பண்பாட்டை பேசுதல்…

சென்னையில் ஓட்டலில் தங்கியிருந்தபோது நண்பர் கெ.பி.வினோத் உயிர்மை இதழுடன் வந்தார். நான் அதைவாங்கி புரட்டிக்கொண்டு இருக்கும்போது அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. அவர் பேசி முடித்தபோது நான் உயிர்மையை மேஜைமேல் போட்டிருந்தேன். அவர் கிளம்பும்போது ”எடுத்துக்கொள்ளுங்கள்” என்றேன். ”நீங்க படிக்கலியே ”என்றார். ”படிச்சுட்டேனே” என்றேன் நான்.அவருக்கு ஆச்சரியம்

உயிர்மையில் மூன்று விஷயங்கள் மட்டுமே படிக்கத்தக்கவை என்பது என் எண்ணம். முதலிடம் தியடோர் பாஸ்கரனின் சூழியல் கட்டுரைகள். இரண்டு எஸ்.ராமகிருஷ்ணன் எழுதும் கட்டுரைகள். மூன்றாவதாக ஷாஜியின் இசைக் கட்டுரை. ஷாஜியின் கட்டுரை நானே மொழியாக்கம்செய்தது. தியடோர் பாஸ்கரனின் கட்டுரை மிகச்சிறியது. எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரையை என் வழக்கம்போல வேகமாக படித்து முடித்துவிட்டேன்.

எஸ்.ராமசந்திரன் பேசுகிறார். அருகே பி.ஏ.கிருஷ்ணன் அமர்ந்திருக்கிறார். [நன்றி எனி இன்டியன்]

அதற்குமேல் உயிமையில்  நான் எதையும் பெரும்பாலும் படிப்பதில்லை. அதில் உள்ள பெரும்பாலான கட்டுரைகள் அவுட்லுக் இதழ் , இந்து நடுப்பக்கம், கம்யூனலிசம் காம்பாட் போன்ற இதழ்களில் இருந்து சுரண்டி எழுதப்படும், வலிமையான முன் தீர்மானங்கள் கொண்ட, அரசியல் கட்டுரைகள். வளவளவென்ற சினிமாக்கட்டுரைகள். அவையே வேறு சிற்றிதழ்களில் வேறு ஆட்களால் எழுதப்படும். கணிசமானவை முற்றிலும் நேர விரயங்கள். கதைக் கவிதைகளைப் பொறுத்தவரை யாராவது நல்ல நண்பர் கூப்பிட்டு வாசிக்கச் சொன்னாலொழிய அவற்றை வாசிப்பதில் பயனில்லை.

தீராநதியில் அ.மார்க்ஸ் எழுதுவதைத் தவிர எதையுமே படிக்க வேண்டியதில்லை. அதன் பெரும்பாலான கட்டுரைகள் தமிழகத்தின் அபத்தமான சிற்றிதழ்  அரசியல் சார்ந்தவை. புதியபார்வையை நான் பார்த்தே பலவருடங்கள். அமிர்தாவை இரண்டுமுறை புரட்டிப்பார்த்திருக்கிறேன், இனிமேல் பார்த்தால் கையிலேயே எடுக்கமாட்டேன். உயிர் எழுத்து முழுக்கமுழுக்க முதிரா எழுத்துக்கான தளம். எவராவது சொன்னாலொழிய எதையும் படிக்க வேண்டியதில்லை. அப்படி சொல்லப்படுவதும் அபூர்வமாக இருக்கிறது.

இதைத்தவிர சிற்றிதழ்கள். புது எழுத்து , உன்னதம் போல அவ்வப்போது கொணரப்படும் இதழ்களை மொழிபெயர்ப்பிதழ்கள் என்று சொல்வதே சரி. அந்த மொழியாக்கங்களில் கூட ஒரு சமகாலத்தன்மையோ அல்லது பரந்துபட்ட தன்மையோ இருப்பதில்லை. மீண்டும் மீண்டும் ஐரோப்பிய நவீனத்துவத்தை குழப்பமான மொழியில் பிரதி எடுக்கும் முயற்சிதான்.

