நீங்களும் புதுக்கவிதை எழுதலாம்

 

புதுக்கவிதை எழுதப்போகும் இளைஞர்களுக்கு சில ஆலோசனைகள்.

முதலில் நன்றாக நிமிர்ந்து அமர்ந்துகொள்ளவும். கைகால்களை இலகுவாக்கிக் கொள்ளுங்கள். மூச்சை இழுத்துவிடுங்கள். நம்பிக்கை இருந்தால் குலதெய்வத்தை நினைக்கலாம். ஒன்றும் ஆகப்போவதில்லை. தைரியமாக இருங்கள். இதுவரை பல்லாயிரம் பேர் எழுதிவிட்டார்கள். இனியும் எழுதுவார்கள்.சிறந்த புதுக்கவிதை கொந்தளிப்புகளை உருவாக்கும்– அக்கவிதையில். அதைப்படிப்பவர்கள் உச்சகட்ட எதிவினைகளை உருவாக்குவார்கள், தங்கள் கவிதைகளில். ஆகவே கவிதை என்பது கவிதைக்காக மட்டுமே நிகழும் ஒருசெயல் என்பதை மீண்டும் நினைவுகூருங்கள்.

ஆரம்பிக்கும் முன்பாக உங்கள் கற்பனைக் குதிரையை தட்டி விடுங்கள். பின்நவீனத்துவக் கவிஞர் என்றால் பின்பக்கமாக. முற்போக்கு பின்நவீனத்துவம் என்றால் நீங்கள் பின்னால் திரும்பி அமரவேண்டும். உங்கள் புனைவுத்திறனின் உச்சம் வெளிப்படும் தருணம் ஆரம்ப கணத்திலேயே தேவையாகின்றது என்பதே கவிதையெழுத்தின் வசீகரமான ரகசியம். ஆம், உங்களுக்கு ஒரு பெயர் தேவை. புனைபெயர்! புனைபெயரில்லாத கவிஞன் மல்லிகைசூடாத விலைமகள் போல. கண்ணடித்தாலும் கண்டுகொள்ளாமல் கண்நோய்க்குக் கைமருத்துவம் சொல்வார்கள்.

புனைபெயரில் என்ன இருக்கிறது என்று எண்ணவேண்டாம். உங்கள் அனைத்துக் கவிதைகளுக்கும் அர்த்தம் அளிக்கும் முதல் புள்ளி புனைபெயர்தான் என்பது புதுக்கவிதையின் ஆரம்பப் பாடம்.

‘அம்மணக் குழந்தையின்
அர்ணாக்கொடியில்
ஆடுகிறது
மாலைக் காற்று’

என்ற கவிதையை ‘பிரபஞ்சாதீதன்’ எழுதியிருந்தால் என்ன பொருள், ‘செந்நிலவன்’ எழுதியிருந்தால் என்ன பொருள்வேறுபாடு, ‘சங்கிலிக்கருப்பு’ எழுதியிருந்தால் என்ன உட்பொருள் என யோசியுங்கள். முறையே உள்ளொளி,புரட்சி,தலித் கவிதைகளாக இது ஆகிவிடுகின்றதல்லவா? நீங்கள் யார் என்பதை உடனடியாக முடிவுசெய்யுங்கள்.

சுயபெயரிட்டுக் கொள்ள இரு தளங்கள் உள்ளன. ‘அண்டபேரண்டன்’ போன்ற பெயர்கள் ஓர் எல்லை. அப்படிப்பட்டபெயர்கள் அதிகம் காதில்விழுந்தால் ‘சுப்பம்பட்டி குப்புசாமி’ போல மறு எல்லைக்குப் போகலாம். பெயரைக் கேட்ட எவருமே ”யார்யா இவன்?” என்று அரைக்கணம் யோசிக்க வேண்டும். கவனியுங்கள் ஒரு கவிஞனின் பெயரை நினைவுகூரும்போது அதற்குப் பாடபேதம் உருவானால் மட்டுமே அது நல்லபெயர். உதாரணமாக முகுந்த் நாகராஜன் என்ற கவிஞரை ”…இந்த உயிர்மையில ஒரு கவிஞர்…பேரு…ஒருமாதிரி…முதுகு.. பாம்புன்னுகூட ஏதோ வரும்சார்…அந்தமாதிரி …ஒரு கவிதை எழுதியிருக்காரு பாருங்க…” என்று ஒரு வாசகர் நினைவுகூர முற்பட்டார்.

