க.நா.சுவும் வெங்கட்சாமிநாதனும்

க.நா.சுப்ரமணியம்

இது க.நா.சு நூற்றாண்டு. ஒருவேளை நவீனத்தமிழிலக்கியம் ஓரு பேரியக்கமாக , அமைப்புவல்லமையுடன் இருந்திருந்தால் ஒரு பெருநிகழ்வாகக் கொண்டாடப்படவேண்டியது. ஆனால் தனிப்பட்ட முறையில் அது நிகழாமலிருப்பதே நல்லது என்பது என் எண்ணம். இலக்கியம் மிகப்பெரிய அமைப்புகளாக ஆகாமல் தனிப்பட்ட குரல்களாக ஒலிப்பதே அதன் தீவிரத்தை நிலைநாட்டும்.

ஏனென்றால் நவீன இலக்கியம் அடிப்படையில் எப்போதும் ஓர் விமர்சனத்தன்மையைக் கொண்டிருக்கிறது. பண்பாட்டு விமர்சனம், சமூகவிமர்சனம், அரசியல் விமர்சனம். ஆகவே அது என்றும் எதிர்க்குரலாகவே இருந்தாகவேண்டும். அதுதான் இலக்கியத்தின் ஆரோக்கியத்துக்கு ஆதாரம்.

க.நாசுவை முன்னோடி நாவலாசியர்,இலக்கிய விமர்சகர் என்று அடையாளப்படுத்தலாம். அதற்கும் அப்பால் தமிழ் நவீனஇலக்கியம் என்ற இயக்கத்தை உருவாக்கிய முன்னோடி என்றும் , இலக்கியவழிகாட்டி என்றும் சொல்லலாம்.

க.நா.சுவின் நூற்றாண்டான இன்று அவரைப்பற்றி அவரால் தூண்டுதல்கொண்டு இலக்கியத்துக்குள் நுழைந்தவர்கள் முதல் அவருக்குப்பின் உருவான நான்காவது தலைமுறையினர் வரை நவீனத்தமிழ் எழுத்தாளர்கள் ஆத்மார்த்தமாக எழுதிக்கொண்டிருக்கும் கட்டுரைகளும் நினைவுகளுமே அவருக்கு அளிக்கப்படும் மிகச்சிறந்த அஞ்சலி என்று நினைக்கிறேன்.க.நா.சு அதையே விரும்பியிருப்பார். அவ்வகையில் அவர் வெற்றிபெற்றுவிட்டார் என்றே சொல்லவேண்டும்

இதனுடன் ஒப்பிடவேண்டியது சி.என்.அண்ணாத்துரை அவர்களின் நூற்றாண்டு எப்படிக் கடந்துசென்றது என்பது. ஆத்மார்த்தமாக எழுதப்பட்ட ஒரு நல்ல கட்டுரைகூட அவரைப்பற்றி வெளிவரவில்லை என்றே சொல்வேன். அரசாங்க சம்பிரதாயங்களும் கட்சிக்கூச்சல்களும் கூட ஒப்புக்கே நிகழ்ந்தன. எந்த ஆரவாரமும் இல்லை.தமிழ்ச்சமூகம் சாதாரணமாகக் கூட அவரை நினைவுகூரவில்லை.

சி.என்.அண்ணாத்துரை மறக்கப்பட்ட ஒருவர் என்பதே என் மதிப்பீடாக இருந்தாலும்கூட அவர் உருவாக்கிய அரசியலியக்கங்கள் தமிழ்நாட்டையே அள்ளிப்பற்றி ஆண்டுகொண்டிருக்கும் சூழலில் அவரது நூற்றாண்டு அப்படி ஓசையில்லாமல் சென்று மறைந்தவிதம் எனக்குப் பெரும்வியப்பையே அளித்தது. அடுத்தடுத்த தலைமுறை அவரைப் பொருட்படுத்தவேயில்லை என்பது இயல்பானதாகவும் ஆச்சரியமானதாகவும் ஒரேசமயம் தோன்றியது.

க.நா.சு உருவாக்கிய இயக்கம் ஒரு பண்பாட்டுஇயக்கம் அல்ல, பண்பாடு மீதான விமர்சன இயக்கம் அது. ஒரு மக்களியக்கம் அல்ல, அறிவார்ந்த சிறுபான்மையினரின் இயக்கம். என்றும் அது ஒரு தீவிரமான குறுங்குழுச்செயல்பாடாகவே இருக்கமுடியும். அந்த தளத்தில் க.நா.சு ஒரு வாழும் ஆளுமை என்பதை நிறுவுகின்றன இப்போது வரும் கட்டுரைகள்.

