நான் லோகியுடன் எர்ணாகுளத்தில் ஓர் ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது திலகன் உள்ளே வந்தார். உடன் வேறு சிலரும். லோகி பவ்யமாக எழுந்து சென்று அருகே நின்றார். மலையாளிகள் சாதாரணமாக உரக்க வந்தனங்கள் சொல்வதில்லை. முகபாவனையுடன் சரி. திலகன் லோகியைப்பார்த்தது ‘அ’ என்ற ஒரு ஒலியை மட்டும் எழுப்பி லேசாக முதுகில் தட்டினார். அதன் பின் ’சிந்து எப்படி இருக்கிறாள்? குஞ்ஞன்?’ என்று லோகியின் மனைவியையும் மகனையும் பற்றிக் கேட்டார்.
லோகி என்னை அறிமுகம் செய்துவைத்தார். அப்போது ’கஸ்தூரிமான் வெளிவந்துவிட்டிருந்தது. ’நான் கடவுள்’நடந்துகொண்டிருந்தது. லோகி என்னைப்பற்றி சொன்னதும் திலகன் மிக சம்பிரதாயமாக என்னை வணங்கி ‘வணக்கம்’ என்றார். ‘எனிக்கு நல்ல கதை எழுதுங்கோ சார். நெறைய கதாபாத்திரம் எழுதுங்கோ. புதிசா எழுதி திலகனை அதுக்குப் போடுங்கோன்னு சொல்லுங்கோ’ என்றார். நான் பலவீனமாகப் புன்னகைசெய்தேன்.
திரும்ப வந்து அமர்ந்து கொண்டபோது எனக்கு சிரிப்பாக இருந்தது. என்னைத் தமிழின் எம்.டிவாசுதேவன்நாயர் என்று நினைத்துக்கொண்டாரா என்று லோகியிடம் கேட்டேன். அவ்வளவு பெரிய ஆள் சாதாரணமாக ‘சான்ஸ்’ கேட்கிறார் என்பது நம்பமுடியாததாக இருந்தது. அதுதான் திலகனின் ஆளுமை என்றார் லோகி. அவர் இன்னும் படமே எடுக்காத உதவிஇயக்குநரிடம்கூட சான்ஸ் கேட்பார். சகநடிகர்களிடம் மட்டுமல்ல அவரைவிட சின்ன நடிகர்களிடம்கூட தன்னைப்பற்றி சிபாரிசு செய்யும்படி கோருவார். அதுவும் வெளிப்படையாக
மலையாளத்தில் கதாநாயகன் அல்லாத நடிகர்களில் திலகன் அளவுக்கு வலுவான கதாபாத்திரங்களைப் பெற்றவர்களோ, அவற்றை அற்புதமாக நடித்து நிலைநாட்டியவர்களோ வேறில்லை. அவரது போட்டியாளர்களில் நெடுமுடிவேணு அந்த அளவுக்குக் கதாபாத்திரங்களைப் பெறவில்லை, தோற்றம் காரணமாக. கோபி சீக்கிரத்திலேயே பக்கவாதம் வந்து படுத்துவிட்டார். ஆனால் திலகனுக்குத் தன் திறமையில் கால்வாசிகூட வெளிவரவில்லை என்ற எண்ணமிருந்தது. படங்கள் வரவேண்டும், இரவுபகலாக நடிக்கவேண்டும் என்ற வெறி இருந்தது. அவரது அந்த ஆவேசத்தைத் திலகனாக இருந்துதான் நாம் புரிந்துகொள்ள முடியும் என்றார் லோகி.
மலையாளத்தின் நடிப்புப்பயிற்சிக்களமாக அரைநூற்றாண்டுக்காலம் நாடகமேடை இருந்துவந்துள்ளது. இன்றும் மலையாளிகள் சிலிர்ப்புடன் நினைவுகூரும் மகத்தான நடிகர்கள் மேடைக்கலைஞர்கள்தான். அவர்களின் வரிசையில் வந்தவர் திலகன். மலையாளப்பண்பாட்டின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கொண்டாடப்படும் பி.ஜெ.ஆண்டனியின் மாணவர் அவர்.
ஆண்டனி சினிமாவுக்கு வந்து அதிதி , நிர்மால்யம் போன்ற படங்களில் என்றும் அழியாத நடிப்பை வெளிப்படுத்தினார். நிர்மால்யத்திற்காக தேசியவிருதும் பெற்றார். ஆண்டனியின் திரை வாரிசு என்று திலகனைச் சொல்லலாம்.
