கையும்தொழிலும்-கடிதங்கள்

மும்பை சென்ற புதிதில், கார வகைகளை பேக் செய்யும் இயந்திரங்கள் கண்டு வியந்தேன்.

பாரம்பரிய உணவு வகைகளை உருவாக்கி விற்கும் நிறுவனம் என்றாலும், அதைப் பேக் செய்ய இருந்த இயந்திரங்கள் நவீனமாக இருந்தன.
ஐந்து வருடங்களில் அவர்கள் 7 இயந்திரங்களை வாங்கியிருந்தார்கள். அவற்றைத் திறந்து பார்த்த போது, மூன்று தலைமுறை இயந்திரங்கள் இருந்தன.

ப்ளாஸ்டிக் பவுச்களை, சீல் செய்ய, வெறும் mechanical jaws கொண்ட முதல் தலைமுறை இயந்திரம்.

mechanical jaws களை இயக்க, காற்றழுத்தம் உபயோகிக்கும் pneumatic motor உபயோகிக்கும் இரண்டாம் தலைமுறை இயந்திரம். இவை இயங்க, காற்றழுத்தம் உருவாக்கும் ஒரு உபரி இயந்திரம் (compressor), அதை மேய்க்கும் வேலைகள் என்று இம்சை உண்டு. ஆனால், இந்த மெஷினின் செய்நேர்த்தி, வெறும் mechanical jaw மெஷினை விட மேல்.

மூன்றாம் தலைமுறை இயந்திரத்தில், pneumatic motor தவிர்த்து, அது தேவைப் படாத servo motor இருந்தது. இதனால், compressor தேவையில்லை. இதன் செய்நேர்த்தி, pneumatic motor ஐ விட மேல். மிக எளிமையான, செம்மையான இயந்திரம். ஆனால், மிக உயர் தொழில்நுட்பம்.

முதல் தலைமுறை இயந்திரம் பளபளப்பான ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் ஆனது. கொஞ்சம் இளிக்கும்.

ஆனால், இரண்டாம் / மூன்றாம் தலைமுறை இயந்திரங்கள், glass bead கொண்டு பாலீஸ் செய்யப் பட்டு, mat effect கொண்டு, ஒரு க்ளாஸ் லுக்கோடு இருந்தன. glass bead polishing கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் மிகவும் பாப்புலரான ஒரு விஷயம்.

ஒரு காலப் பார்வையில், ரத்னபாலாவில் எழுதிய ஜெயமோகனையும், மாடன் மோட்சம் எழுதிய ஜெயமோகனையும் ஒரே சமயத்தில் பார்ப்பது போல் ஒரு உணர்வு.

நண்பரும், ஓஷோ பக்தருமான கிரண் பாய் ஷாவிடம் கேட்டேன். ‘எதுக்கு மூணு விதமான மெஷினை வாங்கினீங்க?? மூணாவது மெஷினையே வாங்க வேண்டியதுதானே?’ என்று. அவர் சொன்னார், ‘மெஷின் செய்பவர் நண்பர்.. அவரிடம் அப்போ என்ன இருந்ததோ அதை வாங்கினேன்’ என்று. மெஷின் தயாரிப்பாளரின் அந்தப் பரிணாமம் ஆர்வத்தைத் தூண்டியது.

அவரைச் சந்திக்க அஹமதாபாத் சென்றேன்.

அவர் பெயர் திலீப் பாஞ்சால். தான் ஒரு மெக்கானிக்கல் இஞ்சினியர் என்றார். ‘அதானே பார்த்தேன்.. ஒரு மெக்கானிக்கல் இஞ்சினியர், இயந்திரங்களை வடிவமைப்பது இயல்புதானே’ என்றேன்.

அவர் சொன்னார், ‘சார், நாங்கள் பாஞ்சால் ஜாதியினர். கொல்லர்கள். என் தந்தை வழியாக, சிறுவயதிலேயே எனக்கு இயந்திரங்கள் பற்றிய ஆர்வமும், பட்டறிவும் இருந்தது.. இயந்திரங்கள் சம்பந்தமான தொழில் செய்ய வேண்டும் என்று ஆசை. எனவே மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தேன். அது எனக்கு, மிக உதவியாக இருந்தது’ Typical gujju bhai..

எல்லா குஜராத்திகளைப் போல் சிற்றுடல் கொண்ட அவர், சற்றே மாநிறம். வாயில் உழலும் குட்கா.. காவியேறிய பற்கள்.

அப்போது, நாங்கள் தொழிலை விரிவு படுத்த, உருளைக் கிழங்கு சிப்ஸ் செய்யும், பேக் செய்யும் இயந்திரங்கள் வாங்க இருந்தோம். அவை இப்போது இந்தியாவிலேயே கிடைக்கின்றன.

ஆனால், உருளைக் கிழங்கு பேக் செய்யும் இயந்திரங்கள் இந்தியாவில் இல்லை. TNA மற்றும் ishida இவையே உலகின் மிக முக்கியமான உற்பத்தியாளர்கள்.. மணிக்கு 1000 கிலோவைப் பேக் செய்யும் இயந்திரம் சுமார் பத்து கோடி விலை. உருளைக் கிழங்கு சிப்ஸின் சுவை கூட்ட, அதன் மீது பூசப்படும் சுவை ஃப்ளேவர், கொஞ்சமும் சிதறிவிடாமல், ப்ளாஸ்டிக் பவுச்சுக்குள் அடைக்க வேண்டும். இதை மிகத் துல்லியமாகச் செய்ய, ஒரு sensitive distribution system தேவை. விலை, அந்தத் தொழில்நுட்பத்துக்கும், துல்லியமாகப் பேக் செய்யும் இயந்திரங்களுக்கும்..

