அன்னியமுதலீடு- விவாதம்

நண்பர்களே

ஜெமோவின் சிறுவணிகத்தில் அன்னிய முதலீடு பற்றிய கட்டுரை இன்னும் விரிவாக விவாதிக்கப் பட வேண்டிய கட்டுரை என்றே நினைக்கிறேன். FDI, மிகப்பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு. இந்திய அளவில் அதனுடைய தாக்கம் மிக ஆழமானதாக இருக்கp போகிறது என்பது உறுதி.

இதை உள்ளூர் வணிகர்கள்/ விவசாயிகள் கோணத்தில் மட்டுமே அணுகுவது சரியான நிலைப்பாடு எடுக்க உதவாது என்றே நினைக்கிறேன். அக்கட்டுரையில் ஜெமோ சொல்லுவது அத்தனையும் உண்மை. விவசாயிகள் அடிமைகளாக, அவர்களது உழைப்பும், எதிர்கால நம்பிக்கைகளும் உறிஞ்சப்படுவது ஒரு மிக பெரிய வன்முறை. ஆனால் அது ஒரு தனித்த சமூக அவலம், FDI யை அதற்கான தீர்வாகக் கொள்ள முடியாது. இது ஒற்றை எதிரியை சமாளிக்க பன்முக எதிரியைக் கொண்டுவருவது போல் ஆகிவிடும். இந்த சிறு முதலாளிகள் விவசாயிகளுக்கு செய்வது அநியாயம் ஆனால் அதற்குத் தீர்வு FDI என்பது, லஞ்சத்தை ஒழிக்க ராணுவ ஆட்சி வர வேண்டுமென்பது போல் உள்ளது.

இதில் நான் முக்கியமாகக் கருதுவது, FDI வந்த பின்பு அவர்கள் எங்கு கொள்முதல் செய்யவேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்க முடியாது. அவர்களது தொழில் தத்துவமே, உலகில் எங்கு எது விலை குறைவாகக் கிடைக்கிறதோ அதை உலகெங்கும் கொண்டு தனது வியாபாரத்தை செய்வது. இதை இன்னும் குறுக்கி நேரிடையாக சொன்னால், சீனா பொருட்களுக்கு இந்திய சந்தையை முழுவதுமாகத் திறந்து விட்ட மாதிரி ஆகிவிடும். அது அவர்களுக்கு ஒரு மிக பெரிய சந்தை, நமக்கு அது ஒரு மிகப் பெரிய பிரச்சனை.மங்கோலியர்கள் படை ஒரு நாட்டுக்குள் புகுவது மாதிரி. அனைத்து சிறு தொழில்களும் மீளவே முடியாத ஒரு நிலைக்குத் தள்ளப்படும். போன சுதந்திர தினத்திற்கான இந்திய மூவர்ணக் கொடிகள் அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை, நமது கார்த்திகைத் திருவிழாவிற்கு இபோதெல்லாம் சீனா மெழுகில் செய்த விளக்குகள்தான் வீட்டை அலங்கரிக்கின்றன. FDI மறைமுகமாக சீனா நாட்டிற்குள் வர வழியமைத்துவிடும்.

சமிபத்தில் ஐரோப்பிய யூனியன் சிறிலங்காவிற்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்த கதை நமக்குத் தெரியும்தானே? ஸ்ரீலங்காவில் இருந்து ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சைக்கிள்கள் அனைத்தும் சீன சைக்கிள்கள். அரசாங்கம் இப்போது FDI மேல் அந்நியப் பொருட்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக சொல்லலாம் ஆனால், அதை எப்போதும் நம்ப முடியாது. FDI உள்வந்தவுடன் கொடுக்கும் அழுத்தங்கள் ஒவ்வொரு “amendment” களாக மாற்றியமைக்கப்படும், amendment களுக்குப் பாராளுமன்ற அனுமதி/விவாதம் தேவையில்லை எனவே ஜெமோவின் கட்டுரையில் சொல்லப்பட்ட அனைத்து விஷயங்களும் நிதர்சனமான உண்மை என்ற போதிலும் அவை தனிப்பட்ட பிரச்சனையாக பார்க்கப்படவேண்டுமே தவிர, அவை FDI உள்நுழைவதற்கான நியாயங்களாகிவிடாது என்றே கருதுகிறேன்.

சரவணன் விவேகானந்தன்
சிங்கப்பூர்

=========================================================================================

சரண்,

ஜெயின் கட்டுரை விவசாய விளைபொருட்கள் மற்றும் விவசாயிகளின் நலன் சார்ந்தது மட்டுமே.FDI மூலம் வரும் பன்னாட்டு நிறுவனங்கள் தரும் குறைந்தபட்சக் கொள்முதல் விலை இப்போது விவசாயிக்குக் கிடைப்பதை விட சிறிதளவேனும் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகளைத்தான் ஜெ சுட்டிக்காட்டி உள்ளார்.பன்னாட்டு நிறுவனங்கள் உள்நுழைந்து இருக்கும் கட்டமைப்பை சிதைத்து ஒற்றைப்புள்ளி கொள்முதல் / வியாபார முறையைக் கொண்டுவருவார்கள் என்பதை ஒரு சாத்தியமாகக் கொண்டாலும் , இப்போதிருக்கும் நிலைமையும் அதேதானே.

