லண்டனில் இருந்து…

இந்த வார இறுதியில் சூப்பர் சுப்ரீம் எழுத்தாளரின் இங்கிலாந்து இரசிகர் மன்றக் கூடுகை இனிதே நடந்தேறியது. சனிக்கிழமை காலை ஐந்துமணிக்கே விழித்துக்கொண்ட சிறப்பு விருந்தினர் பஸ்ஸில் ஏறி குறட்டை விட்டுத் தூங்கியபடியே லண்டன் சென்று சேர்ந்தார். பஸ்ஸில் வாசிப்பதற்காக எடுத்துச் சென்ற புத்தகமும் கூடவே தூங்கிக்கொண்டிருந்தது. லண்டனில் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் மதியம் 12 மணிவரைக்கும் தன்னந்தனியே அவர் சுற்றி அலையவேண்டும் என்பது ஏற்பாடு. அவர் முதலில் எகிப்திய கலைப்பொருட்களைப் பார்வையிட்டார். அடுத்து கிரேக்க அரங்கத்துக்குள் நுழையும்போது பல நூற்றாண்டுகள் கடந்துவந்துவிட்டதை உணர்ந்தார். அடுத்து இத்தாலிய ரோம கலைப்பொருட்களைப் பார்வையிட்டார். ஒருவழியாக கிரி வந்து சேர்வதற்குள் பல நூற்றாண்டுகள் ஆகியிருந்தன.

முன் பின் பார்த்திராத சொல்புதிது குழும நண்பர்களை எப்படி நம்மால் எளிதில் அடையாளம் காண முடிகிறது என்பதில் எனக்குப் பெரும் ஆச்சர்யமாயிருந்தது. தொலைவில் வரும்போதே ‘வந்துட்டார்யா நம்மாளு’ என்ற உள்ளொளி ஸ்பார்க் ஆனது.

நாங்கள் அருகிலிருந்த ஒரு மலையாள உணவகத்துக்குச் சென்று பேசிக்கொண்டே உணவருந்தினோம். உணவை உண்டபோது மலையாளிகளுக்குத் தமிழர்களைவிட நகைச்சுவை உணர்வு அதிகம் என்ற கூற்று உண்மை என்றே பட்டது. அந்த நேரம் நண்பர் பிரபு வந்து சேர்ந்தார். மூவரும் கிளம்பி லண்டன் குழாய் ரயிலில் ஏறி பல ஸ்டேஷன்கள் தாவித் தாவி உலகின் ’நடு செண்டர்’ வரைக்கும் சூப்பர் சுப்ரீம் எழுத்தாளரின் புகழைக் கொண்டு சேர்க்கும் விதமாக கிரீன்விச் சென்று சேர்ந்தோம். அங்கே பிரிட்டிஷ் போர்க்கப்பல் ஒன்றை அப்பழுக்கில்லாமல் தரையில் நிற்கவைத்திருந்தார்கள். தேம்ஸ் நதிக்கரையில் அது அடுத்த போர் எப்போது வரும் என்பதைப்போல நின்றுகொண்டிருந்தது. திடீரென ’ஐ.டி காரர்கள் நவீன அடிமைகளா?’ எனும் தலைப்பில் ஒரு விவாதம் உருவானது. ’தேவையுள்ளதும் தேவையில்லாததும்’ வகையிலேயே அந்த விவாதம் நடந்தது என்பதைக் குறிப்பிடவேண்டும்.

பின்னர் உட்புறம் முழுக்க வண்ண ஓவியங்கள் வரையப்பட்ட ஒரு கோவிலுக்குச் சென்றோம். அங்கே அயோடெக்ஸ் நல்ல விலைக்கு விற்கலாம் என்ற ஐடியா முன்வைக்கப்பட்டது. மேலே கூரை முழுக்க ஓவியங்கள் சிறப்பாக வரையப்பட்டிருந்தன.

உலகின் நடு செண்டர்

பின்னர் ஒரு குட்டி மலை ஏறி ’உச்சி நடு செண்டர்’ சென்றடைந்தோம். அங்கே தரையில் கோடு பதித்து இதுதான் உலகின் மையம் என்று பறைசாற்றியிருந்தனர். உருண்டை வடிவான உலகத்துக்கு ஏதுடா மையம் என்று சிறப்பு விருந்தினர் தத்துவார்த்தமாக அங்கலாய்த்துக்கொண்டார். அவர் புகைப்படங்களுக்கு சிறப்பாக போஸ் தந்தார்.

