காந்தியின் கால்கள்

நண்பர் வெ .அலெக்ஸுடனும் பாரி செழியனுடனும் பேசிக்கொண்டிருக்கும்போது ராகுல சாங்கிருத்யாயன் பற்றிய பேச்சுவந்தது. நான் அவரது ஊர்சுற்றிபுராணம் என்ற நூலைப்பற்றிச் சொன்னதுமே அலெக்ஸின் முகம் மலர்ந்தது. ஊர் சுற்றுவதன் மகத்துவத்தைப் பேசும் ஒரு நூல் அது. இளமைப்பருவத்தில் தன் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கிய நூல் அது என்றார் அவர். ‘நான் ஊர் சுற்றி, இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறேன்?’ என்ற எண்ணத்தை அது உருவாக்கியது என்றார்.

நான் ராகுல்ஜியின்நூலை வாசிக்கும்போது ஏற்கனவே பெரும் ஊர்சுற்றி. என் பத்தொன்பதாவது வயதில் ஆரம்பித்த ஊர்சுற்றல் இன்றுவரை நீடிக்கிறது. என் மனதில் ஊர்சுற்றல்மேல் மோகத்தை ஆரம்பித்துவைத்த ஞானகுரு யார் என்று பேருந்தில் திரும்பும்போது யோசித்தேன். காந்திதான் என்று தோன்றியது ஆறாம்வகுப்பில் ‘அகிம்சை’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதி நான் பரிசாகப்பெற்ற சத்தியசோதனையில் இருந்துதான் அந்த வேகம் எனக்குள் படிந்தது.

சத்தியசோதனையை காந்தியின் ஊர்சுற்றல்களின் பதிவு என்று சொன்னால் அது பிழையல்ல. நூல்முழுக்க அந்த காந்தி பயணம்செய்துகொண்டே இருக்கிறார். லண்டனுக்கு. பின் ஐரோப்பாவுக்கு. அதன்பின் தென்னாப்ரிக்காவுக்கு. பின்பு இந்தியா முழுக்க. பின் பர்மாவுக்கு, மலேசியாவுக்கு, இலங்கைக்கு. கப்பலில் ரயிலில் பேருந்தில் படகில் காந்தி சென்றுகொண்டே இருக்கிறார். கடைசிக்கணம் வரை அவர் பயணத்திலேயே இருந்தார்.காந்தியை மகாத்மாவாக ஆக்கியது பயணம்தான்.

காந்தியின் பயணங்கள்தான் ஊர்சுற்றிப்பயணத்தின் சரியான உதாரணம். நான் இன்றுவரை கடைப்பிடிக்கும் எல்லா விதிகளையும் காந்தி தனக்கென உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அவருக்குப் பயணம்தான் முக்கியம், அதிலுள்ள சுகபோகங்களும் வசதிகளும் ஒன்றும் அல்ல. வசதிகளைப்பற்றி அவர் கவலைப்படுவதே இல்லை. செல்லுமிடத்தின் உணவு, தங்குமிடம், தெரிந்தவர்கள் எதைப்பற்றியும் யோசிப்பதில்லை. பார்த்துக்கொள்ளலாம் என்று கிளம்பிச்சென்றுவிடுகிறார்.

காந்தி தன் உடல்வலிமை மேல் அபாரமான நம்பிக்கை கொண்டிருக்கிறார். அந்த நம்பிக்கை ஊர்சுற்றிக்கு அவசியம். எப்போதும் தன் உடல்நலக்குறைவைப்பற்றியே சொல்லிக்கொண்டிருப்பவர்கள் நிறையபேர் உண்டு. அவர்களுக்கும் ஊர்சுற்றலுக்கும் சம்பந்தமிருக்கமுடியாது. ‘நான் உடல்வலிமை மிக்கவன்’ என்று காந்தி தன் சுயசரிதையில் பல இடங்களில் குறிப்பிடுகிறார்.தன்னால் எந்தக் குளிரையும் வெயிலையும் சமாளிக்க முடியும் என நினைக்கிறார். அந்த நம்பிக்கை இருந்தால் சமாளிப்பதொன்றும் பெரிய விஷயமல்ல.

காந்தி லண்டனில் சாதாரண உடையுடன் கடுங்குளிரை எதிர்கொள்கிறார். தன் அறைக்குள் குளிர்ந்த வெளிக்காற்று வரவேண்டுமென்பதற்காகவே கண்ணாடிச்சன்னல்களை உடைத்துத் துளையிட்டு வைக்கிறார். இன்னொரு சந்தர்ப்பத்தில் கல்கத்தாவில் இருந்து ஹரித்துவார் வரை திறந்த ரயில்பெட்டியில் மே மாத வெயிலில் நின்றுகொண்டு பயணம்செய்கிறார்.மேலே சுட்டெரிக்கும் சூரியன். கீழே கொதிக்கும் வாணலிபோல இரும்புத்தரை. ’நாங்கள் நன்றாக வறுபட்டோம்’ என்கிறார் காந்தி. புகார் சொல்வதில்லை, துன்பங்களை வர்ணிப்பதில்லை. பயணம் இனியதென்றால் எல்லா அனுபவங்களும் பயணத்தின் இனியபகுதிகளே என உணர்வபனே ஊர் சுற்றமுடியும்.

