மார்ட்டின் லூதரும் காந்தியும்

அன்புள்ள ஜெயமோகன்,

ஏசுவையும் காந்தியையும் ஒப்பிட்டு, மார்ட்டின் லூதரானவர் ஏசுவின் உண்மையான ஞானத்தை மீட்டளித்த ஆன்ம ஞானி என்று பேசியிருக்கிறீர்கள். முதற்கண் காந்தியை ரத்தமும் சதையுமாய் நம்மிடையே உலவி உரையாடி செயல்பட்டு வந்த மாமனிதர் என்று நாம் வரலாறாக அறியும் விதத்தில் ஏசுவை அறிய முடியாது. எனவே, காந்தி என்கிற (ஸ்தூலம் அற்ற) படிமம் மக்களை ஆன்ம அளவில் பாதித்தது போல் யேசு என்கிற படிமமும் பாதித்தது என்ற அளவில் மட்டுமே அதனை எடுத்துக்கொள்கிறேன். ஆனால் அடுத்து ஏசுவின் ஆன்ம ஞானத்தை மீட்டவர் என்று முதல் உதாரணமாக நீங்கள் மார்ட்டின் லூதரை வைப்பதைப் பார்க்கையில் எனக்கு பல சிந்தனைகள் எழுகின்றன.

மார்ட்டின் லூதர் ப்ராட்டஸ்டண்ட் கிறித்துவம் என்கிற சீர்திருத்த கிறித்துவ இயக்கம் தொடங்கியவர்.
யூதர்களைப் பற்றி எழுதுகையில் ஆன்ம ஞானம் இவருக்கு அளவுக்கதிகமாகப் பெருக்கெடுத்து
விடுவதைப்பார்க்கலாம். யூதக் கோவில்கள் திருத்தமுடியாத தீய விலைமகளிர் கூடங்கள் என்றும் யூதர்களைக் கீழ்மையான, பரத்தைத்தனம் நிரம்பிய கும்பல் என்றும், யூதர்கள் சாத்தானின் மலத்தால்
நிரம்பியவர்கள், அந்த மலத்தில் உழலும் பன்றிகள் என்றும் கருணையுடன் திருவாய் மலர்கிறார். ஏசுவை உயிர்த்தெழ வைத்த ஆன்மஞானியான இவர் யூதர்களும் அவர்களது பொய்களும் என்ற புத்தகத்தில்
யூதப்பிரச்சனையைத் தீர்க்க ஏழு ஆன்மீக வழிகளைப்பட்டியலிடுகிறார்:

1. யூதக் கோவில்களும், யூதப் பள்ளிக்கூடங்களும் தீ வைத்துத் தரைமட்டமாக்கப்பட வேண்டும். அதில் மிஞ்சியவற்றைக் கண்காணா இடத்தில் புதைத்து விட வேண்டும்.
2. யூதர்களின் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட வேண்டும். அந்த வீடுகளின் சொந்தக்காரர்கள் ஒதுக்குப்புற விவசாய நிலங்களில் குடியமர்த்தப்பட வேண்டும்.
3. யூதர்களது மதப் புத்தகங்கள், பிரசுரங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
4. யூத மதகுருமார்கள் பிரசாரம் செய்வது தடை செய்யப்பட வேண்டும். மீறுபவர்கள் கொல்லப்பட வேண்டும்.
5. தெருவில் யூதர்கள் பாதுகாப்பாய் நடந்து செல்ல முடியாமல் செய்ய வேண்டும்.
6. லேவாதேவி தொழில் தடைசெய்யப்படவேண்டும், அவர்களது வெள்ளி, தங்கப் பொருட்கள் பறிக்கப்பட்டு வேறிடத்தில் பாதுகாக்கப்பட வேண்டும்.
7. யூதர்களை வயல்களில் கொத்தடிமைகளாக வேலைக்கு வைக்க வேண்டும்.

