அன்னிய முதலீடு -எதிர்வினைகள்

ஜெ.மோ.

நீங்கள் சொல்வது அனைத்தும் – விவசாயிகளுக்குக் கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை என்பதைப் பொறுத்த வரை, உண்மைதான். பாடுபடும் விவசாயிக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் அனைத்தும் வியாபாரிகளுக்கு – அதிலும் இடைத்தரகர்களுக்கே செல்கிறது. இதற்கு நமது விநியோகச் சங்கிலி அறுபட்டதே காரணம். முந்தைய காலத்தில் கிராமங்களிலும் நகரங்களிலும் செயல்பட்ட வாராந்திர சந்தை அமைப்பு அற்புதமான பொருளாதார ஏற்பாடு. அதன் நவீன வடிவமே கருணாநிதி கொண்டுவந்த உழவர் சந்தை. ஆனால், அரசின் கட்டுப்பாடின்மை காரணமாகவே சந்தை ஏற்பாடு நலிகிறது. இதற்கு வால்மார்ட் வந்தால் சரியாகிவிடும் என்று கூறுவது ஒருவித நம்பிக்கையே ஒழிய தீர்வாகத் தெரியவில்லை. எத்தைத் தின்றால் பித்தம் தீரும்?

நமது அரசையே வழி நடத்தும் அளவுக்கு பொருளாதார பலம் வாய்ந்தவர்கள் கையில் சில்லறை வணிகம் சிக்கினால், மேலும் மோசமான நிலைக்கு விவசாயிகள் ஆட்படக்கூடும். ரிலையன்ஸ் நிறுவனத்தின் தோல்விக்கு அவர்கள் கையாண்ட விவசாயிகளுக்கு எதிரான அணுகுமுறை காரணமானது போலவே, பன்னாட்டுப் பகாசுர நிறுவனங்களும் செயல்படக்கூடும். இது ஒரு எச்சரிக்கை மட்டுமே. இதற்காக இடதுசாரிகளையும் வலதுசாரிகளையும் ஒரே நேரத்தில் கடுமையாக விமர்சித்திருப்பது சரியல்ல. இன்றைய நிலையில் ஊழல் மிகுந்த மத்திய அரசுக்கு எதிரான குரலாக ஒலிப்பவர்கள் அவர்கள்தான். யாரையும் சந்தேகப்பட அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆயினும், விமர்சிக்கும்போது இந்தஅளவுக்குக் கடுமை காட்டுவது ஜெயமோகனின் நடைமுறையாகத் தெரியவில்லை.

உழவன் காப்பாற்றப்பட வேண்டும். அவனை ஏமாற்றும் வர்த்தக வட்டத்தை சரிப்படுத்த வேண்டும். அதற்கு அரசு முறையான நடைமுறைகளை வகுக்க வேண்டும். விவசாயிகளும் ஒருங்கிணைந்து சாகுபடி திட்டங்களை வகுக்க வேண்டும். உண்மையில் இதற்காகப் பல வேளாண் வணிக முறைகள் நம்மிடம் உள்ளன. வழக்கம் போல அதையும் நாசமாக்கி வைத்திருக்கிறோம். இதை விடுத்து, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அதிகரிப்பதால், விவசாயிக்கு லாபம் கிடைத்துவிடும் என்று நம்பினால், மீண்டும் நாம் ஏமாற்றப்படவே வாய்ப்புகள் அதிகம். அதை ஜெயமோகன் தனது கட்டுரையில் (வால்மார்ட் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு) குறிப்பிட்டிருக்கிறார். ஊழல் மிகுந்த நமது நாட்டில் அது நடக்கவே சாத்தியங்கள் அதிகம்.

இவ்விஷயத்தில், அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டுவிடக் கூடாது என்று சொல்வது தவறல்ல என்றே நான் நினைக்கிறேன்.

-வமுமுரளி.

