அன்னிய முதலீடு- பாலா

இன்றைய பொருளாதாரச் சூழலில், விவசாயம் ஒரு தீண்டத்தகாத தொழில் ஆக மாறிவிட்டது.

ஆனால், சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீடு இதை எவ்வளவு தூரம் மாற்ற முடியும் என்பது தெரியவில்லை.அதிகபட்சம், நிலையைக் கொஞ்சம் மாற்ற வாய்ப்புகள் உண்டு.

இந்தியாவில், சில்லறை வியாபாரத்தில், கார்ப்பரேட் குழுமங்கள் வந்து 7-8 ஆண்டுகள் ஆகிவிட்டன. ரிலையன்ஸ், பிர்லா, டாட்டா, பார்தி (வால் மார்ட்டுடன் கூட்டு), டெஸ்கோ, மெட்ரோ (மொத்த வியாபாரம்), இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கார்ஃபோர் என..

30 கடைகள் கொண்ட வால் மார்ட்டின் தினசரி தக்காளித் தேவை சராசரியாக 15 டன் – இரண்டு லாரி. இது சமையல் அறையில் மிக அதிகம் புழங்கும் காய்கறி.

இதை வாங்க ஒரு உள்கட்டுமானத்தை அமைக்க ஆகும் செலவை விட மொத்த வியாபாரத்தில் இருந்து வாங்குவது லாபகரமானது.. ஆனாலும், அதன் நிர்வாகம், முடிந்த வரை கிராமங்களில் இருந்து வாங்க முயல்கிறது. ஆனால், 15 டன் தக்காளி என்பது, 1 ஏக்கரில் வரும் மகசூல். மொத்தமாக 300 ஏக்கர் போதும், ஒரு பெரும் சில்லறை வியாபாரக் குழுமத்துக்கு. இதை எவ்வளவு நாள் அவர்கள் நேரிடையாக விவசாயிகளிருந்து வாங்குவார்கள் என்று பார்க்க வேண்டும். கொஞ்ச நாளில் மொத்த விலைச் சந்தைக்குப் போய்விடுவார்கள். இதில் மிக நெடு நாட்களாக இருந்து வரும் ஸ்பென்சர், மொத்த விலை அங்காடியில் இருந்துதான் வாங்குகிறார்கள்.

அந்நிய முதலீடு, விவசாயத்துக்குத் தேவையான infrastructure ஐ மேம்படுத்துவார்கள் என்பது ஒரு மூட நம்பிக்கை மட்டுமே. அவர்களின் தேவை மிக அதிகமில்லை. மேலும், தினசரி மார்க்கெட்டில், மலிவாகக் கிடைக்கும் காய்கறியை வாங்கி, குளிர் அறைகளில் வைத்து எடுக்கும் செலவை விட, அடுத்த நாள் மார்க்கெட்டில், அதே காய் மலிவாகக் கிடைக்கும் வாய்ப்புகள் மிக அதிகம்.

இதில், ஜெ சொன்னது போல், பதப் படுத்தும் தொழில், மிக முக்கியப் பங்காற்ற முடியும் – கிருஷ்ணகிரியில் மாம்பழம் போல. இந்த முறையில் கூட, உற்பத்தி, அழியாமல் கொள்முதல் செய்யப் படுகிறதே ஒழிய, விவசாயிக்கு நல்ல விலை கிடைக்கிறதா என்றால், இல்லை என்பதுதான் நிதர்சனம். நல்ல ஆண்டில், மாம்பழம் கிலோ 5 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப் படுகிறது. ஒரு ஏக்கரில், 10 ஆண்டுகள் தாண்டிய, நல்ல பராமரிப்பில் இருக்கும் ஒரு தோப்பு, 5 டன் மகசூல் கொடுக்கும். எனில், வருட மொத்த வருமானம், 25000 ரூபாய். செலவுகள் போக, (இதில் அதிகம் செலவு இல்லை) 15000 ரூபாய் கிடைக்கும்.

சில்லறை விற்பனை – உலகெங்கும் பெரும் லாபகரமான தொழில் அல்ல. மிகப்பெரும் சில்லறை வியாபாரக் குழுமம் ஆன, வால்மார்ட்டின் நிகர லாபம் 2-3 சதம் மட்டுமே. அதுவும், நவீன அங்காடிகள் மிக அதிக உள்ள நாடுகளில் இருந்தும்.

இதில் இந்தியாவில் இயங்கும் எல்லா தொழில் குழுமங்களுமே நட்டத்தில் தான் இயங்குகிறார்கள். ரிலையன்ஸுக்கு இந்த நட்டம் பெரிதில்லை. பிர்லாவுக்கும். டாட்டாவுக்கும்.. எனவே நடந்து கொண்டிருக்கிறது.