இன்னும் ஒரு படிமேலே போய் யூதர்களை உயிரோடு விட்டு வைத்திருப்பதே நம் (கிறித்துவர்களின்) தவறுதான் என்று கண்ணீர் மல்க அறிவிக்கிறார். இத்தனைக்கும் யூதர்களுடன் பெரும்பாலும் தொடர்பே இல்லாத நிலையில்தான் தன் வாழ்நாள் முழுவதையும் கழித்திருக்கிறார். இவர் இருந்த சமூகத்தில் இருந்து ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு முன்பே யூதர்கள் விரட்டப்பட்டிருந்தனர். எனவே யூதர்களின்மீதான அவரது வெறுப்பு நேரடி அனுபவத்தின் வழி உருவான ஒன்றல்ல. தன் மதத்தின் அடிப்படைகளில் இருந்தே அந்த வெறுப்பின் மையத்தை அவர் வந்தடைகிறார்.

மார்ட்டின் லூதரின் எழுத்துக்கள் சீர்திருத்த கிறித்துவத்தின் ஆன்மீக அடிநாதமாக யூத வெறுப்பை அழுத்தமாகப்பதித்தன. 1938-இல் இவரது பிறந்த தினத்தில் யூத தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டு நாசிகளின் யூதக்கொலைவெறியாட்டம் முழு வேகத்தில் தொடங்கியது. தம் யூத வெறுப்பு பயங்கரவாதச்செயல்களின் நியாயத்தை நிறுவ ஜெர்மனியின் கிறித்துவ தலைவர்கள் மார்ட்டின் லூதரின் எழுத்துக்களையே மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டினர்.

ரோமாபுரிக் கத்தோலிக்கத்தை எதிர்த்து ஜெர்மன் அரச பரம்பரையின் பாதுகாப்பில் வீறிட்டெழுந்த மார்ட்டின் லூதர் அதே ரோமாபுரிக் கத்தோலிக்கத்தின் ”வெட்டித்தொகுக்கப்பட்ட” விவிலியத்தை
விலக்கி விடவில்லை என்பது முக்கியமானது. அவரது யேசுவும் அதே வெட்டித் தொகுக்கப்பட்ட விவிலியத்தின் ஏசுதான். கிறித்துவை ஏற்காத மக்களுக்கு இழிவையும், அடிமைத்தனத்தையும்,
மரணத்தையும் விதித்த அதே ரோமாபுரி-மதகுரு மைய- கத்தோலிக்கத்தின் ஜெர்மானிய அரசாதரவுப் பிரதிதான் மார்ட்டின் லூதரின் ப்ராட்டஸ்டண்ட் கிறித்துவம். அதன் ஏசு மதகுருமார்களிடமிருந்து அரசர்களுக்குக் கைமாற்றித் தரப்பட்ட புதிய ஆதிக்கக்குறியீடு. பழைய மொந்தை, புதிய குப்பி.

வேறுவகையிலும் இதைப்பார்க்கலாம். வெட்டித்தொகுக்கப்பட்ட விவிலியத்தை விலக்கி அல்ல, அதை சரியாகக் கடைப்பிடிக்கவில்லை என்றும் மதகுருமார்கள் இடையில் தேவையில்லை என்றும் சொல்லி உருப்பெற்றதுதான் ப்ராட்டஸ்டண்ட் கிறித்துவம் என்பதனால் வழிதவறிய கத்தோலிக்கக் கிறித்துவத்தைத் தூய்மைப்படுத்த வந்த ”வஹாபி” கிறித்துவம் என்றும் அதனைச்சொல்லலாம்.

இந்த மத நிறுவனரின் கிறிஸ்து, டால்ஸ்டாய் கண்ட ஏசுவாக இருக்க முடியுமா? மார்ட்டின் லூதரின் ஏசு கருணையின் எதிர்மறைக்குறியீடு. நிராகரிக்கப்பட வேண்டிய வெறுப்பியல் பிரதி. ஆனால் உங்களது காந்தியின் சிலுவையிலோ ஏசு என்கிற குறியீட்டை மீட்டெடுத்த ஆன்ம ஞானிகளில் ஒருவராக மார்ட்டின் லூதர் ஆகிறார்.

இதை எப்படிப்புரிந்து கொள்வது என்று திகைத்து நிற்கிறேன்.

அன்புடன்,

அருணகிரி.

அன்புள்ள அருணகிரி,

மார்ட்டின் லூதரை நீங்கள் பார்ப்பதற்கும் நான் பார்ப்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை மட்டும் சுட்டிக்காட்டிவிடுகிறேன்.

