சிறுவணிகத்தில் வெளிமுதலீடு

என் வீட்டில் தமிழ்ச்சமையல் . அருண்மொழி கூடுமானவரை தேங்காயே எடுப்பதில்லை. மாதம் பத்து தேங்காய் கூட வேண்டியதில்லை. என் வீட்டைச்சுற்றி மூன்று தென்னைமரங்கள் நிற்கின்றன. அவை மாதம் ஐம்பது காய்களுக்குக் குறையாமல் காய்க்கின்றன. தேங்காய் பறிக்க ஒருவரை அழைத்தோம். வந்தவர் ஒரு மரத்துக்கு முப்பது ரூபாய் சம்பளம் கேட்டார். மொத்தத் தேங்காய் அறுபது. ஒரு தேங்காய் மூன்றுரூபாய் விலைக்கு அவரே எடுத்துக்கொள்வதாகச் சொன்னார். அதன்பின் தேங்காயைப் பறிக்கவேண்டியதில்லை என முடிவுசெய்தோம்.

இப்போது வீட்டைச்சுற்றித் தேங்காய்கள் உதிர்ந்து கிடக்கின்றன. வீட்டுக்கு வரும் யாரிடமும் தேங்காய் எடுத்துச்செல்லுங்கள் என்று கேட்டுக்கொள்வோம். சிலர் எடுப்பார்கள். பிச்சைக்காரர்கள்கூட ‘இத்த எடுத்திட்டு போய் என்னா செய்ய?’ என்று சொல்வதுண்டு. பார்வதிபுரம் கடையில் தேங்காய் வாங்குவதற்குப் பதினெட்டு ரூபாய் விலை. அதேகடையில் விற்பதற்கு மூன்றுரூபாய். சிலசமயம் அதற்கும் கீழே.

அருண்மொழியின் அலுவலக சகா ஒருவரின் இல்லம் சென்றிருந்தேன். அருகே இன்னொருவர் தெரிந்தவர். அவருக்கு இருபத்தைந்து ஏக்கர் தென்னை இருக்கிறது. தோப்புக்குள் மலைபோல தேங்காய் குவித்துப் போட்டிருக்கிறார். அடியிலுள்ள தேங்காய்கள் அழுகி அழிந்துவிட்டன. மேலே உள்ள தேங்காய்களை யார் வேண்டுமானாலும் கொண்டு போகலாம் என்று சொல்லியிருக்கிறார். இருந்தாலும் பெரும்பாலும் மிச்சம். இருபது ஏக்கர் தென்னையில் அவருக்கு வருடத்திற்கு எட்டுலட்சம் ரூபாய் நிகரநஷ்டம்.

சென்ற மாதம் குற்றாலத்திலிருந்து திரும்பும்வழியில் ஒரு கிழவர் பேருந்துக்காகக் காத்து நிற்பதைக் கண்டு ஏறிக்கொள்ளுங்கள் என்றேன். ‘இல்லை, சந்தைக்குப்போக நிற்கிறேன்’ என்று ஒரு பெரிய மூட்டை வெண்டைக்காயைக் காட்டினார். ‘இந்த ஒரு மூட்டை என்ன விலைக்குப் போகும்?’என்றேன். ‘நூறுரூபா குடுங்க குடுத்திடறேன்’ என்றார். நூறா என நான் அதிர ’சரி, எம்பது குடுங்க’ ‘ என்றார். அது இருபதுகிலோ மூட்டை. நாகர்கோயிலில் ஒரு கிலோவெண்டைக்காய் நாற்பது ரூபாய்க்கு விற்கிறது.

‘கஷ்டப்பட்டு அப்டா மார்க்கெட்டுக்குக் கொண்டு போனாலும் அவ்வளவுதான் குடுப்பானுக. அதுக்கே ஆயிரம் நொட்டை நொள்ளை சொல்லுவானுக…சிலசமயம் விக்கவே முடியாம வண்டிக்கூலிக்கான காச மட்டும் வாங்கிட்டும் வரவேண்டியிருக்கும்’ என்றார். நினைக்கவே பீதியாக இருந்தது. அந்த ஒரு மூட்டை வெண்டைக்காயைப் பயிரிட எவ்வளவுதூரம் செடிகளை நட்டு பராமரித்து உழைக்கவேண்டும் என விவசாயம் செய்த எனக்குத்தெரியும்.

