கருநிலம் – 1 [நமீபியப் பயணம்]

சென்ற 4ஆம் தேதி காலை திருவனந்தபுரத்தில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் மும்பைக்குக் கிளம்பினோம். கிளம்பிய அரைமணி நேரத்திலேயே ஒன்று தெரிந்தது, மாதவன்குட்டி ஒரு நிர்வாகி என்று. அவரது முதல் வெளிநாட்டுப்பயணம். ஆனாலும் பதற்றமே இல்லாமல் அவரே எல்லாவற்றையும் விசாரித்தார். சரிபார்த்தார். ஆகவே நான் எல்லாவற்றையும் அவரது பொறுப்புக்கே விட்டுவிட்டு நிம்மதியாக அமர்ந்துவிட்டேன்.

திருவனந்தபுரத்தில் நல்ல மழை. மதுபாலைக்கூப்பிட்டு ஒழிமுறியைப் பற்றிக் கடைசியாகப் பேசிவிட்டு செல்பேசியை அணைத்துவிட்டு மேகங்களில் மூழ்கி மறையும் நகரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். திருவனந்தபுரத்தை சற்று உயரத்திலிருந்து பார்த்தால் அங்கே ஒரு நகரம் இருப்பதே தெரியாது. தென்னைமரக்கூட்டங்கள் ஒரு பெரும் புல்பரப்பாகத் தெரியும். அந்தப் பச்சைச்சேலையின் கரைவிளிம்பு போலக் கடலின் வெண்ணலை.

மெதடிஸ்ட் சர்ச்சின் போதகரான காட்சன் என்னுடைய நண்பர். அவர் மும்பைக்கு என்னை அழைத்துக்கொண்டே இருந்தார். நான் போக வசதிப்படவில்லை. ‘அண்ணன், இப்ப நீங்க ஒரு ஆறு மணிநேரம் இங்க இருக்கணும் இல்ல? ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்றேன்’ என்றார். தட்டமுடியவில்லை. மும்பையில் இறங்கி என்னுடைய பெட்டியை மாதவன்குட்டிக்காக வந்த கோகுலம் மூவிஸின் காரிலேயே அனுப்பிவிட்டு காட்சன் வந்த காரில் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்துக்குச் சென்றேன். அவரது நண்பரும் மெதடிஸ்ட் சர்ச்சின் பிரமுகருமான பொன்சிங் அவர்கள் என்னைக் கூட்டிச் செல்ல வந்திருந்தார். பாபா நிலையத்தில்தான் எனக்கு ஓர் அறை ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கேதான் சந்திப்பும்.

காட்சன் மும்பையில் இருந்து பூனாவுக்கு மாற்றலாகிவிட்டிருந்தார். அங்கிருந்து இங்கே வந்து ஏற்பாடுகள் செய்திருந்தார். அவரது அண்ணா அணுநிலைய ஊழியர். மழையில் நனைந்த மும்பை வழியாகச் சென்றோம். மும்பை என்ற மாபெரும் அராஜகம் எப்படி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்ற பிரமிப்பை மீண்டும் அடைந்தேன்.

பரபரப்பு நடுவே அணுநிலையம் ஒரு சோலை. அழகான கட்டிடங்கள். பசுமை. கண்ணெதிரே செங்குத்தாக ஒரு பச்சை மலை. என் அறைக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தபோதே அழைக்கப்பட்ட நண்பர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். மெதடிஸ்ட் சர்ச்சைச் சேர்ந்தவர்கள் அனைவரும். காட்சனின் நண்பர்கள். பொன்சிங் எனக்கு முறைப்படி பூங்கொத்து அளித்து வரவேற்றார்.

காட்சன் போதகர்களில் அபூர்வமானவர். கிறித்தவபோதகர்களில் கத்தோலிக்க சபையைச் சேர்ந்தவர்களில் நல்ல வாசகர்களைக் கண்டிருக்கிறேன். சீர்திருத்த திருச்சபையைச் சேர்ந்தவர்கள் கொஞ்சம் பிடிவாதமானவர்கள். பைபிளுக்கு அப்பால் எதையும் படிப்பதில்லை அவர்கள்.

காட்சன் நிறைய படிப்பார். அவரது சர்ச் பேருரைகளே அபூர்வமானவை. குப்பைத்தொட்டி ஏசுவைப்பற்றிப் பேசுவதுபோன்ற ஒரு கிறிஸ்துமஸ் பேருரையை எழுதி அதை ஒருமுறை சரிபார்த்துத் தரமுடியுமா என்று கோரித்தான் என்னை முதலில் அவர் அணுகினார், எட்டாண்டுகளுக்கு முன்பு.குப்பைத்தொட்டி போலக் கைவிடப்பட்டவர்களை ஏற்றுக்கொள்பவர் ஏசு என்பது அக்கட்டுரையின் சாரம். என்னை நெகிழச்செய்த கட்டுரை அது. கலப்பைக்கும் சிலுவைக்கும் ஒரு கவித்துவமான ஒப்புமையை முன்வைக்கும் ஒருகட்டுரையை அடுத்த கிறிஸ்துமஸுக்கு அவர் முன்வைத்தார். அதையும் நான் சரிபார்த்தேன்.