செப்டம்பர் 14. சில்லறைவணிகத்தில் நேரடி அந்நியமுதலீடு இந்தியாவில் அனுமதிக்கப்பட்டநாள். இந்திய வருங்காலவரலாற்றில் மிக மோசமானவிளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இந்த அனுமதி, எந்தவித முன்யோசனையும்இன்றி எடுக்கப்பட்டது என்று கருதமுடியவில்லை. இதனால் ஏற்படப்போகும் பின்விளைவுகளை நன்குதெரிந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. அமெரிக்கப் பெரும்நிறுவனங்களின் பணவலை நமது அரசியல்வாதிகளின் கூடாரங்களில் பலமாக வீசப்பட்டு இருக்கிறது. நிலக்கரியை முகத்தில் பூசிக்கொண்டு, “கறைநல்லது” என்று நினைக்காமல் அதை கழுவத்துடிக்கும் நமது பிரதமர் மன்மோகன்சிங், எதிர்க்கட்சிகளின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை திசைதிருப்ப மேற்கொண்ட முயற்சியும்கூட. இனி இவரை யாரும் செயல்படாத பிரதமர் என்று சொல்லிவிடமுடியாது.

இதில், ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், நாம் அந்நியமுதலீட்டை அனுமதித்த அதேநாளில், அமெரிக்காவில் நியூயார்க்நகரத்தில் இருந்து உலகின் மிகப்பெரிய சில்லறை வணிகநிறுவனமான வால்மார்ட் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளது. வால்மார்ட்டுக்குஅதிர்ச்சி ஊட்டும்விதமாக, கடந்த ஜூன் 30ம்தேதி சுமார் பத்தாயிரம்பேர் இந்த வணிகநிறுவனத்திற்கு எதிராக லாஸ்ஏஞ்சலஸ் நகரத்தில் பேரணி ஒன்றை நடத்தினர். அதில் அவர்கள் போட்ட கோஷம் இதுதான். “வால்மார்ட் எங்களுக்கு வேண்டாம்”. அமெரிக்காவிலேயே கடும் எதிர்ப்புகளை சந்திக்கும் இந்த வால்மார்ட் இந்தியசந்தைக்குத் தேவையா? சிவப்புக் கம்பளம் விரித்து இவர்களை நாம் வரவேற்கவேண்டிய அவசியம் என்ன? இதற்கு, அரசியல்வாதிகளும், இங்கு இருக்கும் அறிவுஜீவிகளும் சொல்லும் காரணம், வேலைவாய்ப்பு பன்மடங்குபெருகும், ஒருலட்சம் பேருக்குமேல் வேலைகிடைக்க இது வழிவகைசெய்யும் என்பதுதான். ஆனால், இவர்களின் வாதம், வால்மார்ட்டின் பிறப்பிடமான அமெரிக்காவிலேயே எடுபடவில்லை. அங்கு வால்மார்ட் உருவாக்கும் ஒவ்வொரு வேலைவாய்ப்பும், ஏற்கனவே இருக்கும் மூன்று வேலைவாய்ப்புக்களை முடக்குகின்றன என்று ஒரு ஆய்வுசொல்கிறது. இந்தியாவில் தற்போது சில்லறை வணிகத்தையே நம்பி இருக்கும் பத்துகோடி தொழில்முனைவோர் மற்றும் உள்ளூர் மளிகை வியாபாரிகளை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு, ஒருகோடிபேருக்குப் புதியவேலைவாய்ப்பு என்பது உண்மையிலயே கேலிக்கூத்தானது.

