இலக்கியமும் அல்லாததும்

அன்புள்ள ஜெ.,

கீழ்க்கண்ட இரண்டுமே நீங்கள் சொன்னதுதான்… இவை ஒன்றோடு ஒன்று முரண்படுவதாய் எனக்குத் தோன்றுகிறது. நேரமிருப்பின் விளக்கமுடியுமா? (என்னளவில் இரண்டாவது கருத்தே சரியெனப்படுகிறது; ஏனெனில் நானும் வணிக எழுத்தின் வழியாக இலக்கிய எழுத்தை வந்தடைந்தவன் தான்)

http://www.jeyamohan.in/?p=14115:

வணிக எழுத்து இலக்கியத்துக்கு ஆட்களைக் கொண்டுவந்தது என்பது ஒரு மாயை. உண்மையில் அது இலக்கியத்தை மறைக்கிறது. இலக்கிய வாசிப்புக்கு எதிரான மனநிலையை உருவாக்குகிறது. வணிக எழுத்தே இலக்கியம் என்று சொல்லப்பட்டு நம்பப்படுகையில் அடுத்தகட்ட இலக்கியத்துக்கான தேடலே இல்லாமல் ஆகிறது. கணிசமான கேளிக்கை வாசகர்களின் மனநிலை இது. அவர்களுக்கு இலக்கியம் தற்செயலாக அறிமுகமானால்தான் உண்டு.

http://www.jeyamohan.in/?p=30143 :

நா.பார்த்தசாரதியும் எல்லாம் வாசிப்பின் ஒரு கட்டத்தில் இன்றியமையாதவர்களே. அவர்கள் வழியாகவே நாம் தீவிர இலக்கியத்துக்குள் நுழையவேண்டும். அதுவே சரியான வழி.

நன்றி

ரத்தன்

அன்புள்ள ரத்தன்

பொதுவாக என்னுடைய உரையாடல்களில் ஒரு சிறிய சிக்கல் அவ்வப்போது நிகழ்கிறது. நான் கடந்த இருபதாண்டுக்காலமாக என்னுடைய இலக்கியக் கருத்துக்களை எழுதிவருகிறேன். அவை பல நூல்களாக வெளிவந்துள்ளன. இணையத்தில் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் உள்ளன. அவற்றிலும் என்னுடைய கட்டுரைகள் உள்ளன. என்னைப்பொறுத்தவரை நான் இக்கட்டுரைகளின் தொடர்ச்சியாகவே பேசுகிறேன். ஒருகட்டுரைக்கு முந்தைய கட்டுரைகளில் நீட்சி இருக்கும். சில சமயம் முன்னால் சொல்லப்பட்டவற்றின் ஒரு பகுதியாக என் கருத்து இருக்கும்.

ஆனால் வாசகர்கள் என் கருத்துக்களைத் தனியாக, துண்டாக வாசிக்க நேர்கிறது. அவர்களில் சிலர் முந்தைய சில கட்டுரைகளை வாசித்திருக்கலாம். ஆனால் கணிசமானவர்கள் என் கருத்துக்களின் வளர்ச்சிப்பாதையை அறிந்திருப்பதில்லை. ஆகவே அவர்கள் அதில் ஐயங்களைக் கேட்கிறார்கள். நான் என்னுடைய பழைய கட்டுரைகளுக்குச் சுட்டி கொடுப்பதையே திரும்பத்திரும்பச் செய்யவேண்டியிருக்கிறது.

இந்தக்கேள்வியிலும் அந்த சிக்கல் உள்ளது 1998இல் வெளிவந்து பின்பு இரு பதிப்புகள் கண்டுவிட்ட ‘நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்’ என்ற என்னுடைய நூலில் இரு அத்தியாயங்களிலாக நான் வணிக-கேளிக்கை எழுத்துக்கும் இலக்கியத்துக்குமான உறவைப்பற்றி விரிவாகவே பேசியிருக்கிறேன். அங்கே ஒட்டுமொத்தமாக விளக்கியதன் ஏதேனும் ஒரு பகுதியையே பின்னர் பேச நேர்கிறது. அந்த நூலில் சொன்ன கருத்துக்கள் நான் அதற்கு முன்னர் ஐந்தாண்டுக்காலமாகச் சொல்லி வந்தவை. சுந்தர ராமசாமி உட்படப் பலரிடம் பேசியவை. அவை அன்றைய இலக்கியச் சூழலின் பொதுநம்பிக்கைகளில் இருந்து வேறுபடக்கூடியவை ஆதலால் அவற்றை விரிவாகவே எழுதவேண்டியிருந்தது.

நீங்கள் கேட்ட கேள்விக்கு சுருக்கமான பதில் என்றால் இதுதான். பிரபலமான கேளிக்கைஎழுத்து, வாசிப்பு என்னும் இயக்கத்தை ஒரு சமூகத்தில் நிலைநிறுத்த இன்றியமையாதது. அது இளமைக்கால வாசிப்புக்குக் கற்பனாவாதப்பண்புகொண்ட படைப்புகளை அளிக்கிறது. அதன்வழியாக இலக்கியத்திற்குள் வருவது ஆரோக்கியகரமானது.

அதேசமயம் வணிகக் கேளிக்கை எழுத்து வாசகனைத் தன்னியல்பாக நல்ல இலக்கியத்தை நோக்கிக் கொண்டு வராது. இலக்கிய வாசிப்புக்கு தடையாக ஆகக்கூடிய மனநிலைகளை உருவாக்கவும்செய்யும். ஆகவே கேளிக்கை எழுத்தை இலக்கியமல்ல என்று அடையாளம் காட்டி நிராகரித்து இலக்கியமதிப்பீடுகளை முன்வைக்கும் அறிவியக்கத்துக்கான தேவை ஒரு சமூகத்தில் இருந்துகொண்டே இருக்கிறது.

இதுதான் என் கருத்து. முதல்பாதியை எடுத்துக்கொண்டு கேளிக்கை எழுத்தை ஆதரிக்கிறேன் என்றோ இரண்டாம் பகுதியை எடுத்துக்கொண்டு அதை நிராகரிக்கிறேன் என்றோ புரிந்துகொண்டால் நான் சொல்வதை உள்வாங்காதவர் ஆவீர்கள். இரண்டுக்கும் நடுவே முரண்பாடு இருப்பதாக உங்களுக்குத் தோன்றுவது என்னுடைய கருத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாமையினாலேயே. நான் எந்த ஒரு கருத்தையும் அதன் எல்லாப் பக்கங்களையும் கருத்தில்கொண்டு சமநிலையுடன் முன்வைக்கிறேன்.

ஒரு நல்ல வாசகன் இளமைக்காலத்தில் கற்பனாவாதத்தை முன்வைக்கும் கதைகள் வழியாக நவீன இலக்கியத்துக்கு வருவது நல்லது என்பது என் எண்ணம். அவைதான் இலட்சியவாதக் கனவை அவன் நெஞ்சில் ஊட்டுகின்றன. அப்படிக் கற்பனாவாத எழுத்து வழியாக வராதவர்கள் பெரும்பாலும் அரசியல்வழியாகவே இலக்கியத்திற்குள் வருகிறார்கள். அவர்கள் படைப்புகளை எளிய கருத்துக்களாக சுருக்கிக்கொண்டு நிலைப்பாடுகள் வழியாக இலக்கியத்தை அணுகக்கூடியவர்களாகவே தமிழ்ச்சூழலில் காணப்படுகிறார்கள். ஆகவே கல்கியும்,சாண்டில்யனும், நா.பார்த்தசாரதியும், அகிலனும் தமிழ்ச்சூழலுக்கு முக்கியமானவர்கள் என்பது என் கருத்து.

ஆனால் அவர்களை இலக்கியமேதைகள் என்று சொல்லும் தரப்பை நான் ஏற்க முடியாது. அவர்களின் எழுத்து கேளிக்கை நோக்கம் கொண்டது, ஆகவே இலக்கியம் அல்ல. அவற்றைப் பரப்பிலக்கியம் என்றே சொல்வேன். அவ்வகையில் கல்கி,சாண்டில்யன் முதல் அகிலன்,சுஜாதா,பாலகுமாரன் வரையிலானவர்கள் மேல் க.நா.சுவின் விமர்சன மரபு முன்வைத்த கடுமையான நிராகரிப்பு எனக்கு ஏற்புடையதே. க.நா.சு அவர்கள் இலக்கியவாதிகளல்ல என்றுதான் வாதிட்டார். நான் அதை ஏற்றுக்கொண்டு அவ்வளவிலேயே அவர்கள் தேவையானவர்கள் என்கிறேன், அவ்வளவுதான்.

ஒரு சூழலில் வாசிப்பு என்பது ஒரு சமூக இயக்கமாக இருந்தாகவேண்டும். அதற்கு எல்லாவகையிலும் எல்லாத் தளத்திலும் எழுத்துக்கள் தேவை. வணிக எழுத்து வாசிப்பை ஒரு பேரியக்கமாக நிலைநிறுத்தும் ஆற்றல் கொண்டது. தமிழில் வணிக எழுத்தின் பொற்காலத்தில் பிறந்த க.நா.சு அதை நிராகரித்து இலக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அவர் எந்தெந்த மலைகளுக்கு எதிராக மண்டையை மோதினாரோ அவையெல்லாம் புகைமூட்டங்களாகக் கலையும் ஒரு காலம் வரும் என அவர் நினைத்திருக்க மாட்டார். சுந்தர ராமசாமியும் வெங்கட் சாமிநாதனும் நினைக்கவில்லை.

அந்தக் காலத்தின் தொடக்கத்திலேயே நான் அதன் சாத்தியங்களை அடையாளம் கண்டேன். தமிழர்கள் என்றுமே காட்சி ஊடகத்தின் அடிமைகள். வணிக நாடகம் தமிழகத்தை ஆட்கொண்டது. பின்பு சினிமா. அதன்பின் தொலைக்காட்சி. தொலைக்காட்சி கேளிக்கைவாசிப்பை முற்றாக அழிக்கும் என நான் நினைத்தேன். கேளிக்கை வாசிப்பு அழிந்தால் தமிழில் வாசிப்பு என்ற இயக்கம் இல்லாமலாகும் என நினைத்தேன். அதையே பதிவுசெய்தேன்.

ஆனால் நான் எதிர்பாராத ஒன்று நிகழ்ந்தது. தமிழில் பயன்பாட்டு எழுத்து சட்டென்று வளர்ந்தது. முன்பு மணிமேகலைப் பிரசுரம் மட்டுமே அவ்வகை எழுத்தை வெளியிட்டுக்கொண்டிருந்தது. இன்று தமிழில் வெளியாகும் நூல்களில் பத்து சதவீதம் மட்டுமே புனைவு சார்ந்தவை என்கிறார்கள். வணிகக் கேளிக்கை எழுத்து அழிந்ததன்மூலம் உருவான இடைவெளியை ஓரளவுக்கு இந்த நூல்கள் நிரப்பிக்கொண்டிருக்கின்றன.

இவ்வகையில் வணிகஎழுத்தின் தேவையை நான் அங்கீகரிக்கிறேன் . ஆனால் அது வணிகஎழுத்து இலக்கியத்துக்கு வாசகர்களைக் கொண்டுவந்து சேர்க்கும் என நம்புவதனால் அல்ல. அப்படி சேர்த்திருந்தால் கல்கியும் அகிலனும் சுஜாதாவும் கோடிக்கணக்கான வாசகர்களைக் கொண்டிருந்த பொற்காலங்களில் அல்லவா நவீன இலக்கியத்துக்கு வாசகர்கள் வந்து குவிந்திருக்கவேண்டும்? அவர்களின் வாசகர்களில் ஐந்துசதவீதம் பேர் இலக்கியம் வாசிக்க வந்தாலும்கூட அந்த எண்ணிக்கை லட்சங்களில் இருந்திருக்குமே.

