கருநிலம் – 3 [நமீபியப் பயணம்]

அதிகாலையில் காருடன் வருவேன் என்று டேவிட் சொல்லியிருந்தார். உண்மையிலேயே அதிகாலையில் வந்துவிட்டார். பகலில் வெயில் இருந்தாலும் எல்லாப் பாலைநிலங்களையும்போல நமீபியாவின் இரவுகள் குளிரானவை. நேரக்கணக்கு குழம்பிவிட்டிருந்தமையால் இரவில் தூக்கம்பிடிக்காமல் பேசிக்கொண்டே இருந்தோம். ஆகவே காலையில் அலாரம் எழுப்பியபோது உடம்பு முறுக்கிக்கொண்டு வலித்தது. ஒருவழியாக எழுந்து குளித்து கீழே வருவதற்குள் டேவிட்டை அரைமணிநேரம் காத்து நிற்கச்செய்துவிட்டோம். அவர் வரவேற்புப்பெண்ணிடம் சரசமாகப் பேசிக்கொண்டிருந்தார். ‘என் பழைய தோழி’ என்றார். ‘இப்போது?’ ‘இப்போது நான் திருமணம்செய்துகொள்ளப் போகிறேனே?’

கார் கிளம்பியதும் மனம் விழித்துக்கொண்டது. நகரம் அப்போதும் தூக்கத்தில் இருந்தது. விண்ட்ஹோக் ஒரு குழந்தைநகரம் என்ற எண்ணம் ஏற்பட்டது. மிகச்சிலநிமிடங்களிலேயே அதைத்தாண்டி வந்துவிட்டோம். அதன்பின் சீரான சாலை. முந்நூறு கிலோமீட்டர்வரைக்கும் ஒரு வளைவுகூட இல்லாத சாலை என்பது இந்தியர்களுக்கு ஒரு கனவு. காரில் செல்லும்போது ஈஃபில் கோபுரத்தின் அடியில் நின்று அண்ணாந்து பார்க்கும் காட்சிபோலத் தெரிந்தது சாலை. நுனியில் அது ஒரு புள்ளியில் முடிந்தது. அந்தப்புள்ளியில் இருந்து கார்கள் உதிர்ந்து விம்ம்ம் என்று பெரிதாகி வந்து வண்டு போல, அல்லது துப்பாக்கிக் குண்டுபோல நம்மைத்தாண்டிச் சென்றன.

வறண்ட நிலம். மழையென்பதையே அறியாதது போலத் தோன்றியது. ஆனால் புழுதி இல்லை. மொத்த நிலமும் இறுகிய செந்நிறமான பரப்பாகத் தெரிந்தது. தூரத்து மலைகள் எல்லாம் செந்நிறமான பாறைகள். எங்களூரில் சொறிப்பாறைகள் என்பார்கள். மண் இறுகிப் பாறையாக ஆனவை அவை. பல மலைச்சரிவுகளில் மொத்தமாக ஒரு பகுதி பிய்ந்து கீழே விழுந்து சரிந்து கிடக்க அந்தப் பள்ளம் பொக்கைவாய்போல ஒற்றைக்கண்போல பசித்த வயிறு போல பல்லில்லாத கன்னக்குழிவு போல தெரிந்தது.

சாலையோரம் முழுக்க ஒட்டகச்செடி என்று டேவிட் சொன்ன ஒரு புதர். காய்ந்து குறுகி நின்றது. நாங்கள் மணிக்கு நூற்றிஎழுபது கிலோமீட்டர் வேகத்தில் சீறிச்செல்ல தொடுவானமோ மிகமிக மெல்ல திரும்பிக்கொண்டிருந்தது. வானம் ஒளிமிக்க கண்ணாடிப்பரப்பாக விரிந்து கிடந்தது. செல்லும் வழியில் இரு சிறு நகரங்களைத் தாண்டிச் சென்றோம்.

