காந்தியின் உடை

இரு நிகழ்ச்சிகள் பொதுவாக அனைவரும் அறிந்தவை. காந்தி இரண்டாவது வட்டமேஜை மாநாட்டுக்காக பிரிட்டிஷ் மாமன்னர் ஐந்தாம் ஜார்ஜை சந்திப்பதற்காக 1931 கோடையில் லண்டனுக்கு வந்தார். பிரிட்டிஷ் மாமன்னரைச் சந்திப்பதற்கு திட்டவட்டமான உடை மற்றும் நடத்தை விதிமுறைகள் உண்டு. காந்தி அவரது சம்பிரதாய உடையை அதற்கு முன்னரே மாற்றிக்கொண்டிருந்தார். மிக எளிய இந்திய விவசாயியின் உடையை அவர் அணிய ஆரம்பித்திருந்தார். எங்கும் அவர் அந்த உடையை மாற்றிக்கொண்டதில்லை

லண்டன்கிளம்புவதற்கு முன்பு அமெரிக்க இதழாளர் ஒருவர் அவரிடம் ‘நீங்கள் மாமன்னரைச் சந்திக்கப்போவதற்கு முன் உடைகளில் மாற்றம்செய்வீர்களா? இந்த உடையில் செல்வது அவரை அவமதிப்பதாகக் கொள்ளப்படாதா?’ என்று கேட்டார். காந்தி அதற்கு ‘இல்லை, வேறெந்த உடையில் நான் சென்றாலும் அதுதான் மன்னரை அவமதிப்பதாக ஆகும். ஏனென்றால் அந்த உடைகள் எனக்குப் பொருத்தமற்றவையாக இருக்கும்’ என்றார்.

சந்திப்பு முடிந்தபின்னர் காந்தியிடம் ஒரு நிருபர் மாமன்னர் முன் அந்த எளிய உடையில் நிற்பதற்கு அவருக்குக் கூச்சமாக இருக்கவில்லையா என்று கேட்டார். ‘நான் ஏன் கூச்சப்படவேண்டும்? எங்கள் இருவருக்கும் தேவையான உடையை மாமன்னரே அணிந்திருந்தாரே’ என்றார் காந்தி.

காந்தியும் சரோஜினிநாயுடுவும் பிறரும் ஐந்தாம் ஜார்ஜை சந்திக்கச் செல்கிறார்கள்

அரசியலில் குறியீடுகளின் வல்லமையை காந்தி அளவுக்கு உணர்ந்த அரசியல்சிந்தனையாளர்கள் குறைவு. அவரது உடையும் தோற்றமும்தான் அவரது ஆகச்சிறந்த குறியீடு. இந்தியாவின் கோடிக்கணக்கான அரைப்பட்டினி விவசாயிகளின் தோற்றத்தில் இருந்தார் அவர். அதற்கு இருபக்கங்களிலும் இருவகை சாத்தியங்கள் திறந்துகொண்டன. இந்தியாவின் ஏழை எளிய மக்கள் அவரைத் தங்களில் ஒருவராகக் கண்டார்கள். தங்கள் வாழ்க்கையை, தங்கள் துயரை உணர்ந்த ஒருவராக மதிப்பிட்டார்கள்.

அந்தப் புரிந்துணர்வை இந்தியாவின் வரலாற்றின் பின்னணியில் வைத்தே மதிப்பிடக் கொள்ளவேண்டும். அன்றுவரை நமக்கிருந்தது நிலவுடைமைச் சமூக அமைப்பு. மன்னராட்சி முறை. ஆள்பவர்கள் அரசகுடியில் பிறந்தவர்கள். படைத்தளபதிகள் ,வீரர்கள். பின்னர் பிரிட்டிஷ் ஆட்சி உருவானபோது அதிகாரிகளின் அதிகாரம் உருவாகியது. படித்தவர்களின் அதிகாரம் அது. இவர்கள் அனைவருமே மக்களிடமிருந்து வெகுவாக விலகி உயர்ந்து இருப்பவர்கள். அவர்களால் அணுக முடியாதவர்கள்.

