம்

ஆசிரியருக்கு ,

மனப்பரப்பு நிலப்பரப்பால் ஆனதே . தமிழன் ஐந்தினைகளாக நிலத்தை வகுத்தது ஒரு மானுட சாதனை . நிலப்பரப்பு மனப்பரப்பை தொட்டபடியே, தூண்டிய படியே இருக்கும், மண்ணின் சீதோஷ்ண நிலை நமதுமனநிலை (mood) . கடலும் அலைகளும் மாறிக்கொண்டிருக்கும் சஞ்சலம், வானமும், மீன்களும் நமது ஆழம், காடு நுண்ணிய பின்னிய சிந்தனை .கதிரும் நிலவும் பொருளுக்குத் தக ஒரு சிந்தனையின் துவக்கம். அந்தி தயக்கம், ஆறும் அருவியும் சிந்தனையின் விசை.

எனக்கு பாலை ஒரு விரிந்த ஈகையாகவே தோன்றுகிறது , விரிவு கடலினும் பெரிது. உங்களுக்கு பாலை எங்கும் ஒரு பளீரிடும் நீல வானின் பின்னணியில் கிடைத்ததால் , ஒரு அசைவற்ற தியான மன சீதோஷ்ண நிலை கைகூடியது.

கரு நிலம் இதுவரை உங்கள் எழுத்தில் உள்ள எல்லா வர்ணனைகளையும் தோற்கடித்து விடும், இன்னும் உங்கள் எழுத்தாண்மை படைக்கும் வீரியத்துடன் துடிப்போடு இருப்பதற்கு இது சான்று . நான் படித்த, சிந்தித்த, என் கண்முன் தோன்றிய நிலங்களில் இதுவே உச்சம் . ஒவ்வொரு சொல்லும் ஒளிவிடுகிறது . பெரும்பாலும் ஒரு விரிந்த பேரழகு நிறைந்த நிலம் ஒரு கவிஞனை சிறிதாக்கும், அவன் சொற்களையும் நிலத்தையும் நாம் ஒப்பிட்டால் , அவன் உயர எழும்பி தொட கை நீட்டி இயலாது விழுந்ததை அறிவோம், ஆனால் இந்த பயணக் கட்டுரையின் வரிகள் அசலை விஞ்சுகிறதோ என்ற ஐயம்.

(“காரின் ஒலியை ஏறிட்டுப்பார்த்து சிலைக்கூட்டமாக நின்றன. முன்நோக்கிக் குவிந்த செண்பக இலைக்காதுகள் சட்டென்று விடுபட அனைத்தும் ஒரே சமயம் துள்ளி அம்புக்கூட்டங்களாகப் புல்மேல் பாய்ந்து பாய்ந்து சென்று மறைந்தன”).
(“திரவமாக மாற எண்ணிப் பாதியில் தயங்கிவிட்ட மண் போல இருந்தது அது”)
(“இரவில் எழுந்த நூற்றுக்கணக்கான பூச்சிகளும் சிற்றுயிர்களும் சேர்ந்த பெரும் ரீங்காரம் எழுந்துகொண்டிருந்தது. புல்வெளி ஒரு பெரிய வாத்தியமாக மாறிவிட்டதுபோல. மனிதர்கள் காணமுடியாத ஒரு தேவநடனம் அங்கே ஆரம்பித்துவிட்டது போல”)
(“காற்றின் செதுக்கல் அது. மணல்மேட்டின் நுனி புடவைத்தலைப்பு போலப் பறந்துகொண்டிருந்தது. கனல்மேல் புகைபோல மென்மணல் வீசியது”)
(“புல்வெளிக்குள் ஆழமான தடமாகத் தெரிந்த செம்மண் சாலை வழியாகச் செல்ல ஆரம்பித்தபோது என்னைச்சுற்றிப் பொன்னலைகள் கொந்தளிக்க ஆரம்பித்தன. கண்ணை நிறைத்து சிந்தனையை நிறைத்துக் கனவுகளை நிறைத்து ஆன்மாவைப் பொன்னிறமாக ஆக்கும் நிலவிரிவு” )
(“நான் பார்த்ததிலேயே மகத்தான அந்திகளில் ஒன்று நிகழ ஆரம்பித்தது. செந்நிறம். செந்நிறத்தின் பல்லாயிரம் நிறபேதங்களால் ஆன பிரபஞ்ச வெளி”).
(“ஒரு மகத்தான செவ்வியல்கலைநிகழ்வின் திரைசரிவு போல”)
-போன்ற வரிகளை சொல்லிக்கொண்டே சென்றால் , பயணக்கட்டுரையை திரும்ப எழுதுவதகிவிடும் .