இந்த அந்நியத் தலையீட்டால் பாத்திக்கப்போவது சில்லறை வர்த்தகர்கள் மட்டும் அல்ல. இந்திய உற்பத்தியாளர்கள், சிறு மற்றும் குறுதொழில் முனைவோர், கடைசியாக நுகர்வோரும்தான். இங்கு கடைபரப்பும், லாபம் ஒன்றையே தாரகமந்திரமாக கொண்ட வால்மார்ட், டெஸ்கோ மற்றும் கேரிபோர் போன்ற நிறுவனங்கள், மலிவான, தரம்குறைந்த சீன, கொரியபொருட்களை மிகவும் மலிவுவிலையில் வாங்கி சந்தைப் படுத்தும். அவர்களின் இந்த மிகக்குறைந்த விலைக்கே இந்திய உற்பத்தியாளர்களும் தனதுபொருட்களை விற்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் தரமும்போய், இந்திய தயாரிப்புகள் படிப்படியாய் மறைந்துபோகும். தாய்லாந்து நாட்டில், வால்மார்ட் நிறுவப்பட்ட இரண்டு ஆண்டுகளில், அங்கிருந்த 65 சதவீத சிறிய சில்லறை நிறுவனங்கள் மூடுவிழா கண்டுவிட்டன. அமெரிக்காவிலும் இதே கதைதான். அங்குள்ள பொருளாதார வளர்ச்சி மற்றும் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, வால்மார்ட் நிறுவனம் இருக்கும் பகுதிகளில், 30 முதல் 65 சதவீதம் வரை மற்றகடைகள் மூடப்படுவது அதிகரித்துள்ளது. மேலும், பணபலம் மற்றும் அதிகாரதுஷ்பிரயோகம் மூலமாக, சிலகுறிப்பிட்ட, அன்றாடம் தேவைப்படும் பொருட்களை இப்பெரும் நிறுவனங்களில் மட்டுமே வாங்கமுடியும் என்றநிலையை அவர்கள் ஏற்படுத்துவார்கள். இதனால் அப்பொருட்களுக்கு செயற்கை பற்றாக்குறை ஏற்படும். அவர்களிடம் 100 கிராம், 200 கிராம் அளவுகளில் பொருட்களே கிடைக்காது. “ஆபர்” என்ற போர்வையில், அவசியமே இல்லாமல் நாம் சாக்கு மூட்டையில் பொருட்களை அள்ளிக்கொண்டு வரவேண்டி இருக்கும். நமது தெரு முனைகளில் சிறுசிறு கடைகளை சொந்தமாக நடத்திகொண்டு, கௌரவமாக வாழ்ந்துவரும் நமது அண்ணாச்சிகள், காலத்தின் கட்டாயமாக வால்மார்ட்டின் சேவகர்களாக மாறும்காலம் உருவாகும். ஏனெனில், இந்தப் பெரும் நிறுவனங்கள், தொடக்கத்தில் “மார்க்கெட்டை” தனது கட்டுக்குள் கொண்டுவருவதற்காக மிகமிகக் குறைந்த விலையில் பொருட்களை நுகர்வோர்களுக்கு வழங்கும். அதையும் மிகுந்தபொருட்செலவில் விளம்பரம் செய்யும் யுக்தியும் உண்டு. இதனால் ஏற்படும் பலகோடிரூபாய் நஷ்டம், அசுரபணபலம் கொண்ட அவர்களுக்கு ஒருவிஷயமே அல்ல. நாட்கள் செல்லசெல்ல, சந்தையைக் கைக்கொள்ள ஆரம்பித்ததும், அவர்களிடம் இருந்து ஒரு “அந்நியன்” வெளிப்படுவான். ஆனால், அவன் நமது “அந்நியனை”ப் போல நல்லது செய்ய அவதரிக்கமாட்டான். பிறகென்ன, அவர்கள் வைத்ததே சட்டமாக இருக்கும். இந்த நிறுவனங்களில், அதன் கிடங்குகளே இருநூறு ஏக்கர்பரப்பளவில் இருக்கும். அதில், பல்லாயிரம் டன் பொருட்கள் கெட்டுப்போகாமலும், பாதுகாப்பாகவும் வைக்கமுடியும். இந்த நூதனப் போட்டியில் எந்த அண்ணாச்சி கடை நடத்தமுடியும்?