நீங்கள் எந்தவகைக் கவிஞர் என்பதை முதலில் வகுத்துக் கொள்ளுங்கள். இ.இ கவிஞர்,வா.இ கவிஞர்,சி.இ கவிஞர் என கவிஞர் மூவகைப் படுவர். இ.இ கவிஞர் இலவச இணைப்புகளில் கவிதை எழுதுகிறார்கள். ,வா.இ வார இதழ்களில். மூன்றாமவர் சிற்றிதழ்களில்.

காரைக்குடி கணேசன், ஆர்.அமிர்தகடேசன் வத்ராயிருப்பு போன்று பெயரிட்டு எழுதப்படும் கவிதைகள் கவிதைகள் அல்ல.அசின்பிரியா, ‘தமனா’கிருஷ்ணன் போன்ற பெயர்கள் போட்டுக் கொண்டு எழுதப்படும் இ.இ கவிதைகளில் இருந்தே தமிழ்ப்புதுக்கவிதை தொடங்குகிறது. காதல், சமூகக் கோபம், தன்னம்பிக்கை ஆகிய மூன்று தலைப்புகளுக்குள் பலநூறு விஷயங்கள் எழுதப்படலாம்.

கண்ணே
நீ லிப்ஸ்டிக் போடாதே
உனக்கு
‘செவ்வாய்’ தோஷம் என்பார்கள்!!!

என்பது போன்ற வரிகளில் முதலிரு தலைப்புகளையும் வெற்றிகரமாக நாம் இணைக்க முடியும். இ.இக்கள் அவற்றை ஒன்றுக்குமேற்பட்ட ஆச்சரியக்குறிகளுடனும் இண்டியன் இங்கில் வரையப்பட்ட தபால்தலையளவு நவீன ஓவியத்துடனும் [கண்கள் நடுவே மூக்குக்குப்பதில் பௌண்டன் பேனா!] முழு விலாசத்துடனும் வெளியிடும்போது உங்களுக்கு ‘மஞ்சுளாதாசன்’, ‘பருவம்’குமார், மிருதுளா கண்ணன்,செல்வக்குமரி தங்கரத்தினம் போன்றவர்களிடமிருந்து வாசகர் கடிதங்கள் வரும். அஞ்சக்கூடாது. அவர்களும் கவிஞர்களே. அனைவரும் ஆண்கள் என்பதை அறிகையில் மனம் உடைவதும் கூடாது.

வாஇ என்பது டூட்டோரியல் கல்லூரிகள் போல. அங்கே கவிஞர் ஆகவேண்டுமென்றால் நீங்கள் ஒன்று இஇ கவிதைகளிலிருந்து தேறி வந்திருக்கவேண்டும். அல்லது சிஇ கவிதைகளில் இருந்து தவறி வந்திருக்க வேண்டும். நேரடியாகப் பிரசுரம் பெற இயலாது. அங்கே காதல் மட்டுமே பாடுபொருள். கல்யாணமான பெண்கள் வேறு தலைப்பில் எழுதலாம்– கசந்த காதல் பற்றி. கவிதைகள் புகைப்படங்களுக்கு அடிக்குறிப்பாக ஆவது குறித்த கவலையை விட்டுவிடுங்கள். தலையில் டர்க்கிடவல் கட்டிக் குனிந்து கோலமிடும் பெண்கள், ரெட்டைச்சடை போட்டு தாவணி உடுத்து பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீர் கொண்டுசெல்லும் பெண்கள் என பலவிதமான பெண்கள் உங்கள் கவிதைகளைக் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

‘இரட்டைச்சடை அசைவில்
தார்க்குச்சி தட்டும் வண்டிக்காளைகள் போல
ஒற்றையடிப்பாதையில் விரையும் என் பாலியம்’

போன்று காமம் கலந்த இறந்தகாலஏக்கங்களுக்கு இக்கவிதைகளில் மைய இடமுண்டு. காதலைச் சொல்வது, சொல்லமுடியாமல் போவது, காதல் மறுக்கப்படுவது, ஏற்கப்படுவது, இழந்தகாதல் நினைவுகூரப்படுவது எனப் பல தளங்கள் இருந்தாலும் பழைய காதலியை முப்பதுவருடம் கழித்து சந்தித்தபோது அவள் செயற்கைப்பல் கட்டியிருந்த விஷயத்தைக் கவனித்து அதைக் கவிதையாக்கிய கெ.ஸ்ரீனிவாசநரசிம்மன் என்ற ஆழ்வார்பேட்டைக்காரர் வார இதழ்களால் அவரது வீட்டுக்கே ஆளனுப்பி மிரட்டப்பட்டார் என்ற தகவலையும் நினைவில் வையுங்கள்.

