கடன்

நகைச்சுவை

ஒரு வீடு கட்டுவதற்கான காரணங்கள் பல இருக்கலாம். தங்குவதற்கு இடம் தேவைப்படுவது. நாலுபேரால் மதிக்கப்படுவது, நல்ல முதலீடு, கடன் கிடைப்பது. நடைமுறையில் கடைசிக்காரணத்தால்தான் வீடுகள் கட்டப்படுகின்றன. சாலையோரங்களில் பெரிய விளம்பரங்களில் மக்கான  சாதுக்கணவன் தன்னுடைய துடிப்பான அழகிய மனைவி மற்றும் சூட்டிகையான இரு குழதைகளுடன் ஒரு வீட்டின் முன்நின்று திருப்பதி உண்டியல் போல மீசையில்லா வாயைத்திறந்து சிரித்துக்கொண்டிருக்கும் காட்சியைப் போகும்போதும் வரும்போதும் காணநேர்கிறது. அதையே தொலைக்காட்சி விளம்பரங்களிலும் காண்கிறோம். வீடுகட்டியதுமே கணவன் மனைவிக்கு இடையே காதல்வந்து அவன் அவள் இடுப்பைத் தொட்டதுமே அவளுக்கு ஆர்கஸம் வரும் என்பதையும் பிள்ளைகள் உற்சாகமாகப் படிக்கும் என்பதையும் தெரிந்துகொள்ள நேர்கிறது.

அதைவிட, வங்கிகளில் இருந்து இளம்பெண்கள் தொலைபேசியில் அழைத்து ”சார் நீங்க மிஸ்டர் குணசேகரன்தானே?” என்று தேன் சொட்டுகிறார்கள். ”ஆமா…நீங்க?” ”நாங்க . எம் ஓ பி பேங்கிலேருந்து கூப்பிடறோம். உங்களுக்கு ஹவுஸிங் லோன்  அஞ்சு லட்சம் சாங்ஷன் ஆகியிருக்கு சார்” ”அய்யோ!” ” ஆமா சார்… ‘நோ இன்டிரெஸ்ட்’ ஸ்கீமிலே போட்டிருக்கோம்… டைம் கிடைக்கிறப்ப நீங்க உங்க ரேஷன் கார்டு ,நாலு ஃபோட்டோ ,ஆபீஸ்லே வேலைபாக்கிறதுக்குண்டான ஒரு லெட்டர் எல்லாத்தையும் எடுத்திட்டு நேரா எங்க வடசேரி ஹெட்டாபீஸ்லே போயி செக் வாங்கிக்குங்க”

மூச்சைத் திரும்ப சேகரித்தபின், ”இல்ல, ஒண்ணுமில்லை…தப்பா நெனைக்கப்பிடாது. நான் அப்ளை பண்னவே இல்லியே” என்றால் ”என்னசார், நீங்க அப்ளை பண்ணினாத்தானா நாங்க குடுக்கணும்? எங்களுக்குன்னு ஒரு பிரின்ஸிப்பிள் இருக்குல்ல…” ”அப்றம் எங்கிட்ட ரேஷன் கார்டு இல்லியே” ”சரிதான் சார்..வோட்டர் கார்டு போரும்” ”அதுவும் இல்லியே” ”டிரைவிங் லைசென்ஸ் இருந்தாலே போரும் சார்” ”அதுவும் இல்லியே” ”அப்ப கேஸ் வச்சிருக்கிற கார்டு..” ”ஆக்சுவலாஎங்கிட்ட கேஸ் கனெக்ஷனே கெடையாது. நாங்க வச்சிருக்கிற அடுப்பு இருக்கே அது…” ”சரி, பேங்க் கணக்கு இருக்குமே” ”நாங்க போஸ்டாபீஸ்லே தான் கணக்கு…” ”அப்டியா?” ”அப்றம் நான் வேலைபாக்குறது ஃபர்னிச்சர் கடையிலே. எங்க மொதலாளி வேலை பாக்குற சர்டி·பிகெட்டெல்லாம் குடுக்க மாட்டார்…”

