அன்பின் மதிப்புமிக்க ஜெயமோகன் சாருக்கு
வணக்கம்.
உங்களை மௌனமாக வாசித்து வரும் வாசகி. உங்களுடைய “யூத்” கட்டுரை படித்தேன். அதற்கு நண்பர் ஒருவரின் கடிதத்தையும் தங்கள் தளத்தில் கண்டேன்.
பல கருத்துக்களை முழுமையாக ஏற்க முடிகிறது.குறிப்பாக இந்த இடம், “இன்றைய குடும்பம்” என்ற வார்த்தைக்கு சரியான வரையறை. ///நம்முடைய குடும்பங்கள் பெரும்பாலும் சேர்ந்து சமைத்துத்தின்று, உறங்குகிற இடங்கள் மட்டுமே. உறவுகளே கூட சுயநலமும் வன்முறையும் கொண்டவை./// மேலும் பல சுவாரஸ்யமான இடங்கள். அதையும் தாண்டி எனக்கு சில கருத்துக்கள் kelvigal உண்டு :
ஒரு திரைப்பட நகைச்சுவைக் காட்சி ஒன்று நினைவுக்கு வருகிறது( உங்கள் “நகைச்சுவை” கட்டுரை படித்த பின் இதை என்ன சொல்லிக் குறிப்பிடுவது என்பதிலும் குழப்பம்). பள்ளிகளில் பெற்றோர்கள் படித்திருந்தால்தான் பிள்ளைகளுக்கு சீட்டு என்று ஒரு விதியிருக்கும். அப்போது நடிகர் விவேக் அப்படியென்றால் பெற்றோருக்கு முதலில் சேர்த்து கொள்ளுங்கள் பின்பு குழந்தைகளை சேர்க்கலாம் என்பாரே.
அது போல் இந்தக் கட்டுரைகளை நீங்கள் சென்ற தலைமுறையில் எழுதியிருக்கவேண்டும். யூத் என்ற கட்டுரை எத்தனை தீவிரத்துடன் எழுதப்பட்டு உள்ளதோ அதே தீவிரத்துடன் கடந்த தலைமுறைக்கு உங்களுடைய கருத்து கொண்டு சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
என் தந்தைக்கு நான் இலக்கியம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம். ஆனால் அவரால் இலக்கியமாகக் கண்டெடுக்க முடிந்தது நடிகர் பார்த்திபனின் கிறுக்கல்களை தான்.
இந்த விஷயங்களை நான் உங்களோடு மலேசியாவில் இருந்து திரும்புகிற போது கேட்டுக்கொண்டே வந்தேன். இதைக்கேட்டு விட்டு நீங்கள் நான் எப்படி வாசிக்க வேண்டும் யாரை வாசிக்க வேண்டும் என்று பரிவோடு சொன்னீர்கள்.
என் தந்தைக்கு நான் ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டும் என்ற விருப்பம் இருந்தது அதற்காக ஒரு விநாயகர் சிலையையும் அருகம்புல்லையும் வாங்கி, இரண்டு கொழுக்கட்டையை அக்கம் பக்கத்தில் பங்கு போட்டுக் கொடுத்து, மீதியைத் தின்பதைத்தான் அவரால் கற்றுத் தர முடிந்திருக்கிறது.
துண்டை விரித்துக் கட்டுச் சோறு உண்பது எப்படி இயற்கையை ரசிக்காமல் போனதன் அடையாளமாகும்??. சில செயல்களால் இயற்கையின் தன்மை அழியுமேயானால் அந்த இடத்தில் நீங்கள் சொல்லும் கருத்து சரியானது. ஆனால் அது நிச்சயம் இயற்கைக்குப் புறம்பான செயல் என்று முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என் பெற்றோருக்குப் பூண்டி மலையடிவாரத்தில் துண்டை விரித்துக் கட்டுச் சோறு கொடுத்து தான் இயற்கையை சொல்லித் தரத் தெரிந்தது.