ஒரு நாட்டு மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய பொருட்களை விற்கும் எந்த ஒரு நிறுவனமும் லாபம் பெற சுலபமான வழி அந்த நாட்டிலேயே கொள்முதல் செய்வதுதான்.அதுவும் இந்தியா போன்ற விவசாய நாட்டில் , உலகளவில் ஒப்பிட குறைந்த பணத்திற்கு அதிக மனித உழைப்பு கிடைக்கக் கூடிய இடத்தில் அது மிகுதியும் லாபம் தரக்கூடியது.

காய்கறிகள் தவிர்த்த, பிற இறக்குமதி மலிவு விலை தயாரிப்புகளைப் பற்றிய உங்கள் கவலை நியாயமானதே .பக்கத்து  நாட்டுக்காரனால் குறிப்பிட்ட தரத்துக்கு,குறிப்பிட்ட விலைக்குத் தரமுடிகிற ஒரு பொருளை நம் நாட்டில் ஏன் அதே விலை,அதே தரத்துக்குத் தயாரித்து சந்தைப்படுத்த முடியவில்லை என்று யோசிக்கவேண்டியதே இப்போதைய அவசியமன்றி அப்பொருட்களைத் தடுக்க முயற்சிப்பதல்ல .இறக்குமதிப் பொருட்களினால் சுற்றுபுறச் சூழல் கேடு,தடைசெய்யப்பட்ட இடுபொருட்களால் செய்யப்பட்ட தயாரிப்புகள் இவையே விற்பனை மறுக்கப்பட வேண்டியவை.

விவசாயிகளின் நலனுக்கான எத்தனையோ திட்டங்கள் இதுவரை வகுக்கப்படுள்ளன. அவற்றையெல்லாம் அரசியல்,சாதி பலம் கொண்டு ஒரு கும்பல் ஒழிக்கமுடியுமென்றால் அந்தக் கும்பலை ஒழிக்க இது ஒரு சிறுமுயற்சி எனக் கொள்ளவேண்டியதுதான் .இதன் வெற்றிவிகிதமும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இது எதுவும் ஆகவில்லை என்றால் ,ஆகக் கடைசியில் விவசாயிகள் புரட்சி செய்ய வேண்டியதுதான் :-)

சீனிவாசன் போஸ்

=========================================================================================

நண்பர்களே,

சற்று ஆராய வேண்டிய செய்திதான். கிராமப்புற சேவை நிறுவனங்களுடன் பழக்கம் இருப்பதால் சிலவற்றைப் பகிர விரும்புகிறேன்.

விவசாயம் விவசாயி அளவில் இன்று பெரும்பாலான தமிழகத்தில் நட்டம் தருவதாகவே உள்ளது. அதனால்தான் அந்த நிலங்கள் இன்று வீட்டு மனைகளாக மாறுகின்றன. அந்த நட்டத்தினால் அடுத்த தலைமுறை வேறு வேலைகளுக்கு செல்வதனால் வம்சாவழி விவசாயம் அழிகிறது.

அதே வேளையில் விவசாய வியாபாரம் செழிப்பாகவேயிருக்கிறது. அதைத்தான் ஜெவும் அவர் கட்டுரையில் சொல்கிறார். அதே கருத்தை சில மாதங்களுக்கு முன்னர் ஒரு திரியில் விவசாயம் பற்றி எழுதுகையில் சொல்லியிருந்தேன்.

ஆனால் ஜெ சொல்லுவதுபோல் அந்நிய முதலீடு ஒரு வகையில் உதவலாம். அவர்கள் சொந்த logistical network மற்றும் storage வசதிகள் செய்வார்கள். அந்த அளவில் நிச்சயம் நமக்கு லாபம் உண்டு. ஆனால் ஜெ சொல்லும் பரந்த வணிக cartelலுக்கும் சிறிய எண்ணிக்கையில் பெரும் முதலாளிகள் அமைக்கும் cartelலுக்கும் பெரும் வித்தியாசம் இருக்குமென நான் நினைக்கவில்லை.

தொலைத்தொடர்பில் கூட ஏர்செல் வரும் வரை கைபேசி ஒரு பகட்டுப் பொருளாகத்தான் இருந்தது. அதாவது அந்த வணிகம் திறந்து ஐந்தாறு ஆண்டுகள் அப்படித்தான். பின்தான் high volume at less price என்ற business model வந்தது. அதே இங்கும் நடக்க வாய்பிருக்கிறது.

ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் வந்ததனால் இந்த இடைத்தரகு வேலை பெரும் முதலாளிகளிடத்தில் சென்றது. அவர்கள் நீண்ட நாள் வரவை எண்ணி குறுகிய கால லாபத்திற்காக விவசாயியை அழிக்கமாட்டார்கள் ஆனால் அதே வேலை கரும்பு விவசாயத்தில் நடப்பதுபோல் நடவு செலவை நிறுவனங்கள் கொடுக்கும்போது விளை பயிரின் விலையையும் அவர்களே நிர்ணயிக்க வாய்ப்பிருக்கிறது.