முன்பெல்லாம் அம்பாசமுத்திரம் முதல் நாகர்கோயில் வரையிலான சாலையின் இருபக்கமும் காய்கறிகள் விவசாயம்செய்யப்பட்டிருக்கும். இப்போது தொண்ணூறுசதவீத நிலமும் தரிசாகப் போடப்பட்டிருக்கிறது. ஓரளவு நகரை ஒட்டிய நிலங்களில் ‘நகர்’ களுக்கான அறிவிப்புப்பலகைகளும் வெள்ளையடிக்கப்பட்ட கற்களும் நிற்கின்றன. தமிழகத்தில் விவசாயம் முழுமையான அழிவை நோக்கிச் செல்கிறது என்றால் அது மிகையல்ல.

விவசாயக்கூலி இருமூன்றுமடங்காகியுள்ளது. இடுபொருட்கள் விலை மூன்றுமடங்கு. ஆனால் பொருட்களின் விலை குறைந்திருக்கிறது. 1990ல் ஒரு தேங்காய் தோப்புக்கு வந்து வாங்கப்பட்டால் ஐந்து ரூபாய்க்குப்போனது. அன்றெல்லாம் விவசாயம் அவ்வப்போது நஷ்டம்வரும் தொழிலாக இருந்தது, இன்று கண்டிப்பாக நஷ்டம் மட்டுமே வரும் தொழிலாக ஆகிவிட்டது. சிலசமயம் ஒரு பைசாகூட வரவே இல்லாமல் மொத்த விளைச்சலையும் அள்ளிக்கொடுக்கவேண்டியிருக்கிறது. அதில் விவசாயியும் அவரது குடும்பமும் செய்யும் உழைப்புக்கு மதிப்பே இல்லை என்றாகியிருக்கிறது.

இந்த அழிவுக்கான முதன்மைக்காரணம் இங்கே விவசாய உற்பத்திக்கும் விளைபொருள் நுகர்வுக்கும் நடுவே உள்ள வினியோக அமைப்பை ஒட்டுமொத்தமாகக் கைக்குள் வைத்திருக்கும் மாஃபியாக்கள்தான். இவர்கள் கொள்முதலில் ஆரம்பித்து சரக்குப்போக்குவரத்து முதல் கடைசியில் உள்ள சிறுவணிகம் வரை அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள். நுகர்வோர் விளைபொருளை வாங்கும்போது கொடுக்கும் விலையில் 20 சதவீதம் கூட விவசாயிகளுக்குச் சென்று சேர்வதில்லை. மொத்தப்பணமும் இந்த மாஃபியாவால் சுரண்டப்படுகிறது.

இந்த மாஃபியாதான் நம் ஊடகங்களுக்கு விளம்பரங்களை அளிக்கிறது. இதழ்களை மறைமுகமாக நடத்துகிறது. நினைத்த கணம் வாகனங்களை நிறுத்தி தேசத்தை ஸ்தம்பிக்க வைக்க இவர்களால் முடிகிறது. அரசியல்கட்சிகளின் அன்னதாதாக்கள் இவர்களே. இவர்களை எந்தவகையிலும் தட்டிக்கேட்கும் வல்லமை நம் அரசுகளுக்குக் கிடையாது. அரசியல்வாதிகளுக்கோ ஊடகங்களுக்கோ கிடையாது. இவர்களை எதிர்த்து முற்போக்கோ பிற்போக்கோ எவரும் பேசிவிடமுடியாது. அதிதீவிர புரட்சி பேசும் கும்பல்கூட இவர்களிடமிருந்தே நன்கொடை வாங்கமுடியும், இவர்களுக்காக மட்டுமே பேசமுடியும். இதோ இந்தக் கட்டுரையைக்கூட நான் இணையதளத்திலன்றி வேறெங்கும் எழுதிவிடமுடியாது

ஆனால் இவர்களால் குருதி உறிஞ்சப்பட்டு அழியும் விவசாயிகளுக்காகப் பேச எவருமே இல்லை. விவசாயிகளுக்காக ஓலிப்பதெல்லாம் போலிக்குரல்கள். ‘விவசாயிகள் தற்கொலை’ என கணக்குச் சொல்லி கொதிப்பவர்கள் அதன் காரணத்தைப் பார்ப்பதில்லை. திட்டவட்டமாக எதையுமே சொல்வதுமில்லை. விவசாயிகளை அரசாங்கம் மானியம் கொடுத்துக் காப்பாற்றவேண்டும் என்றுதான் பலர் வாதாடுகிறார்கள். அரசும் மானியங்களை அவ்வப்போது அளிக்கிறது. அந்த மானியத்தையும் விவசாயி நிலத்தில்தான் போடுவான். அது விளைச்சலாக மாறிப் புல்விலைக்கு விற்கப்பட்டு இந்த மாஃபியாவின் கைகளுக்குப் போய்ச்சேரும். இதுதான் அப்பட்டமான யதார்த்தம்.