வால்மார்ட் போன்ற அந்நிய நிறுவனங்கள் இந்தியாவிற்குள் வந்தால் ஏற்படப்போகும் மாற்றங்கள் சாதாரணமானவை அல்ல. அவர்கள் முதலில் இடைத்தரகர்களை ஒழிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவர். உற்பத்தி நிலையிலேயே அனைத்துப் பொருள்களையும் வாங்குவதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள். இதனால் நுகர்வோர்களாகிய நமக்கு நன்மைதானே? என்ற கேள்வி எழலாம். அந்தகணிப்பு முற்றிலும் தவறானது. கடந்த ஜனவரி 2008-ஆம் ஆண்டு அமெரிக்காவில் அரிசியின் விலை எந்தவித காரணிகளும் இன்றி 2007-ஆம் ஆண்டைவிட மும்மடங்கு உயர்ந்தது. அங்குள்ள மத்திய உணவுக்கழகம் நிலைமையை ஆராய்ந்ததில் விலையேற்றதிற்கான காரணம் என்னவென்று தெளிவாகியது. அமெரிக்காவில் உள்ள வால்மார்ட்டின் மொத்த விற்பனை கிளையான “சேம்ஸ்கிளப்” கற்பனை செய்யமுடியாத அளவுக்கு மொத்தமாக அரிசியைக் கொள்முதல் செய்து, செயற்கையாக விலையேற்றம் செய்ததைக் கண்டுபிடித்தது. இதிலேயும் ஒரு விஷயத்தைக் காணலாம். இதனால் விவசாயிகள் பயன்அடைந்திருப்பார்களே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அதில்தான் வால்மார்ட்டின் தந்திரத்தோள்கள் விவசாயியைத் தழுவிக்கொள்கின்றன. தன்னிடம் இரண்டாம்நிலை முதலீட்டாளராக இருக்கச் செய்து, வால்மார்டைத் தவிரவேறு எங்கும் தன் உற்பத்தியை விற்றுவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்கிறது. காலப்போக்கில், விவசாயி தனது தானியங்களை விற்க சந்தையே இல்லாத செயற்கைச்சூழல் உருவாக்கப்படுகிறது. பிறகென்ன, அடிமை போலவே, இப்பெரும் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலைக்கு பொருள்களை விற்கவேண்டியது ஒரு விவசாயியின் கடமை. வாங்குவது நுகர்வோரின் வேலை. இந்தச்சூழல் இன்னும் சில வருடங்களில் நிச்சயம் உருவாகும். அமெரிக்காவில் வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுவோர் வெறும் இரண்டு சதவீதம். ஐரோப்பிய யூனியனின் மொத்த வேளாண்மைச் சமூகத்தினரே வெறும் ஐந்து சதவீதம்தான். அவர்களுக்கே இந்த கதி என்றால், நம்நாட்டின் முப்பது சதவீத விவசாய, வேளாண்மை குடிகளின் கதி என்னவாகும்? மேலும், நமதுநாட்டில் விவசாயிகள் பெறும் மானியம், நேரடிக் கொள்முதல் என்ற பெயரில் வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு மடைதிறந்த வெள்ளம் போல் பாயும். வரியாய் நாம் கட்டியபணம் நாட்டு முன்னேற்றத்திற்குப் பயன்படாமல், இதுபோன்ற அந்நியநாட்டு நிறுவனங்களுக்குக் கொள்ளைலாபமாய்ப் போவதில் யாருக்கு “லாபம்”?.