அதனால் ஒரேயடியாக அந்நிய முதலீடு நம் விவசாயிக்கு நன்மை தரும் என்று சொல்லமுடியாது.

நம் தேசத்தில் அரசியல் காரணங்களினால் ஊழலினால் பல நல்ல திட்டங்கள் செயலாக்கும்போது உண்மைப் பலனை உழைப்பவன் அனுபவிக்காமல் போகத்தான் அதிக வாய்ப்புள்ளது. இங்கும் அமெரிக்க நிறுவனங்கள் அவர்கள் நாட்டு பங்கு சந்தைக்கே முக்கியத்துவம் அளித்து லாபத்தை அந்த நாட்டிற்கு எடுத்து செல்ல முயலுவார்கள். அதனால் இங்கு நடக்கும் சேதம் பற்றி கவலைகொள்ளப் போவதில்லை. நாம் விழிப்பாகயிருந்து கூட்டாகப் போராடினால் மட்டுமே நல்ல விடியலைக் காணமுடியும்.

விஜயகிருஷ்ணன் திருச்சி.

========================================================================================

நண்பர்களுக்கு,

என்னை விவசாயி என்றே எப்போதும் உணர்பவன் , ஜெ சொல்லும் எல்லாவற்றையும் இன்னும் தீவிரமாகவும் கோபமாகவும் சொல்பவன் .

நேற்றைய தக்காளியின் கடை விற்பனை விலை ரூ.8 /கிலோ. வாங்கும் விலை என்ன தெரியுமா ? கூடை ரூ.26 . ஒரு கூடை 12-13 கிலோ கொள்ளும் (26/12= ரூ.2.10 வாங்கும் விலை , இடைவெளி சுமாராக 6 ரூபாய் கிலோவுக்கு ) , (போன வாரம் முழுவதும் இருப்பதிலேயே நல்ல தக்காளி மட்டும் 26 க்கு விலை போனது , மார்கெட் கொண்டுவந்த பாதிக்கும் மேற்பட்டவை வாங்க ஆள் இல்லாமல் தெருவில் வீசப்பட்டது .

பிச்சைக்கார விவசாயி வேறென்ன செய்ய ?

எங்கள் கோவை மாவட்டத்தை மட்டும் வைத்துப் பேசுவோம் , இங்கே தென்னை விவசாயியாக இருப்பவன் மட்டுமே கொஞ்சம் வசதியாக இருக்க முடியும் , ஏனெனில் தேங்காய் எண்ணைக்காக பருப்பு வாங்கப்படுகிறது , அரசின் ஆதரவு விலை இருக்கிறது) , மற்ற எல்லா வகை விவசாயிகளும் மொத்தக் குடும்பதையும் பணயம் வைத்து விவசாயம் செய்பவன் மட்டும்தான் .

எப்படித்தான் உயிர் வாழ்கிறான் ?
1.பால்
2.கோழிப்பண்ணை
3.மக்காச்சோளம்

கோழிப்பண்ணை நொடிந்துபோய் மொத்த சொத்தையும் விற்றவர்கள் இங்கே 15 வருடம் முன்பு நிறைய உண்டு , ஏனெனில் அப்போது அது சிறுவணிக மாபியாவிடம் இருந்தது , சுகுணா போன்ற நிறுவனங்கள் வளர்த்துத்தந்தால் கிலோவுக்கு இவ்வளவு என மாடல் கொண்டுவந்தார்கள் , நடுத்தரமான முதலீட்டில் உழைக்கத்தயார் எனில் மாதம் ரூ.15,000 கிடைக்கும் , இரண்டு மாடு வைத்து பால் விற்பதன் மூலம் மாதம் 8000 வரை கிடைக்கிறது , கோழித்தீவனத்திற்குத் தேவையான மக்காச்சோளம் எப்போதும் அடிப்படை விலை கட்டுப்படியாகிறது .

இதைத்தவிர எந்தத்தொழிலும் விவசாயியின் வாயில் கைவிட்டுக் குடல்வரை வழித்துத் திருடிக்கொண்டு போக வாய்ப்பளிக்கிறது இடைத்தரகர்களுக்கு , அது மஞ்சள் விவசாயம் அல்லது வெங்காயம் – எதுவாகட்டும் .

ஆக கார்பரேட் (ஆவின் அல்லது சுகுணா) புகுந்த விவசாயம் சார்ந்த தொழில் மட்டுமே கடைசி 10 வருடங்களில் எங்களை உயிர்தரிக்க உதவியிருக்கிறது ,

எந்த கார்பரேட் வந்தாலும் இதைவிடக் கேவலமாக நாங்கள் வாழப்போவதில்லை , குறைந்தது நேரடி கொள்முதலுக்கு ஆள்வருவதன் மூலம் போட்டி வந்து இன்னும் ஒரு 10 வருடம் நாங்கள் உயிர் வாழ்கிறோம் , எப்படியும் எங்கள் அடுத்த தலைமுறையில் யாரும் விவசாயம் செய்யப்போவதில்லை , இறக்குமதிதான் செய்யப்போகிறீர்கள் , செய்துகொள்ளுங்கள் .

