மகாதேவன்

எம்.எஸ். எனக்கு அறிமுகமான புதிதில் ஒருமுறை ஒரு நண்பரின் உடல்நலக்குறைவைப்பற்றி நான் அவரிடம் சொன்னேன். அப்போதுதான் தெரிசனங்கோப்பு வைத்தியரைப்பற்றி அவர் சொன்னார். நான் ஆச்சரியத்துடன்

‘அவர் இப்போதும் இருக்கிறாரா? நான் ஒரு சரித்திரக் கதாபாத்திரம்போல அவரை நினைத்திருக்கிறேன்’ என்றேன்

எம்.எஸ். சிரித்தபடி ‘சரித்திரக் கதாபாத்திரமேதான்…தெரிசனங்கோப்பு வைத்தியர் மகாதேவய்யரைப்பற்றிக் குமரிமாவட்டத்தில் எல்லாரும் பல தொன்மக்கதைகளைக் கேட்டிருப்பார்கள். நான் பேசுவது அந்த மகாதேவய்யரின் பேரன் டாக்டர் மகாதேவன் அவர்களைப்பற்றி’ என்றார்.

குமரிமாவட்டத்தில் நாகர்கோயிலில் இருந்து இருபதுகிலோமீட்டர் தூரம் மலையடிவாரம்நோக்கிச் சென்றால் வரக்கூடிய சிற்றூர் தெரிசனங்கோப்பு. நாஞ்சில்நாடனின் புனைகதைகள் காட்டும் நிலத்தையும் வாழ்க்கையையும் கொண்ட ஊர். சுற்றிலும் செங்குத்தாக உயர்ந்த மலைகள் நடுவே பச்சைவயல்களும் நீர்நிலைகளும் பரவிக்கிடக்கும்.

டாக்டர் மகாதேவன் ஆயுர்வேதத்தில் படித்து உயராய்வுசெய்தவர். தன் குடும்பத்திலேயே குருகுல முறைப்படி ஆயுர்வேதம் கற்றவர். தெரிசனங்கோப்பிலேயே இன்று அவரது மருத்துவநிலையம் இருக்கிறது. தெரிசனங்கோப்பு என்றாலே அந்த மருத்துவநிலையம்தான்.

அந்த நண்பர் ஆயுர்வேதமுறைப்படி சிகிழ்ச்சை எடுத்து குணமானதாகச் சொன்னார். நான் மகாதேவனைச் சந்திப்பது மேலும் பலவருடங்கள் கழித்து. மகாதேவன் மிகச்சிறந்த இலக்கியவாசகர். நாஞ்சில்நாடனின் ரசிகர். என் எழுத்துக்களை வாசித்து அவற்றைப்பற்றி அவர் பேசுவதுண்டு என எம்.எஸ். சொல்வதுண்டு.

மகாதேவன் விஷ்ணுபுரத்தை வாசித்துவிட்டு என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார் எம்.எஸ். ஒருமுறை எம்.எஸ்.என் வீட்டுக்கு வந்தபோது ‘மகாதேவனும் கெளம்பினார். வர்ர நேரத்திலே ஒரு பேஷண்ட் வந்திட்டார்’ என்றார். அவர் என்னைச் சந்திக்க வருவது முறையல்ல என்று எனக்குப்பட்டது. அவரது நேரம் நோயாளிகளுக்குரியது. ஆகவே அதற்கடுத்த நாளே நான் எம் எஸ்ஸுடன் கிளம்பி தெரிசனங்கோப்பு சென்று மகாதேவனைப்பார்த்தேன்

அவர் அத்தனை இளமையாக இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அவரது மகத்தான புலமையைப்பற்றி நான் அறிவேன். அவர் எழுதிய பலநூல்களை எம்.எஸ் தான் மெய்ப்பு பார்த்து செப்பனிடுவார். எம்.எஸ்ஸிடம் இருந்து அந்நூல்களை நான் வாங்கி வாசித்து வந்தேன். சம்ஸ்கிருதத்திலும், இந்திய தத்துவமரபிலும் மகாதேவனுக்குப் புலமை உண்டு. ஆயுர்வேதத்தை இந்தியப்பண்பாட்டின் ஒட்டுமொத்தப் பின்புலத்தில் வைத்து அணுகக்கூடியவர் அவர்.

அதன் பின் பலமுறை தெரிசனங்கோப்புக்குச் சென்று அவரைச் சந்தித்திருக்கிறேன். மருத்துவர்களிடம் பொதுவாகக் காணமுடியாத சகஜமான நிலை கொண்டவர். நான் பார்க்கும்போதெல்லாம் சிரித்துக்கொண்டேதான் இருந்தார். நோயின் துயரத்தின் நடுவே சிரித்துக்கொண்டிருக்கும் மருத்துவன் அற்புதமானதோர் அகவிடுதலை கொண்டவன் என நினைத்துக்கொள்வேன்

என் நண்பரும் காந்திடுடே இணையதளத்தை நடத்துபவருமான டாக்டர் சுநீல் கிருஷ்ணன் மகாதேவனின் நூலைப்பற்றி எழுதிய விமர்சனக்குறிப்பு ஆம்னிபஸ் இணையதளத்தில் உள்ளது. அந்தரங்கமாக மகாதேவனை மதிப்பிடும் ஒரு நல்ல கட்டுரை

முந்தைய கட்டுரைகானுயிர் புகைப்படக் கண்காட்சி
அடுத்த கட்டுரைதலித் முரசு காப்புநிதி