”அப்டியா? நீங்க எங்க குடியிருக்கீங்க?” ”நானா? நாங்க மரியாள்நகரிலே….வாட்டர் டாங்க் இருக்கில்ல அதுக்கு பக்கமாட்டு ஒரு சந்து இருக்கு பாருங்க. ஞானையா லேன்னுட்டு அதிலே லெஃப்டுல பாத்தீங்கன்னாக்க…” ”சரி , அங்க பக்கத்தில இருக்கிறவங்களுக்கெல்லாம் ரேசன் கார்டு இருக்கா?” ”இருக்குன்னு நெனைக்கேன்…எங்க பக்கத்துவீட்டுக்காரரு சம்முகம். ஆஸ்பத்திரியிலே வேலை பாக்கார்…” ”அவரோட ரேசன் கார்டை வாங்கி ஒரு ஜெராக்ஸ் எடுத்துட்டு வாங்க…வேலை பாக்கிறதுக்கு…” ”முதலாளி பர்த்டேயிலே நான் கடையில நிக்கிற மாதிரி ஒரு போட்டோ எடுத்தாங்க…அது போருமா?” ”அய்யோ அது தாராளமாப் போரும் சார்…கொண்டுட்டு வாங்க” ”அதிலே எனக்க பக்கத்துல ஒரு நாயி நிக்கும் பாத்துக்கிடுங்க. பரவால்லியா? ” ”என்ன நாயி?” ”டாபர்மான்..எங்க மொதலாளிக்க நாயி” ”டாபர்மான் தானே? அப்ப பிரச்சினையே கெடையாது…பேசாம வாங்க”

இவை அனைத்துமாக தலைமை அலுவலகம் போனால்  அங்கே குளிர்சாதனம் செய்யப்பட்ட பெரிய ஆபீஸ். உள்ளே அமர்வதற்கு சோபா. மேலே சுவரில் நாய் பிராண்டியது போன்ற ஓவியம். சுடிதாரில் முலைப்பிளவு பிதுங்கும் பெண்கள் கம்ப்யூட்டர் திரைகளில் பார்த்துக்கொண்டு அழகாக இருக்கிறார்கள். ”வணக்கம்மா” ”’வாங்க உக்காருங்க…டீ சாப்பிடறீங்களா?” ”இப்பதான் சாப்பிட்டேன்.டீ  புடிக்கலைங்க ..கேஸ் இருக்கு பாத்தீங்களா” ”என்ன விசயம்?” ”லோனு குடுக்கதாட்டு…” ”இந்தாங்க அப்ளிகேஷன்..ரொப்பிக் குடுங்க” ” அய்யய்ய, அதெல்லாம் வேணாங்க…நம்பளுக்கு லோன் சாங்ஷன் ஆயாச்சு..” ”இல்ல அப்ளிகேஷன் குடுத்தாத்தான் லோன் கெடைக்கும்…” ”லோன் வந்தாச்சுன்னு சொன்னாங்களே” ”யாரு?” ”உங்காபீஸ்லே ஒரு பொண்ணு” ”·போன் வந்திச்சா?” ”ஆமா…நல்ல தன்மையான பொண்ணு…” ”அவங்க எங்காபீஸ் கெடையாதுங்க…நாங்க அதை வெளிய செர்வீஸ்காரங்களுக்கு விடுறோம்…அவங்க கூப்பிடுறாங்க…ஒரு காலுக்கு அஞ்சுரூபா குடுக்கிறோம்”

”அஞ்சு ரூபாய்க்கா சண்டாளி  அப்டி கொழைஞ்சா?” ”என்னங்க?” ”இல்ல இப்ப நீங்க இங்க வேலை பாக்கறீங்களா இல்ல?” ”நாங்க இங்கதாங்க வேலை பாக்கறோம்…சொல்லுங்க” ”அப்ளிகேசன் பூர்த்தி பண்ணினா போருமா?” ”நீங்க எதுக்குங்க பூர்த்தி பண்றீங்க? நாங்களே எல்லாத்தையும் பூர்த்தி பண்ணியாச்சு…நாங்க இண்டு போட்டிருக்கிற எடத்திலே எல்லாம் நீங்க கையெழுத்த போட்டா போரும்…” ”இது யாருங்க எங்க தகவல் எல்லாம் குடுத்தது?” ”உங்க வீட்டுக்கு வந்திருப்பாங்களே… உங்க வைஃப் குடுத்திருப்பாங்க…” ”நெனைச்சேன் மனைவிபேரு ஸினேகான்னு இருக்குல்ல…அவ பேரு கோலம்மைன்னாக்கும். அதான் ரிக்கார்டுலே உள்ள பேரு…”. ”.. அப்டீங்களா ஸ்னேகா என்கிற கோலம்மைன்னு மாத்திருறோம்…கையெழுத்த போடுங்க. கேஸ் இருக்கா?” ”அப்பவே சொன்னேனே இருக்கு…அதான் நான் ஜாஸ்தி டீ குடிக்கிறதில்லை…பால்னாக்க…” ”அதில்லைங்க. கேஸ் கனெக்ஷன்…” ”இல்ல…என் பொஞ்சாதி அவ தங்கச்சி கனெக்ஷனை வச்சிருக்கா…அவங்க கேரளாவுக்கு வேலைக்குப் போயிட்டாங்க…”

”செக் கெடைக்கும்களா?” ”இருங்க…எங்க மேனேஜர் பிராஸசிங் பாக்கணும்லே…அப்டி உக்காருங்க” ”சரிங்கம்மா” குளிரில் பவ்யமடைந்து இருக்கும்போது அழைப்பு. ”யாருங்க மிஸ்டர் க்யூனஷேக்ரான்?” உள்ளே போனால்  பிரம்மாண்டமான கண்ணாடி மேஜைக்கு அப்பால் இருந்த டைகட்டிய மீசையிலி ”உங்க லோன் சாங்க்ஷன் ஆகியிருக்கு” ”சொன்னாங்க” ”உடனே உங்களுக்கு செக் போட்டிருவோம்…” ”சரிங்கய்யா…ரொம்ப உபகாரம்…” ”ஆனா நீங்க பிராஸசிங் ஃபீ கட்டணும்.. ஜஸ்ட் செவென் தௌசண்ட் பைவ் ஹன்ட்ரட் தர்ட்டி ஃபைவ்…” ”சரிங்க. எப்பங்க?” ”இப்ப…கட்டி சலானை இங்க சப்மிட் பண்ணிட்டு செக்கை வாங்கிக்கலாம்…” ”இல்லீங்க…அதைக் கொறைச்சுட்டு மிச்சத்துக்கு செக் போடுங்க…” ”அதெப்டி நீங்க பணம் கட்டின பிறகுதானே செக் போட முடியும்?” ”அப்டீங்களா?” . ”அப்டித்தான் பிராசசிங்…”

உடனே கிளம்பி மனைவியின் ஒரே செயினை அடகு வைத்துப் பணம் புரட்டி [”செத்த சவமே அறிவிருக்கா பாரு…அடிபட்ட நாயி மாதிர்ல்லா மோங்குகா. ஏட்டி இப்பம் செக்கு கிட்டினதுமே நேரா போயி நகைய மூக்க முடியாதா? மண்டை இருந்தா போராது உள்ள அறிவுண்ணு வல்லதும் இருக்கணும்…..வந்திட்டா….”] பணத்தைக் கட்டி செலானை மீண்டும் நிர்மீசையிடம் கொடுத்ததும் அவர் அதை வாங்கி வாசித்து அபப்டியே ஒரு ஃபைலில் செருகி விட்டு ”வெல் நீங்க செக் வாங்கிக்கலாம்…ஆனா சில ரெகுலேஷன்ஸ் இருக்கு..” ”சொல்லுங்க” ”நீங்க பணத்தை நீங்களே வாங்கிக்க முடியாது…நாங்க பிராப்பர்ட்டியத்தான் கன்ஸிடர் பண்னுவோம். இப்ப நீங்க எங்க வீடு கட்டப்போறீங்க?”

”அது இன்னும் எடம் பாக்கலீங்க” ”பாருங்க…எடத்தைப்பாத்து வெலையை முடிச்சுட்டு அந்தப் பத்திர நகலோட வந்தீங்கன்னா யாருக்கு அந்த பேமெண்ட் போகுமோ அவங்களுக்கு நாங்க செக் போட்டிருவோம்…நிலப் பத்திரம் எங்க கைலே இருக்கும்…” ”அப்ப பணம் எனக்கு கெடையாதா?” ”டோண்ட் கன்ப்யூஸ் ப்ளீஸ்…நெலம் உங்களுக்குத்தானே” ”இப்ப என்ன பண்றது?” ”நேரா போயி ஒரு பிளாட்டைப் பாத்து ஃபிக்ஸ் பண்ணிட்டு வாங்க…” ”பணம் குடுக்காம ஃபிக்ஸ் பண்ணுவானா” ”சார் இப்பல்லாம் எல்லா நெலமும் அப்டித்தான் விக்கிறாங்க…ரெடி கேஷ் குடுத்து யாருமே நெலம் வாங்கறதில்லை…” ”அப்டீங்களா?’.’ ”·ஃபைன்”. ”சரிங்க”. ”தென்…”. ”பண்றேங்க”. ”வெல்…”. ”பாப்பம்..வீடுகட்ட யோகம் இருந்தா நடக்கும்…”. ”நைஸ்…”. ”எல்லாமே அவனவன் தலையெழுத்து மாதிரி…என்ன சொல்றீங்க”. ”அப்பம் பாப்பம்”. ”அடப்பாவி இம்பிடு நேரம் அதைத்தான் சொன்னியா?”. ”என்னது?” .”ஒண்ணுமில்ல வாறேன்..”

ரியல் எஸ்டேட் சிவசுடலைமாடபிள்ளை அண்ட் சன்ஸ் தன்மையாகப் பேசுகிறார் ”… இப்ப உங்களுக்குப்பாத்தீங்கன்னாக்க மூணு ஸ்கீம் இருக்குங்க..மூணுமே பெஸ்டு… ஒண்ணு நீங்க எங்க கிட்டேயே இன்ஸ்டல்மெண்டுல நெலம் வேங்கலாம்…” ”இல்லீங்க லோன் இருக்கு” ”அப்ப செரி.. இப்ப உங்களுக்கு பாத்தீங்கன்னாக்க ஈசியான வழி இருக்கு. அட்வான்ஸ் குடுத்துட்டு அக்ரிமெண்ட் போட்டுக்கலாம்… நாங்க உடனேயே பத்திரம் பதிஞ்சிருவோம்…அதோட காப்பிய நீங்க அங்க குடுத்து எங்க லெட்டரையும் குடுத்தா பணம் வந்திரும்…” ”அட்வான்ஸா?” ”ஆமாங்க, இப்ப உங்களுக்கு பாத்தீங்கன்னாக்க நாங்க நெலத்தைக் குடுக்கிறதா பத்திரம் பதியணுமானா நீங்க பணம் குடுத்துட்டு மிச்சத்த பேங் செக்கா குடுக்கிறோம்னு அதில சொல்லணும் இல்லீங்களா ? இப்ப உங்களுக்கு பாத்தீங்கன்னாக்க அதானே அதோட மொறை?”