இந்த மாஃபியாவின் பகுதியாக பரம்பரையாக வணிகத்தில் ஈடுபடும் ஒரு நண்பர் எனக்குண்டு. அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது என்ன நடக்கிறது என விரிவாகச் சொன்னார். அவருக்கு அதில் ஆதங்கமிருந்தாலும் அதில்தான் அவரும் இருந்துகொண்டிருக்கிறார். ஒருவேளை அந்தக் குற்றவுணர்ச்சியினால்தான் அவர் என்னிடம் இதை விரிவாகப்பேசியிருக்கக் கூடும்.

முதலில் இந்த மாஃபியா சிறுவணிகம் ஒட்டுமொத்தமாக ஒரே அமைப்பாக நிகழ்வதற்கு கவனம் எடுத்துக்கொள்கிறது. சிறுவணிகர்கள் எவருமே உதிரிகள் அல்ல. அவர்கள் அமைப்பாகத் திரட்டப்பட்டவர்கள். அவர்களுக்கான சரக்குகளை சேகரித்து விற்கும் வினியோகஅமைப்புகளின் தயவில்லாமல் அவர்கள் இயங்கமுடியாதாகையினால் அவர்களுக்கு வேறுவழி இல்லை. வணிகப்போட்டிகள் இருந்தாலும் இந்த ஒட்டுமொத்த அமைப்பின் நலன்களுக்கு எதிராக எதையும் செய்ய அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. போட்டிகள் பேசி சமரசம்செய்யப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக கொள்கைகளும் நிலைப்பாடுகளும் எடுக்கப்பட்டு அனைவரும் ஒரேசமயம் ஏற்கும்படி செய்யப்படுகின்றன.

அத்துடன் இந்தியா முழுக்க இந்த மாஃபியா சில குறிப்பிட்ட சாதிகளின் கைகளில் இருக்கிறது. ஒவ்வொருமாநிலத்திலும் ஓரிரு சாதிகள். அந்தச்சாதிகளின் அமைப்புகள் இந்த மாஃபியாக்களின் வெளிப்படையான முகங்களாக இருக்கின்றன.

ஒரு சுதந்திர வணிகத்தில் போட்டி என்பதுதான் ஆதார விதி. ஆனால் இந்த ஒட்டுமொத்த அமைப்பு விளைபொருட்களை வாங்கும் முனையிலும் விற்கும்முனையிலும் முழுமையாகவே போட்டியை இல்லாமலாக்கி விட்டிருக்கிறது. ஒரு மூடை வெண்டைக்காயுடன் ஒரு விவசாயி செல்கிறார். அவரிடம் ஒருவர் நூறு ரூபாய் கேட்க இன்னொருவர் போட்டியிட்டு நூற்றைம்பது ரூபாய் கேட்டால் அது வணிகம். ஆனால் அத்தனைபேரும் சேர்ந்து இன்றையவிலை நூறுருபாய் மட்டுமே என முடிவுசெய்து அதைத்தவிர சந்தையில் வேறு விலையே இல்லாமல் செய்துவிடுவதன் பெயர் கொள்ளை. அதிலும் அழுகும்பொருளான வேளாண்மையில் இப்படிச் செய்வது கொலையுடன் கூடிய கொள்ளை.

அதேதான் விற்பனைத்தளத்திலும். ஒருவர் ஒரு கிலோ கத்தரிக்காய் ஐம்பது ரூபாய்க்கு விற்கையில் போட்டிக்காக இன்னொருவர் நாற்பத்தைந்துக்குக் கொடுத்தால்தான் அது வணிகம். அத்தனைபேரும் அதை ஒரே விலையில் விற்பார்கள் என்றால் அது அராஜகம், அல்லது திருட்டு. ’சிறுவணிகர்கள் சிறுவணிகர்கள்’ என்று இன்று ஒரே கூச்சலிடுகிறார்கள். சென்னையில் தாம்பரம் முதல் பழவேற்காடுவரை அத்தனை சிறுவணிகர்களும் அத்தனை பொருட்களுக்கும் ஒரேவிலை மட்டுமே சொல்கிறார்கள் என்பதை எவரும் கவனித்திருப்பார்கள். அன்றன்று வரும் காய்கறி பழங்களுக்குக் கூட அப்படித்தான் நிரந்தரவிலை. அப்படியென்றால் இது என்ன சில்லறைவணிக அமைப்பா? இல்லை இதுவும் ஒரு பெரும் வணிக அமைப்புதான். சந்தையை முழுக்க கவ்வி ஆக்ரமித்திருக்கும் முற்றதிகார வணிகக்குழுமம்தான்.