கார்பரேட் எப்படியும் எங்கள் குடலை அறுத்து முட்டை எடுக்கமாட்டான் , முழுதாக செத்துப்போனால் அவனுக்கு நஷ்டம்தானே ? இன்றைய மாஃபியாக்கள் ஒழிய நாங்கள் யாரையும் வரவேற்கிறோம் .

இந்த மாஃபியா கும்பல் இரண்டு வேலைகளை செய்துகொண்டிருந்தது ,

சென்னைக்குள் கோழி விற்க யாரையும் அனுமதிக்காது ரவுடிகளை வைத்து மிரட்டிக்கொண்டிருந்தது , கார்ப்பரேட் நிறுவனங்கள் தலையெடுத்தபின்புதான் அங்கே எங்கள் ஊர்க் கோழிகளுக்கு (பல சமரசங்கள் செய்தபின்) விசா கிடைத்தது .

விவசாயிகள் நேரடி விற்பனை செய்துவந்த உழவர் சந்தை மாடலை அரசியல் கூலிகள் வழியாக அடியோடு அழித்துவிட்டார்கள் .

என் தொழில்நண்பர் ஒருவர் முன்பு சிறுஅளவில் காய்கறிக் கடை வைத்திருந்தார் .விவசாயப்பொருள்கள் ஏலம் எப்படி நடக்கும் என விவரித்தார் , முந்தைய நாளே விலை முடிவு செய்யப்பட்டு சிண்டிகேட்டில் அறிவிக்கப்படும், அருகில் உள்ள சந்தைகளில் எல்லாம் அதேவிலை, ஏலம் எடுக்க வரும் இவரைப்போன்ற சிலருக்கு விலைசொல்லும் முன்பே காய் அனுப்பி வைக்கப்பட்டுவிடும் , ஏலம் கோராமல் இருக்க,

பின் ஏலம் “நடக்கும்” , முடிவு செய்யப்பட்ட விலையில் ஏலம் முடியும் , கிடைத்த காசுக்கு குழந்தைக்குப் பலகாரம் வாங்கிக்கொண்டு ஏமாந்த கோமாளி விவசாயி வீட்டுக்குப் போவான் .

அரங்கசாமி

=============================================================================================

[ஆனால் நடைமுறையில் வால்மார்ட்டும் மாஃபியாவும் சமாதானம் செய்துகொள்ளக்கூட வாய்ப்பிருக்கிறது.]//

இந்த வரி அடிக்கோடிட்டு கவனித்தக்கது.

சுரேஷ் கண்ணன்

=============================================================================================

நண்பர்களே,

சில கேள்விகள்.

1. FDI வரவுதான் தற்போதைய இந்திய விவசாய நிலைகளுக்கு ஒரே தீர்வா? மற்ற எல்லா
வழிகளும் முயற்சி செய்து தோற்றுவிட்டனவா?
2. ஜெ குறிப்பட்டதுபோல் இந்த மாபியா கும்பலுக்கும் அன்னிய நிறுவனங்களுக்கும் ஒரு
“உடன்பாடு” ஏற்படவே சாத்தியங்கள் அதிகம். அப்பொழுது நிலைமை இன்னும்
மோசமாகாதா?
3. இது குறிப்பாக இந்தியா போண்ற பல உள்ளடுக்குகள் நிறைந்த ஒரு நாட்டில் சமூக,
பொருளாதார, கலாச்சார ரீதியில் பாதிப்பு ஏற்படுத்தும். வேலை வாய்ப்பு, கட்டுமான
வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு போன்ற குறுகிய கால லாபங்களை மீறி, அதன் long
term implications என்னவென்று ஆராய வேண்டும்.
4. விவசாயத்தை நம்பியே ஒரு நாட்டின் பாதி மக்கள்தொகை வாழும்போது, முதலில்
விவசாயம் என்ற ஒரு தொழிலை ஒழுங்குபடுத்தவோ, அதன் குறைகளை, தவறுகளை
கண்காணிக்கவும், தண்டிக்கவும், சரியான சட்டமோ அதை நடைமுறைப்படுத்தவோ ஏதாவது
உண்டா? விவசாயத்துறை அமைச்சகம் என்ன செய்கிறது என்று சொல்லவே வேண்டாம்!!!
Agriculture has constituents – irrigation, water resource, soil, climate,
agricultural crop biodiversity,ecological balance, logistics, storage, managements
– ஆங்கிலத்திற்க்கு மன்னிக்கவும்). ஒரு holistic approach இல்லாமல் ஏதோ சில
நிறுவனங்கள் வருவதனால் மட்டும் இந்தியாவும், விவசாயமும், விவசாயியும் வளம்
பெற்றுவிடுவார்களென்பது சினிமாக்களில் ஐந்து நிமிடப் பாடல் காட்சியில் கதாநாயகன்
உழைத்து முன்னேறுவதுபோலத்தான் உள்ளது.
5.மற்ற துறைகளில் (தொலை தொடர்பு) அன்னிய முதலீட்டால் முன்னேற்றம் வந்ததால்
விவசாயத்துறையிலும் ஏற்ப்படுமென்ற வாதம் தவறு. தொலை தொடர்பு ஒரு technology
intensive / dependent. எந்த ஒரு நாடும் தனக்கு வேண்டிய தொழில்நுட்பத்தை
உருவாக்கியோ, மற்றவரிடமிருந்து modify செய்துகொள்ளலாம். ஆனால் விவசாயம் ஒரு
நாட்டின் சரித்திரத்தோடு, தொன்மங்களோடு, வாழ்வியல் நம்பிக்கைகளோடு, பல
நூற்றாண்டு வழி பழக்கங்களோடு சம்பந்தப்பட்டது. இது இந்தியாவிற்கு மிகவும்
பொருந்தும். நம் நாட்டின் பல உணவுமுறைகள், பாரம்பரியப் பயிர் வளர்ப்பு முறைகளை
வைத்துக் கண்டுகொள்ளலாம்.