”நாறச்சனியனே…சொன்னா சொன்னசொல்லு வெளங்குதா பாரு….உனக்க கிட்ட என்னமாம் கேட்டேனா? அடுக்களையில போயி மீனைக்கழுவுடீ… அதான் அவனே சொல்லுகான். அட்வான்ஸா பணத்தக் குடுத்தா அவன் செக்கை குடுக்கான். அந்தசெக்கில இருந்து நம்ம அட்வான்ஸ் பணத்த திருப்பி எடுத்திட்டு சின்னதுபோல ஒரு வீட்டை கெட்டினா அது ஐடியா…சொன்னா மனசிலாக்கணும்…” ஏங்க…நாம மார்பிள் போட்டாப்போரும்…”. ” அடிசெருப்பாலே…நான் இங்க கெடந்து தீ தின்னுதேன்..மார்பிளா கேக்கே” ”செவாமி வீட்டிலே மார்பிள் போட்டிருக்கே…” ”அது மார்பிள் இல்ல..என்னமோ சுண்ணாம்புக்கல்லு…” ”என்னமாம் போட்டிருக்காளே அவ்வோ”. ”போடுவோம்டீ. பேயாம கெட. வந்து வாச்சிருக்கு ஒரு ஒலக அறிவிருக்கா பாரேன்…”

அ-மீசை ராஜதந்திரமாகப் புன்னகைசெய்து ” கன்கிராட்ஸ்…செக் போட்டுட்டோம்.. அவங்க வாங்கிட்டுப் போய்ட்டாங்க..ரசீதை நீங்க வாங்கிக்குங்க…. செவெண்டி தௌசெண்ட் ருபீஸ்.. பார்வதி.”. ”சார்!”. ”எஸ்”’. ” அஞ்சு லெட்சம்னீங்க”. ”யா..·பைவ் லேக்ஸ்…”. ”இப்ப இப்டீங்கிறீங்க…”.  ”சார் சொல்றதைப் புரிஞ்சுக்கங்க…லேன் வேல்யூ பாத்துத்தானே நாங்க பணம் குடுப்போம்… இப்ப இந்த லேண்ட் மேலே நீங்க வீடு கட்றீங்க… வீடு கட்டக்கட்ட அந்த அளவுக்கு நாங்க எங்க லோனை ரிலீஸ் பண்ணுவோம்..அதான் பிராசஸ்..”. ”சார் அப்பகூட நெலம் மதிப்பே ஒண்ணர லட்சம் ஆயிருக்கே”. ” ஆமா, அதோட மதிப்புக்குள்ளதானே எங்க லோன் இருக்கும். ஆக்சுவலி லோன் பிளஸ் அதோட அஞ்சுவருஷ வட்டி இவ்வளவுக்கும் சமானமா அந்த பிராப்பர்ட்டி மதிப்பு இருக்கணும்”

”சார், நான் இப்ப என்ன செய்றது…ஏகப்பட்ட பணத்த இதிலே போட்டிருக்கேனே…” . ”என்ன இப்டி கேட்டிருக்கீங்க…இப்ப இந்த லோனை நீங்க வாங்க வேண்டாமா…? அதுக்கு நீங்க வீடு கட்டணும். ஏன்னா வீடு கட்டத்தானே லோன் வாங்கியிருக்கீங்க…”. ”ஆமா”. ”வீடு கட்ட ஆரம்பிச்சிட்டீங்கன்னா மிச்ச அமௌண்டுக்கும் செக் குடுத்திருவோமே..” ”அதுக்குப் பணம் வேணுமே…” ”அதை வேற எங்கியாம் நீங்க லோன் வாங்கலாம்…இப்ப பல லோன்ஸ்கீம்ஸ் இருக்கு… நாங்களே கூட வெஹிகிள் ஸ்கீம் ஒண்ணு வச்சிருக்கோம்…நீங்க அதைப்போடுங்க…”. ”அதுக்கு வண்டி வாங்கணுமே”. ”வேண்டியதில்லை… நடுச்சந்து எசக்கியம்மன் முக்குலே டெரிஃபிக் ஆட்டோமொபைல்சுக்கு போனீங்கன்னாக்க அவனே கொட்டேஷன் வண்டி நம்பர் எல்லாம் குடுத்திருவான். அது பேரிலே நாங்க லோன் குடுப்போம்…”. ” அப்டியா, சும்மா குடுத்திருவானா?”. ” சும்மாதான்…அவங்க ஒரு டென் பர்ஸண்டேஜ் பிராஸசிங் ஃபீ போட்டுக்குவாங்க…”. ”சரி, அந்த லோனை எப்டி சார் நான் கட்றது..”. ”பல வழிகள் இருக்கு… வெல்…”

