இன்று பேருந்தில் சென்றுகொண்டிருக்கும்போது காலி இருக்கை நோக்கிச் செல்லும்போது தோப்பில் முகமது மீரான் ஐ பார்த்தேன். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. ”தோப்பில் தானே?” என்றேன். ”தம்பி! என்ன வயசாயிப்போயிட்டே?”என்றபடி அணைத்து அமரச்சொன்னார்.
நெடுநாட்களுக்குப் பின் அண்னாச்சியைப்பார்த்ததில் மகிழ்ச்சி ஏற்பட்டது. அதிலும் பக்கவாதம் அவ்ந்து தளர்ந்துபோன வடிவிலேயே அவரைக் கண்டிருந்தேன். இப்போது நன்றாக உடல்நலம் தேறி புத்துணர்ச்சியுடன் இருக்கிறார் என்பது உள்ளூர ஆழமான பரவசத்தை அளித்தது. அவரைப் பார்க்கவே பிடித்திருந்தது.
”எங்க யாத்திரை?” என்றேன்
”களியிக்காவெளைக்கு,ஏவாரம் சின்ன அளவிலே இருக்கு…”
உடல்நலம் குன்றியபோது வத்தல்மிளகாய் மொத்த வியாபாரத்தை நிறுத்தியிருந்தார். ”வலிய அளவில ஒண்ணும் இல்ல பாத்துக்கோ. சும்மா எம்பிடுண்ணு வீட்டில இருக்கது? பத்து நாப்பது வருசம் அலைஞ்சு அலைஞ்சு ஜீவிச்சதாக்கும். சும்மா இருந்தா சகல ரோகமும் வந்து கேறும். அதனால் இப்பம் இப்பிடி போறது. முன்னே ஏவாரத்துக்காக யாத்திரை. இப்பம் யாத்திரைக்காக ஏவாரம். போற வாற செலவுக்கு சம்பாதிச்சாபோரும்…”
”பிள்ளைய எங்க? ஒருத்தன் மலேசியால இருந்தான்லியா?”
”அவன் இப்பம் துபாய்ல. இன்னொருத்தன் இங்க. ரண்டாளும் நல்ல நெலைமையில இருக்கானுவ. வீட்டில நானும் வை·பும் மட்டுமாக்கும்.”
”உடம்பு நல்லா இருக்குல்ல?”
”ஒண்ணு ரெண்டு குளிகை உண்டும். இப்பம் ஊரு சுத்த தொடங்கின பின்ன தேகம் நல்லா இருக்கு…”
நீல பத்மநாபனுக்கு நான் நாகர்கோயிலில் ஒரு பாராட்டுக்கூட்டம் ஏற்பாடு செய்ததைப் பற்றிச் சொன்னேன்.”நானும் விளிச்சேன். சந்தோசமாட்டு பேசினாரு. எப்பமோ கிட்டவேண்டிய பிரைஸ¤ல்லா? தலைமொறைகள் போட்டு, அப்பம் சின்ன வயசு. பள்ளிகொண்டபுரம் வந்தப்பம் குடுத்திருக்கணும்…”
”அப்பமும் சின்ன வயசுல்லா?”
”புனத்தில் குஞ்ஞப்துல்லா எப்பம் வாங்கினாரு? எம்.டி.வாசுதேவன் நாயரு நாலுகெட்டு நாவலுக்கு பிரைஸ் வாங்கும்பம் இருபத்தியஞ்சு வயசு. எனக்கு ஒப்பம் டோக்ரி மொழிக்காட்டு சாகித்ய அக்காதமி பிரைஸ் வாங்கினவன் ஒரு சின்ன பய. இருபத்தி ஒண்ணு வயசு… அதெல்லாம் இங்க உள்ளவனுக உண்டாக்குத ஒரோ ஏற்பாடுகள். சத்தியம் சொல்லப்போனா சுந்தர ராமசாமி, நீலபத்மநாபன் ,மாதவன் அண்ணாச்சி இருக்கும்பம் எனக்கு பிரைஸ் கிட்டினதில ஒரு சம்மல் எனக்கு உண்டும் பாத்துக்கோ…”
”உங்கமேலே யாருக்கும் கோவம் இல்லல்லா?” என்றேன். ”நாவல் வருதுண்ணு சொன்னாங்க…ஏதோ முஸ்லீம் பத்திரிகையில தொடரா வந்ததுண்ணு..”
”ஆமா. கிருஷிக்க கிட்ட வாசிக்க குடுத்திருக்கு. அவரு வாசிச்சு திருத்தி எடுத்து குடுக்கணும். நமக்கு எளுதினதை மறுக்கா வாசிக்கதுக்கு உண்டான பொறுமை இல்லை. மாசாமாசம் எளுதினதுல்லா? இப்பம் வந்த நாவலுகள் என்ன வாசிச்சே? ஆழிசூழ் உலகு கொள்ளாம் நல்ல பெரிய நாவலாக்கும். ஆனா மீனவ பாசை வேற…”
”அது வேற எடமுல்லா?”
”என்ன வேற? கடல்வழியா முப்பது கிலோமீட்டர் போகணும்…ஆனா பாசை சாப்பாடு சாதி எல்லாம் மாறியாச்சு… நல்லா விரிவாட்டு எளுதியிருக்காரு…பின்ன நம்ம இவனுக்க கூகை..நல்ல நாவலாக்கும்….சொ.தருமன்…”
பேசிமுடிப்பதற்குள் நான் இறங்கும் இடம் வந்தது. புதிய வீட்டு முகவரி தந்தார். ”அப்பம் பாக்கிலாம். சந்தோசம்…” என்றார். இறங்கிக் கொண்டேன்.