சிஇ கவிதைகளை நீங்கள் எளிதில் எழுதிவிடமுடியாது. முதலில் சிற்றிதழ்களை ஆறுமாதம் கூர்ந்து நோக்குங்கள். அப்போது கவிதைகளின் ஒரு பொதுவான சித்திரம் உங்களுக்கு பிடிகிடைக்கும். சிற்றிதழ்களையே பொதுவாக இரண்டாகப்பிரிக்கலாம். வண்ண அட்டை இதழ்கள் , கோட்டோவிய இதழ்கள்.

இரண்டாம் வகை இதழ்கள் மனிதனா தவளையா என்று தெரிந்துகொள்ள முடியாத விசித்திர உடல்களை ஆதிமூலபாணி எழுத்துக்களுடன் அட்டையில் போட்டு காசாங்குப்பம், முனியமேடு போன்ற ஊர்களிலிருந்து ராஜாளிவேந்தன், சித்திரவதையன் போன்ற புனைபெயருள்ளவர்களால் மும்மாதமொருமுறை என்ற நம்பிக்கையில் எப்போதாவது வெளியாகும் இதழ்கள். ‘காசுள்ளபோதே [பகைவரை] தூற்றிக்கொள்’ என்ற பழமொழிக்கு ஏற்ப வெளியாகக் கூடியவை. அவற்றுக்கு நீங்கள் கவிதைகளை தபாலில் அனுப்பிவிட்டு உடனடியாக மறந்துவிடவேண்டும்.அனுப்பிக் கொண்டே இருந்தால் அவை எங்கோ எப்படியோ வெளிவந்துகொண்டே இருக்கும். ஆனால் இதனால் பெரும்பாலும் பயன் கிடையாது. இவை சந்திரமதி தாலிபோல யார்கண்களுக்கும் படாத வரம் கொண்டவை.

வண்ணஅட்டைச் சிற்றிதழ்களுக்கு வாசகர் கடிதத்துடன் கவிதை அனுப்புவது சிறந்த வழிமுறை. அதன் ஆசிரியரால் எழுதப்படும் கட்டுரைகளுக்குப் பாராட்டுடன் அனுப்புவது மேலும் சிறந்தது. அவ்வாசிரியர் தன் எதிரி இதழுக்கு சவால்விட்டு எழுதிய கட்டுரையைப் பாராட்டி எழுதுவது மேலும்மேலும் சிறந்தது. சாது ஆத்மாக்கள் ஆயுள் சந்தாவுடன் கவிதை அனுப்பலாம். ஒருசிற்றிதழில் கவிதை வெளிவந்தால் உடனே அதன் போட்டிச்சிற்றிதழுக்கு அனுப்புவது உடனடி பலனளிக்கிறது. பொதுவான வண்ணஅட்டைச் சிற்றிதழ்கள் இக்காலத்தில் தமிழ்ப்பெண்களைக் கவிஞர்களாக்கும் வேள்வியில் ஈடுபட்டிருப்பதனால் பெண்பெயரில் கவிதைகளை அனுப்பலாம். கவிதையில் ‘நீ என்னைப் புணரும்போது’ போன்ற வாக்கியங்கள் முக்கியம்.

சிற்றிதழ்க் கவிதைகளைப்பற்றிய ஒரு பொது வடிவநிர்ணயம் இன்றைய அவசியத்தேவை. தேர்ந்த திறனாய்வாளர்களால் உருவாக்கப்பட்ட அவ்விதிகளைக் கீழே அளிக்கிறோம். இவை கவிதை எழுதுவதற்கான பயிற்சியுமாகும்.

1 எழுவாய் பயனிலை கொண்ட வரிகள் எழுவதால் பயனில்லை. ” நான் நேற்று ஒரு மஞ்சள் பறவை சிறகடித்து நீல வானத்தில் பறந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன்” என்ற வரி கவிதை அல்ல. ‘ நீலவானத்தை ஒரு மஞ்சள் பறவை சிறகடித்துப் பறக்கப் பார்த்தபோது’ என அதை மாற்ற முடியுமா என்று பாருங்கள்.