காங்கிரஸின் ஆரம்பகாலத் தலைவர்கள் அனைவருமே படித்த உயர்மட்டத்தில் இருந்து வந்தவர்கள். செல்வந்தப்பின்னணி கொண்டவர்கள். வெற்றிகரமாக வழக்கறிஞர்த்தொழிலோ வணிகமோ செய்தவர்கள். அவர்களுக்கும் மக்களுக்குமான தூரமென்பது மன்னர்களுக்கும் மக்களுக்குமான தூரமேதான். காந்தியின் வருகை அந்த மாபெரும் இடைவெளியை வெற்றிகரமாக நிரப்பியது. அதன் வழியாகவே இந்தியாவின் சுதந்திரப்போர் உண்மையான மக்களியக்கமாக ஆகியது.

தென்னாப்பிரிக்காவின் சத்யாக்கிரக அனுபவத்துடன் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டுக்கு வந்த காந்தி அங்கே மக்களைக் காணவில்லை. இந்தியாவின் உண்மையான குடிமக்களாகிய எளிய விவசாயிகள் அங்கிருக்கவில்லை. படித்த உயர்வர்க்கத்தினரும் நடுத்தரவர்க்கத்தினரும் மட்டுமே இருந்தனர். எல்லாப் பேச்சுக்களும் ஆங்கிலத்தில் நிகழ்ந்தன. அவை பிரிட்டிஷ் மரபுப்படி மிகமிக சம்பிரதாயமாக நடைபெற்றன. அந்த உதவாக்கரை மாநாடுகளைப் பற்றி காந்தி மிகுந்த விமர்சனத்துடன் எழுதியிருக்கிறார்

அந்த மாநாட்டில் காந்திக்குக் கிடைத்தது வெறும் இரண்டு நிமிடங்கள். அவர் தன் அறிக்கையின் முதல்சில சொற்றொடர்களைப் பேசுவதற்குள்ளாகவே அதை கைதட்டி நிறைவேற்றிவிட்டார்கள். அந்த சிறிய நேர அளவில்கூட காந்தி தன் செய்தியை அங்கே உணர்த்தினார். குஜராத்தி தேசிய உடையில் தலைப்பாகையுடன் தோன்றிய காந்தி அதனூடாகத்  தன்னுடைய செய்தியை அங்கே அப்பட்டமாக முன்வைத்தார். அதன்பின் அவர் அரைவேட்டி-மேல்துண்டுக்கு மாறியது அந்த நிகழ்ச்சியின் அடுத்தபடிதான்.

தன் உடை வழியாக காங்கிரஸ் இனிமேல் படித்த உயர்வர்க்கத்தின் கட்சி அல்ல என்று அவர் இந்தியாவின் ஏழை மக்களிடம் சொன்னார். அந்த அரைவேட்டியுடன் அவர்  அரசியல் மாநாடுகளில் பங்கெடுத்தார். தேசத்தை வழிநடத்தும் போராட்டங்களை நடத்தினார். வைஸ்ராயைச் சந்திக்கச்சென்றார். மாபெரும் ராஜதந்திர ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். அரைவேட்டியும் மேலாடையும் அணிந்த ஒருவருக்கு அதெல்லாம் சாத்தியம் என்பதே இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் சிந்திக்கக்கூட முடியாத ஒரு நிகழ்வு. காந்தியின் அரைவேட்டி-மேலாடையே இந்தியாவில் உண்மையான ஜனநாயகம் உருவாகி வந்த வழி.