இதில் மிக லாபகரமாக இயங்கும் மாடல் மும்பையிலும் சென்னையிலும்தான். சென்னையின் சரவணா ஸ்டோர், மும்பையின் D-Mart. இதில் சரவணா ஸ்டோரின் கதை நமக்கெல்லாம் தெரியும். sweat shop. D-mart கொஞ்சம் வித்தியாசமாக இயங்குகிறது. மும்பையில் கிட்டத் தட்ட, 25-26 கடைகள் இருக்கலாம். எல்லாமே, அந்த குழுமத்தின் சொந்தக் கடைகள். கடைகள் என்றால், பெரும் கடைகள். முலுந்தில் கிட்டத் தட்ட 1.5 லட்சம் சதுர அடி..

இக்கடைகளின் through put மிக அதிகம். ஒரு சதுர அடிக்கு மாதம் ஆகும் வியாபாரம் நம்ப முடியாத அளவுக்கு அதிகம். ரிலையன்ஸ் கடைகளை விட 8-10 மடங்கு. மும்பையில், சில்லறை வியாபாரத்தின் மிகப் பெரும் எதிரி, வாடகை. D-Mart இதை, ஒரு ரியல் எஸ்டேட் மற்றும் சில்லறை வியாபாரமாக மாற்றி, நுகர்வோருக்கு மிகக் குறைந்த விலையில் விற்கிறது. இதை நடத்தும் ஆள் மும்பைப் பங்குச் சந்தையின் மிகப் பெரும் கரடி. எனவே, மிகப் பெரும் பணபலப் பிண்ணனி.

இதில், NDDB ஒரு சோதனை முயற்சியாக, Fruits and Vegetables என்று ஒரு நிறுவனம் துவங்கிச் செய்து கொண்டிருக்கிறது. Safal என்னும் பெயரில். தில்லியிலும், பெங்களூரிலும், காய்கறிக் கடைகள். கிராமங்களில் இருந்து நேரடிக் கொள்முதல் செய்து, நகரங்களுக்குக் கொண்டு சென்று தரம் பிரித்து விற்பது.. முக்கிய பிராந்தியங்களில் பதப் படுத்தும் ஆலைகள் அமைப்பது – எடுத்துக் காட்டாக கொங்கனில் ஒரு பழப் பதனப்படுத்தும் ஆலை.. பதப் படுத்தப் பட்ட மாம்பழக் கூழை/ வாழைப் பழக் கூழ் / மாதுளைக் கூழை விற்க ரோட்டர் டாமில் office and warehouse.. விவசாயிகளுக்கான ஒரு பெரும் சந்தை உருவாக்குவது – பெங்களூரில் safal market என. இது ஒரு நல்ல முயற்சி. ஆனால், குரியனின் பின்னால் வந்த அம்மணி, தனியார் துறையுடன் கூட்டு சேர்ந்து efficient ஆக நடத்துவோம் என்று கூத்தடித்து, அமதாபாத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனமான MCX உடன் சேர்ந்து நடத்தி மூடி விட்டது. safal market தில்லியில் நடத்தப் படும் மெட்ரோ போல. அது லாபகரமாக இருக்காது. ஆனால், சமூகத்துக்குத் தேவையான ஒரு உள்கட்டுமானம். இதை முனைந்து, கொஞ்ச நாட்கள் நடத்தியிருந்தால், மொத்தமாக ஓர் உள்கட்டமைப்பு கிடைத்திருக்கும். என்ன செய்ய.. வெள்ளத் தனையது மலர் நீட்டம்.

இதில் நம்ம ஊர் பழமுதிர் நிலையம் நடத்தும் காய்கறி அங்காடிகளும் ஒரு நல்ல முயற்சியே. ஆனால், இவை யாவும், விவசாயிக்கு ஒரு பெரும் லாபத்தையும், விவசாயச் சூழலையும் ஏற்படுத்துமா என்றால் – தெளிவான ஒரு பதில் இல்லையென்றே தோன்றுகிறது.

இப்போது நம்பிக்கை தருவதாக இருப்பது – NGOக்கள், சில கிறுக்குகள் மற்றும் சுய உதவிக் குழுக்களே.. கொஞ்சம் முனைந்து சந்தைப் படுத்த முயல்கிறார்கள். சிறு குழந்தைகளின் முதல் அடி போல்.. கூடலூர் ஆதிவாசிகள் தங்கள் தேயிலையை பிரிட்டன் வரை அனுப்புகிறார்கள்.. தேனியில் ஒரு சுய உதவிக் குழு, மாம்பழத்தை சந்தைப் படுத்த உதவுகிறார்கள். இது மட்டுமல்லாமல், சில கிறுக்குகள், இயற்கை முறையில் வேளாண்மை செய்கிறார்கள் – தஞ்சாவூர், வத்தலக் குண்டு என ஆங்காங்கே சிலர் தம் வாழ்நாளை இதற்காகச் செலவிடுகிறார்கள். இவர்களே நம்பிக்கை நட்சத்திரங்கள்..