பி.எஸ்.கெசவன் பி.எஸ்.தேவயானி தம்பதியினரின் மகனாக 1935 டிசம்பர் எட்டாம் தேதி கோட்டயம் அருகே முண்டக்கயம் ஊரில் பிறந்தவர் திலகன். கொல்லம் ஸ்ரீநாராயண கல்லூரில் கல்வியை முடித்தார். படித்துக்கொண்டிருக்கும்போதே நடிக்க ஆரம்பித்தார். அவரை நடிப்புக்குக் கொண்டுவந்தது இடதுசாரி அரசியல்.கடைசிவரை கம்யூனிச நம்பிக்கை கொண்டவராகவே திலகன் இருந்தார்.
திலகன் பத்தாயிரம் மேடை கண்டவர். 43 நாடகங்களை இயக்கி நடித்திருக்கிறார். 1956ல் அவர் தன் முதல் மேடையில் ஏறினார். அவர் இயக்கிய முதல்நாடகம் பிஜெ ஆண்டனி கதாநாயகனாக நடித்த ‘ஞங்ஙளுட மண்ணு’.
ஆண்டனிக்குப்பின் திலகன் ஒரு கட்டத்தில் கேரள நாடக மேடையின் உச்சநட்சத்திரமாக இருந்தார். தொழில்முறை நாடகக் குழுக்களின் மிக விரும்பப்பட்ட வருகைநடிகர். சுயமாக நாடகக் குழுவும் வைத்திருந்தார். வருடம் இருநூற்றைம்பது மேடைகளுக்கு மேல் நடித்தார். அவருக்கு சினிமா மீது பெரிய ஆர்வம் இருந்ததில்லை. வாய்ப்பும் தேடியதில்லை.
திலகன் மிகையற்ற யதார்த்த நடிப்புமுறை கொண்டவர். அந்த நடிப்பு மலையாள சினிமாவுக்குத் தேவைப்பட்டது. எழுபதுகளில் மலையாளத்தில் புதிய அலை சினிமாக்கள் உருவாகிவந்தன. கெ.ஜி.ஜார்ஜ், பரதன், பத்மராஜன், மோகன் ஐ.வி.சசி போன்ற இயக்குநர்கள் மலையாளத் திரையுலகின் பொதுப்போக்கையே மாற்றியமைத்தனர்அதுவரை மலையாளத் திரைப்படத்தில் இருந்துவந்த மேடைநாடகத்தன்மையை முற்றாகக் களைந்த படங்கள். முழுக்கமுழுக்க யதார்த்த பாணி கொண்டவை.
அவற்றுக்காக யதார்த்தபாணியில் நடிக்கும் நடிகர்கள் தேவைப்பட்டார்கள். அதற்காக இயக்குநர்கள் முயன்றபோது பல அற்புதங்கள் நிகழ்ந்தன. அன்றுவரை சற்றே நாடகபாணியில் நடித்த பல முக்கியமான நடிகர்கள் மிகச்சாதாரணமாக யதார்த்த நடிப்பை நோக்கி வந்து அதில் வெற்றிபெற்றார்கள். உதாரணம், சங்கராடி. சாதாரணமான நடிகர்களாகக் கருதப்பட்ட பலர் சட்டென்று கவனம்பெற்றார்கள்- உதாரணம் ஜனார்த்தனன்.
ஆனால் அதற்கு முன்னால் நடிகரே அல்ல என்று எண்ணப்பட்ட ஒருவர் மேலெழுந்து வந்து மிகப்பெரிய திரைநிகழ்வாக ஆனார் — பாலன் கெ நாயர். அவருக்கு முன்னால் சத்யனும், கொட்டாரக்கர ஸ்ரீதரன்நாயரும் மட்டுமே அவருடன் ஒப்பிடத்தக்கவர்கள். அவருக்குப்பின் திலகன், நெடுமுடி,கோபி, மோகன்லால்.
ஆனாலும் வித்தியாசமான கதாபாத்திரங்களுக்காகப் புதிய நடிகர்கள் தேவைப்பட்டார்கள் அவர்களையும் நாடகத்துறையில் இருந்தே மலையாள சினிமா பெறமுடிந்தது.
நவீன நாடகத்துறையில் இருந்து சினிமாவுக்கு வந்த மூன்று மேதைகள் என்று பரத் கோபி, நெடுமுடி வேணு, திலகன் மூவரையும் சொல்லமுடியும். எண்பதுகள் அவர்களின் போட்டிநடிப்பால் தீவிரமான அனுபவங்களாக மாறி இன்றும் கேரளப்பண்பாட்டின் சிகரநுனிகளாகக் கருதப்படும் பல திரைப்படங்கள் உருவாயின. மலையாளத்திரைப்படம் தேசியகௌரவத்தையும் சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றது.
