நம்மாழ்வார்-ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

விஷ்ணுபுரத்தில் வரும் அந்த முதிய “ஆழ்வார்” பாத்திரம் நம்மாழ்வாரையும், வைஷ்ணவ குருபரம்பரை முழுவதுமே கேலி செய்வது போல் உள்ளது என்று சமீபத்தில் என்னைச் சந்தித்த நண்பர் ஒருவர் கூறினார்.. இது ஊகமா அல்லது எழுத்தாளரே அப்படி எங்காவது சொல்லியுள்ளாரா என்று கேட்டேன்.. ஊகம் தான் என்றார். நான் வி.புவை படித்த போது ஆழ்வார் என்ற “பெயர்” அங்கு நக்கல் செய்யப் பட்டிருக்கிறது – அது வேறு எந்தப் பெயராகவும் இருந்திருக்கலாம் என்றே தோன்றியது. அவரிடம் கொஞ்சம் விவாதிக்கவும் செய்தேன் (விசும்பு கதையில் வரும் “நன்னயப் புள்ளினங்காள்” என்ற திருவாய்மொழி மேற்கோளையும் சுட்டி).

ஆனால் தங்கள் சமீபத்திய பதிவை (http://jeyamohan.in/?p=288 – “சுஜாதாவுக்காக ஓர் இரவு”) படித்த போது intentional ஆகவே அந்த நக்கல் செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எனக்கு இது மிகவும் வருத்தமளிக்கிறது.

இந்த “உயர்தத்துவம் மீதான அங்கதம்” எல்லாம் இந்து மத சான்றோர்கள் விஷயத்தில் தான் போலும் ! ஏசு கிறிஸ்து விஷயத்தில் அந்த “உயர்தத்துவத்தை” இன்னும் உயர்த்தும் விதமாகத் தான் உங்கள் கதைகள் இருக்கும் (உதா: பி.தொ.நி.கு முழுக்க மீண்டும் மீண்டும் வரும் “மீட்பர்” சித்திரம்). முகவது விஷயத்திலோ அப்படி ஒரு “உயர்தத்துவம்” இருப்பதே கண்ணுக்குத் தெரியாமல் போய்விடும்!

தமிழகத்தின் இணையற்ற தத்துவஞானியும், சமயகுருவும் ஆன ஆழ்வாரை பெயர் குறிப்பிட்டு நக்கல் செய்து அதை நியாயப் படுத்தவும் செய்யும் உங்களுக்கு, “நம்பிக்கையாளன்” சிறுகதையில் அந்தக் குருட்டு நம்பிக்கையின் மொத்த உருவமான இஸ்லாமைப் பெயர், வெளிப்படையான அடையாளம் எதுவும் கூறாமல் வாசகனின் ஊகத்திற்கே விட்டு விடும் அளவு தான் துணிவு இருக்கிறது போலும்.

வருத்த்துடன்,
ஜடாயு

முந்தைய கட்டுரைநவீனமருத்துவம்-ஸ்டெல்லாபுரூஸ்-ஒருகடிதம்
அடுத்த கட்டுரைபேருந்தில் தோப்பில் முகமதுமீரான்..