காந்தியின் பலிபீடம்

காந்தி கல்கத்தாவுக்குச் சென்ற அனுபவம் அவரது சுயசரிதையில் வருகிறது. கோகலேயுடன் ஒருமாதம் என்ற பதினெட்டாவது அத்தியாயத்தில். காளிசரண் பானர்ஜி என்ற வங்காள சுதந்திரப்போராளியை சந்திக்கிறார் காந்தி. அவர் தீவிரமான கிறித்தவராக மாறிவிட்டவர். அவரிடமிருந்து தெரிந்துகொண்டு கல்கத்தா காளிகோயிலைப் பார்க்கச்செல்கிறார். இந்தக்குறிப்பே முக்கியமானது, காளிசரண் பானர்ஜி என்ன வகையான சித்திரத்தை அளித்திருப்பார் என நாம் ஊகிக்கலாம்.

கல்கத்தா முழுக்க நடந்தே அலைகிறார் காந்தி. நீதிபதி மித்தர் என்பவரை சந்தித்துவிட்டு காளிகோயிலுக்குச் செல்கிறார். செல்லும்வழி முழுக்க காளிக்குப்பலிகொடுப்பதற்காக கூட்டம் கூட்டமாக ஆடுகளைக் கொண்டு சென்றுகொண்டிருந்தார்கள். அந்த ஆடுகள் நெருக்கியடித்துக்கொண்டு போவதைக் கண்டு காந்தி மனம் உடைகிறார். காளிகோயிலுக்கான வழியில் இரு பக்கமும் ஏராளமான பிச்சைக்காரர்களும் சாதுக்களும் இருக்கிறார்கள். உடல் ஆரோக்கியம் உள்ள எவருக்கும் பிச்சை அளிப்பதில்லை என்ற கொள்கை காந்திக்கு இருக்கிறது. ஆகவே அவர் எதுவும் கொடுக்கவில்லை. அவர்கள் அவரைத் துரத்தி வசைபாடுகிறார்கள்.

அப்போது ஒரு தாழ்வாரத்தில் சாது ஒருவர் அமர்ந்திருப்பதை காந்தி பார்க்கிறார். அவர் காந்தியைக் கைநீட்டி அழைத்து ‘தம்பி நீ எங்கே செல்கிறாய்?’ என்று கேட்டார். காந்தி அவர் அருகே சென்று ‘கோயிலுக்குச் செல்கிறேன்’ என்றார். அவர் காந்தியிடம் பிச்சை ஏதும் கேட்கவில்லை. காந்தியைத் தன்னருகே அமரும்படி சொல்லி சிறிதுநேரம் அவரிடம் பேசினார் அந்த சாது. காந்தி அவரிடம் ‘இந்த உயிர்ப்பலியை மதம் என நினைக்கிறீர்களா?’ என்று கேட்டார்.

‘மிருகங்களைக் கொல்லுவதை மதம் என்று யாராவது கருதுவார்களா?’ என்றார் அவர். ‘அப்படியென்றால் நீங்கள் ஏன் அதை எதிர்த்துப் பிரச்சாரம்செய்யக்கூடாது?’ என்று காந்தி கேட்டார். ‘அது என் வேலை இல்லை. கடவுளை வழிபடுவதே என் வேலை’ என்றார் சாது. ‘கடவுளை வழிபடுவதற்கு உங்களுக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா?’ என்று காந்தி மடக்கினார். எங்களுக்கு எல்லா இடமும் நல்ல இடம்தான் மக்கள் ஆடுகளைப்போலத் தலைவர்கள் இட்டுச்செல்லும் இடங்களுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். சாதுக்களாகிய எங்கள் வேலை அதுவல்ல’ என்கிறார் சாது

காந்தி மிகச்சுருக்கமாக இந்த உரையாடலைச் சொல்கிறார். ’இந்த விவாதத்தை நாங்கள் வளர்த்துக்கொள்ளவில்லை. கோயிலுக்குப் போனோம். ரத்த ஆறுகள் எங்களை எதிர்கொண்டு அழைத்தன’ என்று மேலே செல்கிறார்.

இந்த சிறுவிவரிப்பில் வரும் அந்த சாது பிரமிப்பூட்டுகிறார். காந்தியும் அவரும் இரு வெவ்வேறு துருவங்களில் இருக்கிறார்கள். சொல்லப்போனால் இந்துஞானமரபின் இரு வேறு புள்ளிகளில். ஒருவர் கர்மயோகி. இன்னொருவர் ஞானயோகி. செயல்மூலம், போராட்டம் மூலம் மட்டுமே தன் முழுமையை நோக்கிச் செல்லவேண்டியவர் காந்தி. அனைத்தையும் விட்டுவிட்டு அனைத்துக்கும் சாட்சியாக மட்டும் அமைந்து அனைத்தையும் உள்வாங்குவதன் மூலம் தன் முழுமையை நோக்கிச் செல்லவேண்டியவர் அந்த சாது. அந்த முரண்பாடு இந்திய சிந்தனையில் என்றும் இருந்துகொண்டே இருப்பது.

