விஷ்ணுபுரம்:கடிதங்கள்

ஜெயமோகன்,

இன்று நான் விஷ்ணுபுரத்தை படித்து முடித்தேன். தமிழின் பெரும் படைப்புகளில் ஒன்று. தினமும் விஷ்ணுபுரம் பற்றி ஒரு கடிதமாவது வருகிறது என்று சொன்னீர்கள். இப்போது என்னுடயது.

என்னுடைய சொந்த படைப்பூக்கக் குறைவால் நான் இதில் சில சிக்கல்களைச் சந்தித்தேன். காரணம் இதை கண்முன் காண வார்த்தை வார்த்தையாக வாசிக்கவேண்டியிருக்கிறது. தத்துவமும் எனக்கு சிக்கலாக இருந்தது, ஆனால் சில பக்கங்களுக்குள் நான் அதற்குள் சென்றுவிட்டேன். இந்நாவலில் பல பக்கங்களில் நான் ஆன்மீகமான [ மதம் சார்ந்த அல்ல] உணர்வலைகளை அடைந்தேன். பாஇப்புக்கற்பனை வழியாக அப்படிபப்ட்ட ஓர் அனுபவத்தை அடைவது எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது

இன்று நான் உங்கள் கடைசிச் சிறுகதையான ஊமைச்செந்நாயை படித்தேன். விஷ்ணுபுரம் சொல்வதுபோல கலைஞர்கள் பெரும் படைப்புகள் வெளிப்படும் ஊடகங்கள் மட்டுமே. உங்கள் வழியாக சிறந்த படைப்புகள் வெளிவருகின்றன.  ஆனால் அதற்கு உங்கள் தேடலும் உணர்ச்சியும் பங்காற்றுகின்றன. வாழ்த்துக்கள்

நான் இன்னமும் விஷ்ணுபுரத்தைப்பற்றிப் பேசவேண்டும். அதற்கு நான் அதை மீண்டும் வாசிக்கவேண்டும். சிறிய இடைவேளைக்குப் பின்னர் நான் அதை மீண்டும்விரிவாக வாசித்து இன்னும் நுபமாக உணரவேண்டும். அதற்கு நான் ஒரு தமிழ்-ஆங்கில அகராதியையும் வாங்கிஒயாக வேண்டும் ஹாஹா.  நான் கர்நாடகத்தில் இருக்கிறேன். தமிழில் டஹ்ட்டச்சுசெய்வது தெரியாது ஆகவே ஆங்கிலத்தில் எழுதுகிறேன் விஷ்ணுபுரத்தை தந்தமைக்கு நன்றிகள். இப்போது இந்த தருணத்தில் விஷ்ணுபுரம் எனக்கு மாபெரும் படைப்பு ” தேடல் கொண்டவனுக்கு எந்த நூலும் கடைசி நூல் அல்ல. அவன் அதைத்தாண்டிச்செல்வான்’ [விஷ்ணுபுரம்] நானும் மேலே சென்று இன்னும் மேலான நாவலைஅ டையக்கூடும். அதுவரை இதுதான்

ரங்கா
ரங்கராஜன்
 
அன்புள்ள ரங்கராஜன்

உங்கள் கடிதம் ஆங்கிலத்தில் இருந்தமையாலேயே பதில் எழுத தாமதமாகியது. கடிதத்தை எடுத்து தனியாக வைத்துவிட்டு மறந்துபோய்விட்டேன். மன்னிக்கவும்.

விஷ்ணுபுரம் உங்களைக் கவர்ந்ததை அறிந்து மகிழ்ச்சி. கடிதங்கள் மூலம்தான் நான் அந்த நாவலுக்குள் செல்கிறேன். அதன் பல கதாபாத்திரங்களை நான் மறந்துகூட போய்விட்டேன். நெடுங்காலம் கழித்து சென்ற நாட்களில் ஒன்றில் ஒரு மலைக்கோயிலில் வாழ்ந்த பண்டாரம் ஒருவரைப்பற்றிக் கேள்விப்பட்டபோது நான் அஜிதனின் ஸ்தூபத்தில் வசித்த அந்த பிட்சுவை எண்ணிக்கொண்டேன்

