எண்பதுகளில் வடகேரளத்தில் இருந்து வெளிவந்த சூசீமுகி என்ற சூழியல் சிற்றிதழ் என்னுடைய பிரக்ஞை உருவாக்கத்தில் முக்கியப்பங்கு வகிப்பது. சைலண்ட் வாலியைக் காப்பதற்கான போராட்டத்தில் அதன் பங்களிப்பு முக்கியமானது. பின்னாளில் இந்திரா இறந்தபோது ‘இந்திராகாந்தியின் போஸ்ட் மார்ட்டம்’ என்ற கட்டுரையை வெளியிட்டமைக்காக அதன் ஆசிரியர் தாக்கப்பட்டார். இதழ் நின்று போனது. சூசீமுகி இதழில்தான் பாரி காமனர் எனக்கு அறிமுகமானார்.
பாரி காமனரின் சில கட்டுரைகளை ஆரம்பத்தில் துண்டுப்பிரசுரங்களாக வாசித்திருக்கிறேன். சிலவற்றை நானே சூழியல் அமைப்புகளுக்காக மொழியாக்கமும் செய்திருக்கிறேன். சூழியல் குறித்த என்னுடைய சிந்தனைகளை அறிவியல்பூர்வமான தரவுகளுடன் இணைத்துக்கொள்வதற்கு அவரது எழுத்துக்கள் உதவியிருக்கின்றன . ஆனால் நான் எப்போதுமே அறிவியல்தரவுகளை என் ஐயங்களைப் போக்கிக்கொள்ளவும் என் எண்ணங்களை உறுதிப்படுத்திக்கொள்ளவும்தான் பயன்படுத்துகிறேன். அவற்றை வாதங்களாகத் தொகுத்து முன்வைத்து விவாதிப்பதில்லை.
காரணம் நான் அறிவியலாளன் அல்ல . மேலும் என்னால் அப்படி தகவல்களை சீராகத் தொகுத்து அளிக்கவும் முடியாது. இவ்விஷயங்களில் உள்ளுணர்வை நம்பிச் செயல்படுவதே எழுத்தாளனுக்கு இயல்பானது என்பது என் எண்ணம். தரவுகளுடன் பேச ஆரம்பித்தால் எழுத்தாளனின் மொழியும் நுண்ணுணர்வும் அழியும். எந்தத் தகவலுக்கும் நிகரான எதிர்த்தகவல் இருக்கும். அவற்றை எதிர்கொள்ள மேலும் தகவல்களுக்குள்தான் செல்லவேண்டியிருக்கும். என்னுடைய தகவலறிவை செழுமைப்படுத்த உதவியவர் பாரி காமனர்.
1917 மே 28ல் பிறந்த பாரி காமனர் ஒரு உயிரியல் பேராசிரியர். வாழ்நாளின் பிற்பகுதியில் சூழ்-இதழியலிலும் சூழ்-அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டார். இரண்டாம் உலகப்போரில் கடற்படையில் பணியாற்றியவர் உலகம் ஒரு சூழியல் அழிவின் விளிம்பில் இருப்பதை உணர்ந்து சூழியல்காப்புக்காக Center for the Biology of Natural Systems என்ற அமைப்பை உருவாக்கினார். உலகளாவிய சூழியல்சமநிலைக்கான அரசியல் -பொருளியல் தீர்வுகளை நோக்கிப் போராட ஆரம்பித்தார்.
பாரி காமனரின் புகழ்பெற்ற நூல் The Closing Circle 1971ல் வெளிவந்தது. மலையாளம் உட்படப் பலமொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்நூல் சூழியலாளர்களின் செயல்பாடுகளுக்கான முதல்வரைபடம் எனப்படுகிறது. எண்பதுகளில் இதன் சிலபகுதிகளை நான் மொழியாக்கம் செய்திருக்கிறேன். அடிப்படையில் தாக்குப்பிடிக்கும் பொருளியல் பற்றி வாதிடக்கூடிய நூல் இது. மிதமிஞ்சிய உற்பத்தி காரணமாக சூழியலில் உருவாகும் அழிவைச்சுட்டிக்காட்டி உற்பத்தியை நுகர்வுக்கு ஏற்பக் கட்டுப்படுத்துவதைப்பற்றி பேசியது. சூழியலை அழிக்கும் வேதிப்பொருட்களைத் தடைசெய்வது, ஆலைக் கழிவுகளை முழுமையாகவே சமநிலைப்படுத்துவது, குப்பைகளை முழுமையாக மறுசுழற்சி செய்வது ஆகியவற்றுக்காக வாதாடுகிறது.