இந்த மாஃபியாவால் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். எந்த ஒட்டுண்ணியையும்போல இது தனக்கு உணவாகும் உயிரையே அழித்துக்கொண்டே இருக்கிறது. அது எப்படி நிகழ்கிறது? பெரிய பொருளியல் ஆய்வெல்லாம் இதற்குத்தேவை இல்லை. செய்தித்தாள் படித்துக் கொள்கை அலசல் செய்யும் நேரத்தில் தெருவில் இறங்கி நான்குபேரிடம் பேசினாலே தெளிவாகக்கூடிய விஷயம்தான் இது. அரசியல்நம்பிக்கைகளுக்கேற்ப நிலைப்பாடு எடுத்துவிட்டுச் சிந்திக்காமல் நேரடியாக கண்முன் உள்ள யதார்த்தத்தை அணுகினால் மட்டுமே போதும்.

என் நண்பர் சொன்னார். இந்த ஒட்டுமொத்த வணிக மாஃபியா சந்தைக்கு வரவேண்டிய விளைபொருட்களின் அளவை அவர்களே தீர்மானித்து அதற்குமேல் வராமல் பார்த்துக்கொள்கிறார்கள் என்று. ஏனென்றால் ஒருபோதும் விளைபொருட்களின் விலை குறையக்கூடாது என்பது அவர்களின் அவசியம். ஏன்? நாகர்கோயிலுக்கு ஒருநாளுக்கு ஆயிரம்கிலோ வெண்டைக்காய் போதுமானது என்று கொள்வோம். ஒருகிலோ வெண்டைக்காய் ஐம்பதுரூபாயானால் ஐம்பதாயிரம் ரூபாய் அதில் இருந்து வருகிறது. எண்பது சதவீதம் லாபம் என்ற கணக்கில் அந்த ஐம்பதாயிரம் ரூபாயில் நாற்பதாயிரம் ரூபாய் ஒட்டுமொத்த வணிகஅமைப்புக்கு லாபம்.

அதேசமயம் இரண்டாயிரம் கிலோ வெண்டைக்காய் சந்தைக்கு விற்பனைக்கு வந்தால் கிலோ இருபத்தைந்து ரூபாய்க்கு விற்கப்படும். அந்த ஆயிரம் கிலோவுக்குமேலே அதிகமாக விற்பனையும் ஆகாது. லாபம் இருபதாயிரம் ரூபாயாகக் குறையும். மட்டுமல்ல போக்குவரத்து , ஏற்றி இறக்குதல், சேமித்தல் செலவுகள் இருமடங்காகும். ஆகவே லாபம் இன்னும்கூட குறையும்! ஆகவே விலையில் அதிகபட்சம் பத்து சதவீதம் ஏற்ற இறக்கத்துக்கு மேல் நிகழ இந்த மாஃபியா அனுமதிப்பதில்லை. அதற்கு அவர்கள் கடைப்பிடிக்கும் வழி தேவையான வெண்டைக்காய்க்கு மேலாகக் கொள்முதல் செய்வதில்லை.

விவசாயி இவர்களிடம் மட்டுமே விற்றாகவேண்டும். வேறு அமைப்பே இல்லை. இவர்களிடம்தான் சரக்குப்போக்குவரத்துமுறை முழுமையாகவே கட்டுப்பட்டிருக்கிறது. சிறுவணிகர்கள் இவர்களுக்குள் அடக்கம். பெரிய அளவில் உற்பத்திசெய்யும் எஸ்டேட் உரிமையாளர்கள் கூட விளைபொருட்களை லாரியில் கொண்டுவந்து சந்தையில் விற்றுவிடமுடியாது.நாகர்கோயில் பாலமோர் எஸ்டேட்காரர்கள் அப்படி ஒரு முயற்சி செய்துபார்த்தார்கள். அவர்களுக்கே லாரிகள் இருந்தன. ஆனால் அந்த முயற்சியை ஒருமாதத்தில் உடைத்து அழிக்க மாஃபியாவால் முடிந்தது.

