ஐரோப்பாவும் விடுதலைமனநிலையும்

அன்புள்ள ஜெயமோகன்,

நலமா?

சுயபலி குறித்த தங்களின் விரிவான பதிலுக்கு நன்றி. நீங்கள் கூறிய கருத்துக்களை ஏற்கனவே நான் யூகித்திருந்தாலும், அதன் வரலாற்றுத் தொடர்ச்சியை என்னால் அவதானிக்க முடியவில்லை. உங்கள் பதிலில் முக்கியமாக “எந்த சுயபலி போர்வெறி மனநிலையின் உச்சமாகக் கருதப்பட்டதோ அந்த சுயபலி போருக்கு எதிரான ஆயுதமாக ஆகிவிடுகிறது ” என்ற வரி அதைத் தெளிவுபடுத்தியது. இதற்காகவே உங்களுக்குக் கடிதம் எழுதுகிறேன். மிக்க நன்றி.

சமீப காலமாக என் மனதை உறுத்திக் கொண்டிருக்கும் மற்றுமொரு விஷயத்தையும் இப்போது கேட்கலாமென நினைக்கிறேன். பணி நிமித்தமாகக் குறுகிய காலத்திற்கு இப்போது நான் ஜெர்மனியில் கடந்த எட்டு மாதங்களாக இருக்கிறேன். முன்னதாக ஏற்கனவே ஓராண்டுகாலம் இந்நாட்டில் ஓர் கிராமத்தில் இருந்திருக்கிறேன். இப்போது ஓர் நகரத்தில். இக்காலங்களில் நான் தொடர்ச்சியாகக் கண்டு வரும் ஓர் விஷயம் என்னைத் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது.

அது இங்கே மக்களிடம் காணப்படும் ஓர் விடுதலையுணர்வு. எல்லா நேரங்களிலும் பெரும்பான்மையான மக்களிடமும் இது வேறுபாடின்றிக் காணப்படுகிறது. பொதுவெளியில் மக்கள் தங்களை மிக இலகுவாக உணர்கிறார்கள். இவர்களுக்கு யாரிடமும் பணிந்து போக அவசியமில்லாததாகவே நான் உணர்கிறேன். பணியிடங்களில் உயர் அதிகாரிகளிடமும் வெளியே அரசாங்க அதிகாரிகளிடமும் (உதாரணம்: போலீசார்) மிக இயல்பாக நடந்துகொள்கிறார்கள்.

அதேபோல், புதியவர்களை சந்திக்கும்போதும் அவர்கள் தங்கள் இயல்பு மாறாமல் நடந்து கொள்ளும் விதமும் என்னை ஆச்சிரியப்படுத்துகிறது. வாழ்கையை நிறைவுடன் கழிப்பவர்களால் மட்டுமே இப்படி இருக்க முடியுமென நினைக்கிறேன்.

மாறாக நம்மிடம் எப்போதும் ஓர் பதற்றமும், இறுக்க மனநிலையும் இருக்கிறது. நம் இயல்பு நிலையை எங்கோ தொலைத்து விட்டிருக்கிறோம். அலுவலக உயர் அதிகாரிகளிடமும் , அரசாங்க அதிகாரிகளிடமும் அப்படி இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நம் சமூகச் சூழல் அதற்கான இடத்தை அடையவில்லை, அதற்கு பல்வேறு காரணங்கள். ஆனால் என்னைத்ப் தொந்தரவு செய்வது எந்த ஆதாயமும் இல்லாத ஒரு பொதுவெளியில் புதியவர்களை சந்திக்கும் போது நாம் நடந்துகொள்ளும் முறை. சக பஸ் பயணியிடமும் பக்கத்து வீட்டினரிடமும் நாம் கொள்ளும் ஓர் எதிர் மனநிலை ஓர் நம்பிக்கையின்மை. யோசித்துப் பார்த்தால் இது மற்றவர்களிடமல்ல நம்மிடத்தில் நாம் கொள்ளும் வெறுப்பும் நம்பிக்கையின்மையுமாகவே எனக்குப் படுகிறது.

இதைப் பற்றி என் நண்பரிடம் விவாதிக்கையில் அவர் நம் பொருளாதார சமநிலையையே இதற்குக் காரணம் என்றார். எப்போதும் நாம் நம்மை விட வசதியானவர்கள் மேல் கொள்ளும் பொறாமையின் விளைவே இத்தகைய எதிர் மனநிலையாக வெளிப்படுகிறது என்றார். என்னால் இக்கருத்துடன் முழுமையாக ஒத்துப் போக முடியவில்லை. இப்பொறாமை மனிதனின் ஓர் ஆதார இயல்பு. உலகின் எவ்விடத்திலும் வேறுபாடின்றி இது இருக்கும். இங்கே ஜெர்மனியிலும் கூட. அது முதன்மைக் காரணியாக எனக்குத் தோன்றவில்லை. மேலும் நான் இங்கே பேசும் மக்கள் என்பது பொருளாதாரத் தன்னிறைவு அடைந்த மக்களைப் பற்றி.