தமிழ்ஹிந்து இணையதளத்தில் க.நா.சு பற்றி விரிவான ஒரு கட்டுரையை வெங்கட் சாமிநாதன் எழுதியிருக்கிறார். அவருக்கே உரியமுறையில் விமரிசனங்கள், எதிர்வினைகள், நினைவுகள், ஆதங்கங்கள் என அலைபாயும் கட்டுரை அதன் உண்மையான வேகம் காரணமாகவே முக்கியமானதாக இருக்கிறது.

தன் கட்டுரையில் வழக்கமான சோர்வுடன் க.நா.சு மறக்கப்பட்டார் என்றும், இன்று அவர் மேல் எவருக்கும் அக்கறை இல்லை என்றும் சாமிநாதன் எழுதுவது சரியான பார்வை அல்ல. க.நா.சு அவர் உருவாகிய நவீன இலக்கியச்சூழலில் இன்றும் ஒரு செயல்படும் கருத்தாற்றலாகவே இருக்கிறார். இன்னும் அரைநூற்றாண்டுக்காலமாவது அப்படியே நீடிப்பார்.

க.நா.சு பற்றி வெங்கட் சாமிநாதன் எழுதிய இருவிஷயங்கள் முக்கியமானவை. க.நா.சுவைச்சுற்றி இருந்த வம்புகள், பூசல்களின் உலகத்தை வெங்கட் சாமிநாதன் கோடிகாட்டுகிறார். இலக்கிய உலகம் எப்போதும் அப்படித்தான் இருந்துள்ளது. அந்தச் சூழலில்கூட க.நா.சு அவருக்கே உரிய நிதானத்துடன் ஓங்கி நிற்கும் காட்சியை சாமிநாதன் காட்டுகிறார்.

க.நா.சு உயிர்வாழ்ந்த காலகட்டத்தில் நம் முற்போக்குக் கும்பல் அவரை எப்படியெல்லாம் அவதூறு செய்து ஒழிக்க முனைந்தது என்பதன் ஒரு சித்திரத்தை அளிக்கிறது சாமிநாதனின் கட்டுரை. இன்று அந்த அவதூறுகள் அப்பட்டமாக வெளியாகிவிட்ட நிலையில் ஊடகபலமோ அமைப்புப்பின்னணியோ இல்லாமல் தன்னந்தனியராக தன் உண்மையின் பலத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு அந்தக் காலகட்டத்தை க.நா.சு எப்படி கடந்துவந்திருப்பார் என்ற எண்ணம் வந்து மனதைக் கனக்க வைக்கிறது.

ஆனால் முக்கியமாக என் கவனத்தைக் கவர்ந்தது சாமிநாதன் சொல்லும் ஒருவிஷயம். தமிழ் மரபிலேயே இலக்கியங்களை விமர்சனத்துடன் பார்க்கும் வழக்கம் கிடையாது என்கிறார். [அது எனக்கு உடன்பாடான கருத்து அல்ல. இருபதாண்டுகளுக்கு முன்னரே சாமிநாதனின் இக்கருத்தை நான் மறுத்து விரிவாக எழுதியிருக்கிறேன். தமிழ் மரபில் இருந்த தொகுப்புமுறையும் நூல்களை அரங்கேற்றும் முறையும் நமக்குரிய விமர்சனமுறைமைகளையே காட்டுகின்றன. நூல்களை விமர்சனமாக அலசி ஆராய்ந்து எழுதும் முறை மட்டுமே தமிழில் இருக்கவில்லை]

நவீன இலக்கியம் தமிழில் உருவானபோது ஒரு படைப்பை விமர்சிப்பது என்பதையே தமிழர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று வெங்கட் சாமிநாதன் சொல்கிறார். இலக்கிய விமர்சனம் என்ற ஒரு துறை இருப்பதோ, அதில் பல்லாயிரம் பேரறிஞர்கள் எழுதியிருப்பதோ இங்கே எவருக்கும் தெரியாது. ஒருவர் ஒரு நூல் மேல் விமர்சனத்தை முன்வைத்தால் அதைத் தாக்குதல் என்றோ வசைபாடல் என்றோதான் தமிழர்கள் எடுத்துக்கொள்கிறார்கள் என்கிறார். அது ஓர் அறிவுச்செயல்பாடு, அதற்கொரு நோக்கமும் பயனும் உள்ளது என்பதே அவர்களறியாதது.

