அஞ்சலி: ம.ரா.போ.குருசாமி

சங்க இலக்கியத்தில் எனக்குப்பிடித்த கவிஞர்களில் முதல்வர் கபிலர்தான். நான் வாழும் மழைக்காட்டுச்சூழலை எழுதியவர் அவர். ஒருமுறை புத்தகக் கண்காட்சியில் கபிலம் என்ற நூலைக் கண்டேன். கபிலர் எழுதிய எல்லாப் பாடல்களையும் ஒரே நூலாக உரையுடன் தொகுத்திருந்தார்கள். அதைத் தொகுத்தவர் பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி அவர்கள். அவ்வாறுதான் அவர் எனக்குப்பழக்கமானார். அதன்பின் அவரது பலநூல்களை வாங்கி வாசித்தேன்.

ஆனால் நேர்த்தொடர்பு ஏற்படுவது மேலும் கொஞ்சநாள் கழித்து. என் மகளைப்பற்றி நான் எழுதிய ’ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு’ என்ற தொடர் கோவையில் இருந்து வெளிவந்த ரசனை என்ற சிற்றிதழில் வெளிவந்த நாட்களில் அதன் ஆசிரியரும் என் நண்பருமான மரபின்மைந்தன் முத்தையா ஒருமுறை ‘உங்களுக்கு ஒரு பெரிய ரசிகர் இருக்கார். ஒவ்வொரு கட்டுரைக்கும் கூப்பிட்டுப் பேசுவார். நவீன பிள்ளைத்தமிழ்னு சொல்லிப் புளகாங்கிதப்படுவார். பெரிய அறிஞர். பழுத்தபழம். மரா.பொ.குருசாமின்னு பேரு” என்றார்

நான் ஆச்சரியத்துடன் ‘அவரா…நான் அவரோட புத்தகங்களை வாசிச்சிருக்கேனே..’ என்றேன். ‘ஒருநாளைக்கு வாங்க பெரிசு பாக்க ஆசைப்படுது’’ என்றார் முத்தையா. ஆனால் நான் அப்போதெல்லாம் கோவை செல்வது அபூர்வம். இன்றுபோல வாசகர் வட்டமெல்லாம் அன்றில்லை.

அதற்கு இரு வருடங்கள் கழித்து எனக்கு இளையராஜா அறக்கட்டளை வழங்கிய ‘பாவலர் வரதராஜன் விருது’ அளிக்கப்பட்டது. அன்று வாழ்நாள்சாதனைக்கான விருது பேராசிரிய ம.ரா.போ.குருசாமிக்கு வழங்கப்பட்டது. விருது பெற நான் என் குடும்பத்தை அழைத்துச்சென்றிருந்தேன். சென்னையில் ஒரு விடுதியில் தங்கினோம். ம.ரா.போ.குருசாமி அவர்கள் வந்து ஒரு நண்பர் இல்லத்தில் இருப்பதாகச் சொன்னார்கள். மதியம் அரங்குக்குச் சென்றபோதுதான் அவரைப்பார்த்தேன்

என்னைக்கண்டதும் கைகளை நீட்டி முகம் மலர்ந்து காத்திருந்தார். நான் அருகே சென்று அவர் கைகளைப்பற்றிக்கொண்டேன். ‘நான்தான் பிள்ளைத்தமிழ் ஆசிரியர்’ என்றேன். ‘தெரியுமே…முகம் அவ்ளவு பழக்கம்’ என்றார் ம.ரா.போ.என் குழந்தைகளை அறிமுகம் செய்து வைத்தேன். சைதன்யாவைப் பார்த்து ‘இவள்தானா? இப்ப பெரியவளாயிட்டா…மனசிலே சின்னக்குழந்தையாவே பதிஞ்சிருக்கு’ என்றார்.

மேடையில் அவருக்குப் பரிசளிக்கப்பட்டபோது பக்கத்திலேயே இருந்தேன். இளையராஜா வந்தபோது பரவசத்துடன் கையெடுத்துக் கும்பிட்டு ‘என்ன ஒரு தேஜசோட இருக்கான்….பெரிய கலைஞன்…’ என்றார்.அவர் கும்பிடுவதை இளையராஜா அசப்பில் திரும்பியபோது பார்த்தார். அருகே வந்து அமர்ந்திருந்த அவரது முழங்கால்களைத் தொட்டு வணங்கிவிட்டுச் சென்றார். ‘என்னா சங்கீதம்…பாட்டுக்கு நடுவே வயலின்கித்தார் வந்தா ஏண்டா மறுபடி பாட்டைப் போடுறேன்னு கத்த வச்சிருவான்’ என்ற குருசாமி மீண்டும் இளையராஜாவைப்பார்த்துப் பக்கவாட்டில் கும்பிட்டார். அவருக்கு அவரைப்பற்றிய நினைப்பே இருக்கவில்லை. அவருக்கு அன்று வாழ்நாள்சாதனைக்கான விருது அளிக்கப்படுகிறது என்ற பிரக்ஞையும் இல்லை.