என் பார்வையில் இம்மன நிலை நாம் நம் வாழ்க்கையில் உணரும் வெறுமையின் வெளிப்பாடகவேப் படுகிறது. நம் மனதிற்கு நிறைவைத் தரும் செயல்களை செய்யாததால் உண்டாகும் வெறுமை. காரணம் எது நிறைவைத் தரும் என்பதே நமக்குத் தெரியாமல் இருப்பது. 20 வயது வரை பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாகிப்போன நம் வாழ்கைமுறை. அதற்குப்பின் நம் சிந்தனை முறையும் அதுவரை உருவாகிவந்த ஓர் சுழற்சியில் சிக்கிக்கொண்டு அதைத் தாண்டி மேலே வராமல் போகிறது.

ஆம், உண்மையில் நாம் மற்றவர்களின் மேல் அல்ல, நம்மிடம் தான் வெறுப்பும் நம்பிக்கையின்மையும் கொள்கிறோம். இவ்வுலகில் நம்முடைய இடம் என்ன என்பதற்கான தெளிவு வந்துவிட்டால் இதிலிருந்து மீண்டு விடலாம். அதை நான் இங்கே காண்கிறேன். இங்கே அனைவரும் தங்களுக்கான நிறைவு எதிலிருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறார்கள். சிலருக்கு இசை, சிலருக்கு பயணம், சிலருக்கு விளையாட்டு, சிலருக்கு உடற்பயிற்சி எனத் தங்கள் நிறைவைக் காணுகிறார்கள்.

இதற்குத் தீர்வாக நான் நினைப்பது, நம் கல்வி முறையில் மாற்றங்கள். வாழ்கையின் எல்லா சாத்தியங்களையும் சிறு வயதிலேயே மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் கல்விமுறை. அந்த சாத்தியங்கள் தெரிந்து விட்டால் போதும், தங்கள் உள்ளுணர்வு காட்டும் வழியில் புதிய பயணம் தொடங்கிவிடும்.

இதுபற்றி தங்கள் கருத்து என்ன என்பதை அறிய விருப்பம். தங்கள் நேரத்திற்கு நன்றி.

அன்புடன்,
பாலாஜி
கோவை

அன்புள்ள பாலாஜி,

ஓர் அன்னியப் பண்பாட்டை நாம் பார்க்கையில் நம்மைவைத்தே மதிப்பிடுகிறோம். அதாவது நம்முடைய பண்பாட்டை நாம் எப்படி மதிப்பிடுகிறோம் என்பதே அவர்களை நாம் மதிப்பிட அளவுகோலாக ஆகிறது. படித்தவர்களும் பண்பாட்டுத்தளத்தைக் கூர்ந்து அவதானிப்பவர்களுமான நாம் நம் பண்பாடு மீது பலவகையான விமர்சனங்களைக் கொண்டிருக்கிறோம். ஆகவே நாம் இன்னொரு பண்பாட்டைப் பார்க்கையில் அவர்களிடம் அந்தக்குறைகள் இருக்கின்றனவா என்று பார்க்கிறோம். இல்லை என்றால் அதைக்கொண்டே அவர்களைப்பற்றிய ஒட்டுமொத்த மதிப்பீட்டை உருவாக்கிக் கொள்கிறோம்

உதாரணமாக, இந்தியர்களாகிய நமக்குக் குடிமைப்பண்புகள் மிகமிகக் குறைவு. பொது இடங்களில் நடந்துகொள்வதெப்படி என நம்மில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. முற்றிலும் அன்னியர்களிடம் பழகுவது நாம் அறியாத வித்தை. நம்மால் கூட்டாக ஒரு செயலைச் செய்ய முடியாது.கும்பலாக கட்டுக்கடங்காமல் செயல்பட மட்டுமே முடியும்.

குடிமையுணர்வு என்பது இரு அடிப்படைகளில் இருந்து உருவாகக்கூடியது. ஒன்று ‘பிறனை’க் கருத்தில் கொள்வது. இரண்டு ‘சமூக’த்தைக் கருத்தில் கொள்வது. இரண்டுமே நான் என்ற நிலையின் மறுபக்கங்கள்.

