அன்னியமுதலீடு- என் சொற்கள்

அன்புள்ள ஜெ.எம்,

அன்னியமுதலீடு பற்றி நீங்கள் சொன்னவை நீங்கள் இலக்கியம் சார்ந்த விஷயங்களில் சொல்லும் சமநிலையுடன் இல்லை என்று நினைக்கிறேன். விவசாயம் அழிகிறது, சிறுவணிகம் தேங்கி நிற்கிறது என்பதெல்லாம் உண்மை. ஆனால் அதற்கு வால்மார்ட் தீர்வல்ல. வால்மார்ட் உலகம் முழுக்க என்னென்ன செய்தது என்பதையும் கணக்கில்கொண்டுதான் நாம் யோசிக்கவேண்டும்.

சாமிநாதன்

அன்புள்ள சாமிநாதன், நண்பர்களுக்கு

இந்த விவாதத்தை இப்படி முடிக்க விரும்புகிறேன்

நம் சூழலில் இந்த அன்னியமுதலீடு பற்றிய சர்ச்சை வந்த நால் முதல் நான் கண்டு வந்தது ஒன்றையே. தங்களை முற்போக்கினர் என்று காட்டிக்கொள்வதற்கான முனைப்பில் இருந்தும் அரசியல் எதிர்ப்பில் இருந்தும் வரக்கூடிய எதிர்வினைகள். தேசம் விற்கப்படுகிறது என்பது போன்ற உச்சகட்டக் கூச்சல்கள்.

குறைந்தபட்சம் ஒன்றையாவது நான் எதிர்பார்த்தேன். இந்த விஷயத்தில் விவசாயிகளும் ஒரு முக்கியமான தரப்பு. அவர்களின் வாழ்க்கை இங்கே சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த ஒட்டுமொத்த விவாதத்திலும் விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள் என்பது ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை. அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்து எவரும் பேசவில்லை. அவர்களின் குரல் எங்குமே ஒலிக்கவில்லை இது சிறுவணிகர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்ற அளவிலேயே இதைப் பேசி முடிக்க முனைகிறார்கள். இன்னும் ஒரு படிமேலே சென்று விவசாயிகளுக்காகக் குரல்கொடுக்கிறோம் என்று சிறுவணிகர்கள் பேச ஆரம்பித்தார்கள்.

நான் இங்குள்ள மிக முக்கியமான, அடிப்படையான ஒரு பிரச்சினையை முன்னே கொண்டு வைக்க நினைத்தேன். இதில் என் அனுபவங்களை மட்டுமே கருத்தில்கொண்டேன். எனக்குத்தெரிந்தவர்களிடம் மட்டுமே பேசினேன்.களஆராய்ச்சியோ புள்ளிவிவர ஆய்வோ செய்யவில்லை. இந்த அளவிலேயே இது முக்கியமான ஒரு தரப்பு. ஏனென்றால் அனைவருமே கண்கூடாகக் காண்பது இது.

இந்தத் தரப்பைக் கவனப்படுத்துவதே நான் செய்யக்கூடுவது. எழுத்தாளன் செய்யமுடிவது இதையே. உங்களுக்குத்தெரியுமா தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் எந்த நாளிதழும் இந்தக் கட்டுரையை பிரசுரிக்க முன்வரவில்லை. குறைந்தது இணையத்திலாவது இப்படி ஒரு தரப்பு பதிவானதே வெற்றிதான்

இந்திய விவசாயம் சிறுவணிகத்துறையின் மாஃபியாக்களால் அழிக்கப்படுகிறது என்பது நிதர்சனம். சரி, அதற்கு அன்னியமுதலீடு உதவாதென்றால் வேறு எதையாவது செய்யலாம். அந்தச்சிறுவணிகர்களின் கூட்டமைப்பு தேசத்தைக் கட்டுப்படுத்த அனுமதிக்கவேண்டியதில்லை. அதனிடமிருந்து அரசு ஆணைகளைப் பெற ஆரம்பித்தால் அதன்பின் விவசாயிக்கு மீட்பே இல்லை.

ஜெ

முந்தைய கட்டுரைஇங்கே, இங்கேயே… [சிறுகதை]
அடுத்த கட்டுரைபெண் 9,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள்