கேள்வி பதில் – 02

சமீபத்தில் விஷ்ணுபுரம் படித்தேன். என் மனதில் தோன்றிய எண்ணம்: படிப்பதற்கு நேரம் அரிதாய்க் கிடைக்கும் இந்தக் காலகட்டத்தில் இத்தனைச் சிக்கலான மொழிநடையில் நீங்கள் எழுதுவது ஏன்? படிப்பது என்பது பொழுதுபோக்கு, இதில் எழுத்துக்கும் வாசகனுக்கும் சுமுகம் இல்லாவிட்டால் படிப்பு சோர்வைத் தராதா? அல்லது இந்தச் சிக்கலான மொழி நடைதான் இலக்கியம் என்று சொல்லுகிறீர்களா? (திருக்குறள் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அதன் எளிமைதானே!)

— ராமசந்திரன் உஷா.

உங்கள் கேள்வியில் உள்ள முக்கியமான வரியை நான் ஏற்கவில்லை. ‘படிப்பது என்பது பொழுதுபோக்கு’ என்பது உண்மையல்ல. படிப்பதைப் பொழுதுபோக்காகவும் கொள்ளலாம். நான் எழுதுவது பிறரது பொழுதைப் போக்குவதற்காக அல்ல. அதற்கு இத்தனை உழைப்பும் கவனமும் தேவையில்லை. வியாசனும் கம்பனும் ஷேக்ஸ்பியரும் தல்ஸ்தோயும் எந்த நோக்கத்துக்காக எழுதினார்களோ அதற்குத்தான். அவர்கள் பொழுதுபோக்குக்காகப் படிக்கப்படும் எழுத்தாளர்களல்ல.

இலக்கியத்தின் நோக்கம் வாழ்க்கையை அறிதலே. வரலாறாக, ஆழ்மனமாக, இச்சைகளாக, உணர்ச்சிகளாக, தத்துவமாக, மதமாக விரிந்துகிடக்கும் வாழ்க்கையை அறிதல். தத்துவம் அனைத்தையும் தர்க்கப்படுத்தி அறிய முயல்கிறது. இலக்கியம் சித்தரித்துப்பார்த்து அறிய முயல்கிறது. அறிய விழைபவர்களே என் வாசகர்கள்.

விஷ்ணுபுரம் எதைச் சித்தரித்து அறியமுயல்கிறதோ அதற்கேற்ப அதன் அமைப்பும் மொழிநடையும் அமைந்துள்ளது. நாம் வரலாறு என்று அறிந்துள்ளதெல்லாமே புராணங்கள், ஐதீகங்கள் அவற்றின் அடிப்படையிலான காவியங்கள் ஆகியவைதான். இவை உருவாக்கபடும் விதம், அதில் செயல்படும் அதிகாரம், அதன் ஊடாட்டம் ஆகியவை அந்நாவலில் பேசப்படுகின்றன. அவற்றின் மூலம் தெரியவரும் மனிதனின் முடிவற்ற ஆன்மீகமான தேடல் பேசப்படுகிறது. ஆகவே அது தன்னையும் ஒரு காவியமாக உருவகித்துள்ளது. அக்காவியத்துக்குள் யதார்த்தம் ஊடுருவிச் செல்கிறது. காவியங்களுக்கு உரிய படிம மொழியும் வர்ணனைகளும் உள்ளன. நேரடியான எளிய மொழியில் யதார்த்த விவரணைகள் உள்ளன. மன ஓட்டங்கள் மனம் இயங்குவது போல தாவிச்செல்லும் மொழியில் உள்ளன. இம்மூன்று மொழிகளும் கலந்த மொழியமைப்பு கொண்டது ‘விஷ்ணுபுரம்’ .

விஷ்ணுபுரத்தின் மொழியமைப்பு சிக்கலானதோ சிடுக்கானதோ அல்ல. பழகிப்போன பத்திரிகைக் கதை நடையை எதிர்பார்த்துப் படிக்க ஆரம்பித்தால் ஒருவித அதிர்ச்சி ஏற்படும். அதை வைத்து நடை சிக்கலானது என்று சொல்லிவிடமுடியாது. ஒரு பெரிய நாவல் ஒரு தனி உலகை மெல்ல மெல்ல உருவாக்குகிறது. ஆதலால் முதல் ஐம்பது பக்கம் [நூறுபக்கம் வரைகூட] அதன் களமும் மொழியும் புலப்படாமல் ஒரு தத்தளிப்பை அளிக்கக் கூடும். அதைத்தாண்டி வாசிக்காவிட்டால் நம்மால் உலக இலக்கியத்தின் பெரிய நாவல்கள் பெரும்பாலானவற்றைப் படிக்கமுடியாது போய்விடலாம்.

