கருநிலம் – 4 [நமீபியப் பயணம்]

அதிகாலையில் கண்டிப்பாகக் கிளம்பியாகவேண்டும் என்று டேவிட் சொல்லியிருந்தார். ஆகவே இம்முறை முன்னதாகவே படுத்துவிட்டோம். இரவு தூக்கம் விழிக்கச்செய்யும் சூழல். பாலைநிலம் நடுவே திறந்தவெளியில் உணவுமுற்றம். நமீபியாவில் அசைவம் உண்ண வேண்டாம் என்று நினைத்திருந்தேன். காரணம் ஏகப்பட்ட எச்சரிக்கைகள். ஆனால் வந்த அன்றே ஒரு சிக்கன் சாண்ட்விச் சாப்பிட்டேன். நான் சாப்பிட்டதிலேயே சிறந்த அசைவ உணவு அதுதான். அதன்பின்னர் நான் சாப்பிட்ட எல்லா உணவுகளுமே மிகச்சிறந்தவை என்றே சொல்லவேண்டும். அமெரிக்காவில் கசாப்புக்கும் சமையலுக்கும் நடுவே காலம் நிறைய ஓடியிருப்பதனால் மாமிசத்தின் சுவையில் ஒரு சின்ன மாற்றம் இருக்கும். நமீபியாவில் எல்லா மாமிசமுமே புத்தம்புதியவை.

இரவுணவை உண்ண எனக்குத் தடையாக இருந்தது பழங்கள் உண்ணும் வழக்கம். ஆனால் ஒரு கறுப்பு மாமி அவள் செய்த ஸ்டீக்கை நான் சாப்பிட்டே ஆகவேண்டும் என்று என் டேபிளுக்கு வந்து மன்றாடினாள். ஆகவே ஒரு மாட்டுத்தொடைக்கீற்றைச் சாப்பிட்டேன். அமெரிக்காவில் சிறந்த ஸ்டீக்குகளைச் சாப்பிட்டிருக்கிறேன் என்றாலும் அது அபாரமான சுவையுடன் இருப்பதாகப் பட்டது. ‘நீங்கள் இந்தியர்கள். ஆகவே நன்றாகவே வறுத்தேன்’ என்றாள். ‘என்னை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறீர்கள்? எங்கள் நிறமும் உங்களை மாதிரித்தானே?’ என்றேன். ’முடியைப் பார்த்தால் தெரிகிறதே’ என்றார். ‘நாங்கள் நிறைய செலவு செய்து உங்களைப்போல முடியை நீட்டிக்கொள்கிறோம்’ என்றாள். ‘இந்தியாவில் அதைவிட செலவுசெய்து முடியை உங்களைப்போலத் திரித்துக்கொள்வார்கள்’ என்றேன். சிரித்தாள்

காலையில் Sossusvlei என்ற இடத்துக்குக் கிளம்பினோம். சௌஸஸ்வெலி என்று ஓரளவு சொல்லலாம். இது ஒருகாலத்தைய ஏரி. இப்பொது உறைந்து களிமண் பரப்பாக உள்ளது. அதைச்சுற்றி பிரம்மாண்டமான செம்மணல்மலைகள். மழைக்காலத்தை ஒட்டி இப்போதும் கொஞ்சம் நீர் தேங்குவதுண்டு. இந்த இடத்தைச்சுற்றியுள்ள ஒரு இருநூறு கிலோமீட்டர் பரப்பை சௌஸஸ்வெலி என்றுதான் சொல்கிறார்கள்.

‘அதிகாலையில் சென்றால்தான் நாம் மிருகங்களைப் பார்க்கமுடியும்’ என்றார் டேவிட். ஆனால் காலையில் பொன்னிறமாகப் புல்வெளி விழித்தெழும் அற்புதத்தைக் காண்பதே எனக்கு முக்கியமாக இருந்தது. என் முழு ஆன்மாவும் கண்களில் அமர்ந்திருந்தது. பிரம்மாண்டமாகச் சுழன்றது நிலம். இளம்பச்சையில் தொடங்கி எரியும் செம்பொன்னிறம் வரை சென்ற பல்லாயிரம் நிறக்கூட்டுகள். முப்பதாண்டுகளுக்கு முன் முதன்முதலாகக் கைலாசமலையைப் பார்க்கையில் அடைந்த மன எழுச்சியை, மௌண்ட் சாஸ்தாவைப் பார்க்கையில் பெற்ற கனவை , அப்போது மீண்டும் அடைந்தேன்.