பாரி காமனரின் முக்கியமான பொருளியல் கோட்பாடு சூழியலாளர்களிடையே அதிகமும் பேசப்படுவது. ஓர் அமைப்பின் பொருளியலைக் கணக்கிடும்போது அது உருவாக்கும் சூழியல் அழிவைப் பொருளியலடிப்படையில் கணக்கிட்டு அதில் கழித்துக்கொள்ளவேண்டும் என்று அதை மிக எளிமையாகச் சொல்லலாம். உதாரணமாக கூடங்குளம் அணு உலையின் பொருளியலைக் கணக்கிடும்போது அது உருவாக்கும் மின்சாரத்தின் மதிப்பில் இருந்து அந்த அணுஉலை நிறுவப்படுவதற்கான செலவையும் அதன் வட்டியையும் கழித்துத்தான் அதன் நிகர லாபம் கணக்கிடப்படுகிறது. கூடவே அந்த உலை உருவாக்கும் சூழியல் அழிவுகளுக்கும் ஒரு விலைமதிப்பு போடப்பட்டு அதுவும் கழித்துக்கொள்ளப்படவேண்டும். அணுக்கழிவுகளைப் பாதுகாக்கும் செலவுகளையும் கழித்துக்கொள்ளவேண்டும்.
அப்படிப்பார்த்தால் நம் கணிசமான திட்டங்கள் பெரும் நஷ்டங்களையே உருவாக்குகின்றன என்பதைக் காணலாம். குறிப்பாகப் பெரிய அணைகள். இதற்கு மாற்றாக சூழியலாளர்கள் முன்வைப்பது மையப்படுத்தப்படாத சிறிய திட்டங்களை . அவை சூழியல் அழிவு மிகமிகக் குறைவானவை. அவற்றுக்கான முதலீடும் குறைவு. எந்த ஒரு வளர்ச்சித்திட்டத்தையும் சூழியல் அழிவைக் கருத்தில்கொண்டு சிந்தனைசெய்வதற்கு பாரி காமனர் குரல்கொடுத்தார். ஒரு பொருளியல் செயல்திட்டம் அதன் சூழியல்பாதிப்பு, எரிபொருள் நுகர்வு, ஒட்டுமொத்தப்பொருளியல் சமநிலையில் அதன் பங்கு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மதிப்பிடப்படவேண்டும் என்று அவர் வாதாடினார் எனலாம்
1980ல் பாரி காமனர் Citizens Party என்ற அரசியலமைப்பைத் தொடங்கினார். பசுமை அரசியலை அமெரிக்கச்சூழலுக்கு அறிமுகப்படுத்தினார். ஆனால் அது அங்கே பெரிதாக எடுபடவில்லை. வாழ்நாளின் கடைசிவரை மிதமிஞ்சிய உற்பத்தி-நுகர்வு சங்கிலியின் விளைவாக உருவாகும் புவிவெப்பமயமாதல், எரிபொருள் நெருக்கடி ஆகியவற்றை முன்வைத்து வாதாடிவந்தார்.2012 செப்டெம்பர் 30ல் மன்ஹாட்டனில் உயிர்துறந்தார்.
என்ன காரணத்தாலோ தொண்ணூறுகளுக்குப்பின் இந்தியச் சூழியல் அமைப்புகளில் பாரி காமனரின் பெயர் அதிகம் பேசப்படாமலாயிற்று. அவரது அரசியல் பிரவேசம் ஒரு காரணமாக இருக்கலாம். அதைவிட புவிவெப்பமயமாதலை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வளரும் நாடுகளின் தொழில்நுட்பங்களை ஒடுக்கவும், தங்களுடைய செலவேறிய புதிய தொழில்நுட்பங்களை அவர்கள் மேல் திணிக்கவும் அமெரிக்க-ஐரோப்பிய பெருநிறுவனங்கள் முயல்கின்றன என்ற குற்றச்சாட்டு தொண்ணூறுகளுக்குப்பின் வலுவாக எழ ஆரம்பித்தது முக்கியமான காரணம். பாரி காமனர் அந்த அமெரிக்கத் பெருநிறுவனங்களின் கருவி என்று வலுவான பிரச்சாரம் இருந்தது. அவரைக் ‘காப்பாற்றும்’ பொறுப்பை ஏற்க இந்திய சூழியலமைப்புகள் தயங்கின.