[கைத்தடியுடன் ம.ரா.போ]

அதன்பின் அவரிடம் நான் இருமுறை தொலைபேசியில் பேசினேன். அவரே என்னை ஒருமுறை கூப்பிட்டது ’இன்றைய காந்தி’ நூல் வெளிவந்தபோது. இளமைப்பருவத்தில் இருந்தே தீவிரமான காந்திபக்தர் அவர். ஒரு காந்தியவாதியாக வாழ்ந்து முழுமைகொண்டவர். தமிழகத்தின் எல்லா காந்திய இயக்கங்களுடனும் அவருக்கு நெருக்கமான தொடர்பும் பலவற்றில் முக்கியமான பொறுப்புகளும் இருந்தன. தொலைபேசியில் அவரது குரல் உணர்ச்சிமிகுதியில் நடுங்கியது. ‘காந்தி எங்களோட போயிடுவாரோன்னு ஒரு சந்தேகம் அப்பப்ப வரும்..இப்ப இல்லை. தமிழிலே மறுபடி அவரைக் கொண்டாந்து நிறுத்திட்டீங்க…இனி இந்தத் தலைமுறையிலே யாரும் அவரை ஒண்ணும் செஞ்சிரமுடியாது…ஆசீர்வாதம்…நல்லா இருங்க’ என்றார்.

வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார். மறுநாளே மீண்டும் கூப்பிட்டார். அந்நூலை அவர் ஏற்கனவே வாசித்திருந்தார். மீண்டும் வாசிக்க ஆரம்பித்து அன்றன்று வாசித்ததைக் கூப்பிட்டு சொல்வார். ‘…அம்பது வருஷமா காந்தியப்பத்தி பேசுறோம்.இதிலே கால்வாசிகூட நாங்க சிந்திச்சதில்லே’ என்றார் ஒருமுறை. நான் ‘அதிலே உள்ளதிலே பல விஷயங்கள் நானே பல காந்தியவாதிகள்ட்ட பேசித் தெரிஞ்சுகிட்டது, சமீபகாலத்திலே வெள்ளைக்காரங்க எழுதினது மீதி. … தொண்ணூறுகளுக்குப் பின்னாடி காந்தி புதிசா பிறந்திருக்கார்…’ என்றேன்.

முத்தையா ஒருமுறை ‘உங்க காந்தி புத்தகத்துக்கு ம.ரா.போதான் கோவை முகவர்’ என்றார். வீட்டுக்கு ஒருமுறை சென்று பார்க்க விரும்பினேன். முத்தையா அழைத்துச்சென்றார். நாஞ்சில்நாடனும் நானும் சென்றோம். மிக உற்சாகமாக வாசலுக்கு வந்து அழைத்துச்சென்றார். அன்று அவரது நினைவுகளை சொல்லிக்கொண்டே இருந்தார். திரு.வி.கல்யாணசுந்தரனார், மு.வரதராசன், ம.பொ.சி, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் எனப் பல வரலாற்றுநாயகர்கள் பேச்சில் வந்து சென்றார்கள்.

மு.வரதராசனாரின் இயற்கைமருத்துவ நம்பிக்கை அவரைக் கைவிட்டதைப்பற்றிச் சொன்னார். அவரது மகன்கள் அலோபதி சிகிழ்ச்சை அளிக்க விரும்பினார்கள். அவர் மறுத்துவிட்டார். பிறகு அவர் ஒத்துக்கொண்டபோது நோய் கட்டுமீறிச் சென்றுவிட்டிருந்தது. தெ.பொ.மீ தமிழறிஞராக அறியப்பட்டாலும் வாழ்நாளின் கடைசிக்காலத்தில் மிகச்சிறந்த தியானபயிற்றுநராக இன்னொரு வட்டத்தில் பெரும் மரியாதையுடன் இருந்ததைப்பற்றிச் சொன்னார். அவரை குருதேவர் என்றுதான் அவர்கள் அழைத்தார்களாம்.

திருவிக பற்றி அவர் சொன்ன ஒரு சித்திரம் என்னை உலுக்கியது. அவர் திருவிகவைப் பார்க்கச்செல்லும்போது திருவிகவுக்கு வயதாகிவிட்டது. ஒரு அறையில் பாயில் கவனிப்பாரில்லாமல் கிடந்தார். முதிர்ந்து வற்றிய உடல்… நான் ‘அவருக்குக் குழந்தைகள் இல்லைன்னாலும் நிறையப் பேரை வளர்த்தாரே’ என்றேன். ‘…ஆமா ஆனா பொதுவுடைமை அது இதுன்னு கடைசி காசையும் விட்டுட்டார். கையிலே சில்லறை இல்லேன்னா யாருக்கு அக்கறை?’ என்றார் ம.ரா.போ.