நிலம் மனிதனுக்கு அளிக்கும் பேரின்பத்தை என்னவென்று சொல்வது? எப்படி அதை விளக்குவது? பிரபஞ்சம் என்ற விரிவில் மனிதன் தொட்டறியக்கூடிய தூலம் அதுமட்டும்தானே? அவனை உருவாக்கி வாழவைத்து உள்ளிழுத்துக்கொள்ளும் இருப்பு. நான் இதில் ஒரு துளி என மனம் கொள்ளும் எக்களிப்பே நிலம் அளிக்கும் அனுபவம்போலும். பரவசத்தால் கண்ணீர்மல்கிய நிலையிலேயே அந்த நிலம் வழியாகச் சென்றேன்.

என்றும் நிலக்காட்சிகளின் ரசிகன் நான். என் நினைவறிந்த நாள்முதல் தொடர்ந்து பயணம்செய்துகொண்டிருப்பவன். இந்தியப்பெருநிலத்தில் மலைகளில் பள்ளத்தாக்குகளில் நதிப்படுகைகளில் பாலைகளில் பனிமலைகளில் அலைந்தவன். கனடா,ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மலேசியா,அரேபியா என்று நிலங்களைக் கண்டவன். ஆனால் ஆப்பிரிக்கநிலம் அளித்த பரவசம் சமானமில்லாத ஒன்றாக இருந்தது.

அதற்குக் காரணமென்ன என்று பின்னர் யோசித்தேன். அது மனிதன் தொடாத கன்னிநிலம் என்ற எண்ணம்தான். தொடுவான் வரை விரிந்த அந்த நிலத்தில் ஒருமுறைகூட மனிதக்கால்படாத இடங்கள் நிறையவே இருக்கும். மனிதன் பிறந்துவிழுந்த பிரசவக்கட்டில் அப்படியே ஈரம்காயாமல் இருப்பது போல ஒரு பிரமை. புதிய உலகம் எனப்படும் ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் கனடாவிலும் அப்படி விரிநிலங்கள் உண்டு. ஆனால் அவை எல்லாமே வேலிகட்டப்பட்டு அளந்து உரிமைகொண்டாடப்பட்டவை. இந்த நிலம் இன்னும் இயற்கைத்தெய்வத்திடமே இருந்துகொண்டிருக்கிறது

புல். எவ்வளவு மகத்தான உயிர். டேவிட் அட்டன்பரோவின் பிளானட் எர்த் ஆவணப்படத்தில் புல்லைச் சொல்லும்போது ‘இந்தத் தனி உயிர்வகைதான் பூமியின் மாபெரும் உணவு உற்பத்தியாளர். இவ்வுலகில் உண்ணப்படும் உணவு முழுக்க புல்லால் உருவாக்கப்படுகிறது. சூரிய ஆற்றலை உணவாற்றலாக மாற்றுவது புல்தான்’ என்று ஒரு வரி வரும். அக்கணமே ‘விசும்பின் துளிவீழின் அல்லால் பசும்புல் தலைகாட்டலரிது’ என்ற வரியும் வேதத்தின் திருணசூத்திரங்களும் என்நினைவில் எழுந்து வந்தன.

வெல்லமுடியாதது. அழியாதது. மண்ணில் கோடிகோடி உயிர்களுக்கு இயற்கை அள்ளி வைத்த அமுது. பசுமையாக பொன்னாக பொலிந்து நின்றது புல். உணவுக்கு மேல் சொட்டி நின்றன நீர்த்துளிகள். சாய்வொளியில் அவை சுடர்த்துளிகளாக மின்னி உதிர்ந்தன. பொன்னிறமான்கள் நெருப்புக்கோழிகள் புரிகொம்பு மிளாக்கள் பலவகைக் காட்டுக்கோழிகள் மேய்ந்தன. சின்னஞ்சிறு பறவைகள் எழுந்து சுழன்றமர்ந்தன.