‘பின் தொடரும் நிழலின் குரல்’ முற்றிலும் மாறுபட்ட நடை கொண்டது. அரசியல் கட்டுரைகள், துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றின் நடை, சோவியத் கதைகளின் மொழிபெயர்ப்பு நடை, நேரடியான யதார்த்த நடை எல்லாம் கலந்தது. அது ஓர் அரசியல் நாவல். ‘காடு’ காதல் கதை. அதன் நடை கற்பனை மிக்க உணர்ச்சிகரமான நடை. ‘ஏழாம் உலகம்’ யதார்த்த நாவல். அதன் நடை யதார்த்தச் சித்திரங்களை அளிக்கும் மிகமிக நேரடியான எளிய நடை. ஆகவே எளிய நடை, சிக்கலான நடை என்பதெல்லாமே படைப்பின் தேவை சார்ந்ததேயாகும் .

உலக இலக்கியத்தின் பல பேரிலக்கிய நாவல்கள் வாசகன் கடுமையாக உழைத்துப் படிக்க வேண்டியவையாகவே உள்ளன. பின்னும் அவை வந்தபடியே உள்ளன. அவற்றை உழைத்துப் படிக்கவும் செய்கிறார்கள். கம்பராமாயணத்தைச் சாதாரணமாகப் படித்துவிட முடியுமா என்ன? அது நிலைத்து நிற்காத நூலா?

திருக்குறள் எளிய நூலா? தமிழில் மிக அதிகமாக உரை எழுதப்பட்ட நூல் அது. உரை இல்லாமல் எத்தனைப்பேர் அதைப் புரிந்துகொள்ளமுடியும்? இருபதுவருடமாக தமிழ் மரபிலக்கியம் பயிலும் எனக்கு அது எளிய நூலாகப் படவில்லை. ‘அறத்தாறிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தானிடை’ என்ற கவிதையை பொருள்கொள்ள விரிவான கற்பனை தேவை. ‘ஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான் இந்திரனே சாலும் கரி’ என்ற குறளைப் புரிந்துகொள்ள நம் புராண மரபின் அறிமுகம் தேவை. ஐந்து என்ன? புலன்களா? அல்ல. சமண மதத்தின் பஞ்ச மகா விரதம்.

சங்கப் பாடல்கள் அளவுக்கு சிக்கலும் உள்விரிவும் கொண்ட, உழைப்பும் கவனமும் கோரி நிற்கக் கூடிய படைப்புகள் தமிழில் இன்னும் ஆக்கப்படவில்லை. கம்பராமாயணம் போல விரிவு கொண்ட ஒரு நாவல் எழுதப்படவுமில்லை. அவையே பண்பாட்டின் செல்வங்கள். அவற்றைப் போல ஒரு படைப்பை உருவாக்குவதே பண்பாட்டில் ஈடுபடும் அவனின் இலக்காக இருக்கமுடியும்.

படிப்பதற்கான நேரம் என்பதை நான் ஏற்கவில்லை. தமிழர்களில் பெரும்பாலானவர்கள் எல்லா திரைப்படங்களையும் பார்த்துவிடுகிறார்கள். தினம் 3 மணிநேரம் தொலைக்காட்சி பார்க்காதவர்கள் மிக மிகக் குறைவு. தினம் அரை மணிநேரம் செலவிட்டால் தமிழில் உள்ள எல்லா நல்ல நூல்களையும் படித்துவிடலாம். இருபது நிறுவனங்களின் அதிபரான, எண்பது வயதான பொள்ளாச்சி மகாலிங்கம் விஷ்ணுபுரம் இருமுறை படித்திருக்கிறார். அவரை விட நேரமேயற்றவர்கள் எத்தனைப் பேர் இருக்கிறார்கள்?

விஷ்ணுபுரம் படித்துவிட்டு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள், குடும்பத்தலைவிகள், தையல்காரர், மாணவிகள் கடிதம் எழுதியுள்ளார்கள். ஒரு நகைக்கடைக் காவலர் எழுதியுள்ளார். தமிழ் முறைப்படிப் படிக்காதவர்கள் எழுதியுள்ளார்கள். நுட்பமான சிறந்த கடிதங்கள். இந்த ‘கஷ்டமான, விலை உயர்ந்த’ நாவல் இன்னும் தமிழில் மிக அதிகமாக வாங்கப்படும், நூலகங்களில் முன்பதிவு செய்து வாசிக்கப்படும் நூல் என்பது ஏன் என்பதை யோசிக்கவேண்டும் நாம்.

இலக்கியம் மூலம் வாழ்க்கையை அறிய ஆவல், அதற்கான உழைப்பு ஓரளவு இருந்தாலே போதும் விஷ்ணுபுரம் எளிதாகிவிடும் .

முந்தைய கட்டுரைகேள்வி பதில் – 01
அடுத்த கட்டுரைகேள்வி பதில் – 03