நவீன மருத்துவம்- இன்னொரு கடிதம்

அன்புள்ள டாக்டர் மகேஷ்,

NSE CODE: APOLLOHOSP PRICE (As on 04.03.08): பத்து ரூபாய் மதிப்புள்ள பங்குகளின் சந்தைவிலை ரூ 490/-

உங்கள் கடிதத்தை படிக்க நேர்ந்தது. உங்கள் தொழில் மீது கொண்ட மதிப்புடனேயே நான் என் சொந்த அனுபவத்தைச் சார்ந்து இந்திய மருத்துவத்துறையின் நடப்பவனவற்றைப்பற்றி சில சொல்ல விரும்புகிறேன். நீங்களும் இதை உணர்ந்திருக்கக் கூடும்.

உண்மையான அவலம் என்னவென்றால் பெரும்பாலான மக்கள் நோய் குறித்த பீதிக்கும் சிகிழ்ச்சை குறித்த அச்சத்துக்கும் நடுவே சிக்கித்தவிக்கிறார்கள். நாம் ‘ உலகளாவிய வணிகநிறுவனமயமாதலின்’ Corporate Globalization காலகட்டத்தில் இருக்கிறோம். கல்வி, உணவு, காய்கறிகள் ,குடிநீர் அனைத்தையும் போலவே இன்று மருத்துவமும் முற்றிலும் தனியார் மயமாக்கப்பட்டிருக்கிறது. இந்த வணிகநிறுவனங்கள் தங்கள் லாபக்கணக்கு அறிக்கையையும் வரிதவிர்த்த நிகரலாபத்தையும் (PAT). பற்றி மட்டுமே கவலைபப்டுகின்றன. பொருளியல் கலைச்சொல்லால் சொல்லப்போனால் அவை “Bottom lines” அன்றி பிறிதைப்பற்றி எண்ணுவதேயில்லை.

இரு மாதங்களுக்கு முன் நெஞ்சுவலிக்காக நான் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தேன். அறைக்கட்டண விபரம் கீழக்கண்டவாறு

இருவர் பங்கிடும் அறை ஒரு நாளுக்கு ரூ 2000
தனியறை -செமி- ஒரு நாளுக்கு ரூ 3000
தனியறை ஒரு நாளுக்கு Rs4000
அப்படியே சென்று அறைத்தொகுப்புக்கு [ஸ்யூட்] நாள் ஒன்றுக்கு ரூ 15000 வரை செல்கிறது.

நான் இந்தியாவெங்கும் பயணம் செய்தவன். இங்கே ஒருதரமான தனியார் விடுதியின் அறைக்கட்டணம் சாதாரணமாக ரூ 1500 ஐ தாண்டுவதில்லை. காலையுணவு உபசரிப்பு மற்றும் விமானநிலையப் பயணத்துக்கான கட்டணம் உட்பட!

அப்பல்லோவில் என் முதல்நாளில் நன்றாக உடையணிந்த ஒரு பெண்மணி தன்னை மக்கள் தொடர்பு அதிகாரி என்று அறிமுகம் செய்துகொண்டு அன்னை அணுகி என் புகார்களைக் கேட்டாள். ஒரு மருத்துவமனையில் மக்கள் தொடர்பு அதிகாரியா என அதிர்ந்தே போனேன். சில நாள் கழித்து தனிமை வேண்டி தனியறைக்குச் செல்ல விரும்பினேன்

மக்கள் தொடர்பு அதிகாரி சொன்னது எனக்கு அதிர்ச்சி அளித்தது. தனியறைக்குச் சென்றால் என் சிகிழ்ச்சைக் கட்டணம் அதே விகிதத்தில் அதிகரிக்குமாம். அதாவது அதே டாக்டர், அதே மருத்துவம் ஆனால் நான் இருமடங்கு பணம் கொடுக்கவேண்டும், தனியறையை தேர்வுசெந்த என்னால் பணம் கொடுக்கமுடியும் என்பதற்காக !

ஒரு குறிப்பிட்ட அறுவை சிகிழ்ச்சையை நான் செய்து கொண்டால் மூன்று தள சேவைகள் முன்வைக்கபப்டுகின்றன. பிளாடினம், தங்கம், வெள்ளி. என் பணவசதியைப்பொறுத்து. நான்கு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை கட்டணம். உணவு மற்றும் சேவைக்கட்டணங்களைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை

நான் சென்னையில் உள்ள பிற கார்ப்பரேட் மருத்துவமனைகளில் விசாரித்துப் பார்த்தேன். [ராமச்சந்திரா, மலர், மியாட்] பத்து இருபது சத கட்டண வேறுபாடுகளைத் தவிர எந்த வேறுபாடும் காணக்கிடைக்கவில்லை.

இந்த வகையான உயர் தர மருத்துவமனைகளுக்குச் செல்ல வசதி இல்லாத மனிதர்கள் செல்லும் அரசு மருத்துவமனைகளின் நிலை என்ன? இங்கும் என் சொந்த அனுபவம். ரேபிஸ்தடுப்பு மருந்து கைவசமில்லாதிருந்த காரணத்தாலேயே நான் என் மூன்று நண்பர்களை இழந்திருக்கிறேன். ஊழல், தாமதம் பொறுப்பின்மை பற்றி சொல்லவே வேண்டாம் .