வழியெங்கும் நின்ற எல்லா மரங்களிலும் தொலைபேசிக் கம்பங்களிலும் குட்டி வைக்கோல்போர் அளவுக்கு ஏதோ இருந்தது. அது ஒரு சிறு குருவியின் கூடு என்றார் டேவிட். எந்தக் காற்றிலும் அது கிழியாது. பல ஆண்டுகளாக பற்பல தலைமுறைகளாக அவை அந்தக்கூட்டைக் கட்டிக்கொண்டே இருக்கும். உள்ளே நூற்றுக்கணக்கான அறைகள். ‘அவை சிறிய நகரங்கள்’ என்றார் சிரித்தபடி.

மெல்ல மணல்மேடுகள் தெரிய ஆரம்பித்தன. குங்குமக்குவியல்கள். உறைந்து நிலைத்த அந்தி. பிரம்மாண்டமான மலர் ஒன்றின் இதழ்ச்சுழிப்புகள். வானில் இருந்து விழுந்து படிந்த செம்பட்டாடை. அந்த வளைவுகளின் நளினம் நெஞ்சைப் பரவசத்தால் நிறைத்தது. இயற்கையின் தன்னியல்பு பெண்மைதானோ என்ற எண்ணம் எழுந்தது. ஆண்மை என்பது அதை அறியும் தன்னியல்பு மட்டும்தானா? சக்திரூபம் கொண்ட மண்.

மணல்மேடுகள் அருகே வண்டியை நிறுத்தினார் டேவிட். நான் அருகே இருந்த மேட்டை சுட்டிக்காட்டி ‘அங்கே போகலாமா?’ என்றேன். ‘போகலாமே’ என்றார் அவர். நான் அந்த செம்மணல்குன்று நோக்கிச் செல்ல ஆரம்பித்தேன். சில நிமிடங்களிலேயே முற்றிலும் பாலைநிலத்தால் சூழப்பட்ட உணர்வை அடைந்தேன். காதடைக்கும் அமைதி. என் காலடி ஒலி அந்த அமைதியை வெண் திரையைக் கத்தியால் குத்திக் குத்திக் கிழிப்பது போல ஒலித்தது.

அரைமணிநேரம் நடந்தபின்பு தெரிந்தது மணல்மலை உண்மையில் தூரத்தில் இருக்கிறது என. பாலைவனத்தில் கண்ணைக்கொண்டு தொலைவை மதிப்பிடவே முடியாது. மலை விலகி விலகிச் சென்றுகொண்டே இருந்தது. அதன் மென்மையான சிவந்த சருமத்தின் காற்றலைமடிப்புகள் மீது காலைவெயில் மாறுபட்டது. வெயில் மாற மாற கணம்தோறும் மலைகள் உருமாறியபடியே இருந்தன. நெருப்பு போல. நிலத்தில் பரவிய செந்தழல்களா அவை? இல்லை அந்திச் செம்மேகங்களின் பருவடிவங்களா?

மூச்சுவாங்க ஆரம்பித்தது. மணல்மேட்டில் ஏற ஏற அது சரிந்து சரிந்து என்னை கீழே விட்டது. அம்மாவின் பாலிஸ்டர் புடவையைப் பற்றி ஏற முயலும் கைக்குழந்தைபோல உணர்ந்தேன். பின் மணலிலேயே படுத்தேன். என்னை ஒரு மெல்லிய அருவி போல அது கீழே கொண்டுவந்தது. தேன் வழியலில் ஒட்டிய ஈ போலக் கீழே வந்தேன்.

மலைக்குவைகள் செக்கச்சிவந்த உள்ளங்கைக் குவிதல்கள் போல. திறந்த சிப்பியின் செஞ்சதை போல. புன்னகையில் விரிந்த பிரம்மாண்டமான உதடுகள் போல. சட்டென்று கோயில்பட்டியின் வத்தல்மிளகாய் குவியல்கள் நினைவுக்கு வந்தன. கீழே நின்று பார்க்கையில் சிவந்த புடவை கட்டி அமர்ந்திருக்கும் அம்மாவின் தொடைகள் போலத் தெரிந்தன அவை.

கூ கூ என்று குரல் கேட்டது. டேவிட். நான் திருப்பிக் கூவினேன். அவர் என்னை அடையாளம் கண்டு ஒரு குன்று மேல் ஏறி கைகாட்டினார். நான் திரும்பி வந்து சேர்ந்தேன். ‘எங்கே போனீர்கள்?’ என்றார். ‘போகலாமென்று சொன்னீர்களே?’ என்றேன். ’அது நான் சொல்லும் இடத்தில்…இங்கே வழிதவறினால் கண்டுபிடிப்பது கஷ்டம். குடிக்கத் தண்னீர் இல்லாமல் வேறு போய்விட்டீர்கள்…’ என்று பீதியைக் கிளப்பினார்.