குளத்தில் எறிந்த கல் பல அதிர்வலைகளை ஏற்படுத்துவதுபோல அன்னிய முதலீடு பல
அதிர்வுகளை ஏற்படுத்தும்.

கேள்வி அன்னிய முதலீடு வேண்டுமா, வேண்டாமா என்றில்லாமல் அதற்கு நாம் தயாராக
உள்ளோமா என்றிருக்கவேண்டும்.

சதீஷ் (மும்பை)

============================================================================================

சதீஷ்,

உங்கள் கேள்விகளுக்கு என்னால் ஆன பதில்களை சொல்ல முயற்சிக்கிறேன்.

//1. FDI வரவுதான் தற்போதைய இந்திய விவசாய நிலைகளுக்கு ஒரே தீர்வா? மற்ற எல்லா
வழிகளும் முயற்சி செய்து தோற்றுவிட்டனவா?//

விவசாயிகளின் முன்னேற்றம் மற்றும் நலனுக்கு அரசு பல உதவிகளை செய்ய முயற்சித்து வருகிறது.இலவச மின்சாரம் , குறைந்த வட்டியில் வங்கிக் கடன் , வேளாண்மைப் பல்கலைகழகங்களின் மூலம் பயிற்சி .. இன்னும் பல .ஆனால் இவை எதுவும் இல்லாமல் கூட விவசாயி தனது அர்ப்பணத்துடன் கூடிய கடும் உழைப்பினால் மட்டுமே கூடப் பொருட்களை விளைவித்து விடுவான்.ஆனால் அதை லாபத்துக்கு விற்க முடியவில்லை என்றால் ,அவன் உழைத்த நேரம்,திறன் ,பணம் எல்லாமே வீண்தான்.அரசு மிகக் குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டுமே, குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கிறது .அதுவும் கூட அரசு கூட்டுறவு ஆலைகள் அல்லது அரசு நிறுவங்களுக்கு அதனால் பயன் ஏற்படும் பட்சத்தில் மட்டுமே.மற்ற அனைத்திற்கும் இந்த சிறுவணிகர்களின் மாபியா மட்டுமே விதி.

2. ஜெ குறிப்பட்டதுபோல் இந்த மாபியா கும்பலுக்கும் அன்னிய நிறுவனங்களுக்கும் ஒரு
“உடன்பாடு” ஏற்படவே சாத்தியங்கள் அதிகம். அப்பொழுது நிலைமை இன்னும்
மோசமாகாதா?

அரங்கர் சொன்ன உதாரணத்திலேயே இதற்கான பதில் உள்ளது.8 ரூபாய்க்கு விற்கும் தக்காளிக்கு விவசாயிக்கு கிடைப்பது 2 ரூபாய்.தரத்தைப் பொறுத்து விற்காமலே கூட போகலாம்.தரத்தை யார் முடிவு செய்வது ? ஏலமுறையில் அதையும் முடிவு செய்வது மாபியா.உழவர் சந்தையில் சென்று நேரடி விற்பனையும் செய்ய முடியாது.பல மாதங்கள் உழைத்து விளைவித்த பொருட்களை சாலையில் கொட்டிச் செல்வதை விடவும் வேறு என்ன மோசமான நிலையை இவர்களின் கூட்டணி செய்து விட முடியும்?