திலகன் அவர்களில் வயதால் மூத்தவர். சற்றுதாமதமாகவே அவர் திரையுலகுக்கு வந்தார். இயக்குநர் கெ.ஜி.ஜார்ஜ் அவரை கட்டாயப்படுத்தித் தன் படங்களில் நடிக்கவைத்தார். திலகன் நடித்த முதல் படம் கெ.ஜி.ஜார்ஜின் உள்கடல் [1979] என்றாலும் அவரை சரியாக அறிமுகம் செய்தது கெ.ஜி. ஜார்ஜ் எழுதி,இயக்கி ஒரு கிளாஸிக் என்று இன்றும் கொண்டாடப்படும் படமான யவனிகாதான். அதில் திலகன் ஒரு நாடகக் குத்தகைதாரராக மிகையற்ற கூரிய நடிப்பை வழங்கியிருந்தார்.
மலையாளத்தில் யவனிகா ஒரு திருப்புமுனைப் படம். அதில் மலையாளத்தில் பின்னாளில் பெரும்புகழ்பெற்ற நடிகர்களில் மோகன்லால் தவிர அனைவருமே இருந்தனர். அனைவருமே அவர்களுடைய மிகச்சிறந்த நடிப்பை அளித்தனர். அனைவருக்குமே அது ஒரு புதுத் தொடக்கமாக அமைந்தது. மம்மூட்டி அதுவரை சிறிய கதாபாத்திரங்களில் சாதாரணமாக நடித்துவந்தார். யவனிகாவில் அவர் நடித்த அந்த இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தின் தோரணை இன்றுவரை அவரில் நீடிக்கிறது. நெடுமுடிவேணுவும் சீனிவாசனும் நுட்பமான கதாபாத்திரங்களில் நடித்தனர்.
யவனிகாவின் உண்மையான நட்சத்திரம் பரத் கோபி. அவர் தபலிஸ்ட் அய்யப்பன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். மலையாளத்தின் மிகச்சிறந்த திரைக்கதாபாத்திரம் என்று தபலிஸ்ட் அய்யப்பன் சொல்லப்படுகிறார். மலையாளத்தின் மிகச்சிறந்த நடிப்பு என்று அதற்கு கோபி அளித்த நடிப்பு குறிப்பிடப்படுகிறது. ஆனால் அத்தகைய ஒரு சினிமாவில் மிகச்சாதாரண கதாபாத்திரத்தில் வந்தும்கூட ’அட யார் இவர்?’ என்று கேரளமே திலகனை திரும்பிப்பார்த்தது.
திலகனுக்காக பத்மராஜனும், லோகியும் ,ஜான்பாலும், டெனிஸ் ஜோசபும் சிறந்த கதாபாத்திரங்களை எழுதியிருக்கிறார்கள். திலகனுக்கு இயக்குநர்கள் முக்கியமே இல்லை. சதாரண இயக்குநர்களின் சாதாரணப் படங்களில்கூட அவர் தனியாக ஒளிவிட்டு நிற்பார். நல்ல இயக்குநர்களின் படங்களில் அவர் நடிக்கும் கதைச்சூழலும் அந்த ஒளியுடன் இருக்கும் அவ்வளவுதான். அப்படி எடுத்துச்சொல்லத்தக்க ஐம்பது படங்களையேனும் திலகன் அடைந்திருக்கிறார். அது ஒரு சாதாரண சாதனை அல்ல.
திலகன் சிறந்த நடிகருக்கான தேசியவிருது பெறாது போனது ஒரு பெரும் குறைதான். இரண்டுமுறை அவர் கடைசி பட்டியலில் இருந்தார். 1981 ல் இரகள் என்ற கெ.ஜி.ஜார்ஜ் படத்துக்காகவும் 1990ல் பெருந்தச்சன் படத்துக்காகவும் அவர் பரிசீலிக்கப்பட்டார். ஆனால் விருது தவறிப்போய்விட்டது. சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது ரிதுபேதம் படத்துக்காக 1997ல் கிடைத்தது. ஆனால் திலகன் குணச்சித்திரநடிகர் என்ற பகுப்பை ஏற்றுக்கொண்டவரல்ல. நடிப்பில் அப்படி ஒரு பாகுபாடு இல்லை என்றும் கதாநாயகனே நல்ல நடிகன் என்ற கண்ணோட்டமே பிழையானது என்றும் வாதிட்டுவந்தார்.