வழி நெடுக சூப்பர் சுப்ரீம் எழுத்தாளரின் புகழ் ’சான்சே இல்லை’ ‘செம’ ‘கிரேட்’ போன்ற உன்னத கோஷங்களால் பாடப்பட்டது.

அங்கிருந்து கிளம்பி தேம்ஸ் நதிக்கரையில் ஒரு வெட்டவெளி மதுபான விடுதியில் சென்றமர்ந்தோம். அங்கே உட்கார்ந்தால் கண்டிப்பாக மது அருந்த வேண்டும் என்ற காரணத்தால் நம் இரசிகர்மன்ற விதிகளையும் மீறி ஆளுக்கொரு பீர் வாங்கி அருந்த வேண்டியிருந்தது. இந்த நதி எத்தனை பேரைக் கண்டிருக்கும், எத்தனை கலைஞர்களை இது உருவாக்கியிருக்கும், எத்தனை யுகங்கள் இது ஓடிக்கொண்டிருக்கிறது என்று ஒருவர் ஆரம்பிக்க இன்னொருவர் இது வேறு ரசிகர் மன்றம் என்பதை நினைவூட்டினார்.

மன்றத்தினரின் பரவலான வாசிப்பு சிறப்பு விருந்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மன்ற விதிப்படி அவ்வப்போது ’என்ன இருந்தாலும் நம்மாளு போல வராது’ என்பதை மந்திரம்போல மூவரும் அடிக்கடி சொல்லிக்கொள்ளவேண்டியிருந்தது. குளிர் அதிகமாயிருந்ததால் ஆளுக்கு இன்னுமொரு பியர் வாங்க வேண்டியிருந்தது என்பதையும் வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.

வாசகப் பெருந்தகை சிவா, சிறப்பு விருந்தினர்,இளைஞர் அணி சிவா, மகா தாமதப் பிரபு

ஒருவழியாக உரையாடலை முடித்துவிட்டுக் கிளம்பினோம். பிரபு அவர் வீட்டுக்குச் செல்ல ரயில் ஏறினார். சிறப்பு விருந்தினரும் கிரியும் ரயில் மற்றும் பல பஸ்களின் மார்க்கமாக பலவழியாக வீடுவந்து சேர்ந்தபோது அவர் மனைவி ஒழிமுறிக்குத் தயாராக இருந்தார். இருந்தாலும் ஒரு புன்னகையை வரவழைத்துக்கொண்டு சாப்பாடு போட்டார். பின்பு ‘செலவளிக்கத் தகுந்தவர்கள்’ என ஒரு படத்தைப் போட்டு கொஞ்ச நேரம் பார்த்தோம். வயதான ஆக்‌ஷன் ஹீரோக்கள் மிகத் துடிப்பாக சாகசங்களை செய்துகொண்டிருந்ததைக் கண்டபோது நம் குழுமத்தை எண்ணிப் பெருமைப்படாமலிருக்க முடியவில்லை.

அப்படி இனிதாக முதல் நாள் நிறைவேறியது…

மற்றவை பிறகு.

சிறில் அலெக்ஸ்

சிறில்,

மலையாளிகளின் நகைச்சுவை உணர்ச்சிக்கு அவர்களின் இட்லி மிகச்சிறந்த சான்று. 1985ல் கண்ணூரில் ஆர் எஸ் எஸ்- மார்க்சிஸ்ட் கலவரம் நடந்தபோது இட்லிகளால் தாக்கிக்கொண்டு ஒருவர் உயிரிழந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது

இன்னொரு உதாரணம் பீஃப். மலையாளிகள் மறுசுழற்சியில் நம்பிக்கை கொண்டவர்கள். இது ஓர் உணவுச்சங்கிலியை அங்கே உருவாக்கியிருக்கிறது. பெரிய விடுதிகளில் நாற்பதுமுறை பொரித்து க்ரூடாயில் போல ஆன எண்ணையை தெருக்கடைகளுக்கு விற்பார்கள். அங்கே நாநூறு முறை பொரிக்கப்பட்டு தார்போல ஆன எண்ணையை சகாயவிலைக்கு வாங்கிச்சென்று சாராயக்கடையில் பொரிப்பார்கள்.கள்ளுக்கடை கடைசில்தான்.

மறுபிறவியிலும் மலையாளிகளுக்கு நம்பிக்கை உண்டு. அங்கே குளிர்சாதனப்பெட்டிகளில் இருக்கும் பீஃபாத்மா ‘புனரபி ஜெனனம் புனரபி மரணம் புனரபி ஃப்ரிட்ஜின் ஜடரே சயனம்’ என்ற வகையில் பிறவிப்பெருங்கடல் நீந்துகிறது.