அகிலனின் எழுத்தை க.நா.சு விமர்சனம் செய்தபோது எழுந்த எதிர்வினைகளை சாமிநாதன் சொல்லும்போது வேடிக்கையாக இருக்கிறது. ஒரு எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரை விமர்சனம் செய்யலாமா என்றார்கள். எது நல்ல இலக்கியம் என்பதைக் காலம் பார்த்துக்கொள்ளும், அவரவர் எழுத்தை அவரவர் எழுதுங்கள் என்றார்கள். வாசகர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கட்டும் என்றார்கள். அவர் எவ்வளவு பெரிய ஆள், அவரை விமர்சிக்க நீ யார் என்றார்கள். க.நா.சு அகிலனைப்பார்த்து பொறாமைப்படுகிறார் என்றார்கள். க.நா.சு தன் படைப்புகளை எப்படி நல்லநூல்களின் பட்டியலில் சேர்க்கலாம் என்றார்கள். அகிலனை விமர்சிக்கவேண்டாம் என்று தமிழமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றின!

அந்தக் காலகட்டத்தை க.நா.சு சலிக்காமல் தனித்து நின்று எதிர்கொண்டமை, தன்னுடைய கருத்தை ஒரு அறிவியக்கமாக மெல்லமெல்லக் கட்டி நிறுத்தியமை ஒரு சமகால சரித்திரச் சாதனை என்றே சொல்லவேண்டும். அவருக்கு தன் நோக்கம் மீதிருந்த ஆழமான நம்பிக்கையே அவரைச் செயல்படச்செய்தது என்று தோன்றுகிறது.

எனக்கு எது வேடிக்கையாக இருக்கிறது என்றால் க.நா.சு எதிர்கொண்ட சூழலை இன்றும் காணநேர்வதுதான். க.நாசுவின் முழுமூச்சான அரைநூற்றாண்டுச்சேவை நவீன இலக்கியச் சூழலில் இலக்கியவிமர்சனத்தின் அவசியத்தை நிறுவியது. அவருக்குப்பின் சுந்தர ராமசாமி ,வெங்கட் சாமிநாதன் போன்றவர்களின் பணி அதை ஓரளவு நம் கல்வித்துறையிலும் நிறுவியது. ஆனால் இணையம் வழியாக வாசிக்க வரும் புதியவர்கள் இன்றும் விமர்சனங்களைக் காண்கையில் அறுபதாண்டுக்காலம் முன்பு சொல்லப்பட்ட அதே வரிகளைத்தான் அப்படியே சொல்கிறார்கள்.

பாரதி பற்றியோ ,கல்கி பற்றியோ ,சுஜாதா பற்றியோ நான் இணையத்தில் எழுதும் கருத்துக்கள் க.நா.சு சொன்னவற்றின் நீட்சியே. அவை தமிழ் இலக்கியச்சூழலுக்குப் புதியவையும் அல்ல. சொல்லப்போனால் அந்த விமர்சனங்கள் மற்றும் நிராகரிப்புகளின் விளைவாகவே தமிழில் நவீன இலக்கியம் உருவாகிவந்தது. ஆனால் இணையத்தில் அவற்றுக்கு வந்த எதிர்வினைகளை இப்போது பார்க்கையில் சட்டென்று க.நா.சு எழுத ஆரம்பித்த அந்த ஐம்பதுகளுக்கே சென்றுவிட்ட பீதி ஏற்படுகிறது.

இப்படி எழுதுபவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பது இன்னும் வேடிக்கை. இலக்கியவிமர்சனம் என்ற ஒரு அறிவமைப்பு இந்த உலகில் இருப்பதையும், அது இலக்கிய ஆக்கங்களை மதிப்பிட்டு ஆராய்ந்து வருவதையும், நூற்றுக்கணக்கான கொள்கைகளும் கோட்பாடுகளும் அதில் உண்டு என்பதையும் இவர்களுக்கு ஒருவழியாகச் சொல்லிப்புரியவைக்க இன்னும் ஐம்பதாண்டுக்காலம் க.நா.சுவின் மரபை உயிருடன் வைத்திருக்கவேண்டும் என்று நினைத்துக்கொள்கிறேன்.


க.நா.சுவும் நானும் 1


க.நாசுவும் நானும் 2


கநாசுவும் நானும் 3

முந்தைய கட்டுரைதிராவிட கிறித்தவம்
அடுத்த கட்டுரையூத்து-கடிதங்கள்