காந்தி மிகமிகச்சிக்கனமாக ஊர்சுற்றுகிறார்.ரயில், கப்பல்களில் மூன்றாம் வகுப்பு. அவை அன்று எப்படி இருந்திருக்குமென நாம் ஊகிக்கலாம். பர்மா பயணம் பற்றிச் சொல்லும்போது ’கழிப்பறையில் மலம் குவிந்துகிடந்தது. அதை மிதித்துத்தான் கழிப்பறைக்குள் நுழையவே முடியும்’ என்கிறார் காந்தி. ரயில்பெட்டிகளின் அசுத்தம் பற்றி மீண்டும் மீண்டும் எழுதுகிறார். ஆனால் ஆதை அவர் எளிதாக எடுத்துக்கொள்வதில்லை. அதிகாரிகளிடம் புகார் செய்கிறார். சட்டப்படி போராடுகிறார். முடிந்தால் அவரே சுத்தம்செய்ய அமர்ந்துவிடுகிறார்.

பயணச்செலவைக் குறைக்கத்தெரியாதவனால் ஊர்சுற்றியாக வாழமுடியாது. பயணச்செலவுக்காக சேமிக்கவே அவன் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவிடவெண்டியிருக்கும். காந்தி செல்லுமிடங்களில் மிகமிக எளிய உணவைத் தேடிப்பிடித்து உண்கிறார். தெரிந்தவர்களைப் பயன்படுத்திக்கொள்கிறார். கணக்கை எப்போதும் கவனமாக வைத்திருக்கிறார். மிச்சமாகும் பணத்தை அடுத்த பயணத்துக்குச் செலவிடலாமே என நினைக்கிறார்.

ஆனால் காந்தி அனுபவம் மூலம் சிலவற்றைக் கற்றும் இருக்கிறார். செல்லுமிடங்களில் கிடைப்பதை கவனமில்லாமல் உண்பதில்லை. அது உடலைக்கெடுத்துவிடும் என்று தெரியும். தனக்கு உகந்த உணவைத் தேடிப்பிடித்து உண்கிறார். ஆடம்பரமான இனிப்பு, கொழுப்பு உணவுகளைத் தவிர்க்கிறார். கடைசியில் அவரே கண்டுபிடித்தது, காய்கறிகளும் பழங்களுமே நல்ல உணவு என்பது. நானும் என் அனுபவத்தில் அதையே கண்டுபிடித்தேன். எந்த ஊர்சுற்றியும் அதேபோல உணவைப்பற்றிய கண்டுபிடிப்புக்கு வந்து சேர்ந்திருப்பான்.

காந்தி ஊர்சுற்றிக்கு அவசியமான மிக முக்கியமான ஒரு குறிப்பை பல இடங்களில் அளிக்கிறார். நடந்து பார்ப்பது. லண்டனை அவர் நடந்தே சுற்றுகிறார். முதன்முதலாகப் பாரீஸுக்குச் செல்லும்போது ஒரு மலிவான வரைபடத்தை வைத்துக்கொண்டு பாரீஸ் நகரைக் காலாலேயே சுற்றிப்பார்க்கிறார். கல்கத்தா வரும்போதும் நகரைப் பலநாட்கள் நடந்து நடந்து சுற்றிப்பார்க்கிறார். உணவகங்கள்,சரித்திரமுக்கியத்துவமுடைய இடங்கள்,முக்கியமான மனிதர்களின் இல்லங்கள் எங்கும் நடந்தே செல்கிறார்.

ஒரு ஊரை நடந்து பார்ப்பது மட்டுமே நீண்டகால அளவில் மனதில் நிற்கிறது, வாகனங்களில் பயணம்செய்து பார்க்கும் அனுபவம் மிக விரையில் நினைவிலிருந்து அழிந்துவிடுகிறது என ஊர்சுற்றிகளுக்குத் தெரிந்திருக்கும். நடப்பது அந்த மண்ணுடன் ஓர் உறவை உருவாக்குகிறது. நம் கண்ணும் காதும் காட்சிகளை உள்வாங்கிக்கொள்ள கால அவகாசத்தை அளிக்கிறது. அனைத்தையும்விட மேலாக நாம் அங்கே அதற்குள் அதன்மேல் இருக்கிறோம் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. வாகனங்களில் இருக்கையில் நாம் வேறெங்கோ இருந்து அந்த ஊரைப் பார்ப்பதாகவே உணர்வோம். ஒரு தொலைக்காட்சித்திரையில் பார்ப்பதற்கும் அதற்கும் வேறுபாடில்லை.

