எரிக் ஹாப்ஸ்பாம்-அஞ்சலி

1985ல் காசர்கோடு தபால்தந்தி ஊழியர்களின் கம்யூனில் பேசவந்த பி.கோவிந்தப்பிள்ளைதான் எரிக் ஹாப்ஸ்பாமின் பெயரைச் சொன்னார். ஆனால் அவர் சொல்லிய பெயர்களில் ஒன்றாக மட்டுமே மனதில் பதிந்தது. பின்பு பத்தாண்டுகள் கழித்து தமிழகத்தில் அமைப்புவாதமும் பின் அமைப்புவாதமும் பின்நவீனத்துவமும் அதிகமாகப் பேசப்பட்ட நாட்களில் நித்ய சைதன்ய யதி என்னிடம் ஹாப்ஸ்பாமின் நுல்களைச் சொல்லி வாசிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவ்வாறுதான் ஹாப்ஸ்பாம் அறிமுகமானார்.

பெக்கி காம்ப் தொகுத்த தெரிதா ரீடர் நூலை கொடுத்த நித்யா ’இதைப்படித்ததும் கூடவே இதையும் படி’ என்று சொல்லி எரிக் ஹாப்ஸ்பாமின் ‘ஆன் ஹிஸ்டரி’ என்றநூலையும் ஆலிவர் சாக்ஸின் ஒரு ‘ஃபோர் கேஸ் ஸ்டடீஸ்’ நூலையும் கொடுத்தார்.என் சிந்தனையில் பெரிய மோதல்களை அந்நூல்கள் உருவாக்கின. வெவ்வேறு வாழ்க்கைப்பார்வைகள், வெவ்வேறு ஆய்வுமுறைகள்.

அப்படி ஒரேசமயம் முற்றிலும் மாறுபட்டவர்களை வாசிக்கவேண்டியதன் தேவையை நித்யா காலமான பிறகு, கொஞ்சகாலம் கழித்துத்தான் நான் புரிந்துகொண்டேன். அன்று உலகின் கடைசி சிந்தனை என்ற வகையில் ஆர்வக்கொந்தளிப்புடன் முன்வைக்கப்பட்ட தெரிதாவின் பின்அமைப்புவாதம் நுரைபோல அடங்குவதை அப்போதுதான் காணநேர்ந்தது. உலகசிந்தனையின் பிரம்மாண்டமான ஒரு பரப்பில் அது சென்று தன் இடத்தில் அமர்ந்தது. நூலகத்தில் ஒரு நூல் தன் இடத்தைக் கண்டடைவதுபோல

எந்தச்சிந்தனையையும் அதன் எதிர்தரப்புடன் இணைத்துக்கொண்டு விவாதித்து அறியமுயல்வதே தத்துவக்கல்வியில் சரியான வழிமுறையாகும். மானுடசிந்தனையை ஒரு மாபெரும் விவாதக்களமாகக் கண்டு அந்த விவாதக்களத்தில் ஒரு சிந்தனை எதை முன்வைக்கிறது எதை மறுக்கிறது என்று பார்க்க அது உதவும். எரிக் ஹாப்ஸ்பாம் தெரிதாவை வகுத்துக்கொள்ள உதவும்போது தெரிதா எரிக்ஹாப்ஸ்பாமையும் அறிய உதவவார். அந்த ஒப்பீட்டு வாசிப்பு சமகால ஆர்வக்கொந்தளிப்புகளில் இருந்து விலகி நின்று என் என் சமநிலையைப் பேணிக்கொள்ள உதவியது.

வரலாற்றை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துப்பார்ப்பதும் அதன் இயங்குவிதிகளை உருவகித்துக்கொள்வதும் சிந்தனையின் அடிப்படைச் செயல்பாடாகும். அச்செயல்பாடில்லாமல் இலட்சியவாதம் இல்லை. இலட்சியவாதம் இல்லாமல் நடைமுறைச்செயல்பாடு சாத்தியமும் இல்லை. மார்க்ஸியமோ காந்தியமோ அவற்றின் இலட்சியவாதத்தின் உள்ளுறையாக இருப்பது இந்த வரலாற்றுவாதமே.