ரெஹபோத் என்ற நகரம் நான்கேநான்கு தெருக்களால் ஆனது. உயரமில்லாத கட்டிடங்கள். அவற்றில் வங்கிகள், கடைகள், இரண்டு ஷாப்பிங் மால்கள் இருந்தன. அங்கே குடிக்க நீரும் பழங்களும் பிஸ்கட்களும் வாங்கிக்கொண்டோம். டேவிட் ஒரு தோழியைப் பார்த்து ஹாய் சொல்லிவிட்டு வந்தார். ‘நல்லபெண், கர்ப்பமாக இருக்கிறாள்’ என்றார். ’ஆனால் சந்தோஷமாக இருக்கிறாள்’

காரில் சீறிச்செல்கையில் அந்த நிலத்தை விழிவிரியப் பார்த்துக்கொண்டே சென்றோம். இதை Spreetshoogte Pass என்கிறார்கள். என்னதான் நான் முயன்றாலும் இதை டேவிட் உச்சரித்ததை நான் எழுதிவிட முடியாது. நமீப் பாலை நிலம் நோக்கிய நுழைவாயில் இது என்று சொல்லலாம்

நான்குதிசையிலும் தொடுவானம் தெரியும் நிலம் கண்களை எளிய கருவிகளாக ஆக்கிவிடுகிறது. பார்க்கப்பார்க்க நாம் சிறியதாகிக்கொண்டே வந்து பூச்சிகளாக உணர ஆரம்பிக்கிறோம். இங்கே நிலம் இலவசமாகக் கிடைக்கும். ஆயிரம் இரண்டாயிரம் ஏக்கர்களைப் பெற்றுக் கடனும் வாங்கிப் பண்ணை அமைக்கலாம். ஆனால் விவசாயம் செய்யமுடியாது. வேலியிடப்பட்ட பெரும் பரப்புக்குள் மாடுகளைக் கிட்டத்தட்ட சுதந்திரமாக விட்டு வளரச்செய்வதுதான் இங்கே பண்ணையாம். முற்றிய மாட்டைப் பின்னால் சென்று பிடித்து மாமிசத்துக்குக் கொண்டுசெல்வது மட்டுமே அவற்றுக்கும் உரிமையாளர்களுக்குமான உறவு

இங்குள்ள மாடுகள் எல்லாவகைக் காய்ந்த தாவரங்களையும் உண்கின்றன. இப்பகுதிக்காகத் தகவமைந்தவை. மிகக்குறைவான நீரையே அருந்துபவை. மாலையிலும் காலையிலும் மட்டும் மேய்ந்தபின் மற்ற நேரங்களில் நிழல்களில் கும்பல்களாகப் படுத்துக்கிடக்கும். பாலைவனத்திலேயே நிலத்தடி நீர் உள்ள பகுதிகள் உண்டு. அந்த இடங்களைக் கண்டுபிடித்து அவற்றைச்சுற்றி இந்தப் பண்ணைகளை அமைக்கவேண்டும். ஆடு அதிகமாகக் கண்ணில் படவில்லை. குதிரைப்பண்ணைகள் சில தெரிந்தன

அதன்பின் மண்சாலை. விமானத்தில் இருந்து பார்க்கையில் கண்ட மண்சாலைகளை வைத்து நமீபியாவில் பயணம் இடுப்பொடியச்செய்வதாக இருக்கும் என மாதவன்குட்டி நினைத்திருந்தார். நேர்மாறாக இங்குள்ள மண்சாலைகள் மிக உறுதியானவை, சமமானவை. ’தார்ச்சாலைகளை விட இவற்றைப் பராமரிப்பது கடினம். வாராவாரம் கற்களைப் பொறுக்கவேண்டும். இருந்தாலும் நமீபியாவின் இயற்கைச்சூழலுக்காக இந்தச் சாலைகளை மண்ணாகவே வைத்திருக்கிறது அரசு’ என்றார் டேவிட். மண்சாலைகளில் நூற்றைம்பது கிலோமீட்டர் வேகத்தில் சற்றும் குலுங்காமல் அம்பு போல செல்லமுடிந்தது.