நான் அதிர்ந்தேன். திருவிக அவரது வாழ்க்கை வரலாற்றை முடிக்கும்போது தனக்குப் பிள்ளைகள் இல்லாவிட்டாலும் தன் வீடு நிறையக் குழந்தைகள் என்று எழுதியிருப்பார். இளமையிலேயே மனைவியை இழந்தாலும் தன்னைச்சுற்றித் தன் வளர்ப்புமகள்கள் நிறைந்திருப்பதனால் பெண்மையால் சூழப்பட்டுப் பெண்மையின் நடுவில் வாழ்வதாகப் பெரும் களிப்புடன் சொல்லியிருப்பார். அது ஒரு இலட்சியவாத உச்சமனநிலை என்று தெரியும். ஆனால் யதார்த்தம் அதன் மறுபக்கமாக இப்படி அப்பட்டமாக இருக்குமென்பது நான் நினையாதது.

அன்று பேசிவிட்டு வரும்போது மரபின்மைந்தன் முத்தையா ’நெறைய நினைவுகள் வச்சிருக்கார். எழுதச்சொல்லணும்’ என்றார். நானும் அவரிடம் அவற்றை எழுதச்சொல்லலாம் என்று வற்புறுத்தினேன். ம.ரா.போ அவர்களின் வாழ்க்கை திருவிக, மு.வ, ம.பொ.சி ஆகிய மூவருடனும் ஆழமாகப் பின்னிப்பிணைந்தது. மு.வ அவரது இலக்கிய ஆசான். ம.பொ.சி அவரது அரசியல் வழிகாட்டி. அவர்களைப்பற்றிய நினைவுகளை அவர் ரசனை இதழில் தொடர்ந்து எழுதினார். தமிழ்ப்பெரியார்களின் வழக்கப்படி முன்னோடிகளின் நல்ல அம்சங்களை மட்டுமே தொட்டுச்செல்லும் கட்டுரைகள் அவை. அவை நூலாக வந்துள்ளன என நினைக்கிறேன்.

ம.ரா.போ குருசாமி அவர்கள் 15-6-1922ல் விருதுநகர் அருகே மம்சாபுரத்தில் பிறந்தவர். தந்தை இராக்கப்பன். தாய் அன்னம்மாள். அண்ணா ம.ரா.சண்முகசுந்தரம் அவர்களால் வளர்க்கப்பட்டு சென்னை மயிலாப்பூரில் உயர்நிலைக்கல்வி பெற்றார். பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் ஆனர்ஸ் படிப்பை முடித்தார். கோவை பூ.சா.கோ.கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

ம.ரா.போ அவர்களின் தமிழ்ப்பணி பல தளங்களில் விரிந்து கிடக்கிறது. முதன்மையாக அவர் ஒரு கம்பன் உரையாசிரியர். கோவை கம்பன்அறநிலை கம்பராமாயணப்பதிப்பில் அவரது பங்களிப்பு முக்கியமானது. சங்கப்பாடல்களை செம்பதிப்பாகக் கொண்டுவருவதிலும் பெரும்பணியாற்றியிருக்கிறார். அவரது தமிழ்விளக்க நூல்கள் பள்ளி,கல்லூரி அளவில் பாடநூல்களாக இருந்திருக்கின்றன.

6-10-2012 அன்று மதியம் மரபின்மைந்தன் கூப்பிட்டார். ‘ம.ரா.போ போய்ட்டார்’ என்றார். சிலகாலமாகவே உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில்தான் இருந்திருக்கிறார். கடைசிநாட்களில் ஒருமுறை மரபின் மைந்தனைக் கூப்பிட்டாராம். பிறரைப் போகச்சொல்லிவிட்டு அந்தரங்கமாகப் பேச விரும்பினாராம். ‘அவருக்கு வந்த ஏதோ சில காட்சிகளைப்பத்தி சொன்னார். ஒரு பெரிய கோயில். அது நெறைய நடனச்சிற்பங்கள்…சிற்பங்கள் உண்மையிலேயே நடனமாடிட்டிருக்கு..அந்தமாதிரி ஏதோ சொன்னார். வாய் குளறினதனாலே என்னால சரியா புரிஞ்சுகிட முடியலை ‘என்றார் மரபின்மைந்தன்.

ஆச்சரியமாக இருந்தது. முன்பு எப்போதோ எனக்கு அப்படி ஒரு காட்சி தோன்றிருக்கிறது. ஆபேரியில் நகுமோமுகனலே பாடலை நாதஸ்வரத்தில் கேட்டுக்கொண்டு கண்ணயர்ந்தபோது. அதை நான் என் ஏறும் இறையும் என்ற கதையில் சித்தரித்திருக்கிறேன். ஒரு சைவருக்கு அந்தவகையான மனச்சித்திரம்தான் வருமோ? எல்லாம் ஒரு நடனமாக நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வெளி. தழல்போல நீர்நிழல் போல அனைத்து நடனமிடும் ஒரு பரப்பு. அது விண்ணிலிருக்கும் கைலாயமா மண்ணிலிருக்கும் வாழ்க்கையேதானா?

முந்தைய கட்டுரைஉள்ளே இருப்பவர்கள், பழையபாதைகள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரையூத்து-சிரிப்பு-கடிதங்கள்