காலச்சுவடுதான் இருப்பதிலேயே பரிதாபம். அரசு வெளியீடுகளான ‘தமிழரசு’, ‘திட்டம்’ போன்ற சலிப்பூட்டும் ஓர் இதழாக இருக்கிறது அது. தமிழில் உள்ள ஒரு சிறிய– படைப்பூக்கமே இல்லாத- குழுவின் ஆக்கம் அது.  காலச்சுவடின் ஆசிரியரின் பணிவான தோழராக இருப்பது தவிர அதிலெழுதுபவர்களுக்கு ஏதாவது தகுதி இருக்கிறதா என்றே ஐயமாக இருக்கிறது. உண்மையில் சராசரிக்கும் அதிகமான வாசிப்பு கொண்ட ஒரு தமிழருக்கு இச்சிற்றிதழ்களில் அல்லது நடுத்தர இதழ்களில் வாசிக்க எதுவுமே இல்லை.

இவ்வரிசையில் வார்த்தை இதழை ஒரு படி மேல் என்றே சொல்வேன். அதன் பல பக்கங்கள் சாதாரணமாக இருந்தாலும் நவீன அறிவியல் பற்றியோ அல்லது அரசியல் பற்றியொ சாதாரணமாக சிற்றிதழ்களில் காணமுடியாத ஒரு கட்டுரையை அதில் எத்ர்பார்க்கமுடியும் என்பதே அதன் பலம்.

இவ்விதழ்களின் பங்களிப்பை, இதன் ஆசிரியர்களின் உழைப்பையும் தியாகத்தையும், குறைத்துமதிப்பிடுவதற்காக இதைச் சொல்லவில்லை. இதழ்கள் என்பவை நம் அறிவுச்சூழலின் கண்ணாடிகள். ஆகவே இவற்றின் சிக்கல் என்பது இவற்றை நடத்துபவர்களின் சிக்கல் அல்ல. இவற்றை உருவாக்கும் நம் அறிவுச்சூழலின் சிக்கலே.

இவ்விதழ்கள்  மாட்டிக்கொண்டிருக்கும் இக்கட்டுகள் என்னென்ன? நம்  நடுஇதழ்களில் மிக அதிகமாக விற்பது உயிர்மை. கிட்டத்தட்ட ஏழாயிரம் பிரதிகள் என்கிறார்கள். காலச்சுவடு ஐயாயிரம் அளவிருக்கும். இவ்விதழ்கள் மேலும் வாசகர்களை அதிகரித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. ஆகவே அவை தாங்கள் உத்தேசிக்கும் தமிழ் வாசகர்களின் ரசனையையும் அறிவுத்தளத்தையும் நோக்கி தங்களைத் திருப்பி வைத்திருக்கின்றன. திருப்பித்திருப்பி  அவை எதிர்வினைகளை நம்பியே செயல்படுகின்றன.

எதிர்வினைகளைப் பார்த்தால் தெரியும், சினிமா அரசியல் இரண்டுக்கும் மட்டுமே வாசகர்கள் எதிர்வினையாற்றுவார்கள். உண்மையில் இவ்விதழ்களின் வாசகர்களில் தொண்ணூறு சதம் பேருக்கும் அவை தவிர வேறு ஆர்வமே இல்லை. சினிமா, அரசியல் இரண்டிலும்கூட ஏற்கனவே நம் பெரிய வணிக ஊடகங்கள் எதைப் பேசுகின்றனவோ அவற்றையே இவையும் பேசியாக வேண்டும். இன்னும் கொஞ்சம் அதிக பக்கங்களில் இன்னும் கொஞ்சம் அதிக தகவல்களுடன், ஆனால் அதே கோணத்தில். அவ்வளவுதான்.

ஆகவே நம் அறிவுச்சூழலில் எது பேசப்படவேண்டும் என்பதை இப்போது குமுதம்தான் தீர்மானிக்கிறது. சிற்றிதழ்கள் பெரிய வாசகர் வட்டம் இல்லாமல் நண்பர் வட்டத்துக்குள் நடந்த காலங்களில் இந்நிலை இல்லை. அவற்றின் அக்கறைகளை அவையே தீர்மானித்தன. நம் அறிவுச்சூழலில் ‘ஹிட்லரின் இசைஞானம் உண்மையா, இசையார்வம் உள்ளவன் படுகொலைகளைச் செய்ய முடியுமா?’ என்ற அடிப்படை கேள்வி ஒரு காலத்தில் ஒருவருடம் விவாதிக்கப்பட்டு வந்தது என்றால் ஆச்சரியப்படுவீர்கள். உஷாநந்தினியை ஏன் ஜெய்சங்கர் கடித்தார் என்றோ காஞ்சிபெரியவர் ஏன் பிடியரிசி கொடுக்கச்சொன்னார் என்றோ குமுதமும் விகடனும் பேசிக்கொண்டிருந்த நாட்களில்.

