கோபுலு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

கோபுலு பற்றிய கட்டுரைக்கு  மிக்க  நன்றி.  மிகத் தனித்தன்மை வாய்ந்த ஓவியர். அவரது கோடுகள் உயிருள்ளவை. சாதாரண  கதைககளுக்காக அவர் வரைந்த  ஒவியங்களும் தனித்தன்மை வாய்ந்த்தவையே. பல இன்னும் மனதில் அழியாமல்  பதி்ந்துள்ளன. ஒருகாலத்தில் கோபுலு  சென்னை கிறித்துவக் கல்லூரிக்கு ஓவியம் பற்றி பேச வந்திருக்கிறார் ( பேராசிரியர் வசந்தன் அழைப்பில் என நினைக்கிறேன்).  கோபுலுவை முற்றிலுமாக மறந்துவிட்டார்கள்.   அவரைப்பற்றி நீங்கள் அறிந்தவற்றைப மேலும் பகிர்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.

பயணம் நன்கு நிறைவேற வாழ்த்துக்கள்.

ஆனந்த்.

அன்புள்ள ஆனந்த்,

வெகுஜனக்கலை சார்ந்து நாம் எப்போதும் ஆழமான கவனத்தைக் கொண்டிருப்பதில்லை. பலசமயம் அவைதான் நம்முடைய பொதுவான ரசனயை தீர்மானிக்கின்றன. ஒன்றை ஆராய்ச்சி செய்வது அதற்கு அளிக்கபப்டும் அங்கீகாரம் என்ற மனநிலையே இதற்குக் காரணம். மேலும் நம்முடைய பல துறைகளில் மேலைநாட்டுப்பாணியிலான அதீதமான நவீனத்துவமே உண்மையான கலை என்ற எண்ணம் உள்ளது

கோபுலு தில்லானா மோகனாம்பாளுக்கு வரைந்திருக்கிறார். தமிழகத்தில் இருந்த சங்கீதம் சார்ந்த ஓர் உலகத்தை அந்த அளவுக்கு விரிவாக சித்தரித்த ஒரு கதை இல்லை. அதைப்பற்றி ஒரு நல்ல கட்டுரை இன்றுவரை எழுதப்பட்டதில்லை
ஜெ

அன்புள்ள ஜெயமோகன்
தங்களின் கோபுலு குறித்த கட்டுரை கோபுலுவும் மன்னர்களும்  வாசித்தேன். உண்மை. கோட்டோவியத்தில் இத்தனை நேர்த்தியாகப்
படம் வரைந்தவர் எனக்குத் தெரிந்த வரையில் யாருமில்லை. உதாரணமாக, சாவி எழுதிய வாஷிங்டனில்
திருமணம் நாவலுக்கு கோபுலுவின் ஓவியங்கள் அற்புதம். வெறும் கோடுகளிலேயே, அமெரிக்க, இந்திய
உருவங்களை வித்தியாசங்களுடன் வரைந்திருப்பார். பொற்கொல்லர்கள் நகை செய்யும் காட்சியில்
ஒவ்வொருவரின் முகத்திலும் எத்தனை விதமான வித்தியாசமான உணர்ச்சிகள். அத்தனையும் அவரது
கோடுகள்! அற்புதமான ஓவியர்.
தங்களின் ஒவ்வொரு கட்டுரையும் பிரமாதம். கோபுலுவின் எளிமையான கோடுகளில் எத்தனை உள்ளார்ந்த
உணர்ச்சிகள் உள்ளதோ, அதே போல், தங்களின் படைப்புகளில் ஆழமான கருத்துச் செறிவுள்ள விஷயங்களை
அனாயசமாக எளிதான தமிழ் வாக்கியங்களில் கையாளுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன்
சேகர்.
அன்புள்ள சேகர்,
உண்மை, நம்முடைய பல பிரபல இதழ் ஓவியர்கள் கோடுகளுக்குப் பதிலாக தீற்றல்களையே பயன்படுத்தியிருக்கிறார்கள். கோபுலுவின் தன்னம்பிக்கை நிறைந்த கோடுகள் மிகமிக நேர்த்தியானவை. குறிப்பாக அவரது ஓவியங்களில் கூந்தலிழைகளை அவர் வரைந்துள்ள விதம் என்னை எப்போதுமே கவர்வது
ஜெ
முந்தைய கட்டுரைஅஞ்சலி: லோகித தாஸ்
அடுத்த கட்டுரைநாகர்கோயில் மழை:கடிதங்கள்