மேலும், வால்மார்ட் போன்ற நிறுவனங்களின் தாரகமந்திரமே, “உற்பத்தியாளரிடமிருந்து மொத்த நேரடிக்கொள்முதல்” என்பதுதான். அதாவது, “விவசாயியின் நிலத்தில் இருந்து – வால்மார்ட்டின் வாசலுக்கு” என்பதுதான் இதன்பொருள். இது நமது நாட்டில் எப்படி சாத்தியம்? முதலில், நமதுநாட்டின் வேளாண்மை பொருளாதாரக் கட்டமைப்பை எடுத்துக்கொள்வோம். இந்நாட்டில் இது இயல்பாகவே எளிதானதாகவும், பல அடுக்குகளைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. நமதுநாட்டில் முப்பதுகோடிக்கும் மேற்பட்டோர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். நமது மொத்த உள்நாட்டு உணவுஉற்பத்தியில் அறுபதுசதவீதத்தை, உற்பத்தியாளர்கள் அதாவது விவசாயிகள், விவசாயம் சார்ந்த பணிகளில் ஈடுபடும் கிராமமக்களே பயன்படுத்துகின்றனர். மீதம் உள்ள நாற்பதுசதவீதம் உணவுஉற்பத்தியே கிராமங்களைவிட்டு வெளியே, வணிகரீதியிலான விற்பனைக்கு வருகிறது.ஆக, தங்களுடைய பயன்பாடுபோக, மீதம் உள்ள உற்பத்தியே நகர்ப்புறங்களில் விற்பனைக்கு வருகிறது. இதனால், கிராமங்களில் வசிக்கும் உற்பத்தியாளன், உணவுத்தட்டுப்பாடு என்ற ஆபத்தை சந்திப்பதில்லை. ஆனால், வால்மார்ட்டின் நேரடி கொள்முதலில் நகரம்-கிராமம் என்ற வேறுபாடு கிடையாது. இதன்விளைவாக, நாளடைவில், நகரத்தில் விற்கப்படும் தனது உற்பத்திப்பொருளை, உற்பத்தியாளனும் அதேவிலையில் வாங்கும் நிலை உருவாகும். நமது கிராமங்களில் வசிக்கும் மக்கள், நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களைப்போல் வாங்கும் சக்திகொண்டவர்கள் இல்லை. இதன்காரணமாக, எதிர்காலத்தில், கிராமங்களில் கடுமையான உணவுப்பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு மிகவும் அதிகம்.

பத்துலட்சம் மக்கள்தொகை கொண்ட இந்தியநகரங்களில் மட்டுமே இந்த வணிகநிறுவனங்கள் கடைபரப்ப முடியும் என்று மத்தியஅரசின் விதிசொல்கிறது. இது தொடக்கம்தான். தனது ராட்சசக் கால்களை இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் வைக்க, அரசியல்வாதிகளுக்கு என்ன செய்யவேண்டும் என்று அவற்றுக்கு நன்றாகவே தெரியும். இதற்கு உதாரணமாக நாம் இருபதாண்டுகள் பின்னோக்கிச் செல்லவேண்டிஇருக்கிறது.

அது 1991-ஆம் ஆண்டு .அப்போதைய நிதிஅமைச்சர் மன்மோகன்சிங், வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் தொழில்தொடங்க ஏதுவாக “திறந்த பொருளாதாரக் கொள்கை”யினை நாட்டுக்கு அர்ப்பணம் செய்திருந்தார். இதனால் நாடு மிகவேகமான பொருளாதார வளர்ச்சியை நோக்கிச்செல்லும் என்று மக்கள் கூட்டம்கூட்டமாகப் பேசிக்கொண்டார்கள். இந்தியா கூடியசீக்கிரத்தில் அமெரிக்காவாக மாறப்போகிறது என்றும், அதற்கான முன்னேற்பாடுகள்தான் இப்போது நடந்துவருகின்றன என்றும் தங்களுக்குள் அளவளாவிக் கொண்டனர். ஆனால், அமெரிக்கா போன்ற வளர்ந்தநாடாக, நம்நாடு மாறுவதற்கான ஒரு மந்திரச்சாவி இந்தக்கொள்கையினால் நமக்குக் கிடைக்குமா? என்பதை யாரும் சீர்தூக்கிப் பார்க்கவில்லை என்பதே உண்மை.

சரி, திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்தாகிவிட்டது. அமெரிக்க பெரும்முதலாளித்துவ நிறுவனங்களான பெப்சி மற்றும் கோலா கம்பெனிகள் இந்தியாவில் வந்திறங்கின. உள்நாட்டு குளிர்பானக் கம்பெனிகள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டன. அப்போது, அறிவுஜீவிகளிடையே இருந்து ஒரு கூக்குரல் எழுந்தது. உள்நாட்டு வியாபாரிகள் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள், அவர்களும் பெப்சி, கோலா அளவுக்கு தரத்தை உயர்த்தட்டும். இதனால் நுகர்வோருக்கு உலகத்தரமான குளிர்பானம் கிடைக்கும் என்றார்கள். காலப்போக்கில் உள்நாட்டு கம்பெனிகள், பெப்சி மற்றும்கோலாவின் அட்டூழியங்களால் மறைந்து ஒழிந்துபோயின. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள கடைகளில் எத்தனையோ தகிடுத்தத்தங்கள் செய்து உள்ளூர் சோடாக்கம்பெனிகளை ஓடஓடவிரட்டிய இந்த வெளிநாட்டு பெப்சி கோலா கம்பெனிகள், தற்போது இந்தியாவின் குளிர்பான விற்பனையில் தொண்ணூறு சதவிகிதத்தை ஆக்கிரமித்துள்ளன. மதுரையில் மிகப்பிரபலமாக இருந்து கோலோச்சி வந்த மாணிக்கவிநாயகர் சோடாக்கம்பெனியை மூடுவதற்காக இந்த வெளிநாட்டுக் கம்பெனிகள் செய்த தந்திரங்கள், கிழக்கிந்தியக் கம்பெனியை நினைவூட்டுவதாக இருந்தன.