சென்ற நாலைந்து வருடங்களில் நம் அறிவுலக – இதழியல் சூழலில் நடந்த  முக்கியமான விவாதம் என்ன, பேசப்பட்ட விஷயம் என்னென்ன என்று பார்த்தால் நாம் நிற்கும் இடம் புரியும். இன்று அறிவுலகில் பேசப்பட வேண்டிய விஷயங்கள் பொதுவான வெகுஜன ரசனை மற்றும் அக்கறையின் எல்லையை தாண்டவே முடியாது. தாண்டினால் அதை வாசிக்க ஆளிருக்காது.

ஆகவே தொடர்ச்சியாக எல்லா பக்கங்களையும் அனைத்து வாசகர்களையும் வாசிக்கச் செய்யும் சவாலை ஏற்றுக் கொண்டிருக்கும் உயிர்மை ஒரு சூப்பர்குமுதமாக மட்டுமே வர முடிகிறது. அந்த இடுக்கில் கால் விட்டபின் மனுஷ்யபுத்திரனால் இனி மீளவும் முடியாது. மீளவேண்டுமென்றால் சில ஆயிரம் இதழ்விற்பனையை இழக்க அவர் தயாராக வேண்டும். ஓர் இதழ் அமைப்பை உருவாக்கிக் கொண்டபின் விற்பனையை இழக்க முடியாது, ஏனென்றால் அது அதற்கேற்ப அமைப்பைச் சுருக்கிக் கொள்ள முடியாது.

உண்மையில் நம் சிற்றிதழ்களின் ஒட்டுமொத்தத்தை விட தினமணி நடுப்பக்கம் மேலானது. பத்துக்கு ஒருகட்டுரையே அதில் தேறும் என்றாலும் அது மொத்தமாக இவையனைத்தையும் விட அளவில் அதிகம். அப்பக்கங்களில் சொல்லப்படாத எதையுமே நாம் இவ்விதழ்களில் வாசிக்க முடிவதில்லை. தமிழகம் எப்படி சிந்திக்கிறது என்பதற்கான ஒரு தடையவெளியாக உள்ளது தினமணி.  

நம் சமூகத்தின் அறிவார்ந்த மையத்தில் மேலோட்டமான அரசியலும் சினிமாவும் தவிர எதுவுமே பேசப்படாத இந்நிலை நம்மை மெல்லமெல்ல உறையச்செய்துகொண்டிருக்கிறது என்பதே உண்மை. இத்தனை கருத்துத் தரப்புகள் இருக்கும் நம் சூழலில் ஒரு நல்ல கருத்துச்சண்டைகூட நடக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்? ஸ்டாலின் துணைமுதல்வரானது, ‘பசங்க’ சினிமா, ஆஸ்திரேலியாவில் மாணவர்மேல் தாக்குதல், ஈழப்பிரச்சினை போன்ற சமகால அலைகளுக்கு அப்பால் ஒருசமூகம் தன் அறிவார்ந்த மையத்தில் விவாதிக்க வேண்டிய சாராம்சமான பண்பாட்டு, வரலாற்றுப் பிரச்சினைகள் ஏதும் இல்லையா  என்ன?

அப்படி ஒரு விவாதம் நடக்கும் தளம் வேண்டும் என்றால் மூர்க்கமான பிடிவாதத்துடன் இந்த பொதுபோக்கை நிராகரிக்கவேண்டும். ஒருவகையான தற்கொலைத்தன்மையுடன் இதழை நடத்த வேண்டும். சிற்றிதழின் வழி அதுவே. ‘தமிழினி’ இதழ் அப்படிபப்ட்ட ஒன்றாக இருக்கிறது.