1900 ல் பெருந்தச்சனுக்காகவும் 1994 ல் கமனம் படத்துக்காகவும் சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருதைப் பெற்றார். யவனிகா, யாத்ரா, பஞ்சாக்னி, தனியாவர்த்தனம்,முக்தி, த்வனி போன்றபடங்களுக்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்குரிய விருதுகள் அளிக்கப்பட்டன. 2009ல் பத்மஸ்ரீ விருது பெற்றார்.
திலகன் ஒரு முழுமையான நடிகர். அவரது தோற்றமும் குரலும் கம்பீரமானவை. ஆனால் அது நடிப்புக்குப் பலசமயம் ஒரு தடை. அவருக்கு ஒரு முட்டாள் அல்லது கோழையின் கதாபாத்திரத்தை அளிக்கமுடியாது. ஆனால் அந்த எல்லையைத் திலகன் மிக நுட்பமாக மீறியிருக்கிறார். குரலையும் தோற்றத்தையும் மாற்றிக்கொண்டு அத்தகைய கதாபாத்திரங்களை அவர் நிகழ்த்தியிருந்தார். மிகச்சிறந்த நகைச்சுவைக் கதாபாத்திரங்கள் பல திலகன் வழியாக வெளிப்பட்டிருக்கின்றன.
மொத்தத் திரைக்கதையையும் முழுமையாக வாசித்து கதாபாத்திரத்தின் பண்பாட்டுச்சூழலை முழுமையாக உருவகித்துக்கொண்டு நடிப்பவர் திலகன். அவரது கதாபாத்திரங்களின் உடல்மொழிகளை ஆராய்வதே ஒரு ஆர்வமூட்டும் விஷயம். சிரியன் கிறித்தவர், நாயர், பிராமணர், ஈழவர் என சாதிவேறுபாடுகள் அதில் தெரியும். வடகேரளம், மத்திய கேரளம், தெற்குக் கேரளம் என பிராந்திய வேறுபாடுகள் வெளிப்படும். ஆனால் திருவனந்தபுரத்தில் வாழ்ந்த அவர் அதிகம் தெற்கத்திய கதாபாத்திரங்களை நடிக்கவில்லை என்பது எனக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு குறைதான்.
லோகி ஒரு விஷயம் சொன்னார். லோகியின் ஜாதகம் என்ற படத்தில் மூடநம்பிக்கை மிக்க நாயர்குடும்பத்தலைவராகத் திலகன் வருவார். படம் முழுக்க ஒரு குறிப்பிட்ட அசைவு இருக்கும். தலையை வருடிக்கொள்வது போல. படத்தில் உச்சகட்டத்தில் தெரியவரும் அவரது கதாபாத்திரம் மிகமிகக் குரூரமான ஒரு கொலையைச் செய்துவிட்டு மனசாட்சிவதையில் தவிப்பது என. அப்போது அந்த உடலசைவு சரியாக அந்த மனக்கொந்தளிப்புக்கான அடையாளமாக ஆகும். தலைக்குள் எரியும் ஒரு தீக்கனலுடன் அவர் வாழ்ந்திருப்பதை நாம் அறிவோம். அதுதான் திலகனின் பாணி.
சரியாகச் சொன்னால் திலகனின் பாணி என ஏதும் இல்லை. படங்கள்தோறும் அதை அவர் மாற்றிக்கொண்டிருக்கிறார். வணிகப்படங்களில் சற்றே அழுத்தமாக வெளிப்படும் நடிப்பை வழங்குபவர் கலைத்தன்மை கூடிய படங்களில் முழுமையாகவே ‘அண்டர் ஆக்டிங்’ செய்திருப்பதைக் காணலாம். அவரது நடிப்புவாழ்க்கையையே மூன்றாகப் பிரிக்கலாம். 1980 முதல் 1990 வரை ஆரம்பகாலத்தில் விதவிதமான கதாபாத்திரங்கள். பின்பு 200 வரை அழுத்தமான பெரிய கதாபாத்திரங்கள். அதன்பின் ஓர் இடைவெளி. கடைசியாக, 2009க்குப்பின் உக்கிரமான உதிரிக் கதாபாத்திரங்கள்.