ஒருமுறை ஒரு மாடு சேலத்தில் செத்துப்போய் பிணமாகவே கொல்லம் வந்து ஃப்ர்ட்ஜுகளில் வாழ்ந்தாம். அந்த செத்துப்போன ஆன்மா ஒரு மாத்துக்குட்டியாக செர்ப்புளச்சேரியில் பிறந்து கொல்லம் வந்து அந்த மாட்டையே தின்றதாம். உண்ணிகிருஷ்ண பணிக்கர் பிரச்சினம் வைத்தபோது தெரிந்த செய்தி.

சென்ற மாதம் திருவனந்தபுரத்தில் ஓர் ஓட்டலில் பீப் சாப்பிட்ட ஓர் இளைஞன் செத்துப்போனான். இது கொஞ்ச நாள் தொலைக்காட்சிகளில் பரபரத்தது. எழுத்தாளர்கள், பாடகர்கள், கைவினைக் கலைஞர்கள், நடனமணிகள் , அரசியல்வாதிகள் போன்றவர்கள் தொலைக்காட்சியில் தோன்றி பேசினார்கள். கட்டுரைகள் எழுதினார்கள். சினிமா திரைக்கதை கூட எழுதப்பட்டது. ஓட்டல்களில் இருந்த குளிர்க்கிடங்குகள் அகழ்வாய்வு செய்யப்பட்டன. அங்கே சரியாக மாடாகப் பரிணாமம் கொள்ளாத மாடு கூட கிடைத்ததாக சொல்லப்பட்டது வதந்தியாக இருக்கலாம். ஆனால் பழைய மாமிசம் நிறையவே கிடைத்தது.

அதன்பின் ஒரு இருபதுநாள் அமைதி. கொல்லம் செல்லும் சாலையில் ஒரு வண்டியில் செத்த மாடுகள் செல்வதாக கிடைத்த செய்தியின் அடிப்படையில் காவல்துறை அதிகாரி ஒருவர் திடீர் சோதனை இட்டதில் பத்து செத்தமாடுகளும் எட்டு சாகப்போகும் மாடுகளும் பிடிபட்டன. அவை ஒருநாள் முன்னர் சாத்தூரிலேயே செத்துவிட்டன என்றார்கள் டாக்டர்கள். அவை நடந்துசென்றதை பார்த்தோம் என்று அவற்றை சோதனை இட்டு காதில் முத்திரை குத்தி அனுப்பிய உணவதிகாரிகள் சொன்னார்கள். உணவதிகாரிகளுக்கு நல்ல மூக்குக்கண்ணாடிகள் வாங்க அரசு கடனுதவி அளிக்கவேண்டும் என்று ஆல் கேரளா ஹெல்த் ஓபீசர்ஸ் அசோஷியேஷன் கோரிக்கை விடுத்தது.

நான் நினைத்தேன் பீஃப் சாப்பிடும் மலையாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டிருக்கும் என்று. அங்கே காலையில் கட்டன்காப்பிக்கே பீஃப் ஃ பிரை கேட்ப்போர் உண்டு. ஆனால் விற்பனை பலமடங்கு எகிறியதனால்தான் மாடுகளின் உடல் பொருள் எல்லாவற்றையும் கொண்டுவர நேர்கிறது என்றார் ஓட்டல்காரர்

காரணம் கேட்டேன். ஆட்டோக்காரர் கொச்சுதொம்மன் சொன்னார். ‘அப்படியல்ல சாரே, இப்ப காலையிலே எந்திரிக்கும்போதே டிவியெல்லாம் பீஃப் பீஃப்னு கத்திட்டிருக்கு. ஓட்டலிலே பொரிச்சு வச்சிருக்கிறத காட்டிட்டே இருக்கான். பேப்பரிலே பீஃப். சாயக்கடையிலே போனா அங்கயும் பீஃப் சர்ச்சை. எப்டி சாப்பிடாம இருக்க முடியும்? நேரா போய் ஓட்டலிலே ஏறி போடு ஒரு பீஃப் ஃப்ரைன்னு ஆர்டர் போடுறது நாம இல்லை, நம்ம ஆன்மாவாக்கும்’

ஜெ

முந்தைய கட்டுரைகருநிலம் – 4 [நமீபியப் பயணம்]
அடுத்த கட்டுரைகருநிலம் – 5 [நமீபியப் பயணம்]