தங்களின் 4 & 5 கேள்விகளுக்கான விடையாக சொல்லிகொள்வது ஒன்றுதான்.தற்போது விவசாயம் செய்து கொண்டு இருப்பவர்களில் மிகக் குறைவான சதவிகிதமே லாபகரமாகவும்,முழு மனதோடும்,சந்தோசத்தோடும் அதை செய்கிறார்கள்.மீதமுள்ள மிகப் பெரும்பாலானோர் பரம்பரையாக அதை செய்து வருவதனாலும்,வேறு தொழில் தெரியாததாலும்,இன்னும் பலர் ” எல்லோரும் இப்படி சென்று விட்டால் மக்களுக்கெல்லாம் எப்படி சாப்பாடு கிடைக்கும்” என்று ஒரு பிடிவாதத்தோடு கூட இதை செய்து வருகிறார்கள்.இவர்களில் பலர் வருடம் தோறும் புது விதைகள்,புது முறைகள்,தொழில்நுட்பம் என ஏதாவது ஒரு முறையில் விவசாயத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல முயன்று வருகிறார்கள்.அதுவும் தங்கள் சொந்தப் பணத்தையும்,நேரத்தையும் செலவிட்டு.நிச்சயமாக பணம் அவர்களுக்கு ஒரு மிக முக்கிய காரணிதான்.நல்ல விளைச்சலுடன் போதுமான லாபம் வந்தாலே திருப்தி அடைபவர்களே , நானறிந்த விவசாயிகளில் அதிகம்.வயல்களில் உழைப்பதை விட கம்மியான உழைப்பு மற்றும் நேரத்தில் விவசாயத்தில் வரும் லாபத்தை விட அதிகம்,நிலையான வருமானத்தை சம்பாதிக்கவும் முடியும்.ஆனாலும் செய்பவர்கள் குறைவு என்பதை யோசியுங்கள்.அவர்களுக்கு 5 நிமிடத்தில் கார்,பங்களா தேவையில்லை. அப்படி வந்தாலும் மீண்டும் விவசாயத்திலேயே போய்த்தான் நிற்க வாய்ப்புக்கள் அதிகம்.

FDI முழுமுற்றான தீர்வா?தெரியாது.விவசாயிகளின் துயரெல்லாம் துடைக்கப்பட்டுப் பொற்காலம் வருமா?நிச்சயம் இல்லை.ஆனால் விவசாயிகளை சுரண்டிக் கொழுத்து வாழும் ஒரு கூட்டம் இதனால் “ஒருவேளை” பாதிக்கப்படலாம். அந்த பெருநிறுவனங்களை ஒழித்துக்கட்ட அல்லது அவர்களுடன் போட்டிபோட இந்த மாபியா கொள்முதல் விலையில் ஒரு மிகக்குறைந்த பட்ச உயர்வைக் கொண்டு வரலாம். இவை எதுவுமே நடக்காமலும் போகலாம்.அது இப்போதுள்ள நிலைமையை விட எந்த விதத்திலும் மோசமில்லை.

சீனிவாசன் போஸ்

===============================================================================================

இங்கிலாந்தில் விவசாயிகளின் நலன் காப்பதற்கும், ஆப்ரிக்க நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் காபி விதைகளுக்கு சரியான விலையைத் தருவதற்கு FairTrade எனும் குழுமம் உள்ளது. இவர்களது பிராண்டு பல விதைப் பொருட்களில், காபி பொடிகளில் இருப்பதால் விற்பனையில் கிடைக்கும் வருமானம் நேரடியாக விவசாயிகளுக்குப் போவதாகச் சொல்கிறார்கள்.

http://www.fairtrade.org.uk/what_is_fairtrade/fairtrade_is_unique.aspx

கிரிதரன் ராஜகோபாலன்

========================================================================================================

இந்த ”அன்னிய முதலீட்டு” விவகாரத்தை இப்படியும் பார்க்கலாம்.

1991இல் ஆரம்பித்து இந்தியா “முன்னேறும் நாடாக” நிரூபித்துக்கொள்ளப் பல விஷயங்களை
செய்தது. தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், போன்ற நடவடிக்கைகள்.
இக்காலகட்டங்களில் உலகளவில் ஏற்பட்ட (ஏற்படுத்தப்பட்ட!!) மாற்றங்கள். ஒரு
cascade effect போல, open market economyயும் அதன் ஒரு பங்கே. ‘எங்கே போனாலும்
முட்டுச்சந்துக்க்கு வந்துதானே ஆகணும்” போலத்தான் அன்னிய முதலீடும்!
அன்னிய முதலீடு தற்போதுள்ள உலகப் பொருளாதார நிலையில் தவிர்க்க முடியாதது.
Retail segment எனப்படும் துறையைத் தவிர்த்துப் பல துறைகளில்
நடந்துகொண்டுதானிருக்கிறது. In terms of intellectual capital. பின் ஏனிந்த கடுப்பு!!!

விடை சுலபம். இந்தியா போன்ற “:வளர்ந்துகொண்டிருக்கிற” நாடுகளில் நுகர்வு கூடுதல்.
(Consumption is an index of any economic prosperity of an society). முன்னேறிய
நாடுகளில் நுகர்வின் வளர்ச்சி விகிதம் (growth rate) குறைவு. ஆனால் அந்த
பொருளாதாரத்தைக் காப்பாற்றியாக வேண்டிய கட்டாயம் பிற இடங்களில் வளர்ச்சியைத் தேட
வைக்கிறது. இந்தியா போன்ற “வளரும்” நாடுகள் இச்சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்திக்கொள்கிறது (its an mutual give and take policy). இச்சூழ்நிலையில்
உருவாகும் ஒரு சந்தைப் பொருளாதாரம் அதற்கு உரமிடுகிறது. பிற வளர்ந்த
நாடுகளுக்கில்லாத ஒரு பிரத்யேக சூழ்நிலை இந்தியாவிற்குள்ளது. அதன் அமைப்பே. The
heterogeneity of india in its culture and history. இதனால் எந்த ஒரு மாற்றத்தையும்
சுலபமாக, குறைந்த சேதாரத்தோடு ஏற்றுக்கொள்ளும் சூழல் இங்கில்லை. மேலும் ஒரு சுய
சார்புடைய சமூகமாகவும் வளரக்கூடிய திறனுமில்லை. இந்நிலையில் எந்த ஒரு மாற்றமும்
சந்தேகக் கண்ணோட்டத்தோடேயே பார்க்கப்படும். அன்னிய முதலீடும் அதற்கு
விதிவிலக்கல்ல.