பெருமூச்சுடன் ”சார் இப்ப நான் வீடு கட்டலேன்னாக்கா என்ன பண்ணிவீங்க?”. ” நாங்க லேண்டைத் திருப்பி எடுத்துக்குவோமே…”. ” அப்ப அப்டி செய்ங்க சார்,,, அந்த எழுபத்தஞ்சாயிரத்த எடுத்திட்டு மிச்சத்தை குடுத்திருங்க சார்…பிளீஸ்”. ”வெளையாடறீங்களா? நாங்க லேண்டை அட்டாச் பண்ணி அதை ஏலம் விடுவோம்..அதில வர்ர அமௌண்டிலே எங்க ஏலத்துக்கான பிராசசிங் ஃபீ அப்றம் நீங்க பணம் கட்டாததுக்கான ஃபைன் இன்டிரெஸ்ட் எல்லாத்தையும் கழிச்சுட்டு…” . ” சரி,கழிச்சுட்டு மிச்சம் உண்டானத குடுங்க சார்…புடிச்ச பீடை அப்பவே போகட்டும்…” .”இல்ல கழிச்சுட்டு பாத்தா நீங்கதான் எங்களுக்கு எப்டியும் டென் தௌஸெண்ட் மேலே தரவேண்டியிருக்கும்னு சொல்லவந்தேன்…”. ”சார்!!!”. ”எங்க ரூல்ஸ் சார்…அப்ளிகேஷன் ஃபார்மிலே எல்லாம் எழுதியிருக்கோமே….” .” அப்ளிகேஷன் ஃபார்மிலேயா? எங்க சார்?”. ”இந்தாங்க…கீழே”. ”சார் கீழே என்னமோ புள்ளி புள்ளியாட்டுல்லா இருக்கு?”. ”அதெல்லாம் லெட்டர்ஸ்தான். பாயிண்ட் ஒன் எழுத்திலதான் நாங்க அச்சடிப்போம்…அதான் எங்க மெதட். பாயிண்ட் எய்ட் பூதக்கண்ணாடி கொண்டாந்து நீங்கதான் பாத்திருக்கணும்…”

