அன்புள்ள ஜெயமோகன்,
அண்மையில் ஐந்தாவது மருந்து படித்தேன். அறிவியல் புனைகதை என்ற சொற்றொடரை ஆரம்பித்து வைத்தவர் சுஜாதா என்றுதான் நினைக்கிறேன். அதற்கு முதலும் யாரும் எழுதினார்களோ நானறியேன். அறம் தொகுதி மனிதர்களோடு இணைத்துப் பார்க்கக் கூடியவர் தளவாய். மனிதன் இயற்கையோடு வாழும் வரையிலும் இந்த உலகம் அவனுக்கு சொர்க்கம். அடங்காத பேராசையோடு அவன் முழு உலகையும் சுருட்டிக் கொள்ள நினைக்கும் போது, இதெல்லாம் ஏற்படும். கதையில் கலையம்சம் குறைந்து போனது துரதிர்ஷ்டம்தான். மற்றபடி இந்த உலகுக்கு சொல்ல வேண்டிய செய்திதான்.
முகம்மது நபி சொல்லியிருக்கிறார்கள்; மனிதருடைய ஆசையின் முடிவிடம் மண்ணறையாகத்தான் இருக்க முடியும். மண்ணையிட்டு அவன் வாய்களை நிரப்பும் வரையிலும் அவனுடைய ஆசை குறையாது என்றார்கள். இன்றைய மனிதனும் அந்த வார்த்தைகளுக்கு இலக்கணமாகத் தெரிகிறான்.
வேறு என்ன? அண்மையில் எனது வீட்டுக்கு ஷாஜி வந்து போனார். எல்லாம் சொல்லியிருப்பார். இலங்கைக்கு ஜெயமோகன் வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். காலச்சுவடில் நுஃமானின் நேர்காணல் படித்ததா?
மலையாளத்தில் வெளிவந்த உங்கள் படத்தை பார்க்கக் கொள்ளை ஆசை. எப்படியாவது கள்ளச் சீடியாவது வாங்கிப் பார்க்க வேண்டும்.
அன்புடன்
எஸ்.எல்.எம். ஹனீபா
அன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய ஹனீஃபா அவர்களுக்கு,
நலம்தானே? நானும்
ஒழிமுறி டிவிடி மூன்றுமாதம் கழிந்தபின்னரே வெளிவரும். தங்களுக்கு அனுப்பிவைக்கிறேன். கதையின் கரு உங்களுக்குப்பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது
ஜெ
அன்புள்ள ஜெயமோகனுக்கு
இது எனது இரண்டாவது கடிதம்.
தலைமுறைகளைக் கடந்து பயணிக்கிறது தங்களது எழுத்துக்கள். அதற்கு நீங்கள் செய்யும் வாசிப்பின் முயற்சியும், பிரயாணங்களும், திறந்தே வைத்திருக்கும் மனமும் செவிகளும் வெகுவாகத் துணைபுரிவதை அறிகிறேன். தொடர்ந்து படைக்கும் படைப்புகள் வாசகனை ஒருவித மாற்று சூழலுக்கு அழைத்துச் செல்லும் வல்லமை பொருந்தியதாக இருக்கிறது. சொற்களை கோர்ப்பதிலும், எழுத்துக்களில் உணர்வின் சாரத்தை வன்மையாக திணிப்பதிலும் உங்களுக்கென்று ஒரு புதுப் பாதையும், புது உலகையும் சிருஷ்டித்துக் கொண்டுள்ளீர்கள். அதன் பலனே தற்கால மாற்றுக் கலாச்சார சமூகத்திலும் கூட உங்களை எழுத்தால் கண்டுகொண்டவன், தான் இதுவரையில் தொலைத்த அத்தனை காதல், அத்தனைக் காமம், அத்தனை மனிதம், அத்தனை மரபு, தெய்வீகம், கற்பனை, ஓலம் எனப் பலதரப்பட்ட உணரா உணர்வுகளை, ஒரே ஒரு புத்தகத்தின் மூலம் கண்டுகொள்கிறான். இது ஒரு எழுத்தாளனால் மட்டுமே முடியும். சிரம் தாழ்ந்த வணக்கங்கள் எப்போதும் உண்டு அத்தகைய எழுத்தின் ஜீவ ஊற்றான ஜெயமோகனுக்கு.
உங்களிடம் ஒரு கேள்வி. என் தலைமுறை என்ற சுயநலத்துடன் கேட்கப்படும் கேள்வி. இன்று ஆயிரமாயிரம் எழுத்துக்கள் திக்கெட்டும் இருந்து புறப்பட்டு வந்து திசையறியாமல் கரைந்து போகின்றது. முனைப்புடன் எழுத நினைத்தோர் எல்லாம் ஒரு நிலையில் அதனைக் கைவிட்டு விடுகின்றனர். தொடர்ந்து எழுத பயிற்சியும், உத்வேகமும், லகரியும் முக்கியமான ஒன்று. நீங்கள் எழுதிப் பழகிய இந்தத் தலைமுறையில் ஒரு சிலரையாவது உங்களைப் போன்று வல்லமை பொருந்திய எழுத்தாளனாக உருவாக்கும் கடமை உங்களுக்கிருப்பதாக உணர்கிறேன். அத்தகைய முயற்சிகள் தோற்றாலும் அதில் ஒருவித நியாயம் இருப்பதாகத் தோன்றுகிறது. பயிற்சிப் பட்டறைகள் அளவிற்கு இல்லா விட்டாலும், உங்களின் சிறிய திருததமுதும் கூட, அவர்தம் பாதையை சீராக்க உதவும் கூர்மையான ஆயுதமாக இருக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன். என்கேள்வி புரிந்திருக்கும் என்ற நிம்மதியுடன் முடித்துக் கொள்கிறேன். உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகள்.
சாம் நாதன்
அன்புள்ள சாம்
ஜெயகாந்தன் ஒருமுறை சொன்னார். மகாராஜபுரம் விஸ்வநாதய்யரின் மகன் மகாராஜபுரம் சந்தானம் ஆகமுடியும். சந்தானத்தின் மகன் மகாராஜபுரம் ராமச்சந்திரனாக ஆக முடியும். ஆனால் லா.ச.ராவின் மகன் எழுத்தாளனாக ஆக முடியாது. மௌனியின் மகன் கதை எழுத முடியாது.
ஆம். இலக்கியத்தைப் பயிற்றுவிக்கவோ கைமாற்றவோ முடியாது. சமீபத்தில் நமீபியா சென்றிருந்தபோது பாலைவனத்தில் நிற்கும் சில மரங்களைக் கண்டேன். அங்கே மரங்கள் மிகமிகத் தனிமையானவை. ஒரு மரத்திலிருந்து பத்து கிலோமீட்டருக்கு அப்பால் அடுத்த மரம்.
அவை முழுக்க அடையடையாகப் பூக்கள். பூக்குலைகளாகவே இருந்தன. ஏன் இத்தனை பூக்கள் என்றேன். பாலைவன மரங்கள் அதிகபட்ச மகரந்தத்தை உருவாக்கி அதிகதூரம் காற்றில்பரப்புகின்றன. அப்படித்தான் அவை இனநீட்சியை உருவாக்க முடியும் என்றார்கள்
தமிழில் எழுத்தாளர்கள் செய்வதும் அதைத்தான்.
ஜெ