மண்சாலையில் வண்டிசெல்லும்போது பிரம்மாண்டமான ஒரு புழுதிப்படலம் எழுந்தது. ஒரு ஜெட் போவதுபோல . தூரத்தில் ஒரு ஜெட் தெரிந்து அது எங்களைத் தாண்டிச்செல்லும்போது நாங்கள் செந்நிற மேகங்களுக்குள் சென்று மீண்டோம். இந்தப்பகுதிகளில் அவ்வப்போது செம்புழுதிக்காற்றும் அடிப்பதுண்டு. புழுதி ஒரு மழைபோலப் பெய்து விலகும். ஆனால் வேகத்தைக் குறைக்கவே வேண்டியதில்லை

மாலை நாங்கள் ஹூடியா என்ற மலைவாச விடுதியை வந்தடைந்தோம். அங்கே மாலையுலா ஒன்று செல்வார்கள். அதில் இணைந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே அவ்வளவு வேகமாக வந்தேன் என்றார் டேவிட். விடுதி, பாலைவனம் நடுவே ஒரு சிறிய பாலைவனச்சோலையில் இருந்தது. அப்பகுதி ஒரு பெரிய பள்ளத்தாக்கு. நான்குபக்கமும் செம்மலைகள். நடுவே இருபதாயிரம் ஹெக்டேர் அளவுக்குப் புல்வெளிநிலம். அது நூறாண்டுக்காலம் ஒரு ஜெர்மானிய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்கள் இங்கே செம்மறியாடு வளர்த்தார்கள்.

சுதந்திரத்துக்குப்பின் அந்த நிலத்தை அப்படியே புல்வெளியாக விட்டுவிடலாம் என நமீபிய அரசு முடிவெடுத்தது. அந்தப்புல்வெளி நமீபியாவின் மாபெரும் உயிர்வெளிகளில் ஒன்று. நான்குபக்கமும் பொன்னிறமான புற்பரப்பு. பொன்னிறக்குழந்தைக்கூந்தல் போல. பொன்னிறக் கடல் போல. உருகும் பொன்னுலைப் போல. அதன் நடுவே அந்த விடுதி. ஹூடியா பாலை விடுதி என்று பெயர்

நமீபியாவுக்கே உரிய புல்லால் கூரை போடப்பட்ட வரவேற்பறை. இரண்டு மதுபான விடுதிகள். அவற்றைச்சுற்றி கிட்டத்தட்ட நூறு ஒற்றை அறை வசிப்பிடங்கள். எங்களுக்குப் பதிவுசெய்யப்பட்ட ஒற்றையறைக்குள் பெட்டியை வைத்துவிட்டு முகப்புக்கு ஓடினோம். பாலைநிலத்துக்குள் செல்லும் பயணிவண்டியில் ஏற்கனவே ஆட்கள் ஏறிக்கொண்டிருந்தார்கள். நமீபியாவுக்கு அதிகம் வருபவர்கள் ஜெர்மானியச் சுற்றுலாப்பயணிகள்தான். அவர்கள் ஆண்ட நிலம் என்ற நினைவின் ருசி.

நாங்கள் வண்டியில் ஏறியபோது பணியாள் எங்கள் டீயையும் கேக்குகளையும் காருக்கே கொண்டுவந்து தந்தான். ’அவசரத்தில் சாப்பிடாமல் கிளம்பிவிட்டீர்கள்’ என்று சிரித்தான். அழகான கருப்புப்பையன். வண்டி கிளம்பியது. திறந்த மேல்மாடியில் நான் நின்றுகொண்டேன். வண்டி புல்வெளிக்குள் ஆழமான தடமாகத் தெரிந்த செம்மண் சாலை வழியாகச் செல்ல ஆரம்பித்தபோது என்னைச்சுற்றிப் பொன்னலைகள் கொந்தளிக்க ஆரம்பித்தன. கண்ணை நிறைத்து சிந்தனையை நிறைத்துக் கனவுகளை நிறைத்து ஆன்மாவைப் பொன்னிறமாக ஆக்கும் நிலவிரிவு. என் வாழ்க்கையின் மாபெரும் நிகழ்கனவுகளில் ஒன்று.