நம்முடைய நடத்தையால் பிறர் எப்படி பாதிக்கப்படுவார்கள் என்ற கோணத்தில் தங்களுடைய ஒவ்வொரு செயலையும் பார்ப்பவர்களே மேலான குடிமைப்பண்பை வளர்த்துக்கொள்கிறார்கள். நமக்கு நம் வளர்ப்பில் கல்வியில் எங்கும் அது கற்றுத்தருவதில்லை.

ஓரளவு பெண்களுக்கு அது குடும்பத்தில் இருந்து கிடைக்கிறது. குடும்ப உறவுகளில் பிறரையும் கருத்தில்கொண்டு பழக அவர்களால் முடிகிறது, அதை அவர்கள் பொதுவெளியிலும் கடைப்பிடிக்கிறார்கள். ஆண்களுக்கு சுத்தமாக அப்படி ஒரு நினைப்பே கிடையாது.பலசமயம் பிறரைப்பற்றிக் கவலையே படாத ஆண்களைப் பெண்கள் ரகசியமாகக் கண்டித்தபடியே இருப்பதை நாம் காணலாம்.

பாருங்கள், ரயிலில் நள்ளிரவில் கத்திக்கூப்பாடு போட்டு செல்பேசியில் பேசும் மனிதர் உண்மையில் நாகரீகமற்றவரோ முட்டாளோ முரடரோ அல்ல. அவரிடம் கொஞ்சநேரம் பேசினால் இனிய நல்ல மனிதர் என உணர முடியும். அவருக்கு அப்படிப்பேசுவதில் உள்ள பிரச்சினை தெரியாது. பிறரது தூக்கத்தை அதுகெடுக்கும் என உணர அவர் பழகவேயில்லை. அவர் பிறந்து வாழும் சூழலில் முழுக்க அவர் அப்படி தன் காரியத்தை தனக்குத்தோன்றிய முறையில் செய்யக்கூடியவராகவே இருக்கிறார்.

நம்மை ஒரு பிரம்மாண்டமான சமூகத்தின் சிறிய ஓர் அலகாக எண்ணிக்கொள்வது குடிமைப்பண்பின் அடிப்படை.நாம் நமக்குத்தேவையான அல்லது வசதியான செயலைச் செய்துவிடமுடியாது என்றும் ஒரு சமூகமாக அச்செயலை ஒவ்வொருவரும் செய்தால் என்ன ஆகும் என்றும் யோசிக்கும் பண்பு அது.

ரயில் சன்னல் வழியாக பிளாஸ்டிக் குப்பையை வீசக்கூடியவர் சுத்தம் அற்றவரல்ல. அவரது வீட்டுமுற்றம் சுத்தமாகவே இருக்கும். அப்படி ஒவ்வொருவரும் வீசும் குப்பை எப்படி மலைபோலக் குவியும் என அவர் அறிந்திருக்கமாட்டார். அப்படி நினைக்கவே அவருக்குப் பயிற்சி இருக்காது.

இந்தக் குடிமையுணர்ச்சி இன்மையால்தான் நாம் பொதுக்களத்தில் இப்படி இருக்கிறோம். தெரியாத மனிதரை அன்னியராக நினைக்கிறோம். அவரிடம் ஒரு முகமன் சொல்ல நம்மால் முடிவதில்லை.எங்கும் எவரும் எதிரிகளே என்ற மனநிலையுடன் இருக்கிறோம்.

நாங்கள் இந்தியப்பயணம் மேற்கொண்டபோது தெரிந்த அனைவருமே ‘பாத்து, ஜாக்ரதை’ என்றுதான் எச்சரித்தார்கள். இந்தியா முழுக்க உள்ள அத்தனை மக்களும் திருடர்கள், ஏமாற்றுக்காரர்கள் அவர்களிடை மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று ஆலோசனை சொன்னார்கள். எங்கள் முப்பது நாள்பயணத்தில் நாங்கள் இனிய நட்பான மனிதர்களை மட்டுமே பார்த்தோம்.

இதற்கான காரணங்களை வரலாற்றுரீதியாக ஆராயவேண்டும் என்கிறார்கள். நம் தேசம் கிராமங்களினாலான நிலவுடைமைச்சமூகமாக இருந்தது. நம்முடைய முன்னோர் கிராமம்,சாதி,குடும்பம் என மிகச்சிறிய வட்டங்களுக்குள் மட்டுமே வாழ்ந்தவர்கள். சென்ற நூற்றாண்டில் நம்முடைய மூதாதை ஒருவர் முற்றிலும் அறியாத ஒருவரை எதிர்கொள்ளும் வாய்ப்பே இருந்திருக்காது. எதிர்கொண்டால் அவர் அஞ்சி ஓடி ஒளிந்திருப்பார். இன்றுகூட அப்படிப்பட்ட மக்கள் கொண்ட கிராமங்கள் இந்தியாவில் உள்ளன.