எந்த ஒரு தெளிவில்லாமலும், தொலைநோக்குப் பார்வையில்லாமலும் செயல்படுத்தப்படும்
திட்டமும், அது எவ்வளவு நன்றாகயிருந்தாலும் தோற்கடிக்கப்படும். அன்னிய முதலீடும்
அப்படிப்பட்ட நிலையிலேயே உள்ளது. தற்பொழுது தேவை – அன்னிய முதலீடு , அதன்
நன்மை, தீமை குறித்த ஒரு சார்பில்லாத கருத்துத் தரப்பே.
அது இவ்வாறு விவாதங்கள் மூலமாகவே உருவாகமுடியும்

சதீஷ் மும்பை

===============================================================================================

அந்நிய முதலீடு பற்றிய எதிர்மறைக் கருத்துக்கள் இந்த சுட்டியில் உள்ளது. நம் எண்ணத்தை இன்னும் தெளிவு படுத்தும் என நினைக்கிறேன்.

http://vickynanjapa.wordpress.com/2012/10/12/benefits-of-fdi-in-retail-busting-the-myths/

ஒரு விரக்தியில் இவ்வுளவு கீழே போனபின் மேலும் எங்கு போவது அதனால் வெளிநாட்டவரும் வந்துதான் பார்க்கட்டுமே என்ற போக்கு சற்று பயமாகத்தான் இருக்கிறது. முக்கியமாகப் பார்க்கவேண்டியது அவர்கள் வியாபாரிகள். அவர்களின் முதல் நோக்கு லாபம். அப்போது அவர்கள் மட்டும் நியாயமாக நடப்பார்கள் என்பதற்கு ஒரு ஆதாரமுமில்லை. உண்மையில் அவர்கள் நம்மை சுரண்டவே முற்படுவார்கள் என்பதற்குப் பல உதாரணங்கள் இருக்கிறது.

நாம் வங்கி மற்றும் முதலீட்டுத் துறையில் தாராளமயமாக்குதல் இன்னும் செய்யவில்லை. அதனால் தான் அண்மையில் நடந்த உலக பணப் பிரச்சனைகளில் நம் நாடு பாதிக்காமல் இருந்தது. இன்னும் நம் நாணயம் பாதி அரசுக் கட்டுப்பாட்டிளேயே உள்ளது. திட்டமிடா வளர்ச்சியின் காரணமாக consumerist சமூகம் வந்தமையால் நம் எண்ணை தேவை அதிகமாக அதற்கு செலவு செய்ய நமக்கு அந்நியப் பணம் தேவைப்படுகிறது. அதனால் நாம் சுலப வரவு வழிகளை முதலில் அந்நிய முதலீட்டிற்குத் திறந்துவிடுகிறோம்.

உண்மையில் விவசாயப்பிரச்சனைகளை ஆராய்ந்து சீர்செய்தாலே இந்த நிலையை சரி செய்யமுடியும்.

ஒரு சந்தை என்பது ஒரு சிலரால் கட்டுப்படுத்தமுடியாத அளவு மிக பெரிதாக இருக்கவேண்டும். அதுவே நல்ல சந்தை. ஆனால் நம் நாட்டிலோ எங்கு பார்த்தாலும் cartels மற்றும் oligarchy நடக்கிறது. அதனால் அந்நிய பெரும் பண முதலைகள் நம்மை ஆக்கிரமிக்கவே அதிக வாய்ப்புள்ளது. அதிலும் நம்மைக் காக்க நம் அரசு மிகக் கடுமையாக பொருளாதார ஒழுக்கத்தை அமல்படுத்தவேண்டும். ஆனால் வேதனை தரும் நிலை என்னவென்றால் நம் அரசுதான் நம்மை பலிகடாவாக செய்ய முற்படும் முதலில்.

விஜயகிருஷ்ணன், திருச்சி

======================================================================================================

சீனிவாசன்,

அக்கட்டுரையில் ஜெமோ சொல்லுவது எதையும் மறுக்கவில்லை. அத்தனையும் உண்மை. விவசாயிகள் அடிமைகளாக உறிஞ்சப்படுவது கண்டு எழும் விரக்தியும் கோபங்களும் புரிந்து கொள்ளக் கூடியதே. ஒரு மிகப் பெரிய வன்முறையின் முன் கையாலகாத்தனத்துடன் நாம் நிற்கும் கொடுமை அது. ஆனால் அது ஒரு தனித்த சமூக அவலம், நமது சமூகத்தில் இருக்கும் பல் வேறு பிரச்சனைகள் போல் இதுவும் ஒரு அவலம். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் FDI யை அதற்கான தீர்வாக முன் மொழிவது ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது. இந்த அவலங்கள் தனியாக எழுதப்பட்டு இருந்தால் அதற்கான விவாதம், அதற்கான தீர்வைப் பற்றிப் பேசப்படுவதாக மட்டுமே அமைந்திருக்கும். ஆனால் மிகப் பரந்து பட்ட பிரச்சனைகள் உள்ள FDI யை இதற்கான தீர்வாகக் கொள்ள முயல்வது அந்தக் கட்டுரையின் ஒற்றைப்படைத் தன்மையாகத் தோன்றுகிறது. இதில் மிகப்பெரிய பாதிப்பு அடையப்போவது இந்தியாவின் மற்ற சிறு தொழில்கள்தான்.