இன்னொரு பக்கம் அவரது உடை இந்தியாவுக்கு வெளியே இந்தியா எப்படி சுரண்டப்படுகிறது என்பதற்கான கண்கூடான அடையாளமாக இருந்தது. காந்தியின் உப்புசத்தியாக்கிரக்த்தின்போது உலகமெங்கும் ஊடகங்கள் அவரைக் கவனித்தன. அமெரிக்காவின் டைம் இதழ் பத்து மாதங்களில் இருமுறை அவரை அட்டைப்படமாக வெளியிட்டது. இதழ்களில் தொடர்ந்து வெளியான பலநூறு புகைப்படங்கள் வழியாக ஐரோப்பிய மக்களிடம் காந்தி சென்றுசேர்ந்தார். அந்தப் படங்களிலெல்லாம் அவர் அந்த எளிய ’அரைநிர்வாண’ உடையில் இருந்தார். இந்தியா சுரண்டப்படுகிறதென்பதற்கு அவரது தோற்றம்போல மிகச்சிறந்த பிரச்சார சாதனம் வேறு இருக்கவில்லை. ஐரோப்பிய மனசாட்சியை நோக்கி காந்தி பேசியதைவிட அந்தத் தோற்றம் அதிகமாகப் பேசியது.

இன்னொன்றையும் கவனிக்கவேண்டும். ஐரோப்பா முழுக்க காந்தியின் போராட்டங்களுக்கு எதிரான பிரச்சாரம் கிறித்தவ அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டது. 1931இல் வட்டமேஜை மாநாட்டுக்குச் சென்ற காந்தி அங்கிருந்து ரோமாபுரிக்குச் சென்று போப்பாண்டவரைச் சந்திக்க விரும்பினார். அவர் முறைப்படி நேரம் கேட்டபோதும்கூட போப் பதினொன்றாம் பயஸ் அவரைச் சந்திக்கமுடியாதென்று மறுத்துவிட்டார். போப்பாண்டவரைச் சந்திப்பதற்கு உரிய உடைமரபை காந்தி கடைப்பிடிக்காத காரணத்தால்தான் போப் பேட்டி மறுத்தார் என அன்றைய செய்தித்தாள்கள் எழுதின. சர்வதேச அளவில் போப்பாண்டவருக்கு எதிராக கடுமையான கண்டனம் உருவாக அது வழிவகுத்தது.

போப் பதினொன்றாம் பயஸ்

ஆனால் பின்னர் வாட்டிகன் ஆவணங்களை ஆராய்ந்தவர்கள் உடை மட்டும் போப் சந்திக்க மறுத்தமைக்குக் காரணமல்ல என்று கண்டடைந்தனர். ஆய்வாளர் பீட்டர் கோன்ஸால்வ்ஸ் [Peter Gonsalves] விரிவாக அதைப்பற்றி எழுதியிருக்கிறார். போப்புக்கு அவரது ஆலோசகர்களிடமிருந்து சில ரகசிய அறிக்கைகள் அளிக்கப்பட்டன. அவற்றில் பின்னர் பன்னிரண்டாம் போப்பாண்டவராக நியமனம் பெற்ற கார்டினல் யூஜினோ பாசெல்லி எழுதிய குறிப்பு முக்கியமானது. அதில் காந்தி இந்தியாவில் ரோமன்கத்தோலிக்கர்களின் நலனுக்கு எதிரானவர் என்ற எச்சரிக்கை இருந்தது.

[இந்த பன்னிரண்டாம் பயஸ் அவர்கள் ஜெர்மனியிலும் பிற ஐரோப்பாவிலும் இருந்த தன் சொந்த முதலீடுகளைக் காப்பதற்காக ஹிட்லரின் மானுடப்படுகொலைகளைக் கண்டும் காணாதவர் போல் இருந்தார் என்று போருக்குப்பின் பரவலாகக் குற்றம் சாட்டப்பட்டவர். இவரைப்பற்றிய The deputy என்ற நாடகம் புகழ்பெற்றது. தமிழில் நான் அதைப்பற்றி பாவமௌனம் என்ற ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்]