”அப்பம் ரெசீதைக் குடுங்கசார்…நான் வாறேன்…”. ”உங்கள சந்திச்சதிலே சந்தோஷம்”. ”இருக்குமே சந்தோஷம் இருக்காதாபின்னே? வாரேன்….வீட்டைக் கெட்ட முடியுமான்னு பாக்கேன்..ஆ!”. ”என்னது?”. ”அறுபத்தெட்டுன்னு இருக்கு…”. ”யா, எங்க பிராஸசிங் ஃபீ ஒரு மாச இன்ஸ்டால்மெண்ட் அப்றம் அப்ளிகேஷன் ஃபீ இவ்ளவையும் பிடிச்சிருக்கு…”. ”வட்டியா?” .”ஆமா..செவென் பர்செண்டேஜ்தான்..” ”சார் இண்ட்ரெஸ்ட் ஃப்ரீன்னு சொன்னாங்களே…” ”ஆமா, அது இந்த ஸ்கீமோட பேரு…ஆக்சுவலா இதுலே நாங்க ஒன் பாயிண்ட் டூ பர்சண்டேஜ் இண்ட்ரெஸ்ட் ஃப்ரீயா விட்டுடறோம்…அதனால இந்த பேரு..இன்னொண்ணுகூட இருக்கு கேப்பிட்டல் ஃப்ரீன்னுட்டு..அதிலே நாங்க…”. ”சார் இந்த இண்ட்ரெஸ்ட் எப்டி வருசத்துக்கா?” ”இல்ல மாசாமாசம் கணக்கு போடுவோம்…” ”ஏழரதானே” ”ஷ்யூர்…அதில எங்களுக்கு ஒரு மெதட் இருக்கு…இப்ப அஞ்சுலட்சம்னா அதுக்கு ஏழரை சதவீதம் வட்டி.  அந்த வட்டிக்கும் ஏழரை சதவீதம் வட்டி வரும்ல” . ”ஆமா”. ”அந்த வட்டிக்கும் மறுபடி ஏழரை சதவீதம் வட்டி உண்டு. அப்றம் அந்த வட்டிக்கும் ஏழரை சதவீதம்…அந்த் வட்டிக்கு எட்டு சதவீதம்.அந்த வட்டிக்கும்…”

”போரும் சார்… சார் இந்த அறுபதாயிரத்துக்கு நான் இதுவரை எழுவத்தஞ்சாயிரம் செலவு பண்ணியிருக்கேன்…”. ”நெலம் வந்திருக்கே..நீங்க இப்ப ஒரு பிராப்பர்ட்டி ஓனர்ல?”. ”அது உங்க கையிலே இல்ல சார் இருக்கு… அவன் நெலத்த நீங்க வாங்கி வச்சுட்டு என்னையப் பணம் கட்ட சொல்றீங்க…”. ”ரொம்ப கொழப்பறீங்க… இப்ப நீங்க இதிலே வீடு கட்டினாக்க வீடு உங்களுக்குத்தானே…”. ”ஆமா..” .”அப்ப வீட்டை கட்டுங்க…” .”சரிசார்…கர்ம வினை மாதிரி..கட்டித்தானே ஆகணும்”

வெளியே வரும்போது வாசலில் ”ஆறு லட்சம் சாங்க்ஷன் ஆகியிருக்காம் சார்…சொன்னாங்க…நல்ல தன்மையான பொண்ணு கேட்டேளா? சர்க்காராபீசிலே போனா சள்ளு சள்ளுன்னுல்ல விழுவாளுக தேவ்டியா மிண்டைக…அண்ணைக்கு கலக்டராபீசுக்குப் போனா ஒரு பொண்ணாப் பொறந்தவ என்ன பேச்சு பேசிட்டாங்கிறிய?” என்று நிற்கும் ஆசாமியைக் கண்கலங்கப் பார்த்துவிட்டு வீடுதிரும்புகிறோம். பின்பக்கம் குரல் நீள்கிறது ”…ரேசன் கார்டுல இருக்கப்பட்ட மாதிரி பேரு எளுதணுமாம்.எளவு ரேசன் கார்டுலே என்ன இருக்குன்னு எப்பமும் நெனைவிருக்குமா? என்ன நெனைவு வருதோ அதைத்தானே எளுத முடியும்? இல்லேன்னாலும் அந்த மாதிரி ஆப்பீசிலே இருந்தா நஞ்சவிஞ்சுதானே போவாளுக..இங்க பாத்தா என்னமா குளுமை செஞ்சு வச்சிருக்கான்..கார்த்திகை மாசம் மாதிரில்லா இருக்கு. நாயக்கொண்டாந்து விட்டா ஏறுகதுக்குத் தேடுமே…”

முந்தைய கட்டுரைமரபு, நவீனத்துவம், பின் நவீனத்துவம் – சதுரங்கத்தின் வரலாற்றில்: கெ.எம் நரேந்திரன்
அடுத்த கட்டுரைகாந்தி, அண்ணா -கடிதங்கள்