அப்போது காட்சன் பனைவெல்ல அமைப்பில் பணியாற்றியிருந்தார். அவரது இயல்புக்கும் மனநிலைக்கும் போதகர் பணி மட்டுமே பொருந்தும் என நான் சொல்லிவந்தேன். ஆனால் முழுநேரப் போதகராக ஆனபின் அவர் எழுதுவது மிகவும் குறைந்துவிட்டது. அது ஓர் இழப்புதான்.

நான் ஒரு உரையை நிகழ்த்தினேன். முன் தயாரிப்புகள் இல்லாத உரை. உலக இலக்கியத்தில் நவீன இலக்கியம் உருவானதற்கும் சீர்திருத்தவாதக் கிறித்தவத்துக்கும் உள்ள உறவில் இருந்து தொடங்கினேன். சீர்திருத்தவாதக் கிறித்தவர்களின் சிந்தனைகளை போப் இரண்டாம் கிரிகோரி கிண்டலாக மாடர்னிசம் என்று அழைத்தார். அதிலிருந்தே அந்தப்பெயர் இறையியலில் உருவாகியது, இலக்கியத்துக்கு வந்தது.

சடங்குகள் மற்றும் பேரமைப்புகளில் இருந்து விடுபட முயன்ற சீர்திருத்தக் கிறித்தவம் நவீன சிந்தனைக்கும் இலக்கியத்துக்கும் பெரும் பங்களிப்பாற்றியிருக்கிறது. நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்யவும் விழுமியங்களைப் புதுக்கட்டமைப்பு செய்யவும் அது முயன்றது. நவீன ஐரோப்பிய அறவியலில் அதன் பங்களிப்பு மகத்தானது. மகாகவி கதேயில் இருந்து நிகாஸ் கஸந்த்ஸகிஸ் வரை அந்த அலை உருவாக்கிய இலக்கிய ஆளுமைகள் ஏராளம்.

நான் கிறிஸ்துவைக் கண்டடைந்தது அவர்கள் வழியாகவே. என்னுடைய கிறிஸ்து தல்ஸ்தோயின் கிறிஸ்து. தஸ்தயேவ்ஸ்கியின், செகாவின், எமிலி ஜோலாவின் கிறிஸ்து. நவீன இலக்கியம் நூறு ஆண்டுக்காலம் மதத்தால், திருச்சபையால், வெற்றுநம்பிக்கைகளால், ஆசாரங்களால் மறைக்கப்பட்ட கிறிஸ்துவை மீட்டெடுக்க முனைந்தபடியே இருந்திருக்கிறது. இறைமைந்தனாக, ஞானியாக, மாமனிதனாக,புரட்சியாளனாக அது கிறிஸ்துவை கண்டடைந்தபடியே இருந்தது. அதைப் பதிவுசெய்த மாபெரும் ஆக்கங்களால் ஆனது உலக இலக்கியம்.

க.நா.சு மொழியாக்கம் செய்த ஃபேர் லாகர் குயிஸ்டின் அன்புவழி என்ற நாவலின் கதையைச் சொன்னேன். அதிலிருந்து எமிலி ஜோலாவின் பரபாஸ் நாவலின் கதை. மேரி கெரெல்லியின் மாஸ்டர் கிறிஸ்டியன் நாவலின் கதை. கஸந்த்ஸகீஸின் லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் கிறிஸ்டின் கதை. ஒவ்வொரு கதையும் அடையும் உச்சத்தில் கிறிஸ்து நாம் அதுவரை காணாத ஒளியுடன் உதித்தெழுவதைச் சொன்னேன்.

மலையாளத்தில் கிறிஸ்துவின் ஒளி நிகழ்ந்த பல கதைகள் உள்ளன என்று சொல்லி பால்சக்கரியாவின் அன்னம்மா டீச்சர் ஒரு நினைவுக்குறிப்பு, சொர்க்கம் தேடிச்சென்ற மூன்றுகுழந்தைகள், யாருக்குத்தெரியும் போன்றகதைகளைச் சொன்னேன். கிட்டத்தட்ட ஒரு கதைசொல்லும் நிகழ்ச்சி. எனக்கே அக்கதைகளை சொல்வது பேரனுபவமாக இருந்தது. அவற்றை மீண்டும் நானே எழுதுவதுபோலிருந்தது.