காந்தி கண்முன் சாகப்போகும் ஆடுகள் பற்றி ஆதுரத்துடன் காந்தி கேட்கும்போது சாது சட்டென்று ஒட்டுமொத்த மானுடவரலாற்றையும் சுட்டிக்காட்டுகிறார். ஆம் ஆடுகள் வழிநடத்தப்பட்டு பலிபீடம் நோக்கிக் கொண்டுசெல்லப்படுகின்றன. ஆனால் மானுட வரலாறெங்கும் இந்த பலிபீடம் ரத்தம் உலராமல் இருந்துகொண்டுதானே இருக்கிறது? தலைவர்கள் கோடிக்கணக்கான மக்களை அதை நோக்கி வழிநடத்திச் சென்றுகொண்டிருக்கிறார்கள். பலிபீடத்தில் தலைநீட்டி செத்துக் குவிந்துகொண்டே இருக்கிறார்கள் மனிதர்கள். அதற்கென்ன செய்வது?

காந்தியின் கர்மயோக உந்துதலின் எல்லையைச் சுட்டிக்காட்டுகிறார் சாது. கண்ணெதிரே தெரியும் ஒன்றுக்காக, சாத்தியமான வரை போராடிப்பார்க்கலாம் என்பதே காந்தி செய்யக்கூடுவது. தன்னாலான கடமையைச்செய்தேன் என்ற நிறைவையன்றி எதையும் அவர் எதிர்பார்க்கவும் முடியாது. சாதுவைப்பொறுத்தவரை எல்லா இடங்களும் அவருக்கு ஒன்றே. எல்லா உயிர்களும் ஒன்றே. இவை இங்கே இப்படித்தான் நடக்கின்றன என்ற பிரக்ஞையே அவரை அங்கே அப்படி அமரச்செய்திருக்கிறது. அவர் தன் கண்முன் காணும் உலகம் மாபெரும் கொலைக்களம்.

காந்தி அப்போது ஓர் நாற்பதாண்டுக்காலத்தை முன்னோக்கிப் பார்க்கமுடியக்கூடிவராக இருந்திருந்தால் அந்த ஆலயப்பலிபீடத்தைக்காட்டிலும் பிரம்மாண்டமான பலிபீடங்களின் முடிவில்லாத வரிசையை அவர் காணப்போவதை உணர்ந்திருப்பார். அவர் இரு உலகப்போர்களைக் கண்டார். முதல் உலகப்போரின் பலிபீடத்துக்கு அவரே பலியாடுகளைத் திரட்டி அனுப்பினார். உலகம் ஒரு அழிவுசக்தியிடம் அகப்பட்டுவிடக்கூடாதென்பதற்காக அதைச்செய்தார். அந்த செயலின் பயனின்மையை உணர்ந்து இரண்டாம் உலகப்போரின் பலிபீடத்தை எதிர்த்து வீணாகப் போராடி செயலிழந்து நின்றார்.

காந்தியின் கடைசிநாளில் அவர் காளிகோயிலின் ரத்த ஆறை விடப்பெரிய குருதிக்கடலின் அலைகளைக் காணநேர்ந்தது. உலகப்போரின் பலிக்கணக்குகள் வெளியாயின. விஷச்சாலைகளின் திரள்மரணங்கள். அணுகுண்டுகளின் பேரழிவுகள். எந்த மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தாரோ அந்த மக்கள் தங்கள் மூடத்தனத்தால் வெறுப்பை வளர்க்கும் தலைவர்களை நம்பி மந்தைமந்தையாகச்சென்று பலியாவதைக் கண்டார். கைகூப்பி கண்ணீருடன் ‘வேண்டாம் பலிகள் வேண்டாம்’ என்று மன்றாடியபடி மானுடத்தின்மைந்தன் கொலைவெளியில் தள்ளாடி நடந்தார்.

பலிபீடத்தின் முன் பிரார்த்தனையுடன் நின்ற அவர் அவமதிக்கப்பட்டார். வசைபாடப்பட்டார். சிறுமை செய்யப்பட்டார். அவரது நண்பர்களாலும் சீடர்களாலும் புறக்கணிக்கப்பட்டார். கடைசியில் அந்த பலிபீடத்திலேயே அவரும் இறந்தார்.

காந்தியை ஏன் அந்தச் சாது அழைத்தார். அவரிடம் என்ன பேச, என்ன கேட்க விரும்பினார். அவருக்கு எதிலும் அக்கறை இருக்கவில்லை. ஆனால் காந்தி அவரை ஈர்த்தார். சில மனிதர்கள் காலத்திரையில் விழுந்த துளைகளைப்போல. அவர்களினூடாக நெடுந்தூரத்தைக் கண்டுவிடமுடியும். காந்தி அப்படித்தெரிந்தாரா என்ன?

’இந்த பலிபீடத்தை நோக்கிப் பேசுகிறாயே இன்னும் எவ்வளவு பெரிய பலிபீடங்கள் உனக்குக் காத்திருக்கின்றன’ என்று அந்த சாது சொன்னார் என்று நான் நினைத்துக்கொள்கிறேன்.

முந்தைய கட்டுரைஏடுதொடங்கல்
அடுத்த கட்டுரைபெண் 4,பொதுவெளியில் பெண்கள்…