அன்புள்ள ஜெ,
தங்களுடைய விரிவான பதிலுக்கு நன்றி, அதன் ஆரம்பத்தில் நீங்க சொன்ன ” இன்னும்கூட நீங்கள் பாமினியில் எழுதுவது ஆச்சரியம். அதுவும் பிரம்மசூத்திரமும் கிட்டத்தட்ட சமகாலத்தைச் சேர்ந்தவை என்ற மனப்பிரமை எழுகிறது.” என்ற வாக்கியத்தில் உள்ள அங்கதச் சுவை உடனடியாப் புரியல. ஆனா, புரிந்த உடனே எழுந்த சிரிப்ப அடக்க முடியல. மேலும், அதன் அர்த்தம் என்னைக் காலத்தின் பின்னோக்கிய பயணத்தில் கொண்டு சேர்த்தது மாதிரியும், பிரம்ம சூத்திரம் இப்பதான் இயற்றப்பட்டது மாதிரியும் இரு வேறு பிம்பங்களை உருவாக்கி இரசிக்க வைத்தது. நன்றி,.
நேற்று தங்களின் “உள்ளே இருப்பவர்கள்” கட்டுரையில் தங்களுக்கும் எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கும் இடையில் இருந்த நட்பையும் புரிதல்களையும் பற்றி எழுதி இருந்தீங்க, அதுல தங்களுடைய “விஷ்ணுபுரம்” நாவல் பற்றிய அவருடைய பார்வைய மேலோட்டமா சொல்லி இருக்கீங்க. அந்தசமயம் நான் முதல் முதல்ல “விஷ்ணுபுரம்” நாவலப் படிக்கும் போது எனக்குள் எழுந்த எண்ண ஓட்டத்த உங்ககிட்ட பகிர விரும்பினேன்.
முதல்ல அந்த நாவல் படிக்கும் போது அதன் சொல்லமைப்பு மிகவும் விருப்பமானதாக இருந்தது. எதையும் விரிவா தெளிவாப் பேசறது எனக்கு விருப்பமான ஒன்னு. அப்படிதான் இந்த விஷ்ணுபுரத்தப் படிக்கப் படிக்க ஆர்வம் அதிகமானது. மேலும், இந்த நாவல்ல ஒரு கட்டத்துக்கு மேல நான் படிக்கிற மாதிரியே தெரியல. யாரோ பக்கத்துல அமர்ந்து கதை சொல்றதுமாதிரியும், நானே அந்த கூட்டத்துல ஒருத்தன் மாதிரியும்,
எல்லாத்தையும் பார்ப்பதாகவும், பசியோடும், ஆர்வத்தோடும், முகம் சுழித்தும், இரசித்தும், காமத்தோடும், கோவத்தோடும் அலைந்த மாதிரி உணர்வும், அந்த விவாத சபையில் என்னையும் கலந்துக்க அனுதிப்பாங்களா அப்படீங்கற ஏக்கத்தோடு விஷ்ணுபுரத்துக்குள்ளேயே அலைந்து திரிந்த உணர்வும் தான் இருந்தது. அது ஒரு புது அனுபவமா இருந்தது.
அந்தக் கதைல வருகிற எல்லா மனிதர்களையும் வேறு வேறு அடையாளங்களோட இப்பவும் நம் நிகழ் வாழ்க்கையில் பார்த்து கொண்டேயிருக்கிறேன். அதுல சொல்லப்படுகிற உணர்வுகள்ல சிலவற்றை எனக்குள்ளேயும் அனுபவிக்கிறேன். விஷ்ணுபுரத்தில நடக்கிற திருவிழாவையும், நம்ம பகுதிகளில் நடக்கிற திருவிழாக்களையும் பெரிதாகப் பிரிச்சுப் பார்க்க முடியல. சில சம்பவங்களும், மனிதர்களும் இரண்டிலும் ஒன்றுதான் காலம் மட்டும் தான் மாறியிருக்கு, நாம நாகரீகத்தோட நகர்வுல இயங்கிட்டே இருக்கறதுனால உணவும், உடையும், பழக்க வழக்கங்களும் தான் சிறிய அளவுல மாறிக்கிட்டே இருக்கு, மனிதர்களோட குணங்களோ, உணர்வுகளோ அல்ல.
அந்த நாவல்ல வருகிற விவாத சபை, அதற்கான முன்னேற்பாடுகள், அந்த சூழல், அங்கிருந்த மனிதர்களோட எண்ண ஓட்டங்கள், விவாதம் நடந்த விதம், அந்த விவாதத்துல பேசப்படுகிற சிறந்த வாக்கியங்கள் போன்றவை அந்தப் பக்கங்களை அடிக்கடி படிக்கச் சொல்லும். படிக்கிற ஒவ்வொரு முறையும் நானும் விவாதத்துல கலந்துகிட்டே இருக்கேன். என்றாவது ஒருநாள் நானும் வாதத்தில் முன்வைக்கப்படும் வாக்கியங்களின் சொற்களுக்குள் கரையுணும் அப்படீன்னு ஆசைப்படறதுண்டு. இந்து ஞான மரபின் தரிசனங்களை மேலும் கற்கத் தூண்டிய படைப்பு இது.
மிகச் சிறந்த படைப்பு, வாழ்த்துக்கள்.
நன்றி,
அன்புடன்,
துவாரகநாத்
அன்புள்ள துவாரகநாத்,
யூனிகோடுக்கு வந்தமைக்கு நன்றி. இல்லாவிட்டால் விஷ்ணுபுர ஞானசபை விவாதத்தின் மொழியில் இருக்கிறதே என்று நான் சொல்ல நேர்ந்திருக்கும்.நேரடியான வரலாறு அல்ல. வரலாற்றின் சாத்தியக்கூறுகளைக் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது அது. இத்தகைய நாவல்களின் இயல்பு அதுதான். அதேபோல தத்துவம் உள்ளது, நேரடியான தத்துவம் அல்ல, தத்துவத்தின் கவித்துவ விளக்கம் மட்டும்தான். அன்றாட வாழ்க்கை உள்ளது, ஆனால் வாழ்க்கையின் உச்சகட்ட தருணங்கள் மட்டுமே. மனிதர்கள் உள்ளார்கள், ஆனால் அவர்கள் சமகாலத்தன்மை அற்ற குணச்சித்திரங்கள் மட்டுமே.
அது ஓர் எழுத்துவகை. அது ஒரு காலமில்லா வாசிப்பனுபவத்தை அளிக்கிறது
ஜெ