அதேபோல உழவர் சந்தை என்பது அரசு செய்துபார்த்த ஒரு நல்ல முயற்சி. அது இவர்களால் மிகக் குரூரமாக அழிக்கப்பட்டது. இன்று எந்த உழவர்சந்தைக்குள்ளும் சென்று பாருங்கள். அது ஒப்புக்குத்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கும். உண்மையான விவசாயிகள் அதற்குள் நுழைய முடியாது. அங்கே அவர்கள் விலை நிர்ணயிக்கமுடியாது. இந்த மாஃபியா சொல்லும் விலையே அங்கும் இருக்கும். பெரும்பாலான கடைகள் மாஃபியாவால் உழவர்களின் பெயர்களில் ஆக்ரமிக்கப்பட்டிருக்கும்

நான் நண்பரிடம் கேட்டேன், சரி சந்தைக்கு ஓர் அளவுக்குமேல் சரக்கு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். தொலையட்டும் , ஆனால் தேவைக்குமேல் மிஞ்சக்கூடிய விளைபொருட்களை ஏன் தேவை இருக்குமிடத்துக்கு ஏன் கொண்டுசெல்லக்கூடாது? அதுதானே சுதந்திர வணிகம்? இந்தியாவில் எந்தப் பொருளுக்கும் எங்காவது ஓரிடத்தில் தேவை இருக்குமே?

நண்பர் சொன்னார். இருகாரணங்கள், ஒன்று விளைபொருட்களைப் பாதுகாப்பது,கொண்டுசெல்வது ஆகிய இருதளங்களிலும் ஓர் அளவுக்குமேல் முதலீடு இல்லை. அதற்கான வசதிகள் இல்லை. ஓர் இடத்தில் வழக்கத்துக்கு மாறாகத் தக்காளி அதிகம் விளைந்தால் அந்தத் தக்காளியை வாங்கிக் கொண்டு சென்று விற்க மேலதிக லாரிகள் கிடைக்கவே கிடைக்காது. வழக்கமான லாரிகள் மட்டுமே வரும். அந்த லாரிகள் கொண்டுசெல்லும் தக்காளிக்குமேல் உள்ள தக்காளி அழியவேண்டியதுதான். இதைத் தமிழகம் முழுக்க ஒவ்வொருவருடமும் பார்க்கலாம்.

ஏன் முதலீட்டை அதிகரிக்கக் கூடாது? அப்படி அதிகரிக்க வேண்டாம் என மாஃபியா நினைக்கிறது. அது லாரிப்போக்குவரத்து அவர்களின் கட்டுப்பாட்டில் நிற்காத பெரிய தனியமைப்பாக ஆக வழிவகுக்கும் என சந்தேகப்படுகிறார்கள். மேலும் இந்தத் துறையைக் கையில் வைத்திருப்பவர்களின் தனிப்பட்ட பொருளாதார எல்லைக்குள் நின்றே இது நிகழவேண்டும் என எண்ணுகிறார்கள். இன்றுகூட இத்துறையில் தனியார்முதலாளிகளின் முதலீடு மட்டுமே உள்ளது. கார்ப்பரேட்முதலீடு வந்தால்மட்டுமே தடையற்ற பெரிய நிதியாதாரம் சாத்தியமாகும். அது வர இவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

ஒவ்வொரு தருணத்திலும் ஒருவகை விவசாயம் முழுமையாகவே அழிக்கப்படுகிறது. குற்றுயிரும் குலையுயிருமாக விவசாயி கைவிடப்படுகிறான். உதாரணமாக, ஐந்தாண்டுகளுக்கு முன் நாகர்கோயிலில் நீளப்பயறு [cow pea ]க்கு ஒரு கிராக்கி ஏற்பட்டது. மலையாளிகள் அதைப் பிஞ்சாகத் தோலுடன் நறுக்கித் ‘துவரன்’ செய்து சாப்பிட மிகவிரும்புவார்கள். கேரளத்தைவிட பணகுடி-ராதாபுரம் பகுதிகளில் அது நன்றாக விளையும் என கண்டுபிடித்தார்கள். சரசரவென விவசாயி அதை உற்பத்திசெய்ய ஆரம்பித்தான். பணகுடி பயறு நீளமாக செழுமையாக இருக்கும். இரண்டு வருடங்கள்தான். சட்டென்று கொள்முதலை மாஃபியா கட்டுப்படுத்தியது. இதற்குமேல் வேண்டாம் என முடிவெடுத்தார்கள். பயறுவிவசாயிகள் கட்டுக்கட்டாகப் பயறுடன் சாலைகள் தோறும் நின்று லாரிகளை மறித்து கண்ணீருடன் கெஞ்சினார்கள். பயறுவிவசாயம் ஒட்டுமொத்தமாக அழிந்தது.