சென்ற நூறாண்டுக்காலமாக மெல்லமெல்ல நம் சிறுவட்டங்கள் திறந்துகொண்டன. அனைவரும் வந்து புழங்கும் பொதுவெளி உருவானது. அரசு, அரசியல், கல்வி ,போக்குவரத்து ஆகியவை அதை உருவாக்கின. அங்கே பழகும்விதத்தை மட்டும் எவரும் நமக்குக் கற்றுத்தரவில்லை. நம் பண்பாட்டில் அது இல்லை. நம் கல்விமுறை அதை கற்றுத்தரவில்லை.

கவனியுங்கள், நம் குழந்தைகள்தான் அன்னியர்களுடன் பழக மிகமிகக் கூச்சமும் தயக்கமும் உடையவர்களாக இருக்கிறார்கள். பொதுவெளியில் தயங்கி கூசி நிற்கிறார்கள். அவர்களின் கல்வி அதை சொல்லித்தரவே இல்லை. அவர்களே வேலை, பயணம் வழியாகப் பொதுவெளியில் பழகக் கற்றுக்கொண்டால்தான் உண்டு.

நம்முடைய ஜனநாயகத்துக்கு இன்னும் நூறாண்டுக்கால வரலாறு இல்லை. நம் நாடு இன்னும் முழுமையாக ஒன்றாகக் கலக்கவில்லை. இப்போதும் நம்மில் பெரும்பாலானவர்கள் வட்டங்களுக்குள்தான் வாழ்கிறார்கள். காலப்போக்கில் அந்தவட்டங்கள் உடையலாம். மேலான ஜனநாயகமும் குடிமைப்பண்பும் உருவாகலாம்.

நீங்கள் ஐரோப்பாவில் பார்த்து வியப்பது அந்தக் குடிமைப்பண்பைத்தான்.அவர்களின் ஜனநாயகம் பழைமையானது. ஐரோப்பா நாநூறாண்டுக்காலமாகப் பல்வேறு வகையில் ஒன்றாகக் குலுக்கிக் கலக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் நிலப்பகுதி. போர்களால் குடியேற்றங்களால். மேலும் அவர்கள் உலகமெங்கும் பயணம் செய்து வென்று ஆண்டவர்கள். அதன்விளைவே குடிமைப்பண்பு

அந்தக்குடிமைப்பண்பு பொது இடங்களில் பொதுநாகரீகங்களை உருவாக்குகிறது. சுமுகமான அன்றாடநடவடிக்கைகள் நிகழ வழிகோலுகிறது.அமெரிக்காவில் நான் அதைக் கண்டிருக்கிறேன்

ஆனால் இந்தப் பொதுவெளித் தோற்றம் முழு உண்மை அல்ல. குடிமைப்பண்பு என்பதை வைத்து மட்டும் ஒரு பண்பாட்டை மதிப்பிட்டுவிட முடியாது. அது ஒரு முகம் மட்டுமே. அச்சமூகத்தின் பொதுவான வாழ்க்கைநோக்கு அதன் அந்தரங்க வாழ்க்கையிலேயே வெளிப்படுகிறது.

காந்தி வெரியர் எல்வினிடம் கேட்டார். ஒரு பண்பாட்டின் மேன்மையை, வெற்றியை எதைவைத்து மதிப்பிடுவீர்கள் என்று. வெரியர் எல்வின் அதற்க்ரிய சில பண்பாட்டு அடையாளங்களைச் சொன்னார். காந்தி சிரித்தபடி ‘அந்த மக்களின் மகிழ்ச்சியை மட்டும் வைத்துதான் மதிப்பிடவேண்டும்’ என்றார்

பொது இடங்களை மட்டும் வைத்து ஒரு சமூகத்தின் அந்தரங்கமான , உண்மையான மகிழ்ச்சியை மதிப்பிட்டுவிடமுடியாது

என் நண்பரும் உயிரித்தொழில் அறிவியலாளருமான பிரகாஷ் சங்கரன் செக் குடியரசில்தான் இருக்கிறார். நீங்கள் எழுதியதற்கு நேர் எதிரான கோணத்தில் அவர் எழுதிய கடிதத்தைப் பாருங்கள். நீங்கள் புதியவர், அவர் அங்கே நெடுங்காலமாக இருக்கிறார் என்பதே இந்த வேறுபாட்டை உருவாக்குகிறது

ஜெ

முந்தைய கட்டுரைசின்மயி விவாதம்
அடுத்த கட்டுரைபெண்10, காதலர் தினமும் தாலிபானியமும்