இன்று தமிழில் வெளிவரும் இதழ்களிலேயே ‘படிக்கமுடியாத’ இதழ் தமிழினிதான் என்றால் மிகையல்ல. அதன் பல கட்டுரைகளின் தமிழ்நடையை கொடூரம்  என்றல்லாமல் வர்ணிக்க முடியாது. ஒரு தமிழினி இதழின் எல்லா பக்கங்களையும் எந்த கொம்பனாலும் படித்து முடித்து விடமுடியாது. சோதிட வானியல், பண்டைய உயிரிஅறிவியல். மெய்யியல், மேலாண்மை, பங்குச்சந்தை என சம்பந்தமே இல்லாத கட்டுரைகள். விசித்திரமான ஒரு கிறுக்குத்தனம் ஊடாடும் இதழ் அது

ஆனால் அத்தகைய இதழில்மட்டுமே ஒரு புதிய வரவு, சராசரி விட்டு மேலெழும் ஒன்று, சாத்தியமாகிறது. சென்றகால சிற்றிதழ்கள் பல அப்படிப்பட்டவை. ஒவ்வொரு தமிழினியிலும் நான் ஒருபத்தி படித்து விட்டு ஒதுக்கும் பல கட்டுரைகள் இருக்கும். ஆனால் ஒவ்வொரு தமிழினி இதழிலும் அந்த மாதம் முழுக்க என்னை யோசிக்கச் செய்த, அந்த மாதம் முழூக்க, மேலே மேலே வாசிக்கச் செய்த ஓரு அடிப்படையான கட்டுரையாவது இருக்கும்.  

இவ்விதழில் திரு எஸ்.ராமச்சந்திரன் எழுதிய ‘இராமானுஜர் பங்கேற்ற திருவரங்க நிகழ்வுகள் வரலாறா கற்பனையா?” என்ற கட்டுரை அப்படிப்பட்ட ஒன்று. மிக விரிவான ஆய்வுப்பின்புலம் கோண்ட இக்கட்டுரை நுண்தகவல்களின் வழியாகவே முன்னால்செல்கிறது. இது எழுப்பும் வினாக்கள் மூன்று. 1. ராமானுஜரை குலோத்துங்க சோழன் கொலைசெய்ய முயன்றதும், சிதம்பரத்தில் இருந்த கோவிந்தராஜபெருமாளை தூக்கி கடலில் போடதும் உண்மையா? அதே சோழன் பல்வேறு வைணவ ஆலயங்களுக்கு திருப்பணிசெய்ததாக கல்வெட்டு உள்ளதே 2. அக்காலத்தில் ராமானுஜரின் மத- அரசியல் முக்கியத்துவம் என்ன? தென்னிந்திய அரசியலில் அவரது இடம் என்ன? 3. அக்கால அரசியலில் மதம் வகித்த பங்கு என்ன?

சோழர்களின் அரசகுலத்தில் ஆந்திர ரத்தத்துக்கு உள்ள பங்கை விவரித்து இருந்து தென்னினிந்திய வரலாற்றில் சோழர் அரச உரிமை எப்படி பின்னிப்பிணைந்திருந்தது என விளக்குகிறார் எஸ்.இராமச்சந்திரன். குலோத்துங்கன் அவ்வரசியல் மூலம் அதிகாரத்தை அடைந்தவன் அக்காலத்தில் வைணவ ஆசாரியராக ஒரு அதிகார மையமாக ராமானுஜர் விளங்கிய விதத்தை விளக்குகிறார். இவ்விரு அதிகார மையங்களுக்கும் நடுவே நடந்த பூசலாகவே ராமானுஜர் மேல் நடந்த தாக்குதலை விளக்குகிறார்.

ராமச்சந்திரன் தன் கட்டுரையில் சொல்லும் மிக சுவாரசியமான ஒரு விஷயம் உண்டு. ராமானுஜர், குலோத்துங்கன் இருவருமே ஒரு விஷயத்தில் பொதுவானவர்கள். குலோத்துங்கன்  வன்னியர் [காடவர்], அகம்படியர் போன்ற நடுத்தரச் சாதிகளை ஆதிக்கம் வகித்த சாதிகளுக்கு மேலாக முதலிடத்துக்குக் கொண்டு வந்து அதன்மூலம் தன் அதிகாரத்தை உறுதியாக்கிக் கொண்டவன். ராமானுஜர் கூரத்தாழ்வான் போல பிராமணரல்லாத சாதியினரை பிராமணரை விட மேலாக நிறுத்தி தன் புதிய மதமேலாதிக்கத்தை உருவாக்கியவர்.