ஆனால் விவசாயிக்கு வேறுவழியில்லை. நிலத்தை சும்மாபோட அவனால் முடியாது.இன்னொன்றில் நம்பிக்கையுடன் ஈடுபடுகிறான்.கொஞ்சநாளில் அதுவும் அழிகிறது. இதெல்லாம் ஒரு பதினைந்து வருடம் மட்டுமே. அவனுடைய பிள்ளைகள் ஏதேனும் ஒரு வேலைக்குச் சென்றுவிட்டால் முதலில் அவர்கள் சொல்வது விவசாயத்தை நிறுத்து என்றுதான். அத்துடன் நிலம் தரிசாகக விடப்படுகிறது. தமிழகத்தின் விவசாயக்காட்சி இதுதான்.

சிறுவணிகத்தில் அன்னியமுதலீட்டை நான் இன்றையசூழலில் வரவேற்கத்தக்க ஒன்றாகவே காண்கிறேன். அதற்கான காரணம் இதுதான், இந்த மாபெரும் சிறுவணிக மாஃபியாவை அவர்களால் மட்டுமே சமாளிக்கமுடியும். உண்மையில் அதுகூட முழுமையாகச் சொல்லிவிடமுடியாது. வால்மார்ட்டை விட மிகப்பிரம்மாண்டமான அமைப்பு இந்தியச் சிறுவணிக மாஃபியா. அவர்கள் வால்மார்ட்டை அழிக்கவே வாய்ப்புகள் அதிகம். ரிலையன்ஸ் ஃப்ரெஷ் போன்ற அமைப்புகள் உள்ளே வந்தபோது ஒரு சிறு நம்பிக்கை உருவானது. ஆனால் நம் மாஃபியாவுடன் அவர்களால் போட்டியிடமுடியவில்லை. பல்லாயிரம் கோடி நிதியாதாரம் கொண்ட ரிலையன்ஸையே நம் சிறுவணிக மாஃபியா அழித்தது.

வால்மார்ட்டோ ரிலையன்ஸோ இங்கே வரும்போது நிகழ்வது எளிமையாகச் சொல்லப்போனால் ஒன்றெ ஒன்றுதான், இந்தியவிவசாயி தன் பொருட்களை விற்கும்போது இரண்டு வாங்கும்முனைகளை சந்திக்க முடிகிறது. இன்று சிறுவணிக மாஃபியா அவர்கள் வைத்ததே விலை என்று சொல்லும் சர்வாதிகாரம் தளரும். அவர்கள் நடுவே ஒரு போட்டி இருந்தால் அதன் லாபம் விவசாயிக்குத்தான். இந்திய சிறுவணிக மாஃபியா எந்த அளவுக்கு பலவீனமானாலும் அந்த அளவுக்கு இந்திய விவசாயிக்கு நல்லதே. [ஆனால் நடைமுறையில் வால்மார்ட்டும் மாஃபியாவும் சமாதானம் செய்துகொள்க்கூட வாய்ப்பிருக்கிறது.]

வால்மார்ட் போன்ற அமைப்புகள் உள்ளே வரும்போது இந்திய சிறுவணிக மாஃபியா உறையவைத்திருக்கும் நம்முடைய வினியோகமுறை உயிர்பெற வாய்ப்பிருக்கிறது. புதிய முதலீடு உள்ளே வரக்கூடும். போக்குவரத்து, சேமிப்பு தளங்களில் மேலும் அதிக வசதிகள் வரலாம். விளைபொருட்கள் அர்த்தமில்லாமல அழியவிடப்படுவது தடுக்கப்படலாம். அதன் லாபமும் விவசாயிக்கே.

இன்று இந்தியாவில் எங்காவது விவசாயி கொஞ்சமாவது லாபம் சம்பாதிக்கிறான் என்றால் அது விளைபொருட்களை வாங்க இந்த சிறுவணிக மாஃபியா அன்றி வேறேதாவது கார்ப்பரேட்தொழிலமைப்புகள் தயராக இருக்குமிடங்களில் மட்டுமே. இரு உதாரணங்கள். தருமபுரி மாவட்டத்தில் நான் தொண்ணூறுகளில் வாழ்ந்தபோது அங்கே மாம்பழ விவசாயிகள் ஈவிரக்கமில்லாமல் சுரண்டப்பட்டுக்கொண்டிருந்தார்கள். பெங்களூரில் ஒரு மாம்பழம் ஐம்பது ரூபாய் விலை இருக்கும்போது மாரண்டஹள்ளியில் ஒருகூடை மாம்பழம் ஐம்பதுரூபாய்க்குக்கூட வாங்கப்படாது. சந்தைகளில் விற்பனையாகாது அழுகிய மாம்பழங்கள் மலைபோலக் குவிந்துகிடக்கும். நான் கூடைகூடையாக வாங்கிக்கொண்டு சென்று நண்பர்களுக்குக் கொடுத்ததுண்டு.