அங்கே மணலில் ஒரு நெக்லஸ் போன்ற தடத்தைச் சுட்டிக்காட்டினார் டேவிட். ‘பாலைவன மணல் என்பது ஒரு நாளிதழ் போல. நேற்றைய செய்தி முழுக்க எழுதப்பட்டிருக்கும்…இதோ இது ஒரு உடும்பு போன தடம்….’ உடும்பின் வாலின் தடம் நடுவே கோடாகச் செல்ல நான்குகால்தடங்களும் பூக்களாகத் தொடுக்கப்பட்டிருந்தன. ‘இது ஓரிக்ஸ். இது மான்கூட்டம். இது முயல்…’ என்று சொன்னவர் ‘இது ஒரு பாம்பு. மணலில் மூழ்கி கிடந்து வாலை மட்டும் சிறிய புழு போல ஆட்டும். பக்கத்தில் போனால் கடித்துவிடும். கடும் விஷம் உடையது’ என்றார்

சட்டென்று ஒரு அடையாளத்தைக் கண்டார். நாணலால் வரைந்த தடம்போல சிறிய முத்திரைகள். எழுத்துக்கள் போல. ‘இதை எழுதியவர் ஒரு பெண்மணி’ என்றபின் மணலைத் தோண்ட ஆரம்பித்தார். மூன்றடி ஆழத்தில் ஒரு குழாய் தென்பட்டது. பிசினால் ஆனது. அதற்குள் குச்சிவிட்டபோது அரையடி ஆழத்துக்குச் சென்றது. உள்ளிருந்து ஒரு பெரிய வெள்ளைச்சிலந்தியை எடுத்தார் ‘இதற்கு டேன்ஸிங் வைட் லேடி என்று பெயர்’ என்றார். அம்மணி அவ்வளவு ஆழத்தில் குளிர்ந்த வளைக்குள் தூங்கிக்கொண்டிருந்தாள். ’விஷமுண்டா?’ என்றேன். ‘சேச்சே அவள் சீமாட்டி’ என்றார்.

டேவிட் அவளை ஒரு புதருக்குள் விட்டார். ‘இங்கே வெயிலில் விட்டால் அவள் செத்துவிடுவாள். நிழலில் என்றால் ஒருமணிநேரத்தில் புதைந்துவிடுவாள்’ ஆப்பிரிக்கர்கள் பொதுவாக வேட்டையாடிகள். எல்லாவற்றையும் தின்பவர்கள். ஆனால் அவர்களுக்கு உயிர்க்கொலை என்பது பெரும்பாவமும்கூட. உணவுக்காக மட்டும் உயிர்களைக் கொல்லவேண்டும். கொல்லப்பட்ட மிருகத்தின் ஆன்மா ஈடேற பிரார்த்தனையும் செய்யவேண்டும். அர்த்தமில்லாத கொலை என்பது பெரும் வன்முறை அவர்களுக்கு. இந்த ஒரு வாரத்தில் இந்த மனநிலையைத் திரும்பத்திரும்பக் காண நேர்ந்தது

அங்கே காலையுணவை உண்டபின் கிளம்பினோம். சிவந்த மணல்மேடுகள் வந்து எங்களைச் சூழ்ந்துகொண்டன. ஒரு சிறிய வண்டாக பிரம்மாண்டமான குடல் ஒன்றுக்குள் சென்றது எங்கள் கார். உருகி வழிந்த எரிமலைக்குழம்பு போல மணல்மலைகள். நான் பாலைவனத்தைப் பலமுறை கண்டிருக்கிறேன். மணல்மலைகளையும் கண்டிருக்கிறேன். ஆனால் நமீபியாவின் குங்கும மலைகள் போலத் தீவிரமான அழகனுபவமாக ஆனவை எவையும் இல்லை.

[மேலும்]

முந்தைய கட்டுரைஇலக்கியம் ஒரு கேடா?
அடுத்த கட்டுரைலண்டனில் இருந்து…