ஒழிமுறி-ஒரு திரையனுபவம்

வாரந்தோறும் பல வகையிலுள்ள படங்கள் மலையாளத்தில் வருகின்றன, நிலைநிற்கவும் செய்கின்றன என்பது ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் விஷயமாகும். இந்தப்படம் மலையாளத்தின் சென்ற காலகட்டத்தை அழகாகச் சித்தரிக்கிறது. அதனுடன் பிரிக்கமுடியாதபடி பின்னிக்கிடக்கும் இன்றைய ஆளுமைகளின் சிக்கல்களையும் சொல்கிறது. ஜெயமோகனின் உறவிடங்கள் என்ற நூலில் உள்ள கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட திரைக்கதை. அதை சற்றும் செயற்கையோ மிகையோ ஆக்காமல் சரியாக உண்மையாகப் படமாக்குவதில் மதுபால் வெற்றி பெற்றிருக்கிறார். அந்த வெற்றியைப் படம் முடியும் போது ரசிகர்கள் உணர முடிகிறது. தமிழ்ப்பண்பாட்டுடன் கலந்து கிடக்கும் கதைக்குள் செல்ல சாதாரண ரசிகர்கள் கொஞ்சம் தாமதிக்கக் கூடும்

ஐம்பது வயதுக்குமேல் ஆன ஒரு பெண்மணி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வந்திருக்கிறாள் என்பது படத்தின் தொடக்கம். அது ஏன் என்பதும் அதன் நீண்ட வரலாற்றுப்பின்னணியும் அவரும் அவரைச் சார்ந்தவர்களும் எப்படி அதன் பகுதிகளாக ஆட்டிவைக்கப்படுகிறார்கள் என்பதும்தான் படத்தின் சாராம்சம். இந்த கருவை முற்றிலும் புதியவகையில் ஜெயமோகன் எழுதியிருக்கிறார். அனைத்தும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு தளத்தில் ஆரம்பிக்கும் கதை நிகழ்ச்சிகள் வழியாக மெல்லமெல்ல தெளிவாகியபடியே செல்கிறது. இதிலுள்ள எல்லா கதாபாத்திரங்களும் நல்லியல்பையும் தீய இயல்பையும் கொண்டவை. அவற்றைப் பின்னித்தான் அந்த ஆளுமை உருவாகியிருக்கிறது

தீவிரமான நிகழ்ச்சிகள் மூலமும் சற்றும் நாடகத்தன்மை கலவாத வசனங்கள் கொண்டும் ஜெயமோகன் சிறப்பான ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். இதிலுள்ள பல கதாபாத்திரங்களையும் சமீபகால மலையாளப்படங்களில் காணமுடியாத அளவுக்கு வல்லமை கொண்டவை என்று சொல்லலாம். அவற்றை மிகச்சிறப்பாக முன்வைக்க மதுபால் முயன்று வெற்றிபெற்றிருக்கிறார். சினிமா உக்கிரமான, உணர்ச்சிகரமான ஏராளமான நிகழ்ச்சிகள் வழியாக செல்கிறது. ஆனால் ரசிகர்களை சற்றும் வழிதவறச் செய்வதில்லை. சரியாக அது உத்தேசித்த இடத்தை நோக்கிக் கொண்டுசென்று நிறுத்துகிறது

இப்படத்தின் பெரும்பாலும் எல்லா அம்சங்களும் சிறப்பாக அமைந்துள்ளன. ஆகவே இதை ஓர் இயக்குநர் படம் என்று சொல்லலாம் என்றே தோன்றுகிறது. இதில் லால் நடிக்கும் கதைநாயகர் பாத்திரம் போலவே ஆற்றலும் ஆழமும் கொண்ட இன்னொரு கதாபாத்திரம் மல்லிகா நடிக்கும் மீனாட்சி. இருவருமே மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள்