மாறாக அக்காலகட்டங்களில் இலக்கியவாசகர்களின் எண்ணிக்கை சிலநூறுகளில்தான் இருந்தது. கல்கியும் அகிலனும் சுஜாதாவும் எழுதியவற்றை வாசித்தவர்களுக்கு புதுமைப்பித்தனும், அசோகமித்திரனும், வண்ணதாசனும் எழுதியவை ருசிக்கவில்லை. இந்த வணிகஎழுத்து தொலைக்காட்சியின் வரவால் அழிந்தபோதுதான், 1990 களின் இறுதியில்தான் தமிழில் இலக்கியத்துக்கு வாசகர்கள் வர ஆரம்பித்தார்கள்.

ஏனென்றால் கேளிக்கை எழுத்துக்குப் பழகிப்போன ஒருவர் இலக்கியத்தை வாசிப்பதற்கு நேர் எதிரான மனநிலையைச் சென்றடைகிறார். அவரது ரசனை இலக்கியப்படைப்புகளை எதிர்க்கும், நிராகரிக்கும். இன்றைக்கும்கூட அதை இணையத்திலேயே பார்த்துக்கொண்டிருக்கிறோம். வணிக எழுத்துக்குப் பழகிப்போன வாசகர்கள் தீவிரமான எதையும் எளிதில் தூக்கி வீசுகிறார்கள். தீவிரமான எதற்கும் அவர்களிடமிருந்து வலுவானதோர் எதிர்ப்பு எழுந்து வருகிறது.

அவர்களைக் கவனியுங்கள். அவர்கள் ஒரு எழுத்து நீளமானதாக இருந்தால் வாசிக்க மாட்டார்கள். செறிவாக இருந்தால் வாசிக்க மாட்டார்கள். அது சலிப்பூட்டுகிறது என்பார்கள். ஏனென்றால் அவர்கள் வாசித்துப்பழகிய எழுத்து அவர்களின் அறிவுத்திறனைக் கருத்தில்கொண்டு மிக எளிமையான மொழிநடையில், விரிவோ சிக்கலோ இல்லாமல் எழுதப்பட்டது. அவர்கள் நான்கு பக்கங்களுக்கு மேல் வாசிக்க மாட்டார்கள் என்றால் அது நான்குபக்கங்களுக்குள் முடியும். அவர்களுக்கு எந்த சவாலையும் அது அளிக்காது.

கேளிக்கை எழுத்துக்குப் பழகிய வாசகர்கள் இலக்கிய ஆக்கத்தில் எதையும் ஊகத்தால் நிரப்பிக்கொள்ளும் திராணி இல்லாதவர்களாக இருப்பார்கள். அப்பட்டமாக நேரடியாகச் சொல்லப்பட்டவை மட்டுமே அவர்களுக்குப் பிடிகிடைக்கும். அப்படி சொல்லப்படாத படைப்புகளைப் புரியவில்லை என்று நிராகரிப்பார்கள். புரிந்துகொள்ள தங்கள் தரப்பில் எந்த முயற்சியும் செய்யமாட்டார்கள்.

சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் தங்களுடைய எளிய ரசனையையும் குறைந்த அறிவுநிலையையும் அவர்கள் வாசிக்கும் படைப்பின் குற்றமாக சொல்வார்கள். அப்படிச் சொல்வதில் எந்த வகையான கூச்சமும் அவர்களுக்கு இருக்காது. ஒரு நுகர்பொருளை வாங்கி அதைப் பயன்படுத்தும் மனநிலை இது. அந்நுகர்பொருள் தனக்கு ஏற்றதாக இருந்தாகவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

இந்த அடிப்படை மனநிலை காரணமாகவே கேளிக்கை எழுத்தில் பழகிப்போன வாசகன் ஒருபோதும் இலக்கியத்திற்குள் தன்னியல்பாக வந்து சேர முடியாது. நான் விதிவிலக்கானவர்களைப் பற்றி பேசவில்லை. இயல்பிலேயே ரசனையும் நுண்ணுணர்வும் கொண்டவர்கள் பலர் உண்டு. அவர்களுக்கு எந்தத் தடையுமில்லாமல் இலக்கியம் வாசல்திறக்கும்.