மார்ட்டின் லூதரின் முதன்மையான பங்களிப்பு என்பது பதினைந்தாம் நூற்றாண்டில் கிறித்தவ மெய்ஞானம் திருச்சபையால் அதிகாரக் கோட்பாடாகவும் வணிகப்பொருளாகவும் மாற்றப்பட்டிருந்தமைக்கு எதிராக அவர் செய்த கலகம்தான்.

அது வெறுமே சீர்திருத்தக் கிறித்தவம் என்று இன்னொரு சபைமரபை உருவாக்குவதற்கான முயற்சி அல்ல. ரோமாபுரி திருச்சபையின் ஆன்மீகப் பார்வைக்கும் மார்ட்டின் லூதரின் பார்வைக்கும் இடையே மிகப்பெரிய ஒரு வேறுபாடுண்டு. அது ஆன்மீக தத்துவத்தில் மிக முக்கியமானது

கிறித்தவ நம்பிக்கையை ஒரு கூட்டுச்செயல்பாடாக ஆக்கியது திருச்சபை. உலகளாவிய கிறித்தவச்சமூகம் ஒன்றை உருவாக்குவதே அதன் இலக்காக இருந்தது. அதற்காக அது வலுவான அமைப்புகளை உருவாக்கியது. அவ்வமைப்புகளுக்கு எதிரான எல்லாக் குரல்களையும் அழித்தது. தனிநபரின் ஆன்மீகத்திற்கே அதில் இடமில்லை என்ற நிலை மெல்லமெல்ல உருவானது

அச்சூழலில், கிறிஸ்துவின் செய்தி என்பது ஒவ்வொரு தனிமனிதரின் ஆன்மாவைநோக்கி அந்தரங்கமாகச் செல்லவேண்டிய ஒன்று என மார்ட்டின் லூதர் வலியுறுத்தினார். கூட்டுச்செயல்பாடுகள் மூலம் அல்ல அந்தரங்கமான மனமாற்றம், பாவமீட்பு மூலமே ஆன்மீகக் கடைத்தேற்றம் சாத்தியம் என்று சொன்னார். அந்த சிந்தனை மிக முக்கியமானது.

நிறுவனமயமாக்கப்பட்டு ஆதிக்க அடையாளமாகக் குறுக்கப்பட்ட கிறிஸ்துவை மீட்டெடுத்தவர்களில் அவர் முதன்மையானவர் என்று நான் நினைப்பதற்குக் காரணம் இதுவே. கிறிஸ்துவின் சொற்கள் ஒருவர் தன் அந்தரங்க மன்றாட்டு மூலம் கண்டடையப்படவேண்டியவை என நான் நினைக்கிறேன்.

மதகுருக்களாலும் அறிவாளிகளாலும் மட்டுமே வாசிக்கப்பட்டுக்கொண்டிருந்த பைபிளை எளியமொழியில் அனைவரும் வாசிக்கும்படி கொண்டுவந்ததே மார்ட்டின் லூதரின் முதன்மையான சாதனை. பைபிள் ‘சந்தை முனை மொழியில்’ மொழியாக்கம் செய்யப்படவேண்டும் என்ற அவரது எண்ணம் ஒரு பெரும் புரட்சி என்றே நான் நினைக்கிறேன்.

அவரது வரை பைபிள் என்பது மத அதிகாரத்துக்கான ஓர் ஆவணமாகவே கருதப்பட்டு வந்தது. பைபிளை மொழியாக்கம்செய்வதும் சாதாரண மக்கள் பயில்வதும் தடைசெய்யப்பட்டிருந்தது. மார்ட்டின் லூதரின் பைபிள் மொழியாக்கம் கிறித்தவ ஆன்மீகத்துக்கு அளித்த கொடை சாதாரணமானதல்ல.ஆங்கிலத்தின் புகழ்பெற்ற கிங்ஸ் ஜேம்ஸ் பைபிள் மொழியாக்கத்தின் முன்னுதாரணம் அதுவே. அந்த மொழியாக்கமுறையைப் பின்னர் கத்தோலிக்கமதமும் ஏற்றுக்கொண்டது.