காந்தி லண்டனில் சலவைக்காரப்பெண்களுடன்

காந்தி எப்போதும் கிறித்தவ ஆன்மீகவிழுமியங்களைக் கொண்டாடியவர். அவற்றை தன் வாழ்க்கைநெறியாகக் கொள்ள முயன்றவர். ஆனால் ஓர் அரசியல்நடவடிக்கையாக மதமாற்றம் செய்யப்படுவதை அவர் கண்டித்தார். அது ஆன்மீகத்துக்கு எதிரானது என்று அவர் சொன்னார். இது காந்தியின் இந்த்துவ அடிப்படைவாத நோக்கை வெளிப்படுத்துவதாக கத்தோலிக்கர்களின் மதத்தலைமை நினைத்தது. வட்டமேஜைமாநாட்டில் கலந்துகொண்ட கத்தோலிக்கர்களின் பிரதிநிதியான ஆர்ச்பிஷப் பன்னீர்செல்வம் இந்தியா சுதந்திரநாடாகும் என்றால் அது இந்துநாடாக ஆகும் என்றும் பிரிட்டிஷ் ஆட்சியில் கத்தோலிக்கர்கள் பெற்று வரும் சலுகைகளும் உதவிகளும் இல்லாமலாகும் என்றும் சொன்னார். அதை போப் ஏற்றுக்கொண்டார். ஆகவேதான் காந்தியைச் சந்திக்க அவர் மறுத்தார்.

காந்தியின் போராட்டத்தின் வெற்றிக்கு மிகமுக்கியமான காரணம் அவர் தன் போராட்டங்களை உலகின் கவனத்துக்குக் கொண்டுசென்றதுதான். ஐரோப்பாவிலும் அமெரிக்கவிலும் இருந்த நடுநிலையாளர்களின் ஆதரவை அவர் பெற்றிருந்தார். உப்புசத்யாக்கிரகம் போன்றவற்றை அமெரிக்க ஊடகங்கள் மிகப்பெரிய அளவில் ஆதரித்தன. அந்த ஆதரவை இல்லாமலாக்குவதற்கு இரு வழிமுறைகளை பிரிட்டிஷ் ஆதரவுசக்திகள் கடைப்பிடித்தன. ஒன்று, காந்தியின் போராட்டம் உண்மையில் வன்முறை உள்ளடக்கம் கொண்டது என்று காட்டுவது. அவரது ஒத்துழையாமை,சட்டமறுப்புப் போராட்டங்கள் அப்படி விரிவாக பிரச்சாரம் செய்யப்பட்டன. இரண்டு, அவர் கிறித்தவ விரோதி என காட்டுவது.

அவ்விரண்டு பிரச்சாரத்தையும் எதிர்த்துநின்றது காந்தியின் தோற்றம்தான். அது அவரை ஒரு ஏழைப்பாட்டாளியாகக் காட்டியது. அவரை ஐரோப்பியர் பலர் படிப்பறிவிலலத கிராமத்துமனிதர் என்றுகூட நினைத்தனர். அவரை ’naive’ என்று அவரது ஆதரவு இதழ்கள்கூட குறிப்பிட்டன. அவரது தோற்றம் அவரைப் பழங்கால கிறித்தவப்புனிதர்களில் ஒருவராகக் காட்டியது. பல்லாயிரம் சொற்களில் சொல்லவேண்டியதைத் தன் உடை வழியாக காந்தி சொன்னார்.

வட்டமேஜை மாநாட்டில் காந்தி

காந்தி பிரிட்டிஷ் மாமன்னரைச் சந்திக்கச்சென்றபோது சொன்ன அந்த இருவரிகளும் திட்டவட்டமாக அவரது எண்ணத்தைக் காட்டுகின்றன. தன்னுடைய உடை தனக்கு இயல்பானது என்கிறார் காந்தி. அந்த உடையே தான் என்கிறார். அடுத்தபதில் இன்னும் நுட்பமானது. தன்னுடைய உடையையும் சேர்த்து மாமன்னர் அணிந்திருக்கிறார் என்பது சுரண்டப்படும் இந்தியாவாக அவரையும் சுரண்டும் பிரிட்ட்ஷ் சாம்ராஜ்யமாக மாமன்னரையும் நிறுத்திவிட்டது. இந்தியாவை பிரிட்டன் சுரண்டி அழிக்கிறது என்பதற்கு அவர்கள் இருவரும் நிற்கும் படங்களே போதுமான ஆதாரமாக அமைந்தன. அவை வெளியானபோது காந்தியும் காங்கிரசும் சொல்ல விரும்பியவை அனைத்தையும் அவையே உலகமக்களிடம் சொல்லின.

