கடிதங்கள்

அன்புள்ள ஜெ.,

தற்செயலாக இன்று பார்த்துக்கொண்டிருந்த வீடியோ இது:
http://www.youtube.com/watch?v=OjtP1YL3dcE

T.ராஜேந்தர் இதில் ‘என் படத்துக்கு மதிப்பெண் போட நீ யார்; உன்னால் ஒரு வெற்றிப்படம் கொடுக்க முடியுமா’ என்று ஆவேசமாக ஆனந்த விகடனைக் கிழித்துக் கொண்டுள்ளார்.

T.ராஜேந்தர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் க.நா.சு-வின் நிலைமை பரிதபத்திற்குரியது தான்.

ஆனால் ஒன்று… எப்போதோ படித்த அவரது பொய்த்தேவு இன்றும் நிழல் படிந்த பழைய நினைவுகள் போல் மனதில் உள்ளது. சிறு வயதில் கண்ணீருடன் பார்த்த மைதிலி என்னைக் காதலி, இப்போது நகைச்சுவையாகத் தோன்றுகிறது.

நன்றி
ரத்தன்

அன்புள்ள சார்,

நலமா?

‘அறம்’ படித்து முடித்தேன். அந்தக் கதைகள் நீங்கள் இணையத்தில் வெளியிடும் நாட்களில் நான் உங்கள் தளத்திற்கு மிகவும் புதியவன். ‘மெல்லிய நூல்’ அந்த வரிசையில் வந்ததாக ஞாபகம். சாதரணமாக இணையத்தில் கதைகள், நாவல்கள் வாசிப்பதைத் தவிர்க்கிறேன் நான். மெல்லிய நூல் மட்டும் படித்தேன். ‘பின் தொடரும் நிழலின் குரல்’ மேல் ஆர்வம் வரக்காரணம் அந்தக் கதையும் தான்.

‘அறம்’ கதைகளின் எல்லா உச்சக்காட்சிகளும் என்னைப் புரட்டிப் போட்டு விட்டன… உலகம் யாவையும் தவிர.
கதையின் கடைசியில் காரி டேவிஸ் அழுகையில் என்னால் ஒன்ற முடியவில்லை. அந்நியமாகவே பட்டது.
மற்ற எல்லாக் கதைகளும் கண்ணீர் வடிக்காமல் படித்ததில்லை. முக்கியமாக.. நூறு நாற்காலிகள். அந்தக் கதையின் நாயகன் தாயை அடிக்கும் காட்சி.. என் உணர்சிகளை கொந்தளிக்கச் செய்தது. மூன்று நாட்கள் வரைக்கும் அதே காட்சி நினைவில் வந்துகொண்டே இருந்தது. தாயிடம் மன்னிப்பு கேட்டு இருக்கலாமே.. என்று மிகவும் ஆதங்கப் பட்டேன். மன்னிப்புகள் அந்த தாய்க்குப் புரியாதுதான். ஆனாலும்! கதை முடிவுக்கு வருவதற்கு சற்று முன்னர்கூட அவன் தாயிடம் பேச நினைக்கும் போதே… அப்பாடா என்று பட்டது. ஆனால் கதை வேறுவகையாக முடிந்ததும்.. வருத்தப்பட்டேன். கதா நாயகன் நினைக்கும் நூறு நாற்காலிகள்… தருக்கங்கள் எல்லாம் சரி தான்! ஆனால் கொஞ்சமாவது அந்தத் தாயை சந்தோஷப்படுத்தி இருக்கலாம். எனக்கு அவள் நினைவாகவே இருந்தது. சம நிலைக்கு வர முடியாமல் தவித்தேன். அம்மாவை சந்தோஷப்படுத்தலாமென அவன் நினைப்பதும், அதற்கு அடுத்து நடக்கும் சம்பவங்களில் தான் கதையின் மூல முடிச்சு.. என்று நினைத்து சமாதனம் ஆகிவிட்டேன்!

நாகர் கோயிலில் கோட்டி தாத்தா வாழ்ந்த இடங்களைப் பார்க்கலாமென ஆசையாக இருக்கிறது.
அப்படி என்றால்.. உங்கள் கதை மாந்தர்கள் வாழ்ந்த இடங்களை எல்லாமே பார்கத்தான் ஆசை. திருவனந்தபுரம் போனால் கெத்தல் சாய்பு ஓட்டலையும் பார்க்கலாமென நினைக்கிறேன்.

நீங்கள் சொன்னபடி… இந்தக் கதைகள் லட்சியவாதத்தின் மேல் புதிய நம்பிக்கைகளை அளித்தன.
லட்சிய வாதம் என்றால்.. பணம், புகழ் இப்படி எதையும் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பதுதான் என்று நான் தவறாக நினைத்த காலம் , இல்லை என்றால்  “அவரு நல்ல மாதிரி…” என்று பலரால் அழைக்கப்படுவதோ என்று கூட நினைத்ததுண்டு .

ஒரு வாசகனாக என் சுண்டு விரலைப் பிடித்து(இது அப்பட்டமான தெலுங்கு மொழிபெயர்ப்பு!) உயர்ந்தரசனைகளுக்கு இட்டுச் செல்கிறீர்கள்!

நன்றியுடன்,
ராஜு
பி.கு. பழைய பல்லவிதான்! சென்னை வந்தால்.. உங்களுக்கு நேரம் இருந்தால்.. சொல்லவும். சந்திக்க விரும்புகிறேன்.

அன்புள்ள ராஜு

நன்றி. என்னுடைய புனைவுலகுக்குள் நுழைய அறம் ஒரு நல்ல வாசல்தான். அதன் ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு வடிவம் உள்ளது. அவ்வடிவங்களை என் புனைவுலகில் காணமுடியும்

ஜெ

முந்தைய கட்டுரைமறுபிறப்பு
அடுத்த கட்டுரைமொழி 15,தமிழை வாழவைப்பவர்கள்