2 வரிகள் ஒழுங்காக அமைந்திருப்பது நவீன கவிதை அல்ல. உடையுங்கள். கைக்குழந்தை தோசையைப் பிய்ப்பதுபோல நடுவே பிடித்து பிய்த்தெடுங்கள். ‘சிறகடித்து நீலவானத்தைப் பறந்த ஒரு பறவையின் மஞ்சளைப் பார்த்து ‘ கவிதைமாதிரி ஆகிவிட்டதல்லவா?

3 உடைந்த தனிச்சொற்களின் சேர்க்கையே கவிமொழியாகும். இதை உருவாக்க சிறந்த வழி அவ்வப்போது சில சொற்களை வெட்டி விடுவதே. ஒரு தமிழ்க் கவிஞர் படிக்கத்தெரியாத தன் எல்கேஜி குழந்தையிடம் கொடுத்து ‘உனக்குப் பிடிக்காத வார்த்தையை வெட்டு பாப்பா” என்று சொல்லி கவிதைகளை உருவாக்குகிறார். கிளிகளையும் பயன்படுத்தலாம் ‘சிறகடித்து ஒரு வானநீலப் பறவை மஞ்சள்’ அற்புதமான ஒரு புதுக்கவிதையின் நுனியை இப்போது நீங்கள் பார்த்து விட்டீர்கள்!

4 கண்ணால் கண்ட ஒரு காட்சியை என்ன ஏது என்றெல்லாம் சிந்திக்கப் புகாமல் இம்மாதிரி கவிதையாகக் கலைத்துவைப்பது போதுமானது.

பயிற்சி: ”நான் நேற்று மஞ்சள் பறவை சிறகடித்து நீல வானத்தில் பறந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். அதன் சிறகுகள் அழகாக இருந்தன. அவற்றில் இருந்து ஒரு இறகு விழுந்து தரையில் கிடந்தது. எடுக்கப்போகும் முன் காற்றில் பறந்துபோய்விட்டது. எடுத்திருந்தால் ஆனந்தமாகக் காதுகுடைந்திருக்கலாம். இப்போது என் காதுக்குள் ஒரே நமைச்சல். அடுத்த பறவை எப்போது வரும்?’ இதைப் புதுக்கவிதையாக ஆக்குங்கள் பார்ப்போம்.

சிற்றிதழ்களிலும் பேரிதழ்களிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளை நீங்கள் எழுதிவிட்டபின்னர் ஒரு கவிஞன் என்ற தகுதி உங்களுக்கு வந்துவிட்டிருப்பதை அந்தரங்கமாக உணர்வீர்கள். இது பதின்பருவத்தில் உணர நேர்ந்த பல அந்தரங்கக் கண்டடைதல்களுக்கு நிகராகவே மனக்கிளர்ச்சி ஊட்டுவதென்பதை அறிவீர்கள். இதன் பின் நீங்கள் தொகுப்பு போடாமலிருக்க முடியாது. அரசு வேலையில் இருப்பீர்கள் என்றால் வைப்புநிதியில் கடன் பெறுங்கள். இல்லாவிட்டால் தொடக்க வேளாண் வங்கியில் [மனைவி] நகைக்கடன்.

ஒரு கவிதைத் தொகுதிக்கான இலக்கணங்கள் சில.

1. ஐம்பது கவிதைகளுக்குக் குறைவிலாதிருக்க வேண்டும். குறைந்தால் நவீன கோட்டோவியங்களைப் போடலாம்.

2. வண்ண அட்டையில் நவீன வண்ணஓவியங்கள் தேவை. ஆதிமூலம் வரைவது தொல்மரபு. மருது, சந்தானம் பின் மரபு. இணைய இறக்கமே இந்நாள் வழக்கம்.

3 கவிதைத்தொகுதிக்கான தலைப்புகள் நான்கு வகை. அவையாவன.

அ] பன்மைப்பெயர்கள். உணர்ச்சிப்பூக்கள், ஏறாத குன்றுகள், நிலவுமழைகள் போலப் பன்மையில் சூட்டப்படும் பெயர்கள். இவை அதிகமும் உருவகங்கள். இவை பொதுவாக இ.இ கவிதைகளுக்கு உரியவை.