இலக்கிய ஆசிரியன் ஒருபோதும் பொதுவாசகனை மனதில்கொண்டு அவனுடைய ரசனைக்காக, அறிவுத்திறனுக்காக எழுத மாட்டான். அவன் ஒரு இலட்சியவாசகனை மனதில் உருவகித்து அவனுக்காகவே எழுதுவான். சிலசமயம் சமகாலத்தில் ஒரு நல்ல வாசகன்கூட ஒரு படைப்புக்குக் கிடைக்காமல்போகலாம். அதைப்பற்றி அவனுக்குக் கவலை இல்லை. இலக்கியப்படைப்பு வாசகனை நோக்கி வராது. வாசகன் தன்னைத் தகுதிப்படுத்திக்கொண்டு இலக்கியப்படைப்பை நோக்கி வரவேண்டும்.

இலக்கியவாசகன் ஒருபோதும் தன் தகுதிக்குறைவுக்காக இலக்கியப்படைப்பைக் குறை சொல்ல மாட்டான். இலக்கியப்படைப்புகளைத் தொடர்ந்து வாசிப்பதும் விவாதிப்பதும் அந்த இலக்கியப்பயிற்சியை அவன் அடைந்தபடியே இருப்பான். தன் வாழ்நாளின் கடைசியில்கூட ஒரு சிக்கலான ஆக்கத்தை வாசிக்கும் சவாலை அவன் அடையக்கூடும்.

ஆக, ஒரு சூழலில் வாசிப்பெனும் இயக்கம் நிலைநிற்க வணிக எழுத்து தேவையாகிறது. இளமையில் கேளிக்கை எழுத்து உருவாக்கும் கற்பனாவாதம் ஓர் அவசியமனநிலையை அளிக்கிறது. ஆனால் வணிக எழுத்து உருவாக்கும் மனநிலைகள் இலக்கியமதிப்பீடுகளால் வன்மையாக மோதி உடைக்கப்பட்டு வாசகன் அதிலிருந்து மீட்கப்பட்டாலொழிய அவனால் இலக்கிய உலகுக்குள் நுழைய முடியாது. அதற்கு இலக்கிய விமர்சனமும், இலக்கிய இதழியலும், பல்வேறு இலக்கிய விவாதங்களும் உதவுகின்றன.

அப்படி விமர்சனக்கருத்துக்கள் முன்வைக்கப்படும்போது வணிகக்கேளிக்கை எழுத்துக்குப் பழகியவர்கள் அளிக்கும் எதிர்வினைகளை கவனியுங்கள். அதிலுள்ள மூர்க்கம். ஒரு விமர்சனக்கருத்தை வசையாக மட்டுமே காணும் கோணம். கல்கி எழுதுவது இலக்கியமல்ல என்று புதுமைப்பித்தன் சொன்னபோது, அகிலன் எழுதுவது இலக்கியமல்ல என்று க.நா.சு சொன்னபோது சுஜாதா எழுதியது இலக்கியமல்ல என்று சுந்தர ராமசாமி சொன்னபோது எழுந்த அதே அதே வரிகளையே இன்றும் நாம் கேட்கிறோம்.

ஆனாலும் புதுமைப்பித்தனும் க.நா.சுவும் சுந்தர ராமசாமியும் ஒரு வலுவான இலக்கிய மரபை உருவாக்கினார்கள். தங்கள் விமர்சனங்கள் மூலம், விவாதங்கள் மூலம். அந்த விவாதம் ஒரு சூழலில் நிகழ்ந்துகொண்டே இருந்தாகவேண்டும். அதன் வழியாகவே இலக்கியத்திற்குள் நல்ல வாசகன் வந்துசேர்கிறான்.

ஜெ

முந்தைய கட்டுரைஅன்னியமுதலீடு கடிதங்கள்
அடுத்த கட்டுரைலாரி பேக்கர்