மதிப்பு மிக்க ஜெ அவர்களுக்கு,
தங்களது யூத்து கட்டுரை படித்தபோழுதே அதை 100% ஆமோதித்திருந்தேன் தெரிவிக்கவில்லை.
ஆனால் அதற்கு எந்த வகையான எதிர் வினை வரும் என்பதில் ஆர்வத்துடன் இருந்தேன். கமல் சொல்வது போல மசாலா தேவை என்பதற்காக அல்ல. கோபத்துடன் வரும் கடிதங்களுக்குத் தங்களது இனிய உரை நடை எவ்வாறு பதில் கூறும் என்ற ஆர்வம்.
இக்கடிதம் சமீபத்திய கனகா, அர்விந்த்(iphone-5) அவர்களுக்கான அர்ப்பணிப்பு.
முதலில் கனகா , ஜெ தன்னுடைய முதல் கட்டுரையிலேயே இதில் பெற்றோர்களின் தவறும் இதில் உண்டு என்று சொல்லி விட்டார். இலக்கியம் ஆன்மிகம் இயற்கை இதனைப்பற்றிய ஆழ்ந்த எண்ணங்கள் எதுவும் என் முன்னோர்களால் எனக்கு விதைக்கப்படவில்லை. அதற்காக யாராவது விதைக்க வேண்டும் என்று காத்திராமல் நாமாக முன் வந்து அறிந்து கொள்வோம் என்று எண்ணி முன்னே வருபவர்கள் குறைவு. அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்புகிறேன், நம்புவோம்.
அடுத்து அர்விந்த்(iphone-5), உதயகுமார் பற்றிய “Terrorist” போஸ்ட் பார்த்ததும் அதனை ஆராயாமல் அந்த வழியில் வேறு யாரை தமிழின விரோதி ஆகுவோம் என்பதுதான் “யூத்து” கள் மோசமான சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதற்கு சான்று.
மெக் டொனல்ட்சில் பர்கர் சுவையாக இருக்கும். அதனை சாப்பிடும் பொழுது நமது வாயை மிகப் பெரிதாகத் திறக்க வேண்டும். ஒவ்வொரு கொறிப்புக்கும் குறைந்தது 30 வினாடியாவது அசை போடத் தேவைப்படும். வேறென்ன சொல்ல?
பல யூத்துகளுக்கு “sent via iphone-5” option-ஐ எவ்வாறு disable செய்வது என்பது இணையத்தில் கொஞ்சம் ஆராய்ந்தாலே தெரியும். நமக்கு எங்கே அதற்கு நேரம். அல்லது அவ்வளவு காசு கொடுத்து வாங்கி அதைக்கூடப் போட வில்லை என்றால் வேறு எப்படி விளம்பரப்படுத்தி கொள்வது என்ற எண்ணமோ?!
-கௌரிசங்கர்
*
ஒருவாறான தனித்தன்மை வாய்ந்த பின்புலம் கொண்டவன் நான். 1994-98 வரை பொறியியல் இளங்கலை படித்தவன். எனவே, STD-யின் விலை 9 மணிக்குப் பின் குறையும் வரை காத்திருந்து பெற்றோரைப் பொதுத்தொலைபேசி நிலையத்திலிருந்து அழைத்தும் இருக்கின்றேன். அப்பொழுது அலைபேசி இல்லை. 1999 காலகட்டத்தில் அமெரிக்கா வந்து முதுகலை பாடம் பயிலும் போது அன்றைய முன்னோடிகளான சில “இலவச” கைபேசிகளையும் நான் வாங்கி இருக்கிறேன். அன்றைய அதிசயங்கள் தொடர்ந்து, இன்று iPhone 5 கூட என் கையில் உள்ளன. உங்கள் “யூத்து” தலைப்பும், பதிவும், வந்து கொண்டிருக்கும் ஏதிர் வினைகளையும் கூர்ந்து நோக்கிய வண்ணமே உள்ளேன். தற்போதைக்கு, அமெரிக்கா-வில் நான் ஒரு பேராசிரியர்.
“யூத்து – இரு கடிதங்கள்” படித்தேன்.
