நிறம் இனம்:கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

நிறவெறி என்பது இனவெறியின் மற்றொரு பக்கமாகவே பார்க்கிறேன். மனிதனின் நிறத்திற்கு ஏன் இப்படி ஒரு முக்கியத்துவம் ஏற்பட்டது? வெண்மை என்பது உயர்ந்ததாகவும், கருமை என்பது தாழ்வானதாகவும் கருத்துருவாக்கம் எந்த காலகட்டத்தில் ஏற்பட்டது? ஏதும் சமூக உளவியல் காரணங்கள் உள்ளதா?

தமிழகத்தில் இதன் தலைகீழ் நிலை இருப்பதையும் பார்க்கிறேன். கருப்பு நிறத்தை உயர்த்திப்பிடித்து, வெள்ளை நிறத்தை அடிபணியவைக்கவேண்டும்  என்ற மனநிலை இருக்கிறது. இருந்தாலும் தமிழகத்தில் வெள்ளை நிறம் என்பது இருபாலார்க்கும் சிறப்பானதாக உருவகிக்கப்பட்டிருக்கிறது. வட இந்தியாவிலும் அப்படியே. எனக்குத் தெரிந்தவரை ஆந்திரத்தில் பெண்களுக்கு நிறமும், ஆண்களுக்கு உயரமும் முக்கியப்படுத்தப்படுகிறது. திரைப்படங்களில் கதாநாயகர்கள் அட்டை கரியாக இருந்தாலும், நாயகிகள் வெள்ளை வெளேரென்று உஜாலா போட்டு குளித்ததுபோல இருக்கவேண்டும் என்று நிர்ணயித்திருக்கிறார்கள்.
 
இந்த நிறவெறிக்கு என்ன காரணம் என்றே புரியவில்லை. காலனியாதிக்க உளவியல் எச்சங்கள் மட்டுமேவா?

நமது மரபிலும் கூட வெள்ளை நிறத்திற்கு மிகுந்த சிறப்பும், கருப்புக்கு சுமாரான இடமுமே தரப்பட்டிருப்பதன் தத்துவம்தான் என்ன? அதேசமயம் ராமன், க்ருஷ்ணன், த்ரௌபதி ஆகியோர் கருப்பு என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. உச்சமாக நிறமயக்கமும் சேர்ந்துகொண்டது. க்ருஷ்ணன் கருப்பா, பச்சையா,நீலமா என்றே புரியவில்லை (காக்கைசிறகினிலே – பாரதி). ராமனுக்கும் அதே கதைதான் (மையோ, மரகதமோ, மறிகடலோ – கம்பன்).

நிறங்கள்தான் எத்தனை பிரச்சனைகளுக்கு அடிகோலுகிறது!!
 
பின்குறிப்பு: நீங்கள் ஆஸ்திரேலியா பயணம் மேற்கொண்டதற்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

– ராம்

 

 

அன்புள்ள ராம்

நிறம் குறித்த பேதம் என்பது உண்மையில் ஒரு பாவனை மட்டுந்தானே? மனிதர்களுக்கு இடையே பேதம் நிறத்தால் அல்ல வருவது. அப்படி வரும் என்றால் உலக அளவில் அதிகமான பேதங்களும் வன்முறையும் ஏன் கறுப்பர்களான ஆப்ரிக்கர் நடுவே உள்ளன? ரவாண்டாவின் டுட்சி -ஹடு இனக்களை அவர்களே கூட பிரித்தறிய முடியாதே. பேதத்துக்கு மதம் காரணம் என்றால் முகமதுவை கடைசித் தூதராக ஏற்றுக்கொண்டவர்களுக்கு இடையேதானே கடுமையான வன்முறைகள் நிகழ்கின்றன? மசூதிகளுக்குள் தொழுகைநேரத்தில் குண்டு வைத்துக்கொள்கிறார்கள்?

உண்மை இதுதான், மனிதர்கள் பேதத்தை உருவாக்கிக் கொள்ளும் மனநிலையில் எப்போதுமே இருக்கிறார்கள். ஒரு சிறுநிலப்பகுதிக்குள் கூட சாதி உபசாதி என பிரிவினைகளை உருவாக்கிக் கொண்டு கடுமையான துவேஷத்தை வளர்த்துக்கொள்ள அவர்களால் முடியும். சிறு சிறு குழுக்களாக வாழ்ந்த பழங்குடி நினைவின் நீட்சியா அது? இருக்கலாம்
பழங்குடிகளின் வாழ்வில் தலைவன் என்பவன் பிறரில் இருந்து பாதுகாப்பு அளிப்பவன். இன்றும் தலைமைக்கு ஆசைப்படுபவர்கள் பிறன் குறித்த அச்சத்தையும் வெறுப்பையும் உருவாக்குகிறார்கள். அதற்கு பேதங்கள உருவாக்கி, பெரிது பண்ணி பயன்படுத்திக் கொள்கிறார்கள். பேதங்களை வளர்க்கும் ஆவேசமான பேச்சுகள் வழியாகவே இங்கே தலைவர்கள் உருவாகிறார்கள். பேதங்களை மீறும்படி அறைகூவும் தலைவர்கள் மிகச்சிலரே.