விஷ்ணுபுரம் தேடலின் கதை. தேடல் கொதித்துக்கொண்டிருந்த நாட்களின் கதை. இப்போது? தேடலை திரும்பிப்பார்க்கும் இடத்தில் இருக்கிறேன்
ஜெ

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் நாவலை படித்து முடித்தேன். அது என்னுடைய  வாசிப்பு வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனை. இந்த நாவல் மூன்றுவருஷமாக என்னுடைய புஸ்தக அடுக்கிலே இருந்தது. நான் வாசிக்கவில்லை. ஒரு தயக்கம் இருந்தபடியே இருந்தது. ஏன் என்றால் வாசிக்க முடியுமா என்ற எண்ணம். நான் ஒரு மாடர்ன் காலத்து இளம்பெண். நிறைய படிப்பேன் என்றாலும் என் வாசிப்பு ரஸனை எல்லாம் சுஜாதா , ஜான் அப்டைக் போலத்தானே ஒழிய கிளாஸிக்குகள் எல்லாம் படிக்கும் அளவுக்கு இல்லை. நான் படித்த பெரிய கிளாஸிக் என்றால் தாமஸ் மான் எழுதிய மாஜிக் மௌண்டேன் மட்டும்தான். அதை நான் டைபாயிட் வந்து படுத்திருக்கும்போது வாசித்தேன். அந்த நாவலும் அந்த படுக்கையும் என்னை மிகவும் மாற்றிவிட்டன.

விஷ்ணுபுரத்தை நான் வேலை விஷயமாக ஜப்பான் போகும்போது கொண்டுபோனேன். ஹாங்காங் விமானநிலையத்தில் வாசிக்க ஆரம்பித்து ஒன்றரை மாதத்தில் வாசித்து முடித்தேன். ஓர் உண்மையான கிளாஸிக். இனிமேல் இதைமாதிரி ஒன்றை உங்களாலேயே எழுதமுடியுமா என்றுகூட தோன்றியது மன்னிக்கவும். நான் கிளாஸிக் என்று சொல்லும்போது Intricacy யைத்தான் சொல்கிறேன். அப்புறம் கிளாஸிக்குக்களுக்கு என்று ஒரு தோரணை இருக்கிறது. பெரிய ஆறு போவதுபோல மெதுவாக ஓடவேண்டும். விஷ்ணுபுரத்திலே எனக்குப்பிடித்த விஷயங்கள் இது ரெண்டும்தான். ஏராளமான சம்பவங்கள். நிறைய சர்ச்சைகள் கருத்துக்கள் ஒன்றை இன்னொன்று தாண்டிச்சென்றுகொண்டே இருக்கின்றன. ஆனால் கடைசியில் எல்லாமாகச் சேர்ந்து ஒரு பெரிய சூனியம்.  மாஜிக் மௌண்டேன் படித்த போதும் இந்த சூனியத்தை எனக்கு உணர்ந்துகொள்ள முடிந்தது.

ஆனால்  மாஜிக் மௌண்டேன் ஐ விட விஷ்ணுபுரம் மேலான நாவல்.  மாஜிக் மௌண்டேன் ஒரு Intellectual Text. விஷ்ணுபுரம்  மிகவும் அழகானது. அதில் உள்ள அந்த நதி. சிவப்பான தண்ணீர். அப்புறம் கோபுரங்கள் சிற்பங்கள். அதில் வரக்கூடிய யானைகள். காலையையும் மாலையையும் வர்ணித்திருக்கும் விதம். எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய சொப்பனம் போல மனதில் நிற்கிறது. இந்த அழகுதான் இநாவலின் சிறப்பு. அழகான கிளாஸிக் என்று சொல்லலாம். மற்றபடி இதில் உள்ள சிந்தனைகளைப்பற்றி எனக்கு கருத்து எதுவும் இல்லை. மிகமிகச் சிறந்த நாவல். ஒரு பெரிய  அனுபவம். நன்றி