கனகாவின் கடிதம் “எங்க அப்பா/அம்மா னால இவ்ளோதான் முடியும்…” என்ற தொனியில் இருக்கிறது. “அவரால் இலக்கியமாகக் கண்டெடுக்க முடிந்தது நடிகர் பார்த்திபனின் கிறுக்கல்களைத்தான்”. சரி, அவரால் முடிந்தது அவ்வளவுதான். அவரது அந்த எல்லையைத் தெரிந்த பின் தாண்டிச் செல்வதுதானே முறை. “என் தந்தைக்குத் தங்க நகை செய்யத் தெரியும், என் தாத்தாவுக்கு மூட்டை தூக்கத் தெரியும், என் பாட்டிக்கு வீதி வீதியாகக் கூவிக் கீரை விற்கத் தெரியும் இந்தப் பின்னணியில் யார் எனக்கு ஓவியம் கற்றுத் தருவார்கள் இசை கற்றுத் தருவார்கள்?” அவரது தந்தைக்குத் தங்க நகை செய்யத் தெரியும், அதைத் தாண்டித் தன் மகள் இலக்கியம் பயில வேண்டும் என்று, தன் அறிவுக்கு எட்டிய/புரிந்த படைப்புகளைக் கொண்டு, கனகாவுக்கு “பார்த்திபன் கிறுக்கல்கள்” தந்தவர்தானே அவர். அல்லாது, “எங்க அப்பா, அம்மா தங்க நகை செய்ய மட்டுமே சொல்லிக் குடுத்தார்கள்” என்று முந்தைய தலைமுறையைக் குறை சொல்லிக் கனகாவையும் தங்க நகை செய்யச் சொல்லவில்லையே அந்த மாமனிதர். கனகாவின் இதே கூற்றை அவர் அப்பா “நான் தங்க நகை செய்பவன், என் அப்பா மூட்டை தூக்குபவர், என் அம்மா கீரை விற்பவள்” என்று சொல்லிக்கொண்டு தன்னிறைவு அடையாமல் மகள் இலக்கியம் படிக்க வேண்டும் என்று தன்னாலான வரையில் “பார்த்திபன் கிறுக்கல்கள்” வாங்கிக் கொடுக்கத்தானே செய்தார்?! இதைதான் ஜெயமோகன் சுட்டுகிறார், “யூத்து” பிறரை, குறிப்பாக தனக்கு பின் வருவோரை, நினைவில் கொள்ள வேண்டும் என்று. “ஒரு சராசரி அமெரிக்கனுக்குக் குடும்பப்பின்னணியிலேயே இசை, ஓவியத்தில் அடிப்படைப்பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதை நான் கவனித்திருக்கிறேன்.” — இதை சராசரி அமெரிக்க குடும்பம் இசை, ஓவியம் தெரிந்த பின்புலம் கொண்டதாகக் கொள்வது தவறான கருத்து. சிலதேர்ந்த, அடிப்படைத் துறைகளை சராசரி அமெரிக்கக் குடும்பங்கள் பயில்விப்பது விழிப்புணர்வின் சின்னமேயன்றி, அறிவின் அடையாளமாகக் கொள்வது தவறு. கனகாவின் அப்பா புரிந்து கொண்டுள்ளார், “யூத்து” கனகாவும் புரிந்து கொள்ள வேண்டும். “பொருளாதாரத்தில் பலமிக்க ஒரு குடும்பத்தால், சமூகத்தால், தேசத்தினால் செய்ய முடிந்த ஒன்றை நம் மனிதர்களோடு ஒப்பிடுவது சரி தானா என்ற கேள்வி எனக்கு?” — இதுதான் முரணின் எல்லை. ((பொருளாதார பலமற்ற)) தங்க நகை செய்யும் கனகாவின் அப்பா மகள் இலக்கியம் படிக்க வேண்டும் என்று விரும்ப, கனகா பயிலவில்லை. மேலும், தற்கால இலக்கியத்தையும், கலையையும் வளர்ப்பவர்கள் பொருளாராதாரத்தில் மிகவும் பின்தங்கிய சாமான்யர்களே. ஜெ. மோ. கூறியது போல சராசரி அமெரிக்கக் குடும்பத்தையும், இலக்கியத் தேர்வற்ற அப்பாவையும் கனகா தாண்டி வருங்கால “யூத்”-ஐப் படைப்பார் என்பதில் ஐயம் எனக்கில்லை.
இப்பொழுது அர்விந்த். வணிக சினிமாவிற்குள் நுழைந்து விட்டதை ஜெ. மோ. மறந்த ஒரே காரணத்தினால் “hack” செய்வோம் என்றெல்லாம் பயமுறுத்துகிறார். இவருக்கு வயது 25. “சிந்து சமவெளி” இவரின் மனதின் அருகிலுள்ள படைப்பு என்பது அவரின் கூற்றின் மூலமாகவே வெளிப்படுகிறது. பெங்களூரின் மக்டோனல்ட்ஸ் காட்சியை வைத்து சமூகத்தை அளவிடும் அர்விந்த் ஒரு சராசரி “யூத்து” அல்ல என்பதை ஜெ. மோ. கூட ஏற்றுக் கொள்வார். “மேலை நாட்டுக் கலாசாரத்தையும் கல்வியையும் ஒரு சேரக் கற்கிறோம் நாங்கள்” — கலாசாரத்தைப் பிறரிடம் 25 வயதில் கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பது வரமா சாபமா என்பது எல்லையற்ற விவாதம். இது வரை கற்றதுதான் என்ன என்பதும் தேவையற்ற கேள்வி. “சாலையில் அடிபட்டு விழுவது பற்றிக் கூடக் கவலைப்படாமல் நாங்கள் இடைவிடாது இசையை ரசித்துக் கொண்டே செல்கிறோம்.” –அடிபட்டு விழுவது பற்றியா, அடிபட்டு விழுபவர்களைப் பற்றியா? “xbox ஐ வைத்து ஆசை காட்டியாவது முதல் ரேங்க் எடுக்க வைத்து விடுவோம்” — சிறப்பின் மேல் சிறப்பு. தன் குழந்தைகள் சிறப்பானவர்களாக, உண்மையானவர்களாக, நல்லெண்ணம்/நல்லுள்ளம் கொண்டவர்களாக வர வேண்டும் என்ற பயனற்ற பாசங்குகளைத் தவிர்த்து “முதல் ரேங்க்” எடுக்க வைத்து விடுவோம் என்கிறார் அர்விந்த். முதல் ரேங்க் என்பது ஒரு “Xbox” ஆசையின் பால் அடையக்கூடிய ஒரு இலக்கு என்றால், அதை அடைவதில்தான் ஏன் இவ்வளவு முனைப்பு?
பாபு சுந்தரம்