அஜீரணக் கோளாறுக்காக பெரும்பாலான மக்கள் அப்போதெல்லாம் இஞ்சிகலந்த சோடாவையோ அல்லது “டொரினோ”வையோதான் குடித்தனர். எனது பால்யகால நண்பன் நிமோனியாவிற்கு மாத்திரை தொடர்ந்து சாப்பிட்டதில் ஏற்பட்ட வயிற்றுப்புண்ணுக்காக “டொரினோ” குடிக்கச்சொல்லி டாக்டர் சொன்னதாகக் கேட்டிருக்கிறேன். இப்போது விற்கப்படும் “கோக்” பானத்தைத் தொடர்ந்து குடித்தால் “கிட்னி”யில் கல் நிச்சயம். இப்படியாக, செவ்வனே திட்டமிட்டு சிறுவணிகர்களைத் துரத்தி அடித்து, இந்தியச் சந்தையில் பெப்சி கோலாவைத் தவிர வேறு எந்த பானத்தையும் காணமுடியாத அளவுக்கு தனது ராட்சசகால்களை மிகப்பலமாக இந்தியாவில் காலுன்ற உதவிசெய்தது மட்டுமே “திறந்தபொருளாதாரக் கொள்கை”யின் கைமேல்பலன். அப்போது செய்த இமாலயத் தவற்றின் தொடர்ச்சியாக, ஒட்டுமொத்த இந்தியப்பொருளாதாரத்தை முழுமையாக சீரழிக்கக்கூடிய “சில்லறை வணிகத்தில் அந்நியமுதலீடு” என்பதன் மூலம் மத்தியஅரசு எடுத்துள்ளது என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

சரி, இதற்கான மாற்றுவழி என்ன? விவசாயநாடான நாம், மேற்கத்திய சித்தாந்தத்தை பின்பற்றி நடக்கவேண்டிய அவசியம் ஏதும் இல்லை. அவர்களின் பொருளாதாரம், பணத்தை விரயமாக செலவுசெய்யும் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டது. நாமோ இயல்பாகவே பணத்தை சேமிக்கும் மனோபாவம் கொண்டவர்கள். 2010-ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி, தற்போது இந்தியரின் சேமிப்பு, GDP-யில் 36 சதவீதமாக உள்ளது. கணிசமான இந்த சேமிப்பை, முதலீடாக மாற்றக்கூடிய மனோபாவத்தை மக்களிடம் கொண்டுவந்தாலே, நாட்டில் சிறுதொழில்வளம் பெருமளவில் அதிகரிக்கும். வேலைவாய்ப்பு பன்மடங்கு பெருகும். ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை நாம் கண்டடையலாம். 2020-இல் வல்லரசு என்றபெயரில் மீண்டும் ஒரு அந்நிய ஆதிக்கத்திற்கு இடம் கொடுக்காமல், மக்கள்நலனை கருத்தில்கொள்ளும் நல்லரசாக, சில்லறைவணிகத்தில் அந்நியமுதலீடை தடைசெய்வதே மத்தியஅரசுக்கு நல்லது. இந்த நாட்டிற்கும் நல்லது.

முந்தைய கட்டுரைமிகையாகப் போற்றப்படுகிறாரா இளையராஜா?
அடுத்த கட்டுரைஅன்னிய முதலீடு- கடிதங்கள்