ஐரோப்பியச்சூழலில் வெவ்வேறு வரலாற்றுவாதங்கள் வளர்ந்து அதிகாரக் கட்டமைப்புகளாக ஆனபின்னர் அவற்றுக்கு எதிரான கலகக்குரலாக எழுந்தவை பின் அமைப்புவாத,பின்நவீனத்துவ சிந்தனைகள். அந்த வரலாற்றுவாதநோக்குகளை முழு உண்மைகளாக ஏற்கும் மனநிலையை மறுப்பவை அவை. அவற்றுக்கான வரலாற்று பங்களிப்பு என்பது அதுதான்

தமிழ்ச்சூழலில் எந்த ஒரு வரலாற்றுவாதமும் முறையாக அறிமுகமாகவோ குறிப்பிடும்படியான சிந்தனைப்போக்காக உருக்கொள்ளவோ இல்லை. வெவ்வேறு வரலாற்றுவாத நோக்கில் தமிழ்ப்பண்பாடும் சமூகச்செயல்பாடுகளும் ஆராயப்படவும் இல்லை.

இந்நிலையில்யில் ஒட்டுமொத்த வரலாற்றுவாத அணுகுமுறையையே நிராகரிக்கும் பின்நவீனத்துவச் சிந்தனைகள் இங்கே வந்தபோது அவற்றுக்கான விவாதக்களமே இருக்கவில்லை. மேலும் இங்கே அவற்றை முன்வைத்தவர்கள் பாடப்புத்தகப்பாணியில் மட்டுமே பேசத்தெரிந்த பேராசிரியர்கள். பாடங்களாக மட்டுமே அவற்றை முன்வைக்க அவர்களால் முடிந்தது.எளியமுறையில் கூட அவற்றை ஒட்டி அவர்களால் சிந்தனை செய்ய முடியவில்லை. அதை அவர்கள் அன்றும் இன்றும் எழுதிவரும் எந்தக்கட்டுரையை படித்தாலும் அறியமுடியும்

ஆகவே ஒரு சிறிய சலசலப்புக்குப்பின் இங்கே பல்கலைக்கழக பாடத்திட்டமாக அவை சென்று சுருண்டுகொண்டன.இன்று ஒருவகை இலக்கண ஆராய்ச்சி என்பதற்கு அப்பால் அவற்றுக்கான முக்கியத்துவமேதும் இல்லை.

இன்றும் எரிக் ஹாப்ஸ்பாமின் முக்கியத்துவம் தமிழில் நீடிப்பது இந்த அளவில்தான் என நான் நினைக்கிறேன். அவரது அணுகுமுறையை மார்க்ஸிய வரலாற்றுவாதம்- மார்க்ஸிய இலட்சியவாதம் என்று சொல்லலாம். அந்த அணுகுமுறையில் உள்ள போதாமைகள் ஒருபக்கம் இருந்தாலும் அது நம் பண்பாட்டையும் நம் வாழ்க்கைமுறையையும் புறவயமாக ஆராய்வதற்கான திறன்மிக்க கருவியாகவே இன்றும் நீடிக்கிறது என நான் நம்புகிறேன்.என் வரையில் என்னுடைய புரிதலுக்காக அதை எப்போதுமே சார்ந்திருக்கிறேன்.

எரிக் ஹாப்ஸ்பாமின் மரணம் குறித்த செய்தி அவருடைய இன்றைய தேவையை மீண்டும் எண்ணிக்கொள்ளச்செய்தது. நீண்டநாள் வாழ்ந்தவர். தன் நம்பிக்கைகள் வெல்வதையும் வீழ்வதையும் கண்டவர். அவரது கண்முன் உலகசிந்தனையின் நான்கு வெவ்வேறு காலகட்டங்கள் கடந்துசென்றிருக்கின்றன. அவர் ஒவ்வொன்றுடனும் ஆக்கபூர்வமாக எதிர்வினையாற்றியிருக்கிறார். அவர் மார்க்ஸிய யுகத்தின் நினைவுச்சின்னங்களில் ஒன்று

எரிக் ஹாப்ஸ்பாமுக்கு அஞ்சலி

http://www.guardian.co.uk/books/2012/oct/01/eric-hobsbawm-died-aged-95

http://blogs.telegraph.co.uk/culture/allanmassie/100066734/understanding-eric-hobsbawm/

பழையகட்டுரைகள்

 

எரிக் ஹாப்ஸ்பாம்- இலட்சியவாதம் அழிகிறதா?

எரிக் ஹாப்ஸ்பாம்-வரலாற்றின்மீது எஞ்சும் நம்பிக்கை


எரிக் ஹாப்ஸ்பாம்-கடிதங்கள்


அசிங்கமான மார்க்ஸியம் -எரிக் ஹாப்ஸ்பாம்


வரலாற்றெழுத்தில் நான்கு மாற்றங்கள்

கலாச்சாரவாதம் இரு கருதுகோள்கள்

முந்தைய கட்டுரைகேளாய் திரௌபதி
அடுத்த கட்டுரைஅறிவியல் கட்டுரைகள் எழுதுவது எப்படி?