அப்போ, இந்த அந்நிய முதலீடு – மறைமுகமாக ஏற்கனவே இருக்கிறது. (பாரதி வால்மார்ட், கார்ஃபோர், மெட்ரோ, டெஸ்கோ..)இப்போது அவர்கள் நேரிடையாகக் கடைகள் திறக்க உதவும் ஒரு வாய்ப்பு. இங்கே இருக்கும், நஷ்டத்தில் இயங்கும் பிர்லா, கிஷோர் பியானி (big bazaar / food bazaar)முதலியோர் நல்ல விலையில் விற்றுப் போக ஒரு பெரும் வாய்ப்பு.. ஆனால், இவற்றை அவசரப் பட்டு வாங்குபவர்கள் பாவம்.

விவசாயிகள் வெறும் உற்பத்தியோடு நிற்காமல், சந்தைப் படுத்துதலிலும் ஈடுபட்டு, தம் வசம் கல்லாப் பெட்டியை வைத்திருக்கும் காலம் தான் பொற்காலம். அமுலின் விற்பனை விலையில் 80% விவசாயிக்குப் போகிறது. ஏனெனில், அமுல் விவசாயிகளின் நிறுவனம். ஆனால், சந்தைப் படுத்துதலுக்குத் தேவையான econo்mies of scale ஒரு தனி விவசாயியிடம் இல்லை என்பது நிதர்சனம். அவர்களை ஒருங்கிணைத்து, ஒரு நிறுவனம் உருவாக்கி, பொருட்களைச் சந்தைப் படுத்த மாநிலத்துக்கு ஒரு குரியன் தேவை. இந்தப் பிண்ணனியில் குரியனின் உழைப்பு, காந்திக்கு அடுத்த படியாகத் தோன்றுகிறது.

சொல்லாமல் விட்டுப் போன இன்னும் சில வார்த்தைகள்:

1. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் விலைக்கும், விற்பனை விலைக்கும் உள்ள வேறுபாட்டுக்கு, இடைத்தரகர்கள் தவிர இன்னும் ஒரு முக்கிய காரணம் உள்ளது. அது, அங்காடியில் விற்காமல், அழுகும் சதம். இது இன்றைய அங்காடிகளில் 20% க்கு மேலாக உள்ளது. பழமுதிர் நிலையங்களில், கடைகளினுள்ளே குளிர் அறைகள் உள்ளதால், இது குறைவாக இருக்கலாம். காய்கறிகளில் 90% நீர்ச்சத்து உள்ளது. ஒரே நாளில் இது 10% வரை குறையும் வாய்ப்பும் உள்ளது. அதாவது, 1 கிலோ வெண்டைக்காய், மாலையில் 900 கிராம் ஆகி விடும்.

எனவே, காய்கறிகள் அப்படியே விற்பனை செய்யப் பட வேண்டுமெனில், மிக அதிக தூரம் பயணிக்காமல், அருகில் உள்ள சிறு நகரங்களில் விற்பனை செய்யப் படும் போது தான், எல்லோருக்கும் லாபமாக இருக்கும். இந்தியாவில், சக்தியின் விலை மிக அதிகம். வால்மார்ட், மிக முக்கிய மெட்ரோக்களைத் தாண்டி, ஒரு 100 பெரு நகரங்களில் வரலாம். அதைத் தாண்டி வருவது அவர்களுக்குக் கட்டுபடியாகாது.

2. இன்றைய சில்லறை விற்பனைத் துறையில், மிக அதிக சதம் நட்டம் காய்கறி/ பழங்களால் தான் வருகிறது. ஆனால், அது இல்லாவிட்டால், நுகர்வோரின் foot falls மிகக் கணிசமாகக் குறைந்து விடுகிறது. எனவே, உணவு அங்காடிகளில், காய்கறிகள் / கனிகள் உள்ளன. இதுவே இன்றைய யதார்த்தம்.

3. உலகில் மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவிற்கென்றே சில ப்ரத்தியேகமான வேளாண் பொருட்கள் உள்ளன. மாம்பழம், வெள்ளை எள், ஆமணக்கு, லிச்சி் – இவை உற்பத்தியாகும் வேளாண் பிரந்தியங்களுக்கு, பதப் படுத்தும் தொழில்களுக்கான வரிகளை விலக்கி, முதலீட்டுக்கு குறைந்த வட்டி கொடுக்கலாம். 90 களின் மத்தி வரை, பழப் பதனப் படுத்தும் தொழிலுக்கும், பழச் சாறு விற்பனைக்கும் அதிக கலால் வரி இருந்தது. அப்போது, அரசு, பதப்படுத்தும் தொழிலை ஊக்குவிக்க, அக்கலால் வரியை நீக்கியது. கிருஷ்ணகிரி பிராந்தியத்தில் மிக அதிகமாக மாம்பழ பதன நிலையங்கள் உருவாகத் துவங்கியது இதன் பின் தான்.

பாலா

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் -கடிதம்
அடுத்த கட்டுரைபுனைவை வரலாறாக்குதல்…