பாரி காமனர் உலகளாவிய சூழியல் விழிப்புணர்ச்சிக்கு ஒரு முக்கியமான தொடக்கப்புள்ளி என்பதில் ஐயமில்லை. உலகமெங்கும் இன்று கழிவுக்கட்டுப்பாடு, மறுசுழற்சி, தாக்குப்பிடிக்கும் பொருளியல் ஆகியவை அரசுகளின் செயல்திட்டங்களில்கூட இடம்பெற்றிருப்பதற்கு அவரும் காரணம். அவரது வாழ்க்கை ஒரு முழுநேரக் கருத்தியல்போராக இருந்தது. அவரது பங்களிப்பு எவ்வகையிலும் குறைத்து மதிப்பிடத்தக்கதல்ல.
ஆனால் தனிப்பட்ட் முறையில் எனக்கு அவரது எழுத்துக்கள் மேல் சட்டென்று ஓர் ஆர்வமின்மை உருவானது. அவரது புகழ்பெற்ற இரண்டாவது நூலான The Poverty of Power என்னிடம் பதினைந்தாண்டுகளுக்கும் மேலாக வாசிக்கப்படாமலேயே இருந்துகொண்டிருக்கிறது. அவர்மேலான என் விமர்சனங்களை சுருக்கமாக இப்படிச் சொல்வேன்.
நிரூபணவாத அறிவியல் நோக்கும், துறைப் பகுப்பு அணுகுமுறையும்தான் மேல்நாட்டு அறிவியலின் அடிப்படைகளைக் கட்டமைத்துள்ளன. இயற்கையை, மானுட வாழ்க்கையை, பிரக்ஞையை ஒட்டுமொத்தமாக அணுகாமல் தங்களுக்கு ஆர்வமுள்ள, பயிற்சி உள்ள தளங்களில் மட்டுமே கவனம் செலுத்தி அவற்றைப் பிரித்து எடுத்து ஆராய்வதும் அந்தத் தளத்திற்குள் தேவையான தர்க்கமுறையையும் விதிகளையும் உருவாக்கிக்கொண்டு அதற்குள் நின்று விவாதிப்பதும் மேலை அறிவியலின் வழி.
இந்த அணுகுமுறையில் உள்ள அடிப்படைப் பிழைகளில் இருந்தே உலகின் சூழியல் பேரழிவுகள் தொடக்கம் கொண்டுள்ளன. ஆகவே சூழியல் சார்ந்த மாற்றுப்பார்வை இந்த அணுகுமுறைக்கு எதிரானதாகவே இருக்கமுடியும். ஆனால் பாரி காமனரும் அந்த அணுகுமுறைக்குள்தான் செயல்படுகிறார். தன் எதிர்ப்பை அந்த அணுகுமுறையில் இருந்தே அவரும் உருவாக்கிக்கொண்டிருக்கிறார். அதாவது உலகின் சூழியலை அழிக்கும் தொழிற்நுட்பங்களை உருவாக்கும் அதே சிந்தனை அமைப்புதான் பாரி காமனரையும் உருவாக்கியிருக்கிறது. பாரி காமனர் அந்த சிந்தனைமுறையின் ஓட்டைகளைப் பலவாறாகச் சுட்டிக்காட்டியிருந்தாலும் அவரும் அதற்குள்தான் இருந்தார்.
ஆகவேதான் சூழியல் சார்ந்த எதிர்ச்சிந்தனைகள் பாரி காமனர் போன்றவர்களால் முன்வைக்கப்பட்டபோது மேலைத்தொழில்நுட்பம் அவற்றைத் தன்னுள் இழுத்துக்கொண்டு அவற்றையும் புதியவகைத் தொழில்நுட்பங்களாக முன்வைக்க ஆரம்பித்தது. எப்படிப் பெருந்தொழில்நுட்பம் பின்தங்கிய நாடுகளைச் சுரண்டும் கருவியாக ஆனதோ அதைப்போல இந்த சூழியல்தொழில்நுட்பமும் இன்னொருவகை சுரண்டும் கருவியாக மாறியது.
சூழியல் சிந்தனைகளை ஒரு தொழில்நுட்பத்தீர்வு நோக்கிக் கொண்டு செல்லாமல் அவற்றை இன்னொருவகை முழுமையான வாழ்க்கைக்கான தேடல்களாக ஆக்கிய சிந்தனையாளர்கள் மீதே என்னுடைய ஆர்வம் குவிந்தது. காந்தி முதல் மாசானபு ஃபுகோகா வரை அவர்களின் பட்டியல் நீள்கிறது. பாரி காமனர் உலகளாவிய சூழியல் போராளிகளில் ஒருவர் என்றவகையில் மட்டுமே எனக்கு முக்கியமானவர்
பாரி காமனருக்கு அஞ்சலி