அவதார், the Mission பற்றி எழுதும்போது ஜெமோ சொன்னதுதான் ஞாபகத்திற்கு வருகிறது….

//உலகத்தைக் காலனியாக்கி முடித்த ஐரோப்பா வேறு கிரகங்களைக் காலனியாக்குகிறது.//

துய்ப்புக் கலாசாரத்தை எல்லா நாடுகளிலும் பரப்பி, பொருளாதார முன்னேற்றத்திற்கு அது ஒன்றே காரணி என நம்பவைக்கிற முதலாளித்துவ சிந்தனை, எல்லா நாடுகளிலும் அதை நிறைவேற்றி, அங்கெல்லாம் அது ஒரு saturation point ஐத் தொட்ட பின் இப்போது அதை இந்தியாவில் தொடங்கி வைக்க வருகிறது…..

//அங்குள்ள ‘பண்படாத’ ‘மூர்க்கமான’ ‘மனிதத்தன்மை குறைவான’ மக்களுக்கு அங்குள்ள செல்வங்களால் பயனில்லை. அவர்களை வென்று, கொன்றழித்து, அச்செல்வங்களை எடுத்துக்கொள்வதே ஐரோப்பிய வெள்ளையனின் அறம். அவனுடைய சாகசத்திற்கான பரிசு அது.//

இந்த விவசாய – சிறு முதலாளிகள் பிரச்சனைக்கு நம்மிடம் எந்தத் தீர்வும் இல்லையா? இது நாம் சார்ந்த, நமது பிரச்சனை அல்லவா? இதற்குத் தீர்வு நம்மிடம் இல்லையா? ஒருவேளை இதை எதிர்க்கவும் நம்மைக் காப்பாற்றவும் “ஒரு வெள்ளையனு”க்காகத்தான் காத்திருக்கிறோமா? நாமும் நம்மைக் “காக்க” அந்தப்பழங்குடிகள் போல, நாவிகள் போல்………… இந்த வரலாறு ஏன் மாறாமல் திரும்பித்திரும்பி அப்படியே வருகிறது…..

அவதார், தி மிஷனிலும் பழங்குடிகள் பற்றி ஜெமோ சொன்னதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.

//அந்த நாவிகளில் ஒருவருக்குக் கூட மனிதர்களை எதிர்க்கும் நுண்ணிய அறிவு வாய்க்கவில்லை. தங்கள் அனைத்து சக்திகளுடன் அவர்களும் பழங்குடிகளாகவே இருக்கிறார்கள். ஆப்ரிக்க மனிதர்களைப்பற்றிப் பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பியன் என்ன வகையான மனச்ச்சித்திரத்தை வைத்திருந்தானோ அதுதான் நாவிகளைப்பற்றி இந்தப்படத்திலும் உள்ளது. அவர்களைக் காப்பாற்ற வெள்ளை மனிதன் உருமாறிச் செல்லவேண்டியிருக்கிறது. இன்னொரு டார்ஜான்! ஆனால் இந்த டார்ஜான் தன் வெள்ளைய அடையாளத்தை இழந்து அந்த மனிதர்களில் ஒருவனாக ஆகிறான். அந்தவரைக்கும் ஐரோப்பியன்மைய உலகநோக்கு முன்னகர்ந்திருப்பதே ஆச்சரியமளிப்பதுதான்.//

நன்றி

சரவணன் விவேகானந்தன்
சிங்கப்பூர்

========================================================================================================

சரவணன் சொல்லும் எல்லாமே சரி, உண்மையும் கூட . பிற சிறுதொழிகள் பற்றிய கவலை மிக நியாயமானதே,

ஆனால் 1947லேயே கைவிடப்பட்ட இந்திய விவசாயிக்கு வேறெந்த வழியும் இல்லை , கருணை காட்டிப் போடப்பட்ட ரொட்டித்துண்டுகள் கூடக் கைக்கு வரவேயில்லை , அரசியல் மற்றும் மாபியாவிடம் கொள்ளை போயாயிற்று ,

திறந்த சுதந்திரச்சந்தை மட்டுமே இருக்கும் ஒரே நம்பிக்கை , இந்தியப் பெருமுதலாளிகள் அல்லது இந்திய அரசு கூட கைவைக்க முடியாத இடத்தில் மாபியா இருக்கிறது , அந்நிய நிறுவங்களால் மட்டுமே வீழ்த்த முடியும் (என்ற கனவு)

அரங்கசாமி

[குழும விவாதம்]

முந்தைய கட்டுரைசில படைப்புகள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்