இன்று இயற்கையை விட குளுமையாக எத்தனையோ உணவகங்கள் இருக்கிறது. அனைவரும் சொல்வது போல் முன்றாம் தர நாகரிகத்தின் குறியீடாய் டைனிங் டேபிளில் கூட உண்டிருக்கலாம். இருந்தும் இயற்க்கை சூழலில் உணவுண்ணும் குடும்பப் பண்பாட்டை “இயற்கையை ரசிக்கத் தெரியாதவர்கள்” என்று சொல்லிவிட முடியாது. அவர்களுக்கு இயற்கை வேறு எப்படி ரசிப்பது என்று தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் நிச்சயம் ரசிக்கத்தெரியாதவர்கள் அல்ல.
//ஒரு சராசரி அமெரிக்கனுக்குக் குடும்பப்பின்னணியிலேயே இசை, ஓவியத்தில் அடிப்படைப்பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதை நான் கவனித்திருக்கிறேன். /// கலை சார்ந்த விஷயங்களை கற்றுக் கொடுத்தால் தான் பண்பாடா என்ன? என் குடும்பத்தின் அடிப்படையில் என் தந்தைக்குத் தங்க நகை செய்யத் தெரியும், என் தாத்தாவுக்கு மூட்டை தூக்கத் தெரியும், என் பாட்டிக்கு வீதி வீதியாகக் கூவிக் கீரை விற்கத் தெரியும் இந்தப் பின்னணியில் யார் எனக்கு ஓவியம் கற்றுத் தருவார்கள் இசை கற்றுத் தருவார்கள்?
பொருளாதரத்தில் பலமிக்க ஒரு குடும்பத்தால், சமூகத்தால், தேசத்தினால் செய்ய முடிந்த ஒன்றை நம் மனிதர்களோடு ஒப்பிடுவது சரி தானா என்ற கேள்வி எனக்கு?
மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டாலும் பீட்சா சாப்பிட்டாலும் குற்றம் யூத் மீது தான் என்றால். தவறு விதையில்தான் இருக்க வேண்டும் விருட்சத்தில் அல்ல என்று தோன்றுகிறது.
///ஆனால் வேறு தரமான இளைஞர்களும் இங்கே உண்டு’ என்றேன். அவர் மேல்நாட்டினருக்கே உரிய அபாரமான கனிவுடன் ‘நான் பார்க்க விரும்புகிறேன்’ என்றார்.
நான் கோபத்துடன் ‘நாங்கள் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறோம். எதிர்காலம் பற்றிய கவலைகளினால் முழுக்க முழுக்க லௌகீகமாக வளர்க்கப்பட்ட இளைஞர்கள் இவர்கள். குடும்பப் பண்பாட்டுப்பின்புலம் அவர்களுக்கு இல்லை. கல்விப்புலமும் இல்லை. ஆனால் வரும் தலைமுறை அப்படி இருக்காது’ என்று சொன்னேன்.
அது என் நம்பிக்கை.வேறென்ன சொல்ல? – ///
உங்களுக்கு வரும் தலைமுறையினர் மீதும், வரும் தலைமுறையினருக்கு உங்கள் மீதும் நம்பிக்கை கொடுக்கிற வரிகள் இவை.–
//வேறென்ன சொல்ல?/// நீங்கள் இப்படித்தான் சொல்ல வேண்டும்.
அன்புடன்
கனகா
அன்புள்ள கனகா
சரிதான். அப்படியென்றால் நாளைய யூத்துக்களுக்கான வார்த்தைகளை அவர்களின் அப்பாக்களிடம் பேசுவதாக எடுத்துக்கொள்ளுங்கள்.
ஜெ
*
அன்புள்ள ஜெயமோகன்,
இது தங்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம். என்னை பற்றி சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், நான் ஒரு 25 வயது “யூத்து”. பெங்களூரில் சில வருடங்களாகப் பொட்டி தட்டிக் கொண்டிருக்கிறேன். நான் இதுவரை தமிழில் தட்டச்சு செய்தது கிடையாது. ஆனால் நீங்கள் இன்றைய இளைஞர்களை நோக்கி உமிழும் வெறுப்பே, இன்றைய யூத்துகளின் சார்பாக என்னை இந்தக் கடிதம் எழுத வைக்கிறது.