காந்தியின் சத்தியசோதனையை வாசித்துக் கொண்டிருந்தேன். ஓரிடத்தில் காந்தியின் உடையரசியலின் தொடக்கப்புள்ளியைக் கண்டுகொண்டேன்.பதினாறாம் அத்தியாயத்தில் லார்டு கர்ஸனின் தர்பார் என்ற தலைப்பில் காந்தி கல்கத்தாவில் அவர் இந்தியாகிளப் என்ற விடுதியில் தங்கியிருந்தபோது அங்கே கர்ஸன் பிரபுவின் அரச சபைக் கூட்டத்துக்கு வந்த இந்திய மகாராஜாக்களை சந்தித்த அனுபவத்தை எழுதுகிறார். அவருக்கே உரிய வழக்கப்படி மிகச்சுருக்கமாகச் சொல்லிச் செல்கிறார்.

மாமன்னரைச் சந்திக்கச் செல்லும் காந்தி

சாதாரணமாக இருக்கையில் வேட்டிகட்டி சட்டை போட்டிருக்கும் மகாராஜாக்கள் தர்பாருக்குச் செல்லும்போது முழங்கால்வரை வரும் பளபளப்பான பூட்ஸுகளையும் அதற்குள் செருகும்விதமான தொளதொளப்பான கால்சட்டைகளும் அணிந்திருப்பதை காந்தி கவனிக்கிறார். லண்டனில் படித்த அவருக்குத்தெரியும் அது பிரிட்டிஷ் அரண்மனையின் சேவகர்களின் சீருடை என்று. அவர் அந்த மகாராஜாக்களிடம் பேசுகிறார். அப்போது தெரிகிறது அவர்களுக்கும் அது தெரியும் என்று.

‘எங்களுடைய துர்ப்பாக்கிய நிலைமை எங்களுக்குத்தான் தெரியும். எங்கள் செல்வத்தையும் பட்டங்களையும் காப்பாற்றிக்கொள்வதற்காக எவ்வளவு அவமானங்களுக்கெல்லாம் நாங்கள் உள்ளாகவேண்டியிருக்கிறது என்பதையும் நாங்கள் மட்டுமே அறிவோம். ‘ என்று ஒரு மன்னர் சொல்கிறார். ’இருந்தாலும்கூட வேலைக்காரர்கள் மட்டுமே அணியக்கூடிய இந்தக் கால்சட்டையையும் பூட்ஸுகளையும் அணியத்தான் வேண்டுமா?’ என்று காந்தி வேதனையுடன் கேட்கிறார். ‘எங்களுக்கும் வேலைக்காரர்களுக்கும் ஏதாவது வேறுபாடு இருப்பதாகக் காண்கிறீர்களா?” என்று துயரத்துடன் மகாராஜா பதில்சொல்கிறார்.

ஆம், உடையரசியலின் தொடக்கம் அங்கேதான். இந்திய மகாராஜாக்களை வேலைக்கார வேடமிட்டுத் தன் வேலைக்காரர்களுடன் சேர்த்து நிறுத்திய பிரிட்டிஷ் ஆதிக்க மனநிலைக்கு எதிரான கலகம் காந்தியின் உடை. தார்ப்பாய்ச்சிய ஒற்றை உடையும் மேல்துண்டுமாக அந்த வைஸ்ராயின் சபைக்குச் சென்றார் காந்தி. அதற்கு முன்பு அவர் தனக்குப்பின்னால் இந்தியதேசத்தையே அணிவகுத்து நிறுத்தியிருந்தார். தன் உடைமூலம் காந்தி பிரிட்டிஷ் ஏகாதிபத்திய மனத்திடம் சொன்னார் ’என்னை சமமாக மதித்து அமரச்செய்து என்னிடம் நீங்கள் பேசியே ஆகவேண்டும். முடியாதென்று சொல்லுங்கள் பார்ப்போம்’ என்று . ’நீங்கள் மகாராஜாக்களுக்கு வேலைக்கார வேடம் போட்டு நிற்கச் செய்யலாம். ஆனால் இந்தியாவின் ஏழைக்குடிமகனை நீங்கள் உங்களுக்குச் சமானமாக நடத்தியாகவேண்டும்’ என்று.