புல்வெளியில் காலையிலும் மாலையிலும் மட்டுமே மிருகங்கள் வரும் என்றார் டேவிட். அவை நீர் அருந்துவது குறைவு. புல்நுனிகளில் தேங்கும் பனித்துளிகளையே அதிகமும் குடிக்கின்றன. பலநாட்களுக்கு ஒருமுறை மட்டுமே நீர் அருந்துகின்றன. ஆகவே நீர் உடலில் இருந்து போகாமலிருக்க பகல் முழுக்க புதர்களுக்குள் தோண்டப்பட்ட குளிர்ந்த குழிகளுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும். மாலையின் வெயில் சிவக்க ஆரம்பித்தது. சூரியனை இத்தனை முழுமையாக வேறெங்கும் பார்க்கமுடியாது. மாபெரும் எரிமலைக்கோளம் போல பிரம்மாண்டமானதோர் பொற்சக்கரம்போல மேற்கில் நின்றது. காற்று சிவந்தபடியே செல்லச்செல்ல புல்வெளியின் பொற்பரப்பு செம்பொன்னாக முறுகி முறுகிச் சென்றது.

அந்தப்புல்வெளியில் ஓரிக்ஸ் எனப்படும் ஆப்ரிக்க மிளா அதிகம். அனேகமாக அதற்கு எதிரிகள் இல்லை. ஆகவே அச்சமில்லாமல் நிமிர்ந்து நோக்கி கம்பீரமாக கொம்பைத் திருப்பிக்கொண்டு மேலும் மேய்ந்தது. நெருப்புக்கோழிகள் சிறிய கூட்டங்களாக மேய்வதைக் கண்டோம். கோல்டன்பக் எனப்படும் அழகிய பொன்னிறமான மான்கள் கூட்டம் கூட்டமாக மேய்ந்தன. காரின் ஒலியை ஏறிட்டுப்பார்த்து சிலைக்கூட்டமாக நின்றன. முன்நோக்கிக் குவிந்த செண்பக இலைக்காதுகள் சட்டென்று விடுபட அனைத்தும் ஒரே சமயம் துள்ளி அம்புக்கூட்டங்களாகப் புல்மேல் பாய்ந்து பாய்ந்து சென்று மறைந்தன.

ஒரே ஒரு தனித்த ஓநாய் புல் வழியாக ஊடுருவிச்செல்வதைக் கண்டோம்.சாலையைக் கடக்கையில் அது வாலைக்குறுக்கிச் செல்வது தெரிந்தது. பின்பு புல்லுக்குள் அது செல்வதன் தடம் மட்டும் தெரிந்தது.ஒரு ரகசிய நினைவுபோல. அந்தரங்கமான ஒரு புல்லரிப்பு.

அந்தப்பகுதியைச் சுற்றி இருக்கும் செந்நிறமான மலைகள் வெட்டிவைத்த மாமிசப்பாளங்களாக பவளக்குவியல்களாகத் தெரிந்தன. அவை பழைய மணல்மேடுகள். காற்றின் ஈரத்தால் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பாறையாக ஆகிவிட்டவை. ஜீப்பில் அந்த மணல்பாறைகள் மீது சென்று நின்று அஸ்தமனத்தைப்பார்த்தோம். செங்குத்தான பாறை விளிம்பில் பாறை பெயர்ந்து பெயர்ந்து விழுந்து விழப்போகும் நிலையில் நின்றது. நான் மக்கென்னாஸ் கோல்டின் இறுதிக்காட்சியை நினைத்துக்கொண்டேன்