அன்றெல்லாம் வண்டிகட்டி மாங்காய்களைக் கொண்டுவந்து விற்கமுடியாமல் அப்படியே கொட்டிவிட்டுச் செல்லும் விவசாயிகளைக் கண்டிருக்கிறேன். அதைப்பற்றி விரிவாக அன்று மலையாளமனோரமா முதலிய இதழ்களில் எழுதியிருக்கிறேன் – எந்தத் தமிழ் நாளிதழும் அக்கட்டுரையை வெளியிட சம்மதிக்காத காரணத்தால். வருடம்தோறும் தக்காளியையும் மாம்பழத்தையும் உற்பத்திசெய்து குவிக்கும் தர்மபுரி விவசாயி அரைப்பட்டினியைத் தாண்டவே முடியாமலிருப்பான். அங்கே வியாபாரிகளும் லாரி உரிமையாளர்களும் எல்லாம் ஒருசாரார்தான். அவர்கள் ஒட்டுமொத்த தர்மபுரியையும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.

அந்நிலையில்தான் மாம்பழக்கூழ் விற்கும் நிறுவனங்கள் மாம்பழம் கொள்முதல்செய்ய வந்தன. அவர்களை தர்மபுரியை அழிக்கவந்த ‘கம்பெனிப்பேய்கள்’ என்று சொல்லி இடதுசாரிகளும் பாட்டாளிமக்கள்கட்சியும் தெருவில் இறங்கி போராடினார்கள். காரணம் மாஃபியா நிதிதான். ‘இப்போது விலையை உயர்த்துவார்கள். நாங்களெல்லாம் அழிந்தபின் விலையை தாழ்த்தி உங்களை அழிப்பார்கள்’ என்று வியாபாரிகளும் அவர்கள் குரலான அரசியல்வாதிகளும் பேசினார்கள். அதாவது கிட்டத்தட்ட இலவசமாகக் கொடுக்கப்பட்டதை விட மேலும் விலையைக் குறைப்பார்களாம்!

பத்துவருடம் கழித்து தர்மபுரிக்குச் சென்றபோது கிராமங்கள் எல்லாம் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்திருப்பதைக் கண்டேன். தமிழகத்தில் இன்று எந்தவிவசாயியாவது அடிப்படை வருமானத்துக்கான உறுதிப்பாட்டுடன் இருக்கிறான் என்றால் மாம்பழ உற்பத்தியாளர்கள் மட்டும்தான். தர்மபுரியிலேயே பதப்படுத்தும் ஆலைகள் சேமிப்புக் கிட்டங்கிகள் வந்துவிட்டன. மாம்பழம் கனிவதற்குள் உத்தரவாதமாக வாங்கப்படுகிறது. விலை உடனடியாக அளிக்கப்படுகிறது. பாலக்கோடு சந்தையில் எப்படி மாம்பழம் வீணாகி மலைகளாகக் குவிந்திருக்கும் என்று நான் சொன்னபோது புதியதலைமுறை விவசாய இளைஞர்களுக்கு அது ஆச்சரியமான செய்தியாக இருந்தது.

தென்தமிழகத்தில் இன்று விவசாயத்தில் லாபம் இருப்பது ஒருவகை சிவப்பு மக்காச்சோளத்தில் மட்டுமே. அந்த சோளத்தை தீவனநிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. இந்த சிறுவணிக மாஃபியாவிடம் சென்று விவசாயி நிற்க வேண்டியதில்லை.

ஆக, திட்டவட்டமாக கண்முன் தெரியும் உண்மை இதுதான். விளைபொருட்களை வாங்கும் முனையில் எங்கே கார்ப்பரேட் நிறுவனங்கள் வருகின்றனவோ, எங்கே பெருமுதலீடு சாத்தியமாகிறதோ, எங்கே இந்த மாஃபியா தடுக்கப்படுகிறதோ அங்கே மட்டுமே விவசாயி வாழமுடிகிறது. ஆனால் அங்கும்கூட இந்த சிறுவணிகர்கள் அழிந்துவிடவில்லை. அவர்கள் கொள்ளையடிக்க முடியவில்லையே ஒழிய அவர்களின் வணிகம் லாபகரமாக நடக்கத்தான் செய்கிறது.

