போர்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,
என்னை போன்ற எத்தனையோ தமிழ் – மலையாளிகளின் அறிவு சார்ந்த தேடலுக்கு இணைய – விடை அளிக்கும் உங்களுக்கு என் முதல் வணக்கம்..

தங்களின் கீழ்க்காணும் கட்டுரை கண்டேன்.. அதில் குறிப்பிட்டுள்ள சில வரிகள் சென்ற வாரம் நான் காண நேர்ந்த ‘Schindler’s List’ என்னும் ஆஸ்கார் வென்ற திரைப்படத்துடன் ஒத்துப்போயின.. அதன் பாதிப்பில் இருந்து மீளும் முன் தங்களுடன் பகிர்ந்தமையில் மகிழ்ச்சி அடைகிறேன்..

புல்வெளிதேசம் 6,கன்பெரா
May 11, 2009 – 12:12 AM

இந்தியர்களாகிய நாம் ஒரு போரை ஊகிக்கவே முடியாது. நாம் உண்மையில் வன்முறை என்றால் என்னவென்றே அறியாதவர்கள். சென்ற இரு நூற்றாண்டுகளை உலுக்கிய அழிவுகளில் நம்முடைய நேரடிப்பங்களிப்பு என ஏதுமில்லை. ஆகவே நாம் இன்னும் போர் குறித்தும் வீரம் குறித்தும் அபத்தமான மிகைக்கற்பனைகளை வளர்த்துக்கோண்டிருக்கிறோம். நம்முடைய அரைவேக்காட்டு அரசியல்வாதிகள் கட்டைமீசையுடன் மேடைகள் ரத்த ஆறு ஓடும் என்றெல்லாம் பேசக்கேட்டு முட்டாள்தனமாக கைதட்டிக்கொண்டிருக்கிறோம். அந்த துப்பாக்கிகள் வழியாகச் சென்றபோது கூண்டுக்குள் புலியைப்பார்ப்பது போல என்று எண்ணிக்கொண்டேன். கூண்டுக்குள் நாம் பார்க்கும் புலி புலியே அல்ல என்று எப்போதாவது காட்டில் புலியைப் பார்த்தால்தான் உணர முடியும். காட்டுப்புலியின் நிமிர்வும் கம்பீரமும் நம் முதுகெலும்பில் அச்சத்தை செலுத்தும்போதே நம் மொத்தப்பிரக்ஞையையும் அதன் மீது நிறுத்தி வைத்திருக்கும். கூண்டுப்புலி கொஞ்சம் பெரிய பூனைதான்.”

———————–
உண்மையில் நான் கடவுள்திரைப்படம் வந்த பின் தங்களுடைய வலைப்பதிவில் வாசம் செய்பவர்கள் (Visitor Base) எண்ணிக்கை கூடி உள்ளது கண்கூடு, அவர்களுள் ஒருவனாக தினம் புதியதாய் எழுத தூண்டும் வாசகனாய் நாளைய கட்டுரைக்கு காத்திருக்கிறேன்..

ராஜீவ்

அன்புள்ள ராஜீவ்,

கொஞ்சம் கசப்பான யதார்த்தம் ஒன்று உண்டு, இந்த நூற்றாண்டில் அதை பெரிய விலை கொடுத்து மானுடம் புரிந்துகொண்டிருக்கிறது. போர்கள், புரட்சிகள் என்பவை மக்களால் நடத்தபப்டுவன அல்ல. மக்களுக்குள் நிகழும் மோதல்களும் அல்ல. அதிகார மையன்களுக்கு நடுவே நடப்பவை. அதிகாரத்தை பிடிக்கவும் தக்கவைத்துக்கொள்ளவும் நடப்பவை. மக்களின் அதிகாரம் கருத்தியலில் உள்ளது– ஆயுதங்களில் இல்லை. ஆகவே கருத்தியல் மாற்றம் மூலமே மக்கள் அதிகாரத்தை அடைய முடியும். ஆயுதங்கள் இன்னொரு அரசையே உருவாக்கும்

ஜெ

அன்புடன் ஜெயமோகன் அவர்களுக்கு,


வணக்கம்,

ஈழத்தமிழர் தொடர்பான தமிழகம் பற்றிய கருத்துக்களும் தங்களின் அனுபவமும் மிக முக்கியமானவை.


ஈழப்பிரச்சனைக்காக தமிழகத்தில் இரத்தாறு பெருகும் போன்ற அரசியல் வார்த்தைகளை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள். தமிழக மக்களின் உண்மையான உணா;வைச் சிதறடித்தது அரசியல் வாதிகள்தான். ஈழத்தில் மக்கள் கொல்லப்படுவதற்கு . தமிழ்நாட்டில் ஏன் இரத்தாறு பெருக வேண்டும்.
மக்களுக்கு வயிற்றுப்பாடுதான் மிகப்பெரிய பிரச்சனை பசி எல்லா உணர்வுகளையும் மழுங்கடித்துவிடும் போலுள்ளது சரிதான்.

எல்லாத்துயர்களும் விலக வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன்தான் இங்கு மக்கள் வாழ்கின்றார்கள். இன்னொரு போரோ விடுதலை அமைப்போ தேவையில்லை. இன்னொரு முறை முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளையும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவி மக்களையும் பலி கொடுக்க முடியாது. வேறு என்ன

உதயன் சித்தாந்தன்

அன்புள்ள உதயன்

ஒரு கவிதை. கொஞ்சம் கசப்பானது.

கடவுளும் கவர்மெண்டும் ஒன்று

அதைத்தூற்றாதே பழிசேரும் உனக்கு

அதற்கு கண் ஆயிரம் காதுகள் ஆயிரம்

ஆனல் குறையென்றால் கேட்காது பார்க்காது

கைநீட்டும் கேட்கும்பிடுங்கும்…

கடவுளும் கவர்மெண்டும் ஒன்று

அதைத்தூற்றாதே

இன்னும் கவர்மெண்டுதான் வந்துசேரும்

கி.கஸ்தூரிரங்கனின் கவிதை– நினைவில் இருந்து. மக்கள் போராடுவது எப்போதுமே ஒரு கவர்மெண்டில் இருந்து இன்னும் கொஞ்சம் மோசமான கவர்மெண்டுக்காகத்தானா என்ற கசப்புஎழுகிறது மனதில்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

போரைப்பற்றிய உங்கள் கட்டுரைக்குறிப்புகள் எல்லாமே அப்பட்டமான உண்மை என்று இங்கே போரிலே வாழும்போது தெரிகிறது. போர் என்று சொன்னால் அது கையில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் சுட்டுக்கொள்வது. துப்பாக்கி இல்லாதவர்கள்தான் அதிகமாகச் சாவார்கள். அவர்கள் அறிந்ததெல்லாம் துப்பாக்கிகள் சுடும் என்ற உண்மையை மட்டுமேதான்

நன்றி

நிலாகாந்தன்

முந்தைய கட்டுரைபடைப்புகள் கடிதங்கள்
அடுத்த கட்டுரைநிறம் இனம்:கடிதங்கள்