ஆ] கடிநாக்குப் பெயர்கள். வாசகனின் நாவைப் பல் கடிக்கும் வாய்ப்புள்ள பெயர்கள் இவை. இதில் இரண்டுவகை. சுரோணிததளம், அட்சரலட்சியம் போல சம்ஸ்கிருதப் பெயர்கள். நிலையிலியலை, பிரதியழிந்தசுவடி போல தமிழ்ச் சொற்கள்

இ] முன்னது இரண்டிலிருந்தும் முற்றாக வேறுபடும் நோக்கம் கொண்ட தலைப்புகள். ‘சைக்கிள்’ ‘சின்னமைத்துனி’ போல. ஆனால் இத்தகைய தலைப்புகளுடன் கொடுக்கப்படும் படங்களில் கவனம் தேவை. சைக்கிள், இளம்பெண் படங்கள் அளிக்கப்பட்டால் முறையே சுயபராமரிப்பு அல்லது பலான நூல் என்று மயங்கி வாசகர் வாங்கி ஏமாறக்கூடும். முறையே நெருக்கக் காட்சியில் தொப்புள், உரித்துத் தொங்கப்பட்ட மாட்டுத்தொடை போன்ற படங்கள் இருப்பது இது கவிதைநூல் என்ற எண்ணத்தை உருவாக்கும்

ஈ] கிராமத்துத் தலைப்புகள். ”மாமோய், கஞ்சி கொண்டாந்திருக்கேன்!” ”கம்மங்கூழ்” போன்ற தலைப்புகள். இங்கும் கவனிக்க வேண்டியதொன்றுண்டு. இத்தகைய நூல்களின் அட்டை அதிநவீன முறையில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். இல்லையேல் குஜிலி இலக்கியம் என்று வாசகர் மயங்குவர்

4.கவிதைகளைப் பெயர் போட்டோ போடாமலோ அச்சிடலாம். கவிதைக்கு மேலேயோ அடியிலோ வெற்றிடம் விடலாம். பதிலுக்கு விடலாகாது. வெள்ளைத்தாள் என்பது வரிகளைக் கவிதையாக ஆக்கும் தன்மை கொண்டது. முழுத்தாளின் கீழ் நுனியில் ‘காகம் கரைந்து போயிற்று /காவென்று’ என்று ஒரு வரி மட்டும் இருந்தால் அது கவிதையாக ஆகும் விந்தை சிந்தைக்கு இன்பமளிப்பது

5. பின்னட்டையில் இருவகைக் குறிப்புகள் இருக்கலாம் என ஆய்வறிஞர் வகுத்துள்ளார்கள். ”தன்னிலையழிந்த கீழைமனத்தின் இன்னுமுணரப்படாத மெய்ப்பாடுகளில் உறங்கும் தொன்மங்களிலும் வாழ்க்கைநுண்மைகளிலும் அழியாது வாழ்ந்துகொண்டிருக்கும் ஓராயிரம் புராதனச் சொற்களின் வழியாகப் பீறிட்டெழும் கனவுகளில் இருந்து வழியும் குருதியும் சுக்கிலமும் பற்பல நிலவெளிகளின் வழியாக அருவிபோல ஒலித்து ஓடிக்கொண்டிருக்கும்போது நாம் அறியும் மௌனத்தைப்பேசுபவை இக்கவிதைகள்’ என ஏதாவது மூத்த எழுத்தாளர் அல்லது கவிஞரிடமிருந்து சொற்களை வாங்கிப் போடலாம். அற்றகைக்கு நாமே இவ்வாறு சொற்றொகை எழுதலும் ஆகும்

அல்லது ஒரு கவிதைவரியை மட்டும் எடுத்துக் கொடுக்கலாம்

‘நினைவின் காட்டுப்பாதை
கரிய குதிரை
நான் அலையும்போது
யாரின் குரல்?’

போதும். இது கவிதைத்தொகை என்ற இறும்பூது வாசகர்களுக்கு ஏற்படுதல் திண்ணம். பொதுவாகக் கவிதைத்தொகுதிகளின் பின்னட்டைக்குறிப்பென்பது வேறுநூலென எண்ணி வாங்கும் வாசகர்களின் வன்முறையில் இருந்து தப்பிக்கும் நோக்கம் கொண்டதென உணர்க.

ஒரு மாற்றத்துக்காக கவிஞரின் கையெழுத்திலேயே கவிதையை வெளியிடலாம்.

‘எதிரே போன பெண்ணின் [ பசுவின்]
நடை[இடை] அசைவில் பறக்கும்[ ஆடும்]
வண்ணத்துப்பூச்சி [பட்டாம்பூச்சி]
முந்தானை [வால்]சிறகடிப்பு”

என்று ஒரு வரி பின்னட்டையில் உரிய அடித்தல்களுடன் இருந்தால் கவிஞன் சிந்தனைப் பழக்கமுள்ளவன் என்பதற்கு உறுதியான சான்றாக ஆகிறது.