இன்று அன்னியநேரடிமுதலீட்டுக்கு எதிராகத் தெருவுக்கு வந்து போராடும் சிறுவணிகர்களும் அவர்களின் ஆதரவு அரசியல்வாதிகளும் ஒன்றும் அவர்களுக்காகப் போராடவில்லையாம். விவசாயிகளின் எதிர்காலத்துக்காகப் போராடுகிறார்களாம்! விவசாயிகளின் கொள்முதல் விலையை வால்மார்ட் குறைத்துவிடும் என்பதற்காகக் கொடிபிடிக்கிறார்களாம். சந்தையில் அள்ளிக்கொட்டிவிட்டுப் போவதையும் சும்மா கொடுப்பதையும் கண்டுகொண்டிருக்கிற விவசாயிகளிடம் இதைச் சொல்கிறார்கள். இன்றிருப்பதை விட விளைபொருள் விலையைக் குறைக்க எப்படி முடியும்? பூஜ்யத்தைவிட மதிப்புக்குறைவான எண் உண்டா என்ன?

சந்தைப்பொருளியல் தேவையா என்று கேட்டால் என்னுடைய பதில் வேறு. தேவையில்லை. இந்தியக் கிராமங்களை ஒருங்கிணைக்கும் ஒரு கூட்டுவினியோக அமைப்பு உருவாக முடிந்தால் இந்தப் பிரச்சினையைத் தாண்டமுடியும். அதற்கான காந்தியப்பொருளியல் சார்ந்த வழிகாட்டல்கள் ஐம்பதாண்டுகளுக்கு முன்னதாகவே ஜெ.சி.குமரப்பா போன்றவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. சந்தைப்பொருளியலுக்குள்கூட அமுல் போன்ற காந்திய அடிப்படைகொண்ட மக்கள்கூட்டமைப்புகள் இந்தப் பிரச்சினையை வெற்றிகரமாக சமாளிக்கமுடியும்.

ஆனால் இன்றைய உடனடி யதார்த்ததில் இந்தியாவின் பெருந்தொழில்நிறுவனங்களை இத்தளத்தில் முதலீடுசெய்யவைப்பதுதான் சரியான வழியாக இருக்கமுடியும். நாம் இன்றுவாழும் உலகமயமாக்கப்பட்ட சந்தைப்பொருளியல் சூழலில் விவசாயிக்குச் சாதகமான போட்டியை அனுமதிப்பதே முறை. ஆனால் அதற்கான நிதியை உருவாக்க இந்தியப் பெருந்தொழில்நிறுவனங்களால் முடியவில்லை என்கிறார்கள்.

வால்மார்ட் இந்தியாவை அழிக்கும் என்றவர்கள் நேற்று தொலைதொடர்பில் தனியார்முதலீடு இந்தியாவை அழிக்கும் என்றார்கள். அதற்கு முன் தொழில்துறையில் அன்னியமுதலீடு இந்தியாவை அழிக்கும் என்றார்கள். அதற்கு முன் கொக்கோகோலா இன்னொரு ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி என்றார்கள். முன்பு இவர்கள் சொன்னவற்றை நானும் நம்பியிருக்கிறேன். ஆனால் இன்று இவை யாருடைய நலனுக்காகச் சொல்லப்படுகின்றன என்றே யோசிக்கிறேன்

இன்று சிறுவணிகர்களை இந்தியாவின் அருந்தவப்புதல்வர்களாகக் காட்டி இடதுசாரிகள் கண்ணீர் சொட்டுகிறார்கள். வலதுசாரிகள் நரம்பு புடைக்க கத்துகிறார்கள். ஆனால் அப்பட்டமான உண்மை, ஒவ்வொரு விவசாயிக்கும் தெரியும் உண்மை அந்த மாஃபியா உடனடியாகக் கட்டுப்படுத்தப்படவேண்டும், இல்லையேல் இந்திய வேளாண்மை முழுமையாக அழியும் என்பதுதான்

இந்த அப்பட்டமான உண்மையை மறைக்கவே போலித்தேசபக்தி, போலி இடதுசாரித்தனம் போன்றவை இங்கே அரசியல்வாதிகளால் ஆயுதமாக்கப்படுகிறது என நான் நினைக்கிறேன்.

பழையகட்டுரை

காய்கறியும் அரசியலும்” href=”http://www.jeyamohan.in/?p=508″ target=”_blank”>காய்கறியும் அரசியலும்

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைடாக்டர் பத்மா சுப்ரமணியத்தின் கலைப்பணி