அழகப்பனின் காமிரா நல்ல அனுபவம். பழையகாலத்தையும் புதிய காலகட்டத்தையும் வெவ்வேறு வகை கோணங்கள் வழியாகக் காட்டமுடிந்திருக்கிறது. , சிறில் குருவிளாவின் கலையும் ரஞ்சித் அம்பாடியின் ஒப்பனையும் நன்றாக உள்ளன. ஒரே கதாபாத்திரத்தின் ஐம்பதாண்டுக்கால வளர்ச்சி மாற்றத்தை ஒப்பனை மூலம் காட்டுவதென்பது சவாலான பணி. அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். பிஜிபாலின் இசையும் இந்த உயர்தர சினிமாவுக்கான தரத்தை அடைந்துள்ளது. ஒலிப்பதிவு அந்த அளவுக்குத் தரமாக இல்லை.

இந்தப்படத்தின் நடிகர்கள் பலர் அடுத்தவருடத்தைய மிகச்சிறந்த நடிகர்களுக்கான விருதுகளைப் பெறுவது உறுதி. கம்பீரமான உக்கிரமான நடிப்பை அவர்கள் அளித்திருக்கிறார்கள். எவரையுமே நன்றாக இல்லை என்று சொல்ல முடியவில்லை. லால்-மல்லிகா இருவரையும் நம்பி கதை முன்னால் செல்கிறது. லாலின் நடிப்பு வாழ்க்கையில் மிகச்சிறந்த கதாபாத்திரம் தாணுப்பிள்ளைதான். ஸ்வேதா நடிக்கும் காளிப்பிள்ளை அம்மச்சி கதாபாத்திரம் கூட மிக முக்கியமானது. பார்வைகளால் சிறப்பாக அவர் நடித்திருக்கிறார்

ஆரம்பத்தில் கணவரிடம் அடிபட்டு வாழும் வழக்கமான வாழ்க்கை வாழ்ந்து மெல்ல பெண்மையின் ஆற்றலை அறிந்து கொள்ளும் மல்லிகாவின் கதாபாத்திரம் படத்தில் மிக முக்கியமானது. நந்து நடிக்கும் அப்பியும் மிகச்சிறப்பாக உள்ளது. நல்ல இயக்குநர்களிடம் நன்றாக நடிக்க தங்களால் முடியும் என ஆசிப் அலியும் பாவனாவும் காட்டுகிறார்கள். ஸ்வேதா மல்லிகா இருவரின் குரல்களும் நன்றாக நடித்துள்ளன என்று சொல்லியாகவேண்டும்

பெண்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் இருந்த மருமக்கள்தாய அமைப்பில் இருந்து ஆண்களுக்கு அதிகமுக்கியத்துவம் கிடைத்த மக்கள்தாயம் வழியாக இரு சாராருக்கும் சமமான இடமுள்ள ஒரு நவீன அமைப்பை நோக்கி நம் சமூகம் நகர்வதன் சிறப்பான சித்திரத்தை அளிக்கிறது இந்தப்படம் . நம் வரலாற்றுப்புரிதல்கள் நடுவே உள்ள இருண்ட இடைவெளிகளை நிரப்புகிறது. அவற்றை நாம் புரிந்துகொள்ள இன்னும் நிறைய காத்திருக்கவேண்டியிருக்கும். பலருக்கும் அவற்றைப் புரிந்துகொள்ளும் அதிருஷ்டம் வாழ்க்கையில் அமைவதே இல்லை

தீவிரமான ஒரு கருவையும் கருத்தையும் கலையாற்றலுடன் முன்வைக்க முயன்ற ஜெயமோகனும் மதுபாலும் கண்டிப்பாக மனமாரப் பாராட்டப்படவேண்டியவர்கள்

ஒழிமுறி-டிகெடி

முந்தைய கட்டுரைஒழிமுறி-மாத்ருபூமி
அடுத்த கட்டுரைபோற்றப்படாத இதிகாசம் -பாலா