ஆனால் தமிழில் கிறிஸ்தவ ஆன்மீகத்தை வெளிப்படுத்திய இலக்கிய ஆக்கம் என ஏதுமில்லை என்றேன். கிறிஸ்தவ வாழ்க்கையைச் சொல்லும் சில நூல்கள் மட்டுமே உள்ளன. ஹெப்ஸிபா ஜேசுதாசன், டேவிட் சித்தையா போன்ற சிலர் எழுதியவை. விதிவிலக்கு ஜோ டி க்ரூஸின் ஆழிசூழ் உலகு. அதில் வரும் காகு சாமியார் கிறிஸ்தவ விழுமியங்களில் மகத்தான உதாரணமாகத் திகழ்பவர்.

இதற்குக் காரணம் கிறிஸ்தவர்கள் இலக்கியத்தை அதிகம் பொருட்படுத்தாததுதான் என்பதே என் எண்ணம் என்றேன். அவர்கள் தங்கள் தீவிர மதநம்பிக்கைக்கு அப்பால் வெளிவருவதில்லை. அந்த மதநம்பிக்கை பெரும்பாலும் உலகியல் சார்ந்த பிரார்த்தனைகளுடன் முடிவடைவது. அங்கே இலக்கியத்திற்கு இடமும் இல்லை. இலக்கியம் ஆன்மீகத்தை மட்டுமே கருத்தில் கொள்ளும். உலகியலுக்கு அப்பால் சென்று, எந்த சுயநலக்கோரிக்கைகளும் இல்லாமல், கிறிஸ்துவைத் தீண்டக்கூடியவர்கள் மட்டுமே இலக்கியத்துக்குள் வர முடியும். அதற்கான வாசிப்பும் ரசனையும் உடைய ஒரு தலைமுறை தமிழ்ச்சூழலில் உருவாகிவரவேண்டும் என்றேன்

இலக்கியம் ஆன்மீகம் தாமஸ்கிறிஸ்தவம் பற்றி எல்லாம் விரிவாகப் பேசிக்கொண்டிருந்தோம். நான் சற்று மனச் சஞ்சலத்துடன் இருந்தேன். ஆப்ரிக்கா பற்றிய பற்பல தகவல்கள் அளித்த சஞ்சலம் ஒருபக்கம். காலையில் கிளம்பும்போது நாகர்கோயில் சிச்ரூஷா ஆஸ்பத்திரி அருகே ஒரு பிச்சைக்காரர் செத்து மழையில் சாலையோரம் கிடப்பதைப்பார்த்தேன். அதிர்ச்சி மேலும் அதிகரித்தது தக்கலை கனராவங்கி முன் இன்னொரு பிச்சைக்காரர் பிணத்தைப் பார்த்தபோது. இரவின் உக்கிரமழையின் பலிகள்.

காட்சனைப் பார்த்ததும் சட்டென்று ஓர் நிறைவு உருவானது. வாழ்க்கையின் சிறந்த இனிய பக்கங்களை நினைவுறுத்தும் சிரிப்பு கொண்டவர். அவரிடம் எனக்காக ஒரு ஜெபம் செய்யும்படி கோரினேன். அவர் சொன்னபடி அன்று வந்திருந்த போதகர் எனக்காக ஜெபிக்க நானும் வேண்டிக்கொண்டேன். தற்செயல்களாக நிலையின்மையாக எதிகால அச்சமாகத் தெரியும் பிரபஞ்ச விரிவுக்கு முன் ஒரு எளிய மன்றாட்டை மட்டுமே மனிதனால் முன்வைக்க முடிகிறது. அந்த ஜெபத்தின் குரல் ஒரு ஆறுதலாகவும் ஆற்றுப்படுத்தலாகவும் கூடவே இருந்தது. மாதவன்குட்டியிடம் சொன்னேன். ‘அய்யோ நானும் வந்திருப்பேனே…இலக்கியம் பேசி அறுப்பீர்கள் என நினைத்திருந்தேன்’ என்றார்.

மாலை அங்கேயே சாப்பாடு. நான் பழங்கள் சாப்பிட்டேன். நண்பர்கள் சிற்றுண்டி. இரவு பதினொரு மணிக்கு மும்பை சர்வதேச விமானநிலையம் சென்றோம். இரவு இரண்டு மணிக்கு எங்களுக்கான விமானம்.

[மேலும்]
படங்கள் https://plus.google.com/u/0/photos/102324461063443964080/albums/5792165391791847185/5792165442392619602


போதகரின் வலைப்பூ

முந்தைய கட்டுரைஇன்னொரு படம்
அடுத்த கட்டுரைதிலகன்- ஒரு கடிதம்