இன்னொன்றும் சொல்லவேண்டும், இந்த உயர்தர மருத்துவமனைகளில் சிகிழ்ச்சையின்போது அல்லது சிகிழ்ச்சைக்குப் பின்னர் ஏதாவது தவறாக நடந்தது என்றால் இந்நிறுவனக்கள் மீது நாம் வழக்கு தொடரவோ நஷ்ட ஈடு பெறவோ முடியாது. காரணம் உள்ளே அனுமதிக்கும்போதே எல்லாவகையான உறுதிமொழிகளையும் கையெழுத்துக்களையும் பெற்றுவிடுகிறார்கள். அந்த தருணத்தில் எவருமே வாதாடிக் கொண்டிருக்க மாட்டார்கள். அப்போதிருக்கும் உணர்ச்சிகரமான பதற்றமான சூழல் அத்தகையது

ஆகவே அனுமதிக்கப்படுங்கள், அஞ்சி நடுங்குங்கள்.

விதிவிலக்குகள் இல்லாமலில்லை. வேலூர் சி.எம்.சி மருத்துவமனை, தரமணி VHS முதலிய மருத்துவமனைகளை குறிப்பிடலாம். சிறந்த சிகிழ்ச்சை நியாயமான செலவில் அளிக்கப்படுகிறது. அதேபோல மருத்துவர்களிலும் விதிவிலக்குகள் உண்டு.

மிகச்சிறந்த உதாரணம், டாக்டர் பினாயக் சென். ஒரு குழந்தைநல நிபுணர். வேலூர் சி எம் சி நிறுவனத்தில் தங்கப்பதக்கம் பெற்று வெளிவந்தவர். 56 வயதானவர். சட்டிஸ்கர் மாநிலத்தில் பிற்பட்ட மக்கள் நடுவே அவர்கள் குழந்தைகளின் வறுமை ஊட்டச்சத்தின்மை மற்றும் காசம், மலேரியா போன்ற நோய்களுடன் முப்பது வருடங்களுக்கும் மேலாக போராடியவர்.

டாக்டர் சென் முழுக்க முழுக்க கடமையுணர்வால் உந்தப்பட்டு ராய்ப்பூர் சிறையில் இருக்கும் வயதான நக்சலைட் தலைவர் நாராயண சங்கால் என்பவருக்கு மருத்துவ சட்ட உதவிக்காக முயன்றார். 2007 மே 13 அன்று பொடாவில் கைதுசெய்யபட்ட டாக்டர் சென் இன்றுவரை விடுதலை செய்யபப்டவில்லை. வேலூர் சிஎம்சி நிறுவனமே முயன்றுகூட ஒன்றும் நடக்கவில்லை ( Tehelka 23rd Feb 2008)

இப்போது உலகப்புக்ழபெற்றுள்ள நரம்பியலாளரான டாக்டர் வி.எஸ். ராமச்சந்திரன் எழுதிய Phantoms in Brain என்ற புகழ்பெற்ற நூலில் இருந்து மேற்கோள்காட்ட விழைகிறேன். ”டாக்டர் கெ.வி.திருவேங்கடம் எப்படி வாசனையை வைத்தே நோயை அடையாளம் காண்பது என்று கற்பித்தார். முற்றிய நீரிழிவு நோயாளியின் மூச்சில் எழும் இனிப்புகலந்த நகப்பாலீஷ் வாசனை, டைபாய்ட் நோயாளியில் இருந்து வரும் புதிய ரொட்டியின் வாசனை…

இவ்வனுபவங்கள் என்னில் பெரிய மருத்துவ யந்திரங்கள் மேல் அவநம்பிக்கையை உருவாக்கின. மருத்துவத்தில் புரட்சிகளை உருவாக்க சிக்கலான இயந்திரங்களின் தேவை இல்லை. ஒரு நுண்ணுணர்வு இருந்தாலே போதும்…”

இந்தியாவும் விரைவிலேயே முழுக்க முழுக்க கார்பப்ரேட் நிறுவங்களுக்குச் சொந்தமாகிவிடும். உலகத்தொழில்மயமாக்கத்தின் விளைவுகளை குறைத்து மதிப்பிட்டுவிட இயலாது. மானுட இனமே ஒரு ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

பெரும்பாலும் நோயாளியின் மரணம் நோயின் அச்சத்தால் நிகழ்வதில்லை,சிகிழ்ச்சையின் மீதான அச்சத்தால் நிகழ்கிறது.

அன்புடன்

வாசுதேவன்88

[ஆங்கிலக் கடிதத்தின் தமிழாக்கம்]

[email protected]

நவீன மருத்துவம்- இன்னொரு கடிதம்

நவீனமருத்துவம்-ஸ்டெல்லாபுரூஸ்-ஒருகடிதம்

ஸ்டெல்லாபுரூஸ் என்ற காளிதாஸ்

முந்தைய கட்டுரைபேருந்தில் தோப்பில் முகமதுமீரான்..
அடுத்த கட்டுரைகாமமும் கம்பனும் – ஒரு காலைநேரம்