காசி

அன்புள்ள ஜெ.

நான் 2011 பிப்ரவரி 18 அன்று உங்களின் பார்வதிபுரவீட்டில் என் மாமாவோடு வந்து என்னை அறிமுகம் செய்து கொண்டேன். அந்தசந்திப்பு என்னை மேலும் தீவிர இளைஞனாக மாற்றியது என்று சொல்லலாம். ஒருஇலக்கியவாதியின் சந்திப்பு அதைத்தான் செய்ய வேண்டும். தமிழ் இலக்கிய காலவரையறைகளைப் பற்றி நீண்டது நம் உரையாடல். பல திறப்புகளை அன்று முன்வைத்தீர்கள். பின் தங்களின் ‘சங்கச் சித்திரங்கள்’ புத்தகத்தைக் கொடுத்துப்படிக்கச் சொன்னீர்கள். இவை அனைத்தையும் என் அறிமுகத்திற்காகசொல்லியுள்ளேன். மன்னிக்கவும்.

 

நான் வரும் 15.10.2012 அன்று காசி யாத்திரை செல்கிறேன்.  எனவே, தவற விடாமல் அங்கு பார்க்கப்பட வேண்டியவற்றை உங்கள் அனுபவத்தின் வழியாக அறிய எண்ணுகிறேன். எனக்குத் தகவல் உண்டு எனில், பதில் அனுப்பவும்.

 

இப்படிக்கு,
சுந்தர் ராஜ சோழன்

மயிலாடுதுறை

அன்புள்ள சுந்தரராஜன்,

காசியில் அப்படி ‘சென்று பார்க்க’ வேண்டிய எதுவுமே இல்லை என்பதே என் எண்ணம். அது ஒரு சுற்றுலாத்தலம் அல்ல. கேளிக்கைத்தலம் அல்ல. வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இடமானாலும் அந்த வரலாற்றைத் தெரிவிக்கும் மிகமுக்கியமான இடங்கள் என ஏதும் இல்லை.

அனைவருக்கும் தெரிந்த இடங்கள், காசியின் விஸ்வநாதர் ஆலயம், காலபைரவர் ஆலயம் போன்றவை. காசியின் மறுகரையில் காசி மன்னரின் அரண்மனையும் அருங்காட்சியகமும் உள்ளது. காசியின் படித்துறையில் நிகழும் கங்கா ஆர்த்தி முக்கியமான நிகழ்வு. அவ்வளவுதான் காசி.

ஆனால் நீங்கள் காசியை உணரவேண்டுமென்றால் சிலநாட்கள் அங்கே தங்கவேண்டும். காசியின் சிறிய சந்துகளில் நடந்து அலையவேண்டும். வரணா முதல் அசி வரையிலான நூற்றி எட்டு படித்துறைகளில் எல்லாவற்றிலும் சில மணிநேரங்கள் அமர்ந்திருக்கவேண்டும். படித்துறைகளுக்கு அப்பாலும் இப்பாலும் உள்ள சாமியார்களின் தங்குமிடங்களுக்குச் சென்றுபார்க்கவேண்டும். கங்கையில் படகில் காலையிலும் மாலையிலும் பயணம் செய்யவேண்டும். ஒவ்வொருநாளும் அங்கே வந்து குழுமும் விதவிதமான மக்களை வேடிக்கை பார்க்கவேண்டும்.

அத்துடன் அரிச்சந்திரா கட்டிலும் மணிகர்ணிகா கட்டிலும் பிணங்கள் எரிவதை முழு இரவும் அமர்ந்து வேடிக்கை பார்க்கவேண்டும். அப்போது காசியைப் பார்த்தவர் ஆவீர்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைபெண் 4,பொதுவெளியில் பெண்கள்…
அடுத்த கட்டுரைஅசோகமித்திரனுக்கு ஒருவாசகர்