திலகனின் ஆளுமை மிகச்சிக்கலானது. அவர் மீது அபாரமான மரியாதை இல்லாத இயக்குநர்களால் அவரைக் கையாளமுடியாது என்கிறார்கள். மலையாளத்தில் நடித்ததனால்தான் அவரால் இவ்வளவுதூரம் தாக்குப்பிடிக்க முடிந்தது என்பதே உண்மை. அவர் படத்தின் எல்லா விஷயங்களிலும் தலையிடுவார். லோகி எழுதிக்கொண்டிருக்கும் திரைக்கதையைப்பற்றி அவர் கூப்பிட்டுக்கூப்பிட்டுப் பேசுவதைக் கண்டிருக்கிறேன். தன் கண்டனங்களையும் விமர்சனங்களையும் உடனுக்குடன் சொல்வார். இங்கிதமே பார்க்கமாட்டார். மிகசாதாரண விஷயங்களுக்காகக் கோபப்படுவார், படப்பிடிப்பைப் புறக்கணித்துக் கிளம்பிச்செல்வார். திலகனை சமாதானம்செய்து கூட்டிவருவதில் லோகி ஒரு நிபுணராகவே கருதப்பட்டார். பல வேடிக்கைக்கதைகளை லோகி சொல்லியிருக்கிறார்.
ஆனால் மலையாள சினிமா அவரது சாதனைகளுக்காக அவரை மதித்தது. மம்மூட்டி நடித்த பழசிராஜா படத்தில் ஒரே காட்சியில் வரும் அவர் மொத்தக் காட்சியையும் தனக்கானதாக ஆக்கிவிடுவார். அதைக் கடைசியாக அவர் மோகன்லாலுடன் நடித்த ஸ்பிரிட் படத்தைப்பற்றியும் சொல்லலாம். அது அந்த நடிகர்களுக்கும் தெரியும். அவர்கள் அதை ரசித்தனர், அனுமதித்தனர் நம்மை எரிச்சல் படுத்தாத ஜீனியஸ் இல்லை என்ற வரியை அவரைப்பற்றிப் பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் மகன் ஷம்மி திலகன் உட்பட..
தான் கலைஞன் என்ற அபாரமான திமிர் திலகனிடம் இருந்தது. முகேஷ் உருவாக்கியதாகச் சொல்லப்படும் ஒரு குட்டிக்கதை அதைக் காட்டுகிறது. திலகன் நள்ளிரவில் காட்டுவழி வருகிறார். எதிரில் ஒரு எட்டடி நீள ராஜநாகம் படமெடுத்துச் சீறியது. ‘ஞான் திலகனா பறயுந்நது.வழிவிடுடா’ என்று அவர் கர்ஜிக்க பாம்பு எதற்கு வம்பு என்று விலகிச்சென்றதாம்.
திலகன் முதிய வயதில் மலையாளத் திரையுலகம் பற்றியும் நடிகர்கள் பற்றியும் கடுமையான கருத்துக்களைச் சொல்லி ஊடகப்பரபரப்பை உருவாக்கியிருக்கிறார். அவரது இயல்பு யோசிக்காமல் உணர்ச்சியின் போக்கில் பேசுவது. மலையாளத் திரைக்கூட்டமைப்புகளுடன் அவர் மோதினார். அவ்வமைப்புகளை உடைக்க விரும்பிய இடதுசாரிகள் அவரைப் பயன்படுத்திக்கொண்டனர். ஆனால் திரையுலகிலிருந்து திலகனுக்கு எதிராக எதுவுமே சொல்லப்படவில்லை. அவர் மீதிருந்த மதிப்பின் அடையாளமாகவே அதைக் காண்கிறேன்ன்
இரு இதயத் தாக்குதல்களுக்குப் பின் திலகன் கொஞ்சநாள் ஒதுங்கி இருந்தார். அந்தக்காலகட்டம் அவரது வாழ்க்கையின் சோதனைகள் நிறைந்தது. அவர் சமநிலையிழந்தவராக இருந்தார். அமைப்புகளுடன் மோதினார். பிரச்சினைகள் தீர்ந்து மீண்டும் நடிக்கவந்தபோது அவரது நடிப்பு வாழ்க்கையின் மூன்றாம் காலகட்டம் ஆரம்பமானது. சென்ற மூன்று வருடங்களில் இந்தியன் ருப்பீ, ஸ்பிரிட், உஸ்தாத் ஹோட்டல் போன்ற படங்கள் வழியாகத் தன் மூன்றாம் வருகையை அழுத்தமாக நிறுவி மொத்தத் திரையுலகையே பணியவைக்க அவரால் முடிந்தது. அவர் ஆசைப்பட்டபடி நடித்துக்கொண்டே இறப்பதும் சாத்தியமானது
எந்த எந்த மலையாளத் திரை எழுத்தாளனுக்கும் திலகனுக்கான கதாபாத்திரங்கள் மனம்நிறைய இருந்துகொண்டிருக்கும் .எனக்கும்தான். அதற்கான வாய்ப்புகள் கைகூடிவந்தன. காலம் முந்திக்கொண்டது. இனி அவர் எனக்குள் இருந்து நடித்துக்கொண்டே இருப்பார்.