மேற்சொன்னது போன்ற இயற்க்கை நிலக்காட்சி வர்ணனைகளிலும் சரி அல்லது ,
(“அந்த நிலம் மீது ஒரு பெரும் சிலந்தி வலையை விரித்தது போலிருந்தது. செந்நிறமான வலை”.)
(“ஒரு உலோகச்சிலந்தி போல அது அமர்ந்திருக்கும். “)-போன்ற சிந்தனைகளுள் வினோத ஒப்பீட்டை வழக்கும் வரிகளிலும் சரி பயணத்தில் ஒரு உவகை மனத்தால் எழுதப்பட்டது என்பதறிகிறேன். மேலும்
(“மகத்தான பிடிவாதமும் எதையும் அப்பட்டமாக எடுத்துக்கொள்ளும் தன்மையும் ஒருவரில் இணையும் என்றால் அவர் எந்தத் தளத்திலும் ஒரு மாமனிதராகவே ஆவார் என்று நினைத்துக்கொண்டேன்.எளிமையும் நேரடித்தன்மையும் இருந்தால் உண்மை பிடிபட்டுவிடுகிறது, பிடிவாதம் அதில் அவரை நிலைக்கச் செய்கிறது. சிந்தனைத்திறன் ஒருவனை உண்மையில் இருந்து விலக்கமுடியும். கோழைத்தனமும் இணைந்துகொண்டால் அறிவுஜீவி அயோக்கியர்கள் உருவாகிறார்கள். அவர்கள் காந்தி என்ற சொல்லையே வெறுப்பார்கள் – கண்நோய்வந்தவன் விளக்கை வெறுப்பதுபோல.”)

(“மகிழ்ச்சிக்காக மட்டுமே செய்யப்படும் ஒன்றிலேயே மானுடமுழுமை நிகழமுடியும். ஆம், லீலை என்று நாம் அதைச் சொல்கிறோம். இந்த மணல்மேடுகள் பிரம்மலீலைகள். அது விளையாடியவை. நமக்கு விளையாட அளித்தவை”)

(“உடலில் படியும் அழுக்கு உள்ளேயும் படியக்கூடியது “) (ஃப்ளை அவே)-போன்ற வரிகள் பயணத்தால் தூண்டப்பட்டு , புது நிலத்தால் வடிவமைக்கப்பட்டு ஒரு கலைஞனின் விரல்கள் எழுதிய ஆழ்ந்த வரிகள். படிக்கும் போதே இது உண்மை என உண்மை மனம் அறியும். அனைத்தையும் சுட்டினால் இது ஒரு கடிதமாகாது ஒரு நீண்ட கட்டுரையாக முடியும், அது இந்த பயணக் கட்டுரைமுன் சிறுத்து நிற்கும் .

இயற்கையை எழுத பிசினற்ற கண்ணாடி போல ஒரு கசடற்ற சார்பற்ற மனம் வேண்டும். அப்போது தான் அது உள்ளவாறு பிரதிபலிக்கும். உங்களுடையது வெளிவாயிலில் பூதக்கண்ணாடி பொருத்தப்பட்ட மனம், அது எழுத்தில் வரும் பொழுது மேலும் வண்ணம் சேர்கப்ப்பட்டு பெரிதாக்கி ஒரு முப்பட்டை வழியே வண்ணப் படமாக ஒரு கடல்திரையில் காட்சியாகிறது, வானம் பிரதிபலிக்கிறது . சிலசமயம் இது அசல் காட்சியை விஞ்சலாம் , ஆனால் மாசற்ற கணம் அமையப்பெற்ற ஒரு மாபெரும் கவிஞனின் மனமும் இயற்கையின் படைப்பன்றோ, அவன் படைப்பும் இயற்கையின் படைப்பன்றோ.

கருநிலம்- இயற்கையின் படைப்பை, அது படைத்த இன்னொரு படைப்பு காண்கிறது , அறிகிறது, படைக்கிறது. எனவே இயற்கை இயற்கையை உணர்கிறது.

கிருஷ்ணன்.

அன்புள்ள கிருஷ்ணன்

இயற்கை முன் நாமறிவது ஒரு சொல்லின்மையை. அதன்பின் சொற்களால் அதை விரட்டிப்பிடிக்க முனைகிறோம். அது வழுக்கி வழுக்கிச் செல்கிறது. ஒருபோதும் சொல்லமுடிவதில்லை. ஆனால்அந்த நழுவல் வழியாகவே அது தன் இயல்பைக் காட்டிவிடுகிறது என்று படுகிறது.

சுட்டிக்குழந்தையைக் கொஞ்சுவதுபோல என நினைத்துக்கொள்கிறேன். ஒரு முத்தத்தை ஒழுங்காகக் கொடுக்க அதுவிடுவதில்லை. ஆனால் தவறித்தவறி விழும் எல்லா முத்தங்களும் அதற்குரியவையே

ஜெ

முந்தைய கட்டுரைதமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-3
அடுத்த கட்டுரைகுமரி கிறித்தவத் தமிழ்