6. உள்ளே கவிஞனின் முன்னுரை அவசியம். அது சலிப்பின் குரலில் அமைந்திருத்தல் வேண்டும். ‘இருப்பின் துயரவெளிகளில் அலையும்போது மடியில் கட்டப்பட்டிருக்கும் பொரிகடலை எனக்குக் கவிதை’ போன்ற சில சொற்றொடர்கள்

7. மூத்த கவிஞர் ஒருவரின் முன்னுரையும் நல்லதே. ஆனால் அவர் ‘இனிமேலாவது ஒழுங்கா எழுதுடா மசிரே’ என்ற பொருளில் ”…அண்டபேரண்டனிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்’ என்று எழுதிவிடலாகாது.

கவிதைநூல்களைக் கவிஞனே அச்சிடுவது பழைய வழக்கம். பதிப்பகத்தாருக்குப் பணம் கொடுத்து வெளியிடுதல் புது வழக்கம். நாமே அச்சிடும்போது அன்பளிப்பாக அளித்த எண்பது பிரதிகள், மதிப்புரைக்கனுப்பிய இருபது பிரதிகள் தவிர மீதி எண்ணூற்றித் தொண்ணூற்றியெட்டை என்ன செய்வதென்று சிக்கல் ஏற்பட்டு மனைவியால் தினமும் ‘சனியன்பிடிச்ச பொஸ்தகங்கள் .இத எங்கிணயாம் கொண்டு போறேளா இல்ல வெந்நீரடுப்பில செருகவா?’ என்று வசைபாடப்படும். பதிப்பகத்தார் எனில் அவர்கள் நமக்களிக்கும் நூறு பிரதிகளுக்கு மேலாக ஐந்து பிரதிகள் மட்டுமே அச்சிட்டுப் புத்தகக் கண்காட்சிக்கு மட்டும் வைப்பார்கள் என்பதனால் அப்பிரச்சினை இல்லை. நம் நூல் உலகெலாம் வாசிக்கப்படுகிறதென்ற இன்பமும் நமக்குண்டு.

மதிப்புரைகள் பொதுவாக வருவதில்லை என்பதனால் பிரச்சினை இல்லை. கவிஞர் தன் கவிநண்பர்களுக்கு உரியமுறையில் கப்பம் கட்டியிருந்தால் மதிப்புரைகள் வரும். மதிப்புரைகள் என்பவை சொற்களே. கவிதைமதிப்புரைகள் என்பவை கலைந்த சொற்கள்.கவிதை என்பது பறவையடைந்த மரம் மீது வீசப்பட்ட கல் அல்லவா? ஆகவே ”மொழியின் நுண்காடுகளில் அலையும் சொற்களின் பிரதிமைகளின் பேச்சுமொழி அண்டபேரண்டனின் கவிதைகளின் பிரதித்தன்மையிலிருந்து கமழ்கிறது…” என்பது போன்ற வரிகளுடன் அவை சிற்றிதழ்களில் வெளிவரலாம்.

புதுக்கவிதை எழுதுவதனால் என்ன லாபம் என்ற வினா எப்போதாவது வந்து உங்களை மதுக்கடை நோக்கி உந்தக்கூடும். புதுக்கவிதை எழுதுபவனுக்குப் பணமோ புகழோ கிடைப்பதில்லையாயினும் தமிழ்மக்களின் கவிதையுணர்வைக் குறைசொல்லவும் தமிழ்க் கவிதையின் தரவீழ்ச்சியைப்பற்றி வருந்தவும் உரிமை கிடைக்கிறது, இது வாழ்நாள் முழுக்கச் செல்லுபடியாகக் கூடியதுமாகும். ஆகவே எழுதுக கவிதை!

பிகு

பயிற்சிக்காக நீங்கள் எழுதிய கவிதை கீழே காணும் கவிதையின் எழுபது விழுக்காட்டை அடைந்திருந்தால் நீங்கள் கவிதைத்தேர்வில் வென்றிருக்கிறீர்கள் என்று பொருள். வாழ்த்துக்கள்

சிறகடித்து ஒரு வானநீலப்
பறவை மஞ்சள்
சிறகுகள் உதிர் இறகு
காற்றில்
பறக்க
எடுத்திருந்தால்
என் ஆனந்தக் காது.
நமைச்சல்
எப்போது
அடுத்த பறவை?

 

முதற்பிரசுரம் Aug 2010/ மறுபிரசுரம்

முந்தைய கட்டுரைஇசையின் கவிதை,அழகுநிலா -கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுதுவை வெண்முரசு கூடுகை 32