சோழன் ஸ்ரீரங்கத்தை ராமானுஜரிடம் இருந்து கைப்பற்றினானே ஒழிய வைணவத்தின் மீது போர் தொடுக்கவில்லை என்பதே ராமச்சந்திரன் அவர்களின் வாதம். அவன் இறந்த பின்னர் அவனது மகன் அந்த பழியை போக்கி ராமானுஜரை திருப்பி அழைத்துக்கொண்டான். இது அன்றைய அரசியலில் பெருமதங்களின் செல்வாக்கைக் காட்டுகிறது. மத்வர் ராமானுஜர் பசவர் உட்பட அக்கால மதச்சீர்த்திருத்தவாதிகள், மதஞானிகள் அனைவருமே அதிகார அரசியலுடன் தொடர்புகொண்டு அதிகார மையங்களை உருவாக்கியவர்கள்.

குலோத்துங்கன் காலத்தில்தான் தமிழகத்தில் சாதிகள் நடுவே வலங்கை இடங்கை போர் உச்சத்தை அடைந்தது. காரணம் குலோத்துங்கன் இங்கிருந்த சாதி படியமைப்பை மாற்றியமைத்தான் என்பதே. தமிழகம் முழுக்க ஆலயங்களில் ஆகம முறையை புகுத்தி அவற்றை கையக்கபடுத்தும் செயலும் அவன் காலத்தில் பல போராட்டங்களுடன் நடைபெற்றது. இவற்றை கே.கே.பிள்ளை எழுதியிருக்கிறார். சமீபத்தில் வலங்கை இடங்கை பிரச்சினை சார்ந்த பலநூல்கள் வந்துள்ளன. தே.வே.ஜெகதீசனின் ‘பத்திரகாளியின் புத்திரர்கள்’ என்ற நூல் முக்கியமானது[தமிழினி]

இந்த விஷயங்களுடன் இணைத்து யோசிக்க வேண்டிய கட்டுரை இது. இன்றுவரை தமிழ் மனதை, அரசியலை தீர்மானித்து வரக்கூடிய மத நிறுவனங்களின் போக்குகளைப் புரிந்துகொள்ள மிக அவசியமான பல கோணங்களை திறக்கிறது இக்கட்டுரை.  இதற்கிணையான எத்தனையோ பண்பாட்டு விடுகதைகள் இன்னமும் நம்மிடம் எஞ்சுகின்றன. நம் ஆய்வு – விவாதப்பரப்பை மெல்லமெல்ல விரிவாக்கம்செய்தபடியே இருக்கவேண்டியிருக்கிறது

ராமச்சந்திரனின் இக்கட்டுரையை அல்லது இவ்விதழில் செந்தீ நடராஜன் எழுதியிருக்கும் கங்காள நாதர் சிற்பம் பற்றிய கட்டுரையை நாம் எந்த சிற்றிதழில் வாசிக்கமுடியும்?

இவ்வாறு நூற்றுக்கணக்கான கோணங்களில் தமிழ் வரலாற்றையும் பண்பாட்டையும் அணுகுவதன் வழியாக மட்டுமே நம்மால் நாம் வாழும் சூழலை புரிந்துகொள்ள முடியும். அதிலிருந்தே நமக்கே உரிய கோணங்களும் கோட்பாடுகளும் உருவாக முடியும்.  ஆரோக்கியமான எந்த அறிவுச்சூழலிலும் இந்த வகையான ஆய்வுகளும் விவாதங்களும்தான் நடக்கும்.. ஆனால் நாமோ ஆங்கிலத்தில் எழுதப்படும் அரசியல் கட்டுரைகளின் தழுவல் கட்டுரைகளுடன் நம் சிந்தனையை மட்டுப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

 

http://www.tamizhini.com/

contact vasantha kumar”  [email protected] 

 

TAMILINI 67, Peters Salai Royapettai, Chennai 14 ,  +91 9884196552

முந்தைய கட்டுரைசே,கடிதங்கள்
அடுத்த கட்டுரைநாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துக்கள்