அதன்பின் உலகமொழிகளில் பைபிள் மொழியாக்கம் செய்யப்பட்டபோதெல்லாம் ‘சந்தைமொழி’யிலேயே மொழியாக்கம் செய்யப்பட்டது. தமிழிலும்கூட. இன்றும் கிறித்தவத்தின் அடிப்படை பலமாக இருப்பதே மிக எளிதாக அனைவரும் வாசிக்கத்தக்க விதத்தில் இருக்கும் பைபிள்தான். அடிப்படை எழுத்தறிவு கொண்டவர்களுக்குக் கூட அது வாழ்நாள் வழித்துணையாக இருப்பதை நான் கண்டிருக்கிறேன். பைபிள் வழியாக மட்டுமே அவர்கள் இன்னொருவராக உருமாறுவதையும் கண்டிருக்கிறேன்.[ காடு நாவலில் குரிசு போல]

உலகமெங்கும் சென்ற பைபிள் அந்தந்த மொழிகளின் இலக்கியத்திற்கு அளித்த கொடையும் சாதாரணமானதல்ல. பைபிள் பதினைந்தாம்நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டுக்குள் உலகின் பெரும்பாலான மொழிகளுக்குச் சென்று சேர்ந்தது. அந்த மொழிகளில் எல்லாம் செவ்விலக்கியமரபுகள் இருந்தன. அவையே இலக்கியமாகக் கருதப்பட்டன. எளிய மக்கள் பேசும் மொழி கொச்சையானதாக, இழிவழக்காக கருதப்பட்டது. அந்த இழிவழக்கில் பைபிள் போன்ற ஒரு பேரிலக்கியம் மொழியாக்கம் செய்யப்பட்டது இலக்கியப்பிரக்ஞையில் ஒரு புரட்சியாகவே அமைந்தது.

நான் நன்கறிந்த தமிழ், மலையாளம் என்னும் இருமொழிச்சூழல்களில் பைபிள் உருவாக்கிய மாற்றத்தைத் திட்டவட்டமாக வகுத்துக்கூறமுடியும். இந்த மொழிகளில் உரைநடை இலக்கியம் உருவாகவும் , பொதுமக்களின் இலக்கியம் வலுவான இயக்கமாக உருவாகவும் பைபிள் முக்கியமான தொடக்கப்புள்ளி.அனேகமாக தமிழின் சிறந்த உரைநடைக்காரர்களிடமெல்லாம் பைபிள் மொழியாக்கத்தின் தாக்கம் உண்டு.

இந்த மொழிகளில் எழுதிய எழுத்தாளர்கள் பைபிளின் அந்த மக்கள்மொழி வழியாகவே கிறிஸ்துவை அறிந்தனர். இறையியல் விவாதங்கள் வழியாக அல்ல. அவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் ஆன்மீகத்தை பைபிளில் இருந்து நேரடியாகவே பெற்றுக்கொண்டார்கள். அவர்களுடைய எழுத்தில் கிறிஸ்து மீண்டும் பிறந்து வந்தார். சி.ஜெ.தாமஸ் முதல் சக்கரியா வரை இரண்டுதலைமுறை மலையாள எழுத்தாளர்கள் பைபிள்மொழியில் இருந்து உருவாகி வந்தவர்கள். இன்றுவரை நீளும் அந்த இயக்கத்தின் தொடக்கப்புள்ளி மார்ட்டின் லூதர்தான்.

மார்ட்டின் லூதரை கிறிஸ்துவை மீட்டெடுத்தவர்களின் பட்டியலில் நான் சேர்ப்பதற்கு வலுவான காரணமாக இது போதும் என்றே நினைக்கிறேன்.

நீங்கள் சொல்லும் விமர்சனங்கள் மார்ட்டின்லூதர் மீது உண்டு என நான் அறிவேன். வாழ்நாளின் கடைசியில் கடும் உடல் உபாதைகளாலும் மனச்சோர்வாலும் துன்புற்ற அவர் அந்த கடுமையான யூதவெறுப்பைப் பதிவுசெய்திருக்கிறார். அது அவரது ஆளுமையிலும் அவரது சேவையிலும் உள்ள கறைதான்.ஆனால் இந்த நூற்றாண்டின் அறவியலை நிபந்தனையாகக் கொண்டு நாம் சென்ற நூற்றாண்டின் அறிஞர்களை மதிப்பிடக்கூடாது. அது சரியான பார்வை அல்ல என்றாலும் நாம் உடனடியாகச் செய்வது அதைத்தான்.

