அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சமீபத்தில் சென்று வந்த சீயமங்கலம் கிராமத்தைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். இது திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இருந்து 25 கி மீ தொலைவில் தென்மேற்கில் அமைந்திருக்கிறது. கி பி ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற மகேந்திர வர்மன் குடைவரைக் கோவில் அமைந்திருக்கிறது. மேற்கு நோக்கி அமைந்திருக்கும் இந்தக் கோவில் மூலவர் தூண் ஆண்டார். இந்தக் கோவில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது பொதுவாக அனைவரும் அறிந்ததே. ஆனால், இக்கோவிலுக்கு மிக அருகில் வரலாற்றுச் சிறப்புமிக்க, சிறிய சமணக் குடைவரைக் கோவில் ஒன்றும் உள்ளது என்பது பெரும்பாலோனோர் அறியாத செய்தி. புத்த ஆசார்யரான திக்நாகர் பிறந்த சிம்மவக்தரம், சீயமங்கலமாக இருக்கலாம் என்று வரலாற்று அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி கூறுகிறார்.
இந்தக் கோவில் தூண் ஆண்டார் சிவன் கோவிலுக்கு வடக்கே உள்ள ஒரு குன்றில்(இங்குள்ள கல்வெட்டின் மூலம், இந்த குன்றின் பெயர் விஜயாத்ரி என்று அறியப்படுகிறது) அமைந்துள்ளது. இந்தக் கோவிலை அமைத்தவன் மேற்கு கங்க மன்னன் இரண்டாம் ராஜமல்லன். (இதே மன்னன், வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளிமலையிலும் ஒரு சமண கோவில் அமைத்திருக்கிறான் என்பது குறிப்பிடத்தகுந்தது). கட்டிய ஆண்டு கி.பி. 892 . குடைவரைக்கு மேலே உள்ள கிழக்கு நோக்கிய பாறையில், மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி ஆகியோர் சிற்பங்கள் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. பாகுபலிக்கு, இருபுறமும் அவருடைய சகோதிரிகள், பிராமி, சௌந்தரி காணப்படுகிறார்கள். பார்சுவநாதர் அவருடைய யக்ஷன் தரனேந்திரனுடனும், யக்ஷி பத்மாவதியுடனும் காணப்படுகிறார். மகாவீரர் சுகாசன நிலையில் யக்ஷன், யக்ஷியுடன் காணப்படுகிறார். தற்போது இக்குடைவரையினுள் புதிதாக ஒரு மகாவீரர் சிலை வைக்கப்பட்டு, அருகில் உள்ள சமணர்களால் வழிபடப்படுகிறது.
இங்கு இரண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஒன்று, மகாவீரர் சிற்பத்திற்கு அருகில் உள்ள சமஸ்கிருதக் கல்வெட்டு. இதில் உள்ள செய்திப்படி, சாகா 815 இல் (கி பி 892 -93) ராஜமல்லன் விஜயாத்ரி மலையில் இரண்டு சமணக் கோவில்களை அமைத்தான் என்றும், இங்கு ஜினேந்திர சங்கத்திற்கு உட்பட்ட நந்தி சங்கத்தைச் சேர்ந்த சமணப் பள்ளி ஒன்று இருந்ததையும் அறிய முடிகிறது . இரண்டாவது கோவில் இன்று வரை கண்டறியப்படவில்லை. இரண்டாவது கல்வெட்டு, குடைவரைக்குச் சற்றுத் தள்ளி வடக்கில் உள்ள பாறையில் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் எழுதப்பட்டுள்ளது. இதில் உள்ள செய்திப்படி, இங்கு திராவிட சங்கத்திற்கு உட்பட்ட நந்தி சங்கத்தைச் சேர்ந்த சமணப்பள்ளி இருந்ததையும், இந்தப்பள்ளியைச் சேர்ந்த மண்டலாசார்யரும் , குனவீரரின் சிஷ்யருமான வஜ்ரநந்தி யோகிந்தரர், கோவிலுக்குப் படிக்கட்டுகள் அமைத்ததையும் அறிய முடிகிறது. தற்போதும் இந்தப் படிக்கட்டுகள் நல்ல நிலையில் இருக்கின்றன. முதல் கல்வெட்டில் ஜினேந்திர சங்கம் என்றிருந்தது, இரண்டாவது கல்வெட்டில் திராவிட சங்கம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது .
இது குறித்து எழுதிய விக்கிபீடியா கட்டுரை
http://en.wikipedia.org/wiki/சீயமங்கலம்
யு டியூப் காணொளிகள்
மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி சிற்பங்கள்
இரண்டாவது கல்வெட்டு
விக்கிமாப்பியா
சீயமங்கலம்
தூண் ஆண்டார் குடைவரை சிவன் கோவில்
வித்யாதரி மலை
சமண குடைவரை கோவில்
இரண்டாவது கல்வெட்டு
நன்றி,
தங்கள் அன்புள்ள,
சரவணக்குமார்.
YouTube – Videos from this email