ஐந்தாம் ஜார்ஜ்

பிரிட்டிஷ் மாமன்னர் காந்தியைச் சந்தித்தேயாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவருடைய சம்பிரதாயங்களை அவர் தளர்த்தியே ஆகவேண்டும். ஏனென்றால் காந்தி ஒரு மனிதர் அல்ல, ஒரு தேசம். அதை அறிந்து சர்ச்சில் கொதித்தார், பிரிட்டிஷ் மணிமுடி அவமதிக்கப்பட்டிருக்கிறது என்று. ’பிரிட்டனின் வரலாற்றில் முன்பு எப்போதும் உடைவிதிகள் மாற்றப்பட்டதில்லை, இனிமெலும் மாற்றப்படப்போவதில்லை, இது ஒரு விதிவிலக்கான தருணம்’ என்றது மாமன்னரின் தரப்பு.

அது பிரிட்டனின் ஆதிக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனை. மாமன்னர் சென்ற நிலவுடைமையுகத்தின் அடையாளம். மன்னராட்சியின் சின்னம். காந்தி பிறந்துவரும் ஜனநாயக யுகத்தின் குறியீடு, மக்கள்சக்தியின் சின்னம். ஒன்று ஆதிக்கம் இன்னொன்று உரிமை. காந்தி மாமன்னர் முன் நிற தருணம் உலகவரலாற்றுக்கே முக்கியமானது ஜனநாயகத்தின் மகத்தான தருணங்களில் ஒன்று அது.

காந்தி பாக்கிங்ஹாம் அரண்மனையில்

வட்டமேஜை மாநாட்டுக்குச் சென்ற காந்தி மாநாட்டுக்கு வந்த பிரதிநிதிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு தங்கும் விடுதிகளில் தங்கவில்லை. கப்பலில் இருந்து நேராகத் தன்னை வரவேற்க வந்த சலவைக்காரர்களின் சேரிக்குச் சென்றார். பிரிட்டனின் கடும் குளிரில் அதே அரைநிர்வாண உடையுடன் மாமன்னர் முன் சென்று நின்றார். மன்னரைத் தனக்குச் சரிசமமாக நடத்தினார். அப்போது இந்தியாவின் அவமதிக்கப்பட்ட தன்மானம் நிமிர்ந்து நின்றிருக்கும். அரண்மனைகளின் இருண்ட அறைகளில் எத்தனையோ மகாராஜாக்கள் கண்ணீருடன் புன்னகை செய்திருப்பார்கள்.

காந்தி எவரையும் தன்னைவிடக் கீழாக நினைப்பவரல்ல, ஆகவே எவரையும் மேலானவராகவும் அவர் நினைக்கவில்லை. ஆனால் வரலாற்றுமனிதராக அவர் அக்கணத்தில் விஸ்வரூபம் கொண்டு எழுந்தார். யார் அந்த ஐந்தாம் ஜார்ஜ்? எங்கே அந்த போப் பதினொன்றாம் பயஸ்? இன்று வரலாற்றின் ஆழத்திலுறங்கும் கூழாங்கற்கள் அவர்கள். காந்தி ஒரு வரலாறு. ஒரு மலைச்சிகரம்.

ஞானம்பெற்றபின் இல்லம்திரும்பும் புத்தரின் சிலை ஒன்றை மதுரா அருங்காட்சியகத்தில் காணலாம். யசோதரையும் சுத்தோதனரும் யானைகளும் அரண்னை முகடுகளும் அந்த நகரமேகூட புத்தரின் முழங்காலுக்குக் கீழேதான் இருக்கும். 1931 கோடையில் காந்தி தன் பாதங்களின் அளவுக்கே உயரமாக நின்ற மாமன்னரிடம் மிகமிகக் குனிந்துதான் பேசியிருப்பார். அவருக்கே உரிய கனிவுடன்.


காந்தியும் போப்பும்

முந்தைய கட்டுரைபத்து
அடுத்த கட்டுரைராஜபாளையத்தில்…