மானுடத்தின் அறப்பிரக்ஞை என்பது தொடர்ச்சியாக வளர்ச்சி அடைந்து வந்த ஒன்று. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நெருக்கடிகள் மோதல்கள் அழிவுகள் வழியாக அது மேலும் மேலும் கற்றுக்கொண்டு முன்னகர்ந்திருக்கிறது.

இந்த வளர்ச்சிக்குப் பங்களித்தவர்கள் நேற்றைய சிந்தனையாளர்கள். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான பணி இருந்திருக்கிறது, அதை அவர்கள் ஆற்றியிருக்கிறார்கள். அந்தப் பங்களிப்பை வைத்தே நான் அவர்களை மதிப்பிடுகிறேன். அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகத் திரட்டி உருவாக்கி அளித்த இன்றைய அறப்பிரக்ஞையின் மீது ஏறி நின்று அவர்களை விட மேலான அறப்பிரக்ஞை எனக்கிருப்பதாக நான் சொல்லிக்கொள்ள மாட்டேன்.

நேற்றைய சிந்தனையாளர்களின் அறிவும் அறவுணர்வும் இன்றைய என்னுடைய அறிவையும் அறவுணர்வையும் விடக் குறைவானதாகவே இருக்கும். ஏனென்றால் நான் அவர்களின் தோள்மீது நின்றுகொண்டிருக்கிறேன். அவர்கள் தாங்கள் வாழ்ந்த காலகட்டத்தின் பொதுவான சிந்தனைப்போக்கையும் அறவுணர்வையுமே தாங்களும் கொண்டிருப்பார்கள். அந்தப் பொதுவான தளத்தில் தங்கள் சிந்தனைக்கும் மனசாட்சிக்கும் ஒவ்வாததாகத் தோன்றிய சிலவற்றுடன் அவர்கள் மோதியிருப்பார்கள். அதனூடாகத் தங்கள் காலகட்டத்தின் சிந்தனையையும் அறத்தையும் விரிவாக்கம்செய்திருப்பார்கள். அதேசமயம் வேறு பல எதிர்மறை விஷயங்கள் அவர்களின் கண்களுக்கு தென்பட்டிருக்காது. அவற்றை இன்னொரு சிந்தனையாளர் சுட்டிக்காட்டியிருப்பார், எதிர்த்து அகற்றியிருப்பார். நாம் அந்த ஒட்டுமொத்த வளர்ச்சியின் பலனை அடைந்து நம் சிந்தனையையும் அறவுணர்ச்சியையும் உருவாக்கிக் கொண்டவர்கள்.

இந்தக் கோணத்தை உருவாக்கிக் கொள்ளாமல் நாம் நேற்றைய சிந்தனையாளர்களைப் பார்த்தால் அத்தனைபேரையும் நிராகரித்துவிடமுடியும். கடைசியில் நம் மதம்,நம் தேசம்,நம் சாதி சார்ந்த சிலரை மட்டும் ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்குத்தள்ளப்படுவோம். அவர்கள் சொன்ன எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வோம். அவர்களின் தவறுகளையும் குறைகளையும் நியாயப்படுத்தவும் செய்வோம். சிந்தனையின் படுகுழி என இதைச் சொல்லலாம்

யூதவெறுப்பு அன்றைய ஐரோப்பாவின் ஒரு பொதுமனப்போக்கு. ஷேக்ஸ்பியர் முதல் டி.எஸ்.எலியட் வரை பலர் அந்த மனநிலை கொண்டவர்கள் என சொல்லப்பட்டிருக்கிறார்கள். நான் என் ஞானகுருவாக மதிக்கும் தல்ஸ்தோய் ஜிப்ஸிகளைப்பற்றி கொண்டிருந்த எண்ணம் என் அறவியலுக்கு எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. அவர் பெண்களைப்பற்றி கொண்டிருந்த அபிப்பிராயம் அசட்டுத்தனமானது என்றே எனக்கு இன்று தோன்றுகிறது. அதைவைத்து அவரது அறவியலை நான் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கமுடியுமா என்ன?