அங்கே நிற்கையில் டேவிட் ஒரு காட்சியை சுட்டிக்காட்டினார்.Tsauchab ஆறு தெரிகிறதா என்றார். ‘ஆறா இங்கேயா?’ என்றேன். ‘ஆம் இங்கே நான்காயிரம் வருடம் முன்பு ஓர் ஆறு ஓடியது. அதன் நீரோட்டம் மண்ணுக்குள் நூறடி ஆழத்தில் உள்ளது. அந்த மரங்கள் நூறடிக்குமேல் வேர் செலுத்துபவை. ஆகவே அவை அந்த ஆற்றுப்படுகையில் வளர்கின்றன என்றார். அதன்பின்புதான் நான் அந்த பச்சைமரவரிசையை கவனித்தேன். சில கணங்களில் பசுமை ஆறாக ஓடும் காட்சியைக் கண்டேன்.

மாலையில் ஒரு சிறிய சோலையில் கடைசி நிகழ்ச்சி. காரில் கொண்டுவந்த பீர் மற்றும் குளிர்பானத்தைப் பரிமாறினார்கள். கேக்குகள்,முந்திரிப்பருப்பு,உலர்ந்த திராட்சை. வெள்ளையர் எங்கும் எதையாவது தின்ன முயல்வதை கவனித்தேன். பீர் புட்டிகளைக் கையில் எடுத்ததுமே தாங்கள் ‘ரிலாக்ஸ்’ ஆகிவிட்டதான உணர்வை அடைவது அவர்களின் வழக்கம்போலும். புன்னகைக்க ஆரம்பித்தார்கள்.

நான் பார்த்ததிலேயே மகத்தான அந்திகளில் ஒன்று நிகழ ஆரம்பித்தது. செந்நிறம். செந்நிறத்தின் பல்லாயிரம் நிறபேதங்களால் ஆன பிரபஞ்ச வெளி. செந்நிறம் அடர்ந்து அடர்ந்து கருமை கொண்டு இருண்டு மெல்ல மறைந்தது. அதன்பின்னரே அந்த அந்தியின் வித்தியாசமென்ன என்பதை உணர்ந்தேன். இந்தியாவில் எங்கும் அந்தி என்பது ஒரு பறவைக்கொண்டாட்டம். இமயமலையில் மட்டுமே இத்தகைய அமைதியான அந்தி சாத்தியம். ஒரு பிரபஞ்ச ரகசியம் நிகழ்ந்து முடிவது போல. ஒரு மகத்தான செவ்வியல்கலைநிகழ்வின் திரைசரிவு போல

திரும்பி வரும்போது இருட்டிவிட்டது. விடுதிக்குப்பின்னால் மிக அருகே இருந்த செம்மண்மலைகளின் விசித்திரமான சிற்பவடிவங்கள் மேல் விளக்கொளி பாய்ச்சி ஒரு கனவுத்தோற்றத்தை உருவாக்கியிருந்தனர். இருளில் வெளிச்சக்கற்றை புல்வெளிமேல் பாய்ந்து துழாவியது. ஒளிபட்டுக் கனல்போல சுடர்ந்தபடி மான்கள் துள்ளிச்சென்றன. இரவில் எழுந்த நூற்றுக்கணக்கான பூச்சிகளும் சிற்றுயிர்களும் சேர்ந்த பெரும் ரீங்காரம் எழுந்துகொண்டிருந்தது. புல்வெளி ஒரு பெரிய வாத்தியமாக மாறிவிட்டதுபோல. மனிதர்கள் காணமுடியாத ஒரு தேவநடனம் அங்கே ஆரம்பித்துவிட்டது போல

[மேலும்]

படங்கள்


படங்கள்

முந்தைய கட்டுரைசீயமங்கலம்
அடுத்த கட்டுரைஇலக்கியம் ஒரு கேடா?