காந்தி ஒரு மிகத்தேர்ந்த ஊர்சுற்றிக்குரிய பயணத்திட்டத்தைக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்திலேயே அவர் அதை வந்தடைந்திருப்பது நடுவயதில் அங்கே வந்துசேர்ந்த எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர் எந்தத் திட்டமும் இல்லாமல் மனம்போனபோக்கில் பயணம்செய்வதில்லை. அதேசமயம் கனகச்சிதமாகத் திட்டமிட்டுக்கொண்டு திட்டத்தை செயல்படுத்துவதையே பயணமாகக் கொண்டிருப்பதுமில்லை. செல்லவிருக்கும் பயணத்தைத் திட்டமிடுகிறார். சென்று சேரும் ஊரைப்பற்றித் தகவல்களை சேகரிக்கிறார். ஆனால் தற்செயல்களுக்கும் பயண மாற்றங்களுக்கும் போதிய இடத்தை எப்போதுமே அளிக்கிறார்

ஓர் ஊரில் இறங்கும்போது காந்தி அந்த ஊரைப்பற்றிய தகவல்களை ஏற்கனவே அறிந்து வைத்திருக்கிறார். அங்கே சென்று இறங்கியபின் தகவல்களை சேகரிப்பதில்லை. அங்கே அவர் நேரடி அனுபவங்களை மட்டுமே அடைய விரும்புகிறார். அந்த ஊரிலுள்ள முக்கியமான மனிதர்கள், வரலாற்றுச்சிறப்புள்ள இடங்கள் மற்றும் சிறப்பான நிகழ்வுகள் ஆகியவற்றை சென்று பார்க்கிறார். அவரது சுயசரிதையில் அவ்வாறு வந்துகொண்டே இருக்கும் ஊர்களும் மனிதர்களும் பிரமிப்பூட்டுகின்றன. நம் தலைவர்களில் எவரேனும் காந்தியளவுக்கு உலகைப் பார்த்திருப்பார்களா என்று வியக்கத்தோன்றுகிறது.

காந்தியின் பயணத்தில் முக்கியமான அம்சம் அவர் பயணத்தை அனுபவங்களுக்காக, அவதானிப்புகளுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார் என்பது. அவர் தன் பயணங்களில் பெரும்பாலும் தனியாகவே சென்றிருக்கிறார். அல்லது அந்தரங்கமான நண்பர்களுடன். பயணத்தில் அவர் நூல்களை வாசித்ததைப்பற்றி அனேகமாகக் குறிப்புகள் இல்லை. சலிப்பூட்டும்படி மாதக்கணக்கில் நீளும் கப்பல்பயணங்களில் கூட அவர் மிகக்குறைவாகவே வாசிக்கிறார். பெரும்பாலும் சகமனிதர்களை அவதானிக்கவே அவரது நேரம் செலவிடப்படுகிறது. எல்லாப் பயணங்களிலும் காந்தி அந்தப்பயணத்தில் கூடவந்த மனிதர்களின் இயல்புகளை, சமூகச்சூழல்களை நுணுக்கமாக கவனித்து பல வருடங்களுக்குப்பின் சுயசரிதையில் பதிவுசெய்திருப்பதைக் காணலாம்.

ஊர்சுற்றியான காந்தி உலகை , இந்தியாவை சுய அனுபவமாக அறிந்தவர். வரலாற்று நூல்களின் வழியாக அல்லாமல் மானுடஇனத்திடமிருந்து நேரடியாகவே மானுட வரலாற்றைக் கற்றவர். அன்றைய நம் தலைவர்கள் எவருக்கும் தெரியாத ஐரோப்பாவை அவர் அறிந்திருந்தார். ஒடுக்கப்பட்ட ஐரோப்பா , மறைக்கப்பட்ட ஐரோப்பா, போராடும் ஐரோப்பா. பின்னாளில் ஐரோப்பாவின் விழுமியங்களாகத் திரண்டுவந்தவை கருக்கொள்ளும்போதே அவற்றை காந்தி உணர்ந்திருந்தார். அவற்றின் நாயகர்களுடன் தொடர்பும் கொண்டிருந்தார்

இந்தியாவை காந்தி அறிந்ததுபோல எவரும் அறியவில்லை. குமரிமுனை முதல் வடநுனி வரை ஒவ்வொரு சந்துக்கும் காந்தி சென்றிருக்கிறார். ஒவ்வொரு ஊரிலும் காந்திக்குத் தெரிந்தவர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு பகுதி மக்களின் வாழ்க்கையும் பிரச்சினைகளும் கனவுகளும் அவருக்குத்தெரியும்.

இந்திய ஞானமரபில் ஊர்சுற்றி என்ற ஆளுமையை இருசொற்கள் வழியாகச் சுட்டுகிறார்கள். நாடோடி (பவ்ரஜகன், அநகாரிகன்) இன்னொன்று அவதூதன். நாடோடி தன் நாட்டைத்துறந்து ஊர் ஊராக அலைபவன். அனுபவங்கள் முன் தன்னைத் திறந்து போடுபவன். அவ்வனுபவங்கள் வழியாக அவன் முதிர்ந்து கனிந்து ஞானியாக ஆகும்போது அவதூதனாகிறான். அப்போதும் அவன் ஊர்சுற்றிதான். காந்தி முதல் நிலையில் இருந்து கடைசி நிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஊர்சுற்றி.

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Oct 16, 2012

முந்தைய கட்டுரைகா.அப்துல் கபூர்
அடுத்த கட்டுரையோகம், கடிதம்