பதினைந்தாண்டுகளுக்கு முன் நித்ய சைதன்ய யதி ஆதிசங்கரரின் விவேகசூடாமணிக்கு உரை எழுதிக்கொண்டிருந்தபோது இந்த விவாதம் நிகழ்ந்ததை நினைவுகூர்கிறேன். அதில் மெய்ஞானக்கல்விக்கு பிராமணர்களுக்கு மட்டுமே உரிமையுண்டு என்கிறார் சங்கரர். ‘சங்கரர் சொல்லும் இந்தவரி சங்கரர் வாழ்ந்த அக்காலகட்டத்தின் சாதியப் பொதுநோக்கை காட்டுகிறது, அதைத்தாண்டிப்பார்க்க அவரால் முடியவில்லை, அதை நான் ஏற்கமுடியாது’ என்று சொல்லிவிட்டு அடுத்தவரிக்குச் சென்றார் நித்யா.

நான் சினத்துடன், ‘சங்கரர் சொல்லும்படி பார்த்தால் நீங்கள் இந்த நூலை கையாலேயே தொடக்கூடாது. அப்படி சொன்ன ஒருவரை நீங்கள் ஏன் வாசிக்கவேண்டும்?’ என்றேன். நித்யா சிரித்துக்கொண்டு ‘சரிதான், அதே கோணத்தில் பார்த்தால் உலகத்தில் எழுதப்பட்ட எந்த நூலையும் நான் கையால் தொடமுடியாது’ என்றார். ஆமாம், அடிமைமுறையை நியாயப்படுத்தும் பிளேட்டோவில் இருந்தே நாம் நிராகரிப்பை ஆரம்பிக்கலாம்.

இங்கே தீண்டாமையை ஆதரித்த சிந்தனையாளர்கள் உண்டு. பெண்ணடிமை நோக்கு கொண்டவர்கள் உண்டு. அவர்களின் பங்களிப்பை எடுத்துக்கொண்டு அவர்கள் தங்கள் காலகட்ட அறவியலுக்குள் வாழ்ந்ததை நாம் மன்னிக்கிறோம். சங்கரர் முதல் சந்திரசேகர சரஸ்வதி வரை என் அணுகுமுறை இதுவே

ஆனால் அவர்களை நிராகரிக்கவிரும்புபவர்கள் அந்த பழைய அறவியலை மட்டுமே சுட்டிக்காட்டுவார்கள். சங்கரர் சாதிவேறுபாட்டை முன்வைத்தார் என சுட்டிக்காட்டி கொந்தளிக்கும் ஒரு மார்க்ஸியர் பதிலுக்கு ஹெலன் டெமுத்தை பாலியல் சுரண்டலுக்குள்ளாக்கிய மார்க்ஸை இன்னொருவர் குற்றம் சாட்டினால் சப்பைக்கட்டு கட்ட ஆரம்பிப்பார். இந்த அணுகுமுறைதான் பிழையானது.

மார்ட்டின் லூதரின் அறவியலைப்பற்றி பேசவேண்டியிருந்தால் தவறாமல் அவரது யூதவெறுப்பைச் சுட்டிக்காட்டி அதை நிராகரித்தபின்னரே நான் பேச ஆரம்பிப்பேன். இங்கே நான் பேசுவது அவர் கிறித்தவ ஆன்மீகத்துக்களித்த பங்களிப்பைப்பற்றி மட்டுமே.

என்னைப்பொறுத்தவரை எல்லா தரப்பிலும் ஒரே அளவுகோலையே பயன்படுத்த நினைக்கிறேன். ஒரு பழங்காலச் சிந்தனையாளர் அவர் காலகட்ட சிந்தனைக்கும் அறவியலுக்கும் என்னென்ன பங்களிப்பை ஆற்றினார் என்பதையே நான் கவனிக்கிறேன். அவர் தன் காலகட்டச் சிந்தனைப்போக்குடன் எங்கெல்லாம் ஒத்துப்போனார் என்பதை வைத்து அவரை மதிப்பிடுவதில்லை. இது நான் ஏற்கும் சிந்தனையாளருக்கும் மறுக்கும் சிந்தனையாளருக்கும் பொருந்தும் விதி.

ஜெ

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைவஞ்சீசபாலன்