நிர்மல் கிரண்

அன்புள்ள நிர்மல்

நன்றி. விஷ்ணுபுரம் உண்மையான ஒரு கனவின் சொல்வெளிப்பாடு. சிற்பம் என்பது கண்ணால் காணக்கூடிய தத்துவ, அப்படியானால் ஒரு சிற்ப நகரம்? தத்துவங்கள் எல்லாமே சிற்பவெளியாக மாறிய ஒரு இடத்தை நான் கனவு கண்டேன். அத்தனை சிற்ப வடிவங்களுக்கும் மேலாக எந்த வடிவமும் இல்லாமல் வெறும் சாட்சியாக நிற்கும் ஹரிததுங்கா கூட ஓர் மாபெரும் தத்துவம்தான்

நன்றி

ஜெ

 

 

அன்புள்ள ஜெயமோகன் சார்,

நலமா. தங்களுடைய விஷ்ணுபுரம் நாவலை படிக்கதொடங்கிவிட்டேன். இதுவரை படித்ததில் தங்களின் விவரிப்புகளும், காட்சி அமைப்புகளும் ஒரு சிறந்த ஒளிபதிவாளரும், திரை இயக்குனரும் இணைந்து எடுத்தவை போன்று எனக்கு தோன்றுகிறது. வீரன் என்ற அந்த யானையின் மரணம் ஏன் நெஞ்சை ஏதோ செய்தது. அந்த யானைபாகனின் புத்திரசோகம் வெளிப்பட்ட விதம் அருமை. பெண்ணின் அணிகள்பற்றிய  விவரணை சத்தியமாக பழந்தமிழ் இலக்கியங்களை கரைத்து மட்டுமே குடிதவர்களால் முடியும். நீங்கள் எழுதுவதிற்கு முன் காட்சிகளை உங்கள் கற்பனையில் முப்பரிமாணத்தில் உருவாக்கி, ஒட்டிபார்த்து, பிழைகள் வராமல்
சரிசெய்து எழுதுவீர்கள்போல. விஷ்ணுபுரத்தை படிக்கும் போது அங்கே நானும் அந்த வெளிகளில் அந்தரத்தில் இருந்து பர்துகொண்டிருப்பதுபோல ஒரு உணர்வு ஏற்படுகிறது. சோமன் என்ற பாத்திரத்தின் தேடல் வேட்கை தங்களுடைய ஞானதேடல் வேட்கை போல இருக்கிறது( தங்கள் சொல்வதுபோல நான் ஒரு தத்துவ மாணவன்‘). விஷ்ணுபுரத்தின் பிரமாண்டமும் என்னை கொஞ்சம், கொஞ்சமாக உள்ளே இழுத்து செல்கிறது. புத்தகத்தை முழுவதும் படித்துவிட்டு தங்களுக்கு இதுபற்றி எழுதுகிறேன். என் எழுத்தில் குற்றங்கள் இருந்தால் மன்னிக்கவும்.

அன்புடன்
குரு

அன்புள்ள குரு,

விஷ்ணுபுரம் ஆர்வமாகப்போகிறது என நினைக்கிரேன். அதன் ஒரே சிக்கல் அதல் இணைப்புகளை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே. ஆகவே நீண்ட இடைவெளிகள் விட்டு அதை படிக்கக் கூடாது

கடிதங்கள் மிக தாமதமாகிவிட்ட்ன. மன்னிக்கவும்

ஜெ

 

விஷ்ணுபுரம்,ஊமைசெந்நாய்:கடிதங்கள்

நூல்கள்:கடிதங்கள்

நூல்கள்:கடிதங்கள்

வாசகர் கடிதங்கள்

விஷ்ணுபுரம்: கடிதங்கள்

விஷ்ணுபுரம்:மீண்டும் ஒரு கடிதம்

]தேடல்,விஷ்ணுபுரம்–ஒரு கடிதம்.

இருத்தலின் சமநிலை:ஓர் உரையாடல்

விஷ்ணுபுரம்,யூதமரபு,தியானம்:ஒருகடிதம்

விஷ்ணுபுரம்:இருகடிதங்கள்

விஷ்ணுபுரம்:ஓர் இணையப்பதிவு

 

விஷ்ணுபுரம்,ஏழாம் உலகம்:கடிதங்கள்

முந்தைய கட்டுரைகிளி சொன்ன கதை : 2
அடுத்த கட்டுரைகிளி சொன்ன கதை : 3