பேதங்களை உருவாக்க நிறமும் இனமும் எளிமையான வழிகள். ஏனென்றால்  அடையாளம் வெளிப்படையாக திட்டவட்டமாக இருக்கிறது. அதற்குமேல் நிறம் ஒரு பிரச்சினையே அல்ல. தங்கள் மனவிரிவின் மூலம், நாகரீகம் மூலம், பேதங்களை உருவாக்கும் அடிபப்டைவாத மனநிலையை மனிதர்கள் தாண்டமுடியும் என்றால் நிறம் அவர்களை ஒருபோதும் பிரிக்கமுடியாது
ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன் சார்,
ஆஸ்திரேலிய பழங்குடிமக்களை பற்றி சில ஆண்டுகளுக்குமுன்

ஒரு செய்தி வந்தது. அவர்கள் ஆப்ரிக்க இனத்தை சேர்ந்தவர்கள். ஆதி காலத்தில் கால்நடையாக இந்தியா வழியாக ஆஸ்திரேலியா வரை சென்று குடியேறினார்கள். அவர்களின் ஒரு பகுதியினர் தமிழகத்தில் தங்கிவிட்டார்கள். தேனி பிரமலை

கள்ளர் சமூகட்டவர்கள்தான் அவர்கள். குறிபிட்ட ஆப்ரிக்க இன மனிதனின்  மரபணுவையும், மதுரை பிரமலை கள்ளர் சமுகத்தை சேர்ந்த ஒருவரின் மரபணு  மற்றும் ஆஸ்திரேலிய பழங்குடி இன மனிதனின் மரபணுவையும் ஒப்பிட்டு பார்த்து  இந்த ஊகத்திற்கு வந்திருகிறார்கள். இது பற்றி எதாவது தகவல் உண்டா?

அன்புடன்
குரு

 
அன்புள்ள குருமூர்த்தி,

ஆஸ்திரேலியப்பழங்குடிகள் குறித்து பலவகையான ஆய்வுகள் வந்துள்ளன. நீங்கள் சொன்ன ஆய்வு ஓர் அமெச்சூர் குழுவால் நடத்தப்பட்டு மிதமிஞ்சி ஊகம்செய்யப்பட்ட ஒன்று என்று ஆய்வாளர்களால் சொல்லப்படும் ஒன்று.  அந்த அளவுக்கு எளிமைபப்டுத்த முடியுமா என்று தெரியவில்லை ஆனால் இந்தியாவின் மக்களுக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் நடுவே ஆழமான ஒரு தொடர்பு– வரலாற்றுக்காலத்துக்கு முன்பே இருக்கும் உதிர ஒற்றுமை –  இருந்திருக்கிறது என்பது உண்மை என்றே நான் நினைக்கிறேன். மொழியில்கூட அந்த  தடையங்கள் இருக்கலாம். சு.கி.ஜெயகரன் தமிழுக்கும் ஆஸ்திரேலிய மொழிகளுக்கும் இடையேயான உறவு குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஆஸ்திரேலிய பழங்குடி மொழிகள் நூற்றுக்கும் மேல். அவற்றைப்பற்றிய முழுமையான ஆய்வுகள் இன்னும் வரவில்லை. அவற்றுக்கும் இன்றைய தமிழுக்கும் இடையேயான உறவுகளை ஆராய்ந்து மேலோட்டமான முடிவுகளுக்கு வருவது நமக்கு மட்டுமே சந்தோஷமாக இருக்கும். நம்முடைய பழங்குடி மொழிகளையே அவற்றுடன் நாம் ஆராயவேண்டும். தமிழ் ஒரே மொழியாக உருவாவதற்கு முன்னர்  பலநூறு சிறுமொழிகளாக இங்கே இருந்திருக்கும். அக்காலத்தை மொழியியல் விதிகளின் படி உருவாக்கி அந்த அமைப்பை ஆஸ்திரேலிய பழங்குடிமொழிகளுடன் ஒப்பிட வேண்டும் . அது எளிய வேலை அல்ல

ஜெ

 

முந்தைய கட்டுரைபோர்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுல்வெளிதேசம் 17,ரயிலில்