இன்று காலை பேஸ்புக்கில் திரு உதயகுமாரின் புகைப்படம் “MOST WANTED TERRORIST” என்ற தலைப்பில் யாரோ ஷேர் செய்து இருந்தார்கள். அதைப் பார்த்ததும், அதே போல் உங்களின் படத்தை “சிந்து சமவெளிக் கதாசிரியர்” என்று தலைப்பிட்டு, தமிழ்க் கலாசாரத்தைக் கெடுப்பவர், அவர் ஒரு மலையாளி , தமிழ் நன்றி மறந்தவர் , தமிழரின் நகைச்சுவையின்மையை கேலி செய்பவர் என்றெல்லாம் சில பொடிகளைத் தூவி விட்டு ஷேர் செய்யலாம் என்று எனக்கு ஒரு எண்ணம். அப்படி செய்தால் கண்டிப்பாக சில ஆயிரம் பேர் அதை பார்ப்பார்கள். எங்களில் சிலர் கொதித்தெழுந்து, உங்கள் வலைத்தளத்தை “ஹாக்” செய்யக் கூட முனையலாம். கூகிள் செய்தாலே அதற்கு “எளிமையான” வழிமுறைகள் கிடைக்கும். பரவாயில்லை. பிழைத்துப் போங்கள் ! தாங்கள் இப்போது தமிழ் வணிக சினிமாவிற்குள் நுழைந்து விட்டீர்கள் என்பதை மறக்க வேண்டாம். தமிழ் சினிமா யாரை நம்பி இருக்கிறது என்பதை நான் சொல்லத் தேவை இல்லை.
இன்று காலை பத்து மணி அளவில், மெக் டோனல்ட்சில் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். பக்கத்து டேபிளில் பள்ளி மாணவர்கள். ஒரு இளம்பெண் பிரெஞ்சு ப்ரைசைக் கொறித்துக்கொண்டே தன் நண்பனுக்கு Bernouli ‘s தியோரம்மை தலையில் குட்டி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். இது போன்ற ஒரு காட்சியை நீங்கள் பெங்களூரில் எந்த மெக்டோனல்ட்சிற்கு சென்றாலும் பார்க்க முடியும். மேலை நாட்டுக் கலாசாரத்தையும் கல்வியையும் ஒரு சேரக் கற்கிறோம் நாங்கள். (சோற்றுடன் கல்வி ??)
கலையை ரசிக்கத் தெரியாதவர்கள் என்று நீங்கள் சொல்வதை என்னால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது. சாலையில் நடக்கும் போதும், இரு சக்கர வாகனத்தில் போகும் போதும், சாலையில் அடிபட்டு விழுவது பற்றி கூட கவலைப்படாமல் நாங்கள் இடைவிடாது இசையை ரசித்து கொண்டே செல்கிறோம்.
அனால் எனக்கு விளங்காதது ஒன்று தான் ! எங்கள் தலைமுறையைத் தமிழிலக்கியப் புதைகுழியிலிருந்து காப்பாற்றி, ஆங்கிலத்தையே வீட்டிலும் பேச வைத்துப் பழக்கிய புண்ணியவான்களே இன்று எங்களை வசை பாடுகிறார்கள். அனால் அவர்கள் கண்ட கனவு பலிக்கத்தான் போகிறது. உங்களைப் போன்ற தீய சக்திகளின் பண்பாட்டுப்பின்புலம் , கல்விப்புலம் போன்ற ஆசை வார்த்தைகளில் ஏமாறாமல் , அடுத்த தலை முறைக் குழந்தைகளுக்கு நாங்கள் xbox ஐ வைத்து ஆசை காட்டியாவது முதல் ரேங்க் எடுக்க வைத்து விடுவோம்.
~ அர்விந்த்
ஐ போன் – 5 யில் இருந்து அனுப்பியது.
பி.கு: எங்கள் தலைமுறையினருக்கு, ஒரு எழுத்தாளரை முதல் கடிதத்திலேயே விமர்சிக்கும் (மிரட்டும்) தைரியம் உண்டு என்பதை கவனிக்கவும்.
அன்புள்ள அர்விந்த்
நன்றி
நல்லவேளை நான் ஐபோன் வாங்கவில்லை என்று நினைத்துக்கொண்டேன். பலர் ஐபோனைக் கைக்குழந்தை போல வளர்க்கிறார்கள்
ஜெ