பாஞ்சாலிடம் இதைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருந்தேன்.. 5 ரூபா உருளைக் கிழங்கு சிப்ஸ் பேக் செய்ய, பத்துக் கோடி அநியாயம் திலீப் பாய் என்று.. ‘ஸார், ஒரு வருடம் டைம் கொடுங்கள்.. இரண்டு இரண்டரைக் கோடியில்,இதை விடச் சிறந்த distribution system தயாரித்துத் தருகிறேன்’, என்றார் அவர். எங்களிடம் நேரமும், அவர் மேல் ரிஸ்க் எடுக்கும் தைரியமும் இல்லை. எனவே கைவிட்டோம்.

அடுத்த ஆண்டு, உணவுத் தொழில் நுட்பக் கண்காட்சியில் அவர் ஸ்டாலில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். ஆஸ்திரேலியாவின் முக்கிய இயந்திரத் தயாரிப்பு நிறுவனத்தின் முதலாளி, அவர் ஸ்டாலைக் கண்களாலேயே விழுங்கிக் கொண்டிருந்தார்..

‘உங்கள் நிறுவனத்தை விற்கப் போகிறீர்களா, பாஞ்சால்?’, என்று கேட்டேன். ‘இல்லையே? ஏன் கேட்கிறீர்கள்?’, என்று கேட்டார். சிரித்துக் கொண்டே கிளம்பினேன்.

இரவு போன் வந்தது.. ‘ஸார், நம்ம ஆஸ்திரேலியா கம்பெனியில் இருந்து போன் வந்தது.. வெலைக்குக் கேக்கறாங்க..’ என்றார். ‘என்ன விலை?’ என்றேன். ‘நம்ம வருமானம் போல 4 மடங்கு’ – அது நல்ல தொழில் நுட்பக் கம்பெனிக்கு ஒரு சரியான விலை.

‘நீங்க என்ன சொன்னீங்க?’ என்றேன்.

‘நீங்க என்ன சொல்றீங்க’ என்று, பந்தை என் கோர்ட்டுக்கு அனுப்பினார்.

‘இன்னும் எத்தனை வருஷம் வேலை செய்யப் போறீங்க?’

‘ என்ன ஒரு 20-25 வருஷம்..’

‘அப்புறம்’

‘தம்பி இருக்கான்.. பசங்க அதுக்குள்ளார வந்துருவாங்க’

‘அப்ப விக்காதீங்க’

‘அதான் ஸார் நானும் யோசிச்சேன்..’

ஜெ, நீங்க சொன்ன மாதிரி, கலைக்கும், துல்லியமான தொழில் நுட்பத்துக்கும் ஒரு சிறிய இடைவெளிதான் உள்ளது. ஸ்டார் வார்ஸ் ஜான்ர் திரைப்படங்களில், சமூகத்தைக் காக்கும் போராளிகள் இருப்பார்கள்.. ஜெடாய்.. ஜப்பானிய சாமுராய்கள் போல..

அறிவியலின் எல்லையில் மனத்திரை போர்த்தப் பட்டு மயங்கியிருக்கும் மனித மனங்களைத், தம் கூர்மையான வாட்களால் பிளந்து விரிவு படுத்துகிறார்கள்..

அடுத்த தளத்தில், புத்தர்களும், ரமணர்களும் இருந்து, ‘இதுவும் கடந்து போகும்’ என்று புன்னகைத்துக் கொண்டிருக்கிறார்கள்..

அன்புடன்

பாலா

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களது ‘யாப்பு’ கட்டுரையை வசித்த பின், உண்மையில் உழைப்பில் கலையை உணர்ந்த ஒருவர் கொண்டு வீட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும் எனத் தோன்றியது. எனக்கு தெரிந்த வரையில் ஒரு ஆசாரியாரைப் பற்றி நன்றாகக் கேள்விப்பட்டேன், அவர் திருப்தி அடைந்தால் ஒழிய ஒரு வேலையை முடிந்தது என்று சொல்லமாட்டார், என்றார்கள். ‘மூத்த ஆசாரி’ என்று அழைத்தார்கள் அவரை. (உண்மையில் நமது தச்சுத் தொழில் வல்லுனர்களை தற்போதைய பொறியியல் நிபுணர்களுக்கு மேலாகக் கருதலாம் என்பது என் எண்ணம்.)

அவரை நேரில் பார்த்தபோது அவர் தற்போது தச்சுத் தொழிலுக்கு செல்வதில்லை என்றார், மிக நிதானமாகப் பேசினார் ” மனம் சொல்வதை கை செய்ய மாட்டேன் என்கிறது, நீங்கள் வேறு நல்ல ஒருவரைப் பார்த்துகொள்ளுங்கள்” என்று?

அன்புடன்,

சிவகுமார்

கையும்தொழிலும்

முந்தைய கட்டுரைகருநிலம் – 7 [நமீபியப் பயணம்]
அடுத்த கட்டுரைஇந்தியஞானம்-கடிதங்கள்