உடையார்-கடிதம்

இனிய ஜே எம் ,

உடையார் பற்றிய உங்கள் அவதானம் ஆச்சர்யம் அளிக்கிறது .உடையார் மூன்றாம் பகுதியில் துவங்கி இறுதி பாகம் வரை பாலகுமாரன் சொல்லி அதைப் பதிவு செய்து ஒலிநாடாவில் உள்ளதை எழுத்தாக மாற்றி உள்ளார்கள் .இதை அவரே ஒரு பதிவில் சொல்லி உள்ளார் .முதல் இரண்டு பாகம் வாரத் தொடராக வந்ததால் அதன் இயல்பில் உருவான சுவாரஸ்யம்,பிந்தைய பாகங்களில் இந்த ஒலிப்பதிவு முறையால் அதன் வடிவ ஒழுங்கினை இழந்து விட்டது .

அன்று நிலவிய சாதி சிக்கல்கள் ,உள் அதிகார முரண்கள் ,அத்தனையும் சமரசம் செய்து எவ்வாறு தஞ்சைப் பெரியகோயில் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது ,என்பதனைக் கருப்பொருளாக நாவல் கொண்டிருந்தாலும் , நாவலின் உள்ளே இடையறாது இயங்கும் ஒரு மோடி மஸ்தான் தன்மையால் [செத்த பின்னும் சோழன் ஆவியாக கோயிலைப் பார்த்துக் கொண்டிருப்பார் ] அதன் குறைந்த பட்ச சலுகையான ”ஆவணப் பதிவு ” என்ற தளத்தைக் கூட நாவல் எட்டவில்லை . ஆனால் வாரத் தொடர்கள் ,மாத நாவல்கள் ,என்ற வழக்கம் காலாவதி ஆகிப்போன சூழலில் ,இத்தனை பெரிய வரலாற்று நாவலை வெகுமக்கள் மத்தியில் புழங்க வைத்தது ,பாலகுமாரன் அவர்களின் சிறந்த முயற்சி என்றே சொல்ல வேண்டும் .

கடலூர் சீனு .

அன்புள்ள ஜெமோ சார்,வணக்கம்!

நான் உங்களின் தொடர் வாசகனாக இருந்த போதிலும் இப்போதுதான் நேரடியாக உங்களுக்கு எழுதுகிறேன். தினசரி முடிந்தவரைஉங்களின் வெப்-சைட்டைப் படித்துவிடுவேன். பல விஷயங்களில் உங்களின் பதிவு எனக்குத் தெளிவை ஏற்படுத்தியிருக்கிறது என்பதால்,நன்றி!

பாலகுமாரனின் “உடையார்” பற்றி எழுதியிருந்தீர்கள் .நான்,5 பாகங்கள் படித்துள்ளேன்.நீங்கள் குறிப்பிட்டதைப்போல் 1,2 பாகங்கள் மையக்கருத்தை நோக்கிப்போவதால்,படிக்க சுவாரசியமாக உள்ளது. அடுத்த பகுதிகளெல்லாம்,மையப்புள்ளியை விட்டு வெகு தூரம் விலகிப்போய் விடுகிறது .எல்லாப் பாத்திரங்களும் நி…..றையப் பேசுகிறார்கள்.அதனால் வாசகனுக்கு அலுப்புத்தட்டிவிடுகிறது.கோயில் கட்டியது எப்படி என்பதுபற்றித்தான் எழுதத் தொடங்கினார்.அதற்கப்புறம் நாவல் பேசிப்பேசியே நீண்டுபோய்,படிப்பதைக்காட்டிலும் பக்கங்ளைப் புரட்டுவதிலேயே போய்விடுகிறது. பாலகுமாரன் ஒரு நல்ல எழுத்தாளர் எனினும் எங்கே தவறவிடுகிறார்?

அன்புடன்,
எம்.எஸ்.ராஜேந்திரன் -திருவண்ணாமலை

முந்தைய கட்டுரைஎஸ்.வி.ராஜதுரை-கடிதங